சமீபத்தில் கர்நாடக மாநிலம் சென்றிருந்தேன். பெங்களூர், மைசூர், ஹசன் மாவட்டங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஹசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகோலா கோமதீஸ்வரர் சிலையைப் பார்க்கச் சென்றிருந்தோம். கோமதீஸ்வரர் வீற்றுள்ள குன்றுக்கு எதிர்ப்புறம் ஒரு குளமும், அதற்கு பின்பக்கம் உள்ள குன்றில் ஒரு சமணக் கோயிலும் உள்ளன. இவற்றுக்கு பக்கவாட்டில் ஊர் அமைந்துள்ளது.

சரவணபெலகோலாவில் இறங்கியவுடன் குளத்தை ஒட்டி ஒரு சிறு கோயில் இருந்தது. அந்த மஞ்சள் நிற கோபுரத்தில் மாடப்புறாக்கள் அமர்ந்து கொண்டிருந்தன. தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் மாடப்புறவை பொதுவாகப் பார்க்கலாம். நகரத்தில், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் செழித்திருக்கும் பறவை வகைகளில் இவையும் ஒன்று.

மலைக்குச் சென்று திரும்பிய போது மற்றொரு ஆச்சரியம் எங்களுக்காகக் காத்திருந்தது. புறாக்களுடன் நான் அங்கு பார்த்த பறவை காட்டு மைனா. நகர்ப்புறத்தில் என்னைக் கவர்ந்து வந்த பறவைகளில் மைனாவும் ஒன்று. அதன் கீச்சுக்கீச்சுக் குரலும், தாவித்தாவி அலைந்து கொண்டே இருக்கும் அதன் பண்புமே இதற்குக் காரணம். பெரும்பாலான நேரம் நகரத்தில் உள்ள தென்னை மரங்களில், உச்சி வெயில் நேரத்தில் மற்ற பறவைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் உற்சாகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மைனா.

இதற்கு பேசும் மைனா என்றே பெயர். மனிதக் குரலை பிரதி செய்யும் தன்மை கொண்டது இது. தரையில் நடந்து செல்லும் பறவைகளில் ஒன்று. எப்பொழுதாவது தாவும். மைனா வெட்டுக்கிளி வேட்டைக்குப் பெயர்பெற்றது. அதன் காரணமாகவே வெட்டுக்கிளிக்காக புல்வெளிகளில் அலைபாயும். பாடும்போது அடிக்கடி இறக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும். தலையையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டும். இனக்கொல்லிகள் அருகில் வருவது தெரிந்தால் தனது இணையையோ, பிற பறவைகளுக்கோ எச்சரிக்கை செய்யும். இந்த மைனா சிர்ப்சிர்ப், கிளிக் கிளிக் என்றும், விசில் அடிப்பது போலவும், கரகரவென்றும், உரக்கவும் குரல் கொடுக்கும். பல்வேறு வகை குரல்களைக் கொடுக்கக் கூடியது.

காட்டு மைனா, சாதாரண மைனாவில் இருந்து சற்று மாறுபட்டது. சாதாரண மைனாவுக்கு கண்களைச் சுற்றி பிரகாசமான மஞ்சள் தங்க நிறத் திட்டு இருக்கும். காட்டு மைனாவுக்கு அந்த கண்களைச் சுற்றிய திட்டு இல்லை. இது திறந்த தோல் பகுதிதான். அதற்கு பதிலாக கண்களைச் சுற்றி இளம்நீல நிற வளையம் உள்ளது. இந்த நில நிற புருவம் தென்னாட்டு காட்டு மைனாக்களுக்கே உரியது. அதேநேரம் மைனாவுக்கு இல்லாத கொண்டை காட்டு மைனாவுக்கு இருந்தது. மூக்குக்கு மேல்புறம் தலையில் காட்டு மைனா கொண்டையைப் பெற்றுள்ளது. அந்தக் கொண்டை என்பது விரைத்த முடிகள்தான்.

மைனாவின் நிறம் பழுப்பு, ஆங்காங்கே கறுப்பு. ஆனால் காட்டு மைனாவின் இறக்கைகளில் கறுப்பு-சாம்பல் நிறம் அதிகமாக உள்ளது. மற்றபடி மைனாவைப் போலவே மூக்கு பிரகாசமான மஞ்சள் நிறம், கால்களும் அப்படியே. வாலடிப்புறம் வெள்ளை. இரண்டு மைனாக்களுக்கும் இடையே உள்ள மற்றொரு வேறுபாடு மைனாவுக்கு உடலில் இருந்து இறக்கைகள் தொடங்கும் இடத்தில் சிறு வெள்ளைத் திட்டு இருக்கும். இந்த வெள்ளைத் திட்டு காட்டு மைனாவுக்கு பெரிதாகவே இருக்கிறது. இறக்கை விரித்து பறக்கும் போது இது தெளிவாகத் தெரியும். சட்டென்று அதன் வேறுபாட்டை உணர்த்துவது அதன் தலையில் உள்ள கருகருவென்ற கொண்டைதான்.

மைனாவுக்கு இல்லாத கண்களைச் சுற்றிய மஞ்சள் திட்டு இல்லாததும், இது சாதாரண மைனா இல்லை என்பதை தெளிவாக்குகிறது. என்னுடன் வந்த உறவினர்களிடம் கூறியபோது, அவர்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். காடுகளுக்கு அதிகம் செல்வதில்லை என்றாலும், பறவை நோக்குதல் எப்பொழுதுமே எனக்குப் பிடித்ததொரு பொழுதுபோக்கு. மைனாவின் பெயரே சரியற்றது. நாகணவாய் என்பதே அதன் சரியான பெயர் என்று கூறுவார்கள்.

ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்த, தெற்காசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் இந்தியா, மியான்மர் தொடங்கி கிழக்கில் இந்தோனேசியா வரை இந்தப் பறவை காணப்படுகிறது. காடுகள், வயல்வெளிகளில் சாதாரணமாகக் காணப்படும். நீர்நிலைகளுக்கு அருகிலும் இவற்றை அதிகம் பார்க்கலாம். மரப் பொந்துகளில் கூடு அமைக்கும் இந்த மைனா பொதுவாக 3 முதல் 6 முட்டைகளை இடும். இரண்டு பாலும் ஒரே நிறத்தில் இருக்கும். இளம் காட்டு மைனாக்கள் அதிக பழுப்பு நிறம் பெற்றிருக்கும்.

மற்ற மைனாக்களைப் போலவே இதுவும் அனைத்துண்ணி. பழம், தானியம், பூச்சி, பல்லிகளை உண்ணும். தெற்காசிய நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த மைனாக்கள், தைவான் நாட்டில் தப்பிச் சென்று காட்டு வாழ்க்கைக்குத் திரும்பிய புதிய கூட்டங்கள் உருவாகியுள்ளன.

- ஆதி

Pin It