விடுதலைப் புலிகளை ‘விடுதலை இயக்கம்’ என்கிறீர்கள் இது எந்த வகையில் நியாயம்? அதுவும் பெரியார் நாமத்தைக் கொண்டு இயங்கும் நீங்கள்? சகிக்க முடியவில்லை. பெரியார் தேசியத்தை கற்பு, காதல், கத்தரிக்காய் போல ‘ஒரு கற்பிதம்’ என்கிறார். ஆனால் புலிகள் அதற்காகவே தன்னினத்தையே கொன்று குவிக்கிறார்கள். உங்களுக்கு எங்கள் மீது அன்பிருந்தால் எமது விடுதலையில் ஆர்வம் இருந்தால் இங்கு என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து கண்டு கொள்ளுங்கள். அதை விடுத்து உடன்பிறந்தவர்கள் எம் தமிழர்கள் என்று சொல்லி எரியுறதில எண்ணெயை ஊத்தாதீர்கள். தயவு செய்து கீழே உள்ள கட்டுரையை வாசிக்கவும். இது ‘தேனீ’ இணையத்தளத்தில் பிரசுரமானது.

83 ஜீலையில் சிங்கள பேரினவாதிகள் கொன்ற தமிழர் தொகை - 3,000.
அதன் பின்னர் புலிப்பாசிசவாதிகள் கொன்ற தமிழர் தொகை - 30,000.
மக்கள் எதை நினைவுகூருவது?

- ச. கிருஷ்ணமூர்த்தி

1983ம் ஆண்டு ஜீலை மாதம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற பாகங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய வன்செயல்கள் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டு 23 வருடங்கள் உருண்டோடிவிட்டன. அன்று சிங்கள – தமிழ் இனவெறியர்களால் ஊட்டிவிடப்பட்ட இனவாத தீ மேலும் மேலும் தீவிரமாகி இலங்கையை அழித்த வண்ணமுள்ளது.

இந்த இனவன்செயலின் நினைவலைகளை உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் வருடா வருடம் நினைவு மீட்டி வருகின்றனர். ஏனெனில் இலங்கைத் தீவில் முன்னொரு போதும் இல்லாத வகையில் இந்த வன்செயல்களின் போது பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் கோடிக் கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்த தமிழர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இவ்வன் செயலின் பின்னரே பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகநாடுகள் பலவற்றில் அகதி அந்தஸ்து கோரி வாழ ஆரம்பித்தனர்.

83 ஜீலை வன்செயல் சிங்கள மக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற பிரச்சாரத்தை புலிகளும் ஏனைய தமிழ் இனவாத சக்திகளும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். உண்மையில் ஜீலை வன்செயல் சிங்கள மக்களால் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஒன்றல்ல. அன்றைய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் சிங்கள இனவெறியனுமான ஜே.ஆர்.ஜேவர்த்தனாவின் ஆசியுடன் பிரதமராக இருந்த ஆர். பிரேமதாசா மற்றும் ரணில் விக்கிரமசிங்க, சிறிமத்ய, லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்களின் தலைமையில் அன்றைய அரசாங்கம் திட்டமிட்டு நடாத்தியதே 83 ஜீலை வன்செயலாகும்.

தமிழ் மக்களின் நீண்டகால பரமவைரியான ஜே.ஆர் 1977ல் ஆட்சிக்கு வந்தவுடனேயே தமிழ் மக்களைப் பார்த்து “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” எனக் கொக்கரித்தார். அத்துடன் நிற்கவில்லை தேர்தல் முடிந்த கையோடு கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான இன வன் செயல்களை தூண்டிவிட்டது மட்டுமல்லாது அதற்கான பழியை திட்டமிட்டு இடது சாரி கட்சிகளின் மேல் அபாண்டமாக சுமத்தி அவற்றைத் தடைசெய்தார்.

அதன் பின்னர் ஜே.ஆர் - தமிழர் விடுதலைக் கூட்டணி உடன்பாட்டால் உருவாக்கப்பட்ட யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் போது 1981 ஜீன் 4ம் திகதி தேர்தலில் மோசடி செய்ததுடன் யாழ். பொது நூலகம், யாழ் சந்தை, நகரக் கடைகள், யாழ் எம்பியின் வீடு என்பவற்றை எரித்து யாழ் நகரையே சுடுகாடாக்கியது ஐக்கிய தேசியக் கட்சி அரசு.

அத்தோடு நிற்காமல் 1981ல் இரத்தினபுரி பகுதியில் இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இன வன்செயலையும் ஐ.தே.கட்சி முன்னின்று நடத்தியது. இருந்த போதும் ஐ.தே.க தலைமையில் தமிழ் விரோத இனவெறி அடங்கிவிடவில்லை.

இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே ‘வீடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்புக் கொள்ளி எடுத்துக் கொடுத்த மந்திரியாக’புலிகள் இயக்கம் செயற்பட்டது. 1983 ஜீலை 23ம் திகதி இரவு யாழ்பாணம் திருநெல்வேலியில் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தபால்பெட்டி சந்தி என்ற இடத்தில் இராணுவ ட்ரக் வண்டியொன்றின் மீது புலிகள் இயக்கம் கண்ணி வெடித்தாக்குதல் ஒன்றை தொடுத்து 13 இராணுவத்தினரை கொலை செய்தது. இதன் மூலம் தமிழர்களை அழிக்க சந்தர்ப்பம் பார்த்திருந்த ஜே.ஆர் அரசுக்கு புலிகள் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஜே.ஆர் அரசு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்களை பெரும் தொகையில் கொன்று குவித்ததுடன் இனப் பிரச்சினையை இராணுவமயப்படுத்தி, உள்நாட்டு யுத்தத்தையும் ஆரம்பித்து வைத்தது. இந்த பேரழிவுகளுக்கு கால்கோல் இட்டவர்கள் புலிகளே.

இலங்கையின் வரலாற்றிலேயே மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையாக வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் 52 பேர் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது இந்த வன்செயலின் போதே.

இந்த கறுப்பு ஜீலை சம்பவங்களை ஒட்டு மொத்தமாக எடுத்து நோக்குகையில் சிங்கள பேரின வெறியர்கள் மட்டும் இவற்றால் இலாபம் பெற்றதாக சொல்லிவிட முடியாது. மறுபக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் இந்த சம்பவங்களால் தனிப்பட்ட முறையில் இலாபம் பெற்றுள்ளார்.

பிரபாகரனின் முதலாவது இலாபம் செல்லக்கிளியின் கொலை. திருநெல்வேலி தாக்குதலின் போது கன்னி வெடியில் சிக்கிய இராணுவத்தினர் மீது ஏனைய புலிகள் தாக்குதல் தொடுக்க பிரபாகரனோ அருகிலிருந்த கடையிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகளின் மூத்த உறுப்பினரான செல்லக்கிளி மீது தாக்குதல் நடத்தி அவரைக் கொலை செய்தார். தாக்குதல் நடவடிக்கைகளில் மிகுந்த ஆற்றலும் அதே நேரத்தில் பிரபாகரனுடன் நீண்டகாலமாக பல விடயங்களில் முரண்பாடுகளையும் கொண்டிருந்த காரணத்தால் சந்தர்ப்பத்தை பாவித்து அவரை பிரபாகரன் தீர்த்துக் கட்டியதாக இத்தாக்குதலில் பங்குபற்றிய அன்றைய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரில் ஒருவர் இத்தகவலை பின்னர் தெரிவித்தார். இந்த உண்மை இன்றுவரை புலிகளின் தலைமைப் பீடத்தால் முடி மறைக்கப்பட்டே வருகின்றது.

பிரபாகரனின் இரண்டாவது இலாபம் வெலிக்கடைச் சிறையில் நடந்த படுகொலையின் போது ரெலோ இயக்கத் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் கொல்லப்பட்ட சம்பவமாகும்.

ஏனெனில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன் பிரபாகரனை விட துணிவும் செயலாற்றலும் மிக்கவர்களாக இருந்ததினால் அவர்களை எப்படியும் ஒழித்துக் கட்டிவிட பிரபாகரன் பல திட்டங்களை தீட்டி செயற்பட்டு வந்துள்ளார்.

குட்டிமணியும் பிரபாகரனும் இணைந்து நடத்திய நீர்வேலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து, கொள்ளையடித்த பணம், நகைகள் என்பனவற்றை இருவரும் பாகப்பிரிவினை செய்து கொண்டு குட்டிமணி இந்தியாவுக்கு களவாக வள்ளத்தில் செல்ல முற்படுகையில் பிரபாகரன் பொலிசாருக்கு தகவல் கொடுத்து காட்டிக் கொடுத்ததால் தான் பருத்தித்துறை வல்லிபுரக் கோயிலுக்கு அருகாமையில் இருந்து கடற்கரையில் வைத்து குட்டிமணி கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

எனவே பிரபாகரன் நடத்திய திருநெல்வேலி தாக்குதல் மூலம் செல்லக்கிளியையும் குட்டி மணியையும் ஒழித்துக்கட்ட முடிந்தது பிரபாகரனுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த வெற்றியாகிவிட்டது. ஏனெனில் அவ்விருவரும் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு புலிகள் இயக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சவால்கள் ஏற்பட்டு அவர் இன்றைய தனிக்காட்டு ராஜா நிலையை அடைந்திருக்க முடியாது.

83 ஜீலையில் ஐ.தே.க அரசாங்கம் தமிழர்களை பயமுறுத்தி அவர்களது நியாயமான உரிமை கோரிக்கைகளுக்கு சமாதி கட்டும் வகையிலேயே வன் செயல்களை பெரும் எடுப்பில் தூண்டிவிட்டுது ஆனால் அது எதிர்பார்த்ததுக்கு மாறாகவே சென்று முடிந்தது.

அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அடங்குவதற்கு பதிலாக வீறு கொண்டு எழுந்தார்கள். குறிப்பாக தமிழ் இளைஞர்கள் தீவிரமாக ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தார்கள். அத்துடன் அண்டை நாடான இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்களுக்கு ஆதரவும் அனுதாபமும் பெருகியது. ஜே.ஆர். அரசு எவ்வளவோ முயன்றும் இவற்றைத் தடுக்க முடியவில்லை.

ஆனால் பெரும் இனவெறியனும் ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆரால் செய்ய முடியாததை இன்று பாசிச புலிகள் செய்து முடித்துள்ளனர்.

புலிகள் உண்மையான தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் அனைத்தையும் அழித்தொழித்ததுடன், அகிம்சை வழியில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மிதவாத தலைமையையும், தமிழ் அறிஞர் குழாமையும் அழித்தொழித்துள்ளனர். அது மாத்திரமின்றி பாரம்பரியமாக தமிழர்களின் நட்பு சக்தியாக இருந்த இந்தியாவை பகையாளியாக மாற்றியதுடன் இன்று சர்வதேச சமூகத்தின் முன்னால் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கையாக புலிகளின் செயற்பாடுகள் உருமாற்றியுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல துன்பங்கள் புலிகளினால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போவது கண்கூடு.

83ம் ஆண்டு ஜீலை மாதம் ஐ.தே.க குண்டர்கள் கொலை செய்த தமிழ் மக்களின் தொகை ஏறத்தாள மூவாயிரம் பேர். அதன் பின்னர் புலிகள் மாற்றியக்கப் போராளிகள், மாற்றுக் கருத்துக் கொண்டோர், தமக்கு ஒத்துழைக்காதவர்கள், அரசபணிகளில் இருந்தோர் என ஏறத்தாள முப்பதினாயிரம் தமிழ் மக்களை இன்றுவரை படுகொலை செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது சிங்கள பேரினவாதத்தின் செயல்பாடுகளை மிஞ்சிய தமிழ் பாசிசத்தின் செயற்பாடாகும். எனவே தான் இன்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சிங்கள பேரினவாதிகளுடன் போராடுவதற்கு முன்பாக தமிழ் மக்களை உள்ளிருந்தே கொல்லும் வியாதியான தமிழ் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடுக்க வேண்டியுள்ளது.

எனவே 83 கறுப்பு ஜீலை சம்பவங்களை தமிழ் மக்கள் நினைவு கூரும் வேளையில் சிங்கள பேரினவாதிகளின் செயல்களை மட்டுமின்றி தமிழ் பாசிசவாதிகளின் செயல்களையும் நினைவு கூரவேண்டும். ஜீலை சம்பவங்களுக்கென்றாலும் சரி அதன் பின்னரான சம்பவங்களுக்கென்றாலும் சரி சூத்திரதாரிகளான இரு பகுதியினர் இருப்பார்களானால் ஒன்று ஐ.தே.க மற்றது புலிகள் இயக்கம் ஆகும்.

எனவே குறைந்த பட்சம் இந்த இரு பகுதியினரும் 83 ஜீலை சம்பவங்களுக்காக தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்பதையாவது தமிழ் மக்கள் இத்தருணத்தில் வலியுறுத்த வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் கறுப்பு ஜீலை தினத்தை சிங்கள பேரினவாதிகளுக்கும் தமிழ் பாசிச வாதிகளுக்கும் எதிரான ஒரு தினமாக பிரகடனம் செய்து நினைவு கூர வேண்டும். அதுவே 83 ஜீலை வன்செயலின் போது அதன் பின்னரான உள்நாட்டு யுத்தத்தின் போதும் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

Pin It