காந்திகிராமம் பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரின் ‘தமிழ்ச் செவ்விலக்கியங்கள்: மீள் வாசிப்பு' எனும் நூல் சமீபத்தில் என்சிபிஎச் நிறுவனத்தின் சார்பாக வெளியாகியுள்ளது.

pa anandkumar book119 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் “தொல்காப்பியம், சங்கக் கவிதைகள், மணிமேகலை ஆகியவற்றைப் புதிய கோட்பாடுகளின் வழி மறுவாசிப்பு செய்கின்றன” என்று நூலாசிரியர் அறிமுகம் செய்கிறார். 4 சங்கக் கவிதைகள், 3 தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடுகள், 2 மணிமேகலைக் காப்பியப் பிரச்சினைகள் ஆகியன முறையே ஒவ்வொரு கட்டுரையில் ஆசிரியரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியப் பனுவல்களை அவர் 20ஆம் நூற்றாண்டின் நவீன கோட்பாடுகளின் வழிநின்று மீளாய்வு செய்வதோடு அவற்றை ஒப்பீட்டு ஆய்வுக்கும் ஆட்படுத்துகிறார். இலக்கண, இலக்கியப் பனுவல்கள், வெவ்வேறு காலக்கட்டங்களைச் சார்ந்த பழைய, புதிய கோட்பாடுகள் ஆகியவை ஒப்பிடப்படுதல் எனும் சிக்கலான ஆய்வு முறையியல் கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.

“இத்தகைய மீள்வாசிப்புகள் பழந்தமிழ்ப் பனுவல்களைப் புதுமையுடையவையாக ஆக்குகின்றன; அவற்றைத் தொடர்ச்சியாக இயங்கச் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுகின்றன” என்றும் ஆய்வாளர் கூடுதலாகச் சொல்லுகின்றார்.

‘பக்தினும் தொல்காப்பியரும்' என்பது முதல் கட்டுரை. பக்தின் என்பார் ரஷ்ய உருவவியலை ஆதரித்து நின்ற அறிஞர். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தவர். குறிப்பிட்ட அக்காலத்தில் ஐரோப்பாவில் எழுச்சியடைந்த அமைப்பியலோடு சில முக்கியமான விவாதங்களை நடத்தியவர் மிகயில் பக்தின்.

அமைப்பியல் எனும் மொழியியல் சிந்தனை மொழியின் அடிப்படை அலகாக ‘சொல்'லை எடுத்துக் கொள்கிறது. அமைப்பியலின் கருத்தை ஏற்காத பக்தின், மொழியின் அடிப்படை அலகு ‘உரையாடல்' அல்லது ‘பேச்சு' என்று கூறுகிறார். இக்கருத்திலிருந்து பக்தின் ‘உரையாடலியம்' (Dialogism) எனும் கோட்பாட்டை வளர்த்தெடுக்கிறார். சொல் என்பதற்கு ஒற்றைப்படையான பண்பு உள்ளது எனில், உரையாடலுக்கு ('பேச்சு'க்கு) இருமைப் பண்பு உள்ளது என்பது பக்தினின் நிலைப்பாடு. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மேற்கூறிய உரையாடல் பண்பு பரக்க அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் பக்தின் அவரது மொழியியல் கோட்பாட்டை ஓர் இலக்கியக் கொள்கையாக விரிவு படுத்துகிறார்.

மொழியின் உரையாடல் பண்பு பின்னாட்களில் சொல்லாடல் என்பதாக விரிகிறது. தனது X மற்றமை எனும் எதிர்வாகவும் அது செழுமையடைகிறது. குறைந்தபட்சம் இருவர் கொண்ட சமூகச் சூழலில்தான் பொருண்மை உண்டாக்கப்படுகிறது என்று பக்தின் விவரிக்கிறார். வகுப்பறைச் சூழல், பலர் பங்கேற்கும் உடையாடல் சூழல், சந்தைச் சூழல் என அது பெரிதுபடுகிறது. பொருண்மை உற்பத்திக்கும் அதுவே மையமாகிறது. அது ஓர் இடையீடு, நிகழ்வு, இயங்கியல் செயல்பாடு எனப் பலமுகங்கள் கொண்டதாகவும் அது வளரமுடியும். பலகுரல் பண்பு (Polyphonic), தொடர்பாடல் என்றும் அது பெருகுகிறது. இலக்கிய ஆய்வுகளில் படைப்பாளியின் குரல், கதாபாத்திரங்களின் குரல்கள் எனவும் அவை அமைய முடியும். உள்மன உரையாடல்களும் இவ்வகை அணுகுமுறையைக் கொண்டு ஆய்வு செய்யப்பட முடியும்.

பக்தினின் உரையாடல் எனும் வடிவத்தை தொல்காப்பியரும் தனது கிளவியாக்கம் எனும் கருத்தாக்கத்தில் ‘செப்பும் வினாவும்’ எனும் பகுதியில் கேள்வியும் பதிலும் என்பது போல தனது X மற்றமை, கேட்போன் X கூறுவோன், வணிகர் X வாடிக்கையாளர் உறவில், இன்னும் பல்வேறு வடிவங்களில் வகுத்துப் பேசுகிறார். பேச்சுக்களில் குறிப்புப் பொருள், வெளிப்படைப் பொருள் என்றும் பொருண்மை அடுக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார். தொல்காப்பியரையும் மிகயில் பக்தினையும் பேராசிரியர் ஆனந்தகுமார் சிறப்பாகச் சந்திக்கச் செய்கிறார். 

அகக் கவிதையின் கட்டமைப்பு முறை குறித்துப் பேசும் போது கட்டுரையாசிரியர் தமிழ்ப் பொருள்கோடல் முறையில் வழங்கும் உள்ளுறை/உவமம் போன்ற கருத்தாக்கங்களை நவீன பிரதிக் குறியியலுடன் பொருத்திக் காட்டுகிறார். வெளிப்படையாக விளங்கி நிற்கும் பொருள், மறைபொருள் ஆகியனவும் இதுபோலவே நவீனக் கொள்கைகளுடன் (Connotation, Denotation) ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன. வருணப் பாகுபாடு சார்ந்த வைதீகக் கருத்தியலைப் பயன்படுத்தி, ஓர் இலக்கணப் பிரதி சமூகப் பண்பாட்டுப் பிரதியாக்கலுக்கு ஆட்படுத்தப்படும் நிலையையும் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்து வரும் ஒரு கட்டுரையில் தொல்காப்பியத்தின் உள்ளுறைக் கோட்பாடு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திணை சார்ந்த சூழலையும் மனித உணர்வுகளையும் கொண்ட தமிழ்க் கவிதை சூழலியல் கவிதையியல் (Eco Poetics) என மலையாளச் சிந்தனையாளரான அய்யப்பப் பணிக்கரால் சுட்டிக்காட்டப்படுவதை எடுத்துக் காட்டுகிறார். தொடர்ந்து இவ் ஆய்வை பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் குறித்தும் மேற்கொள்ளுகிறார். தொல்காப்பியர் ‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்’ என இவற்றை விளக்குவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘சங்க இலக்கியத்தில் பெண்ணும் பெண்மையும்' எனும் கட்டுரை ”மறைக்கப்பட்ட பழைய பெண் பிரதிகளைத் தொகுத்தல்” என்ற ஒரு முக்கியமான கடமையைத் தமிழ் ஆய்வாளர்கள் முன் வைக்கிறது என ஆய்வாளர் உணர்த்துகிறார். தமிழில் அத்தகைய பல பெண்ணியப் பிரதிகள் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பழமையும் புதுமையும் இயைபுறப் பொருந்தி நிற்கும் பெண்மையை இக்கட்டுரை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறது.

மற்றுமொரு கட்டுரை, சங்கக் கவிதைகள் காளிதாசன் காவியங்களோடு ஒன்றிணைந்து ஊடிழை இலக்கியத் தன்மையை உருவாக்குகின்றன என்ற பிரச்சினையைக் கையாளுகிறது. தாக்கம், இணைநிலை, செல்வாக்கு போன்ற ஒப்பிலக்கியக் கூறுகளைக் கடந்து ஒன்று மற்றதுடன் ‘ஊடிழை இலக்கியத்தன்மை’ (Inter-Literariness) கொண்டமைவதைச் சித்தரிக்கிறது. ஊடிழை இலக்கியத்தன்மை என்பதன் வரையறை, அது உருவாகும் சூழல், ஒன்று மற்றதற்கு வழங்கும் பங்களிப்பு ஆகியன விவாதிக்கப்படுகின்றன.

மணிமேகலைக் காப்பியத்தை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று, பௌத்த சிந்தனையின் அறிவுத் தோற்றவியல் குறித்தது. மற்றது, பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் சங்க இலக்கியத் தலைவர்களின் வீரப் பண்பு (Heroic Pattern) குறித்து எழுதிய கருத்தை மணிமேகலைக்குப் பொருத்தும் கட்டுரை. அதாவது மறத்திலிருந்து அறத்தை நோக்கி மாறிச் சென்று, மணிமேகலை ஒரு முக்கியமான மடைமாற்றத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் உருவாக்கிய பின்புலம் பற்றிய கருத்தாக்கம். தொடர்ந்து மணிமேகலை அக்காப்பியத்தில் காலத்தைக் கடத்தல், வெளியைக் கடத்தல், பாலின எல்லைகளைக் கடத்தல் போன்ற செயல்களின் மூலம் பெண்மையை மறு உருவாக்கப் படுத்தல் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.

செவ்வியல் மீள்வாசிப்பு குறித்த இக்கட்டுரை தமிழுக்குப் புதிய பரிமாணங்களை முன்மொழிகின்றது என்பதைக் காண்கின்றோம். இந்நூலில் இடம்பெறாத தனித்த கட்டுரை ஒன்று தனிநாயகம் அடிகளாரின் பின்னைக் காலனிய அணுகுமுறையை பழந்தமிழ் பனுவல்களுக்குப் பயன்படுத்துகிறது. ரஷ்ய உருவவியல் தொடங்கி பின்னைக் காலனியம் வரையிலான கோட்பாடுகளை ஒருபுறமும், தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகளை மற்றொரு புறமும் சிறப்புற பழந்தமிழ் பனுவல்களின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பாங்கினை இக்கட்டுரையில் காண்கிறோம். இவ்வகை ஆய்வுகளைத் தமிழ் அறிஞர்கள் மேலும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்நூலாசிரியர் முன்மொழிகிறார்.

இந்நூலின் கட்டுரை ஒன்றின் கடைசி வரி கீழ்க்கண்டவாறு அமைகிறது.

“எல்லையற்ற முடிவற்ற குறிப் பொருண்மை கொண்டியங்கும் சங்கக் கவிதைகள் படைப்பாற்றல் மிக்க ஒரு திறனாய்வாளனுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.” (பக். 47).

இந்நூலுக்கும் நூலாசிரியருக்கும் இக்கருத்து வெகுவாகப் பொருந்துமாக இருக்கலாம்.

தமிழ்ச் செவ்விலக்கியங்கள் (மீள்வாசிப்பு)

முனைவர் பா. ஆனந்தகுமார்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை ரூ.120/-

ந.முத்துமோகன்

Pin It