கடந்த 17 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. பல பேருக்கு எதற்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. லைபாயை மட்டுமே அறிந்திருந்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கு வாஜ்பாய் யார் என்பது கூட தெரியவில்லை. பல சிறுசுகளிடம், கிழடு கட்டைகளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இந்த உண்மை தெரிய வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கார்கில் நாயகனே, தங்கநாற்கரச் சாலை தந்த தலைவனே என பலவாறாக வாஜ்பாய் புகழ்பாடும் கட் அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டர்களை ஊர் மக்கள் திடீர் பிள்ளையாரைப் பார்ப்பது போல அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 16 ஆம் தேதி இரவு தமிழக மக்கள் தூங்கி விழிப்பதற்குள் அசுர வேகத்தில் தமிழகம் முழுக்க இந்தக் கட்அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது ஒரு ஐந்துபைசா விஷயம் கிடைத்தால் கூட அதை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முடியுமா எனப் பார்க்கும் பிஜேபியின் அவல ஆசை இதிலும் தெரிந்தது.

Vajpayee 320ஆனால் என்னதான் வாஜ்பாயைப் பற்றி காவி வானரங்கள் புகழ்பாடினாலும் வரலாற்றைப் புரட்ட நினைத்தாலும், அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. ஏழைத்தாயின் மகன், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றெல்லாம் சொல்லி, மோடியைப் பிரதமாராக்கினால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று இந்திய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த கும்பலின் வாயில் இருந்து வரும் அனைத்துமே பச்சைப் பொய்கள்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உண்மையில் வாஜ்பாய் ஒரு மிதவாதியாக இருந்தாரா, சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தாரா, தேசபக்தியோடு இருந்தாரா என்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ரயிலேறி நாக்பூருக்குப் போயோ, இல்லை குறைந்தபட்சம் கமலாயத்துக்கு போயாவது காறித் துப்பிவிட்டு வந்து விடுவார்கள்.

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றவுடன் பல சீர்திருத்தங்களை அறிவித்தார். அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்பம் செய்த அறுபது நாட்களில் முடிவு, தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சேமிப்பை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது, 18 எண்ணெய் வயல்களும் 3 மின் நிலையங்களும் 48000 சதுர கி.மீ பரப்பிலான கனிம வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ரேசன் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்த வாஜ்பாய் அரசு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து கிலோ 11 ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி டன் அரிசியை ரூ 6 ரூபாய்க்கு தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது. லாபத்தில் இயங்கி வந்த டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை , பெங்களுர் விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே நாட்களில் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடுவோம்" என்று தேர்தலுக்கு முன்பே அமெரிக்க முதலாளிக்கு வாக்குறுதி அளித்த யஷ்வந்த் சின்கா, அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 சதவீத அந்நிய மூலதனமும், ரியல் எஸ்டேட் தொழிலில் 74 சதவீதமும் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி அந்தத் துறைக்கு அருண் ஷோரியை அமைச்சராக்கினார் வாஜ்பாய். மொத்தம் 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் 104 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனம் வெறும் 551 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தொலைபேசித் துறைக்கு சொந்தமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் டாடாவுக்கு விற்கப்பட்டது.

வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என தேசபக்தியைக் கக்கியவர்கள் போலி ராணுவ பேர ஊழலிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்து தமது பூர்வாங்க தேசபக்தியை நிரூபித்தார்கள். மேலும் சாமானிய மக்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் ஊழல், டெல்லியின் மையப்பகுதியில் சங்பரிவார நபர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனை ஊழல் என தொட்டதெல்லாவற்றிலும் ஊழல் செய்து, மீண்டும் மீண்டும் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட லஞ்சம் வாங்க முடியும் என்ற உண்மையை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தது வாஜ்பாயி அரசுதான். இவ்வளவு ஊழல்களும், அத்துமீறல்களும் நடந்தபோதும் ‘மிதவாதி’ வாஜ்பாய் மெளனமாகவே இருந்தார். அந்த மெளனம்தான் மோடிக்கு குஜராத் இனப்படுகொலையை நடத்தும் உத்வேகத்தை அளித்தது.

வாஜ்பாயின் ஆட்சிகாலத்தில்தான் நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா பள்ளிகளில் இந்துத்துவா பிரச்சாரம், பாடத்திட்டங்களில் இந்துத்துவாவை புகுத்துவது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல், அரசு நிதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பயன்படுத்துதல் போன்றவை நடைபெற்றன. மேலும் மும்பை படுகொலையை விசாரித்து வந்த சிறீ கிருஷ்ணா கமிஷனையும், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திவந்த லிபரான் கமிஷனையும் முடக்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வாஜ்பாயின் ஆட்சியில்தான் 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்குக் கடத்தினர். தீவிரவாதத்தை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வாஜ்பாயி அரசு, காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூர் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சாரக இருந்த ஜஸ்வந்த் சிங் மூலம் கந்தகாரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தது. வாஜ்பாய் அரசின் வீரத்தை உலகமே பார்த்துக் குதூகலித்த தருணம் அது.modi advani vajpayee

இந்த அவமானத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தீவிரவாதிகளுக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் கிடையாது என்பதைக் காட்டவும் வேண்டிய நெருக்கடி வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக இந்திய உளவுத்துறையும், பாஜக அரசும் திட்டமிட்டு இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை டிசம்பர் 13, 2001 அன்று நடத்தினர். மொத்தம் 14 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தக் குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவியான அப்சல் குரு வேண்டுமென்றே தூக்கிலிடப்பட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக வாஜ்பாயின் அரசு ஊழலிலும், லஞ்சத்திலும், முறைகேட்டிலும்,அதிகார துஷ்பிரயோகத்திலும், போலி தேசபக்தியிலும் முழ்கிக் கிடந்தது.

ஏன் வாஜ்பாயி இவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்தார் என்றால், அடிப்படையில் அவர் தன்னளவிலேயே ஒரு கீழ்த்தரமான மனிதராக இருந்ததுதான். ஏனென்றால் அடிப்படையில் கீழ்த்தரமான சிந்தனை உள்ள நபர்கள்தான் கீழ்த்தரமான சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய லீலாதரை காட்டிக் கொடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த பார்ப்பன வாஜ்பாய் தனது கொள்கையாய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டது இயல்பானதுதான். வாஜ்பாய் ஆட்சியில் நாட்டின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்றதும், நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததும், இராணுவ பேர ஊழலில் ஈடுபட்டதும், பாபர் மசூதியை இடித்துத் தள்ள வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய உடந்தையாக இருந்ததும், பார்ப்பன வாஜ்பாயின் இயல்பான நடத்தையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் நாட்டை கூட்டிக் கொடுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருக்கின்றான் என்றால், இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று.

நாம் வாஜ்பாயையோ, இல்லை மோடியையோ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் நாட்டை தேசவிரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். நாம் வாஜ்பாயின் வரலாற்றை கீழ் இருந்து மேலாகப் படித்தாலும், மேல் இருந்து கீழாகப் படித்தாலும் அதில் துரோகம் மட்டுமே எஞ்சி நிற்கும். வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, மோடியின் வரலாறும் அப்படித்தான்.

- செ.கார்கி

Pin It