நாசியா எர்ரம் என்பவர் "ஒரு தாயின் எண்ணம்" என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் முஸ்லிம் குழந்தைகள் இந்தியாவினுள் வளரும் விதத்தையும், அந்த குழந்தையின் தாயின் நிலையில் இருந்து அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருக்கிறார்.

muslim children"கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் 'நீ மாட்டிறைச்சி தின்பவன், ஜிகாதி, தேசபக்தி இல்லாதவன், காட்டிக் கொடுப்பவன், ஒசாமாவை நேசிப்பவன், பக்தாதியின் ஆதரவாளன்' என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில், இத்தகைய சொல்லாடல்கள், சம்பந்தப்பட்ட குழந்தைகளை எந்தளவிற்குப் பாதிக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்தக் குழந்தைகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாவதோடு, சமயங்களில் உடல்ரீதியான தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை தான்! தேசப்பற்று என்ற பெயரில் இயங்கி வரும் சில தொலைக்காட்சிகள் இத்தகைய வெறுப்புணர்வை வளர்த்து விடுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

அத்தகைய தொலைக்காட்சிகளின் வெறுப்பரசியலுக்கு பலியாகிறவர்கள் இதுபோன்ற குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களின் நிலையிலிருந்து நாம் இந்தத் துன்பத்தைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்" என்கிறார் அவர்.

இது இந்தியாவின் மூலையெங்கும் பரவியிருக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களுக்கும் வன்முறைகளுக்கும் கூட இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. இது மற்ற எந்த சமூகத்துக்கும் நிகழ்வதில்லை.

சமீபத்தில் கூட இராமலிங்கம் படுகொலை நடந்த போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்பட்டது. இதில் பாண்டே போன்ற ஊடகவாதிகள் முஸ்லிம் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்குச் சென்றார்கள். ஆனால், இப்படியான கொலைச் சம்பவத்தில் இந்துத்துவவாதிகள் ஆயிரக்கணக்கில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் என்றாவது இந்துக்களின் பெற்றோர்களே பிள்ளைகளை ஒழுக்கமாக வளருங்கள் என்று சொல்ல முடியுமா? ஏர்வாடியில் காஜா மொய்தீன், கோவை கலவரம் என முஸ்லிம்களுக்கு இந்துத்துவவாதிகளால் பல்வேறு சோதனை வந்த போதும் கூட முஸ்லிம் தலைவர்கள் இந்து சமூகத்திற்கு எதிராக எந்த வெறுப்புணர்வையும் தூண்டவில்லை. முஸ்லிம் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் கூட மிக கண்ணியமாக நடத்தப்பட்டனர். ஆனால் ஒரு கொலையைக் காரணம் வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குறை கூறி நேற்று கட்சி தொடங்கியவர் முதல் வெறுப்பை விதைக்கத் தொடங்கினார்கள். இந்தியாவிலேயே முஸ்லிம்களுக்கு பிரச்சனை குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் தான். ஆனால், இங்கேயே இவ்வளவு கொடுமைகள் என்றால் வடஇந்தியாவில்!..

பள்ளிப் பருவத்திலிருந்து முஸ்லிம்கள் பற்றிய தவறான வரலாறுகளைத் தருவதில் தொடங்கி தினந்தோறும் வெறுப்பு அரசியலை பத்திரிக்கைகளில் படிப்பது என எல்லாவற்றிலும் முஸ்லிம் சமூகம் ஓர் அடக்குமுறையை சந்தித்து வருகிறது. இதையெல்லாம் கடந்து ஒரு முஸ்லிம் குழந்தை படித்து வெளிவர வேண்டும். இதில் பெரும்பாலான குழந்தைகள் இடைநிலைகளிலேயே பள்ளியை விட்டும் வெளியேறி விடுகின்றனர்.

இத்தனை அடக்குமுறைகளை அனுபவித்து வெளிவரும் போது அடையாளங்களை மறைத்து மட்டுமே முன்னேறுவதற்கான வாய்ப்பு தரப்படுகிறது. அதையும் மீறி முஸ்லிம்கள் என்ற அடையாளத்துடன் செயல்படத் தொடங்கினால் சிறை தயார் செய்யப்படுகிறது.

- அபூ சித்திக்

Pin It