"காரல் மார்க்ஸிடம் என் அப்பாவைத் தேடினேன். அவர் தான் எனக்கு எப்போதும் மிகவும் நெருக்கமானவர் .." - ராஜ்கெளதமன்

கோட்பாடுகளைக் கொண்டு இலக்கியத் திறனாய்வு செய்வது என்பது ஒரு வகை. இலக்கியத்திலிருந்து கோட்பாடுகளை உருவாக்குவதும் அடையாளம் காண்பதும் முன்னெடுப்பதும் இன்னொரு வகை. முதல் வகை திறனாய்வு பண்டிதர்களின் கைவரிசை. இரண்டாவது வகை திறனாய்வு கோட்பாடுகளுக்குள் இலக்கியத்தின் படைப்பு தளம் அடங்குவதில்லை என்பதில் ஆரம்பிக்கிறது.

raj gouthamanராஜ் கெளதமன் அவர்கள், தனிமனிதனின் அனுபவத்தில் சமூகத்தின் எதிரொலியை அடையாளம் கண்டு அதற்கான பின்புலத்தை பண்பாட்டு அரசியல் தளத்தில் முன்னெடுத்து செல்பவர். இளங்கலையில் விலங்கியல் படித்தவர் ராஜ் கெளதமன். இப்பின்புலம் இலக்கிய திறனாய்வுகளில் தொழில்நுட்ப பார்வையாக விரிவடைந்திருக்கிறது.

பகுத்தல், அதை ஒரு வகையாக தொகுத்தல். தொகுத்ததை வைத்துக்கொண்டு  அவர் வந்தடையும் புள்ளி .. அவருடைய மொத்த எழுத்துகளும் இந்த வகைக்குள் அடங்கும். மிக நுண்ணியப் பார்வை குறுக்குவெட்டுத் தோற்றம் என்று சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அவரால் இக்கோட்டில் பயணிக்க முடிகிறது.

கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய கல்வியாளர், இலக்கிய படைப்பாளர்,  சமூக சிந்தனையாளர், மிகச்சிறந்த இலக்கிய ஆய்வறிஞர், நவீன இலக்கியத்தின் விமர்சனக்கலையில் தனித்துவமானவர், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என்று விரியும் அவருடைய இலக்கிய பரப்பளவு வாசகனை மிரட்டுகிறது.

ஆகோள் பூசலில் ஆரம்பித்து பெருங்கற்கால பாணர் சமூகத்தை முன்வைத்து அவர் பேசும் உடன்போக்கு, எப்படி நிலவுடமை சமூகத்தில் தூற்றுதலுக்குரியதாக மாற்றம் பெறுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைப்பார். தமிழரின் நாகரிகம் எதை அடிப்படையாகக் கொண்டது என்று இதுவரை அரசும் அதிகாரமும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும்  எதை எல்லாம் கற்பித்து வந்தனவோ அவற்றை மறுதலிக்கிறார்.

"தமிழரின் நாகரிகம் சேர சோழ பாண்டிய/முருகன், சிவன் திருமால் சார்ந்ததாக இல்லாமல் மூதாதையாரை வழிபட்ட - நெல் பாசனம் செய்த - கால்நடை வளர்த்த - வேட்டையாடிய - பாணர் கூத்தர் கலைகளில் சடங்குகளைச் செய்த - இயற்கையாய்க் கிடைத்த அரிய கற்களை மெருகூட்டித் தொலைதூர இடங்களில் வாணிபம் செய்த சின்னங்களையும் , தமிழ் எழுத்துக்களையும் பதிவு மற்றும் சாசனங்களை எழுதப் பயன்படுத்திய - பெருங்க்கற்கால - பெருங்கற்படை இனக்குழு நாகரிகத்திலிருந்து உருவானது என்பது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி விட்டபிறகு மெளனமாகிவிட்டார்கள்" என்பார் ராஜ் கெளதமன். (கலித்தொகை-பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு)

புராதனமான இனக்குழு சமூகமும் அதன் பண்பாடும் வளர்ந்து வந்த வேளாண் சமூக அமைப்பால் மாறுதலுக்குள்ளாகி, குழுச்சமூகத்தின் குழு மற்றும் குருதி உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் பலவும் புதிய நிலக்கிழமையின் சொத்துறவுகள் சார்ந்த பொருள்சார் மதிப்பீடுகளாக நிறமாற்றமடைந்தன. வேளாண் நாகரிகத்தின் செல்வமும் உடைமையும் பெருகப் பெருகப் பழைய குழுச்சமூக உறவுகளின் உணர்ச்சிகரமான மனித இணக்கமானது பொருள் மற்றும் பயன் சார்ந்த உறவுகளாக மாறின.

அதனால் தான் புறநானூறு (76)

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை

என்று இருத்தலை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறது. இம்மாற்றங்கள் சங்க இலக்கிய காலத்திலேயே ஆரம்பித்துவிட்டன என்பதை பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்ற நூலில் விளக்குவார்.

சங்க இலக்கியத்தில் காணப்படும் அரிதினும் அரிதான குறிப்புகளை தன் ஆய்வுக்கட்டுரைகளில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

தொல்காப்பியம் கற்பியலாக சொல்வது:

கற்பு எனப்படுவது கரணமொடு புணர,

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,

புணர்ந்து உடன் போகிய காலையான.         

                               

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

                               

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,

ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.

கற்பு என்ற பாகுபாடு "கரணம்" என்ற திருமணத்தின் மூலமே உருவானதை தொல்காப்பியம் உறுதி செய்கிறது. ஆனால் மேலோர் மூவருக்கும் உரிமையாக இருந்த மணச்சடங்கு கீழோருக்கு அதாவது சூத்திரர்களுக்கு எப்போது உரிமையானது என்று சொல்லும் தொல்காப்பிய விளக்கங்கள் சங்கப்பாடல்களில் காணப்படவில்லை என்று உறுதி செய்கிறார்.

ஆனால் அகப்பாடல் 256ல் ஒரு பெண்ணுடம் களவு வாழ்க்கை வாழ்ந்தவன் பின்னர் "அவளை அறியவில்லை" என்று பொய் சொன்னதால், கள்ளூர் மன்றத்தார் சாட்சிகளை விசாரித்து அவனுக்குத் தண்டனை வழங்கிய தகவலை - அரிதினும் அரிதான செய்தியை அறியத்தருகிறார். (பாட்டும் தொகையும். தொல்.கா. மும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்)

பாணர் மரபு உணவு மற்றும் பாலியல் நுகர்ச்சித் தேடலைத் தனது நாகரிகமாகக் கொண்டியங்கிய இனக்குழு வாழ்வின் நிலைபேற்றுக்கு இன்றியமையாத உலகியல் அறிவினை அந்த இனக்குழுவின் அறிவுக்களஞ்சியமாக தொகுத்து வைத்திருந்தது. புராதனமான பாணர் வாய்மொழி மரபு சார்ந்த பாடல்களின் எச்சங்களைப் புலவர் மரபு சார்ந்த அக- புற திணை இலக்கியக்களில் காணமுடியுமா ? என்ற கேள்வியை முன்வைத்து எதிர்கால ஆய்வுக்கான இன்னொரு சாளரத்தை திறந்துவிடுகிறார் ராஜ்கெளதமன்.

மலை சுனை மரம் என்று இயற்கையை வழிபட்ட தமிழ்ச்சமூகத்தில் கோவிலின் மூலவடிவம் எப்படி உருவானது என்பதை போகிற போக்கில் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில் பேசி இருக்கிறார். அகம் 167. ஓர் ஊர் மன்றத்தில் நெடுஞ்சுவர் மேல் விட்டம் அமைத்து வைக்கோல் போரால் கூரை வேய்ந்து அதனுள்ளெ "ஏழுது அணி கடவுள்" ஓன்று நிறுவி அதன் முன்னால் பலிபீடம் அமைத்து திண்ணையை மெழுகி ஒழுகு பலி ஊட்டினர் ஊரார் என்ற வரிகளை முன்வைத்து கோவிலின் மூலவடிவம் உண்டான மூலக்கதையை தெரிவிக்கிறார்.

ராஜ்கெளதமனின் ஆய்வுக்கட்டுரைகளுக்கு அவர் தரும் அடிக்குறிப்புகள் ஆய்வு கட்டுரைகளுக்கு மட்டுமின்றி வாசகனுக்கும் எதிர்காலத்தின் ஆய்வாளர்களுக்கும் மிகவும் முக்கியமானவை.

பதிற்றுப்பத்து ஐங்கூறுநூறு - சில அவதானிப்புகள் என்ற நூலில் சேர மன்னனின் மனைவியர் சோழ பாண்டிய மன்னர்களின் அரசியரை விட அதிகமாகவே புகழப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்கி, சேர நாட்டின் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சமாகவே அதை அடையாளம் காட்டுவார்." பெண்ணின் உடல் உறுப்பையும் அவளது தெய்வீக கற்பையும் இணைத்துப் பாடுவது ஒரு வாய்ப்பாடு போலப் புலவர் மரபில் இருந்தாலும் கபிலன், வாழியாதனைப் பாடியபோது, "அவன் மனைவியின் பூண்கள் அணிந்த இளமுலைகளையும், வரிகள் உடைய அல்குலையும், மலர்ந்த நோக்கையும், மூங்கில் தோளையும் வருணித்தப் பின், "காமர் கடவுளும் ஆளும் கற்பு" என்று அவளுடைய பாலியல் ஒழுக்கத்தின் சிறப்பை கடவுளே ஆள்வதாக பாடியுள்ளார் என்று எடுத்துக்காட்டும் போது இன்றும் அப்பாடலும் வருணனையும் ஆச்சரியமூட்டுகிறது.

அரசனின் மனைவியை ஓர் அயலானாக இருக்கும் புலவன் இம்மாதிரி பாலியல் உறுப்புகளின் அழகை சிலாகித்து வருணனை செய்ய முடியுமா? அல்லது இன்றும் சேரமகளிர் மார்பை மறைக்கும் தாவணி அணியாமல் முண்டு அணியும் கலாச்சாரத்துடன் இருப்பதைக் கொண்டு பாலியல் பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துணர்ந்து கொள்வது சாத்தியமா என்ற கேள்வி வாசகனுக்கு எழுகிறது.

சரித்திர வரலாறு கற்காலம், இனக்குழுக்களின் காலம், சிற்றரசுகளின் காலம், பேரரசுகளின் காலம் என்றெல்லாம் கடந்த காலத்தைப் பிரித்து வகைப்படுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் ராஜ்கெளதமன் இறைச்சிக்காலம், மரக்கறி காலம், பட்டினிக் காலம் என்று பிரிப்பதும் அதற்கு அவர் சொல்லும் காரணங்களும் பகடியின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய தன்வரலாற்று நாவலில் அவர் சித்தரிக்கும் அப்பா, அம்மா மரபான தாய் தந்தை பாசவலையிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவர் தந்தை, . ஒரு சாதாரண வாய்ச்சண்டையாகத் தொடங்கும் மோதலில் பெற்ற மகனுடைய விதைகளைப் பிடித்து  அழுத்தி நசுக்கிவிட கைநீட்டுகிற ராணுவ வீரரான தந்தையின் தோற்றத்தை மறக்க முடியவில்லை. அவரே தன் மகன்மீதிருக்கிற ஆத்திரத்தை அவன் சேர்த்துவைத்திருக்கிற புத்தகங்களையெல்லாம்  எடுத்துக் குவித்துக் கொளுத்திவிடுகிற சுபாவத்தைத் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் இதே தந்தைதான் விடுதியில் தங்கிப் படிக்கிற மகனைக் குதிரைவண்டியில் சென்று பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு  ஐந்து ரூபாய்த்தாளைச் சட்டைப்பைக்குள் அழுத்திவிட்டு வருகிறார்.

தாயின் அக்கறையின்மை, பாராமுகம்.. இக்கருத்துகளில் அவர் இன்றும் மாறவில்லை. 

அண்மையில் என் முகநூல் பதிவு ஒன்று -

 30/3/18 அம்மாவின் சிலுவை என்ற கவிதைக்கு அவருடைய பின்னூட்டம்-

"அம்மாவின் ஆளுமை இப்படியெல்லாமிருக்குமென இப்போதுதான் தெரிகிறது.எனக்கு என் தாயினுடைய இராணுவக் கணவனையே தெரியும்.நன்றி." ஒரு மனிதனாகவும் ஒரு படைப்பாளனாகவும் அவருடைய சில தழும்புகள் இன்னும் ஆறவில்லை.

அத்தழும்புகள் தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ அல்லது சாதியப்படிநிலையில் ஒரு படித்த கல்லூரி பேராசிரியர், அறிவுஜீவி இச்சமூகத்தில் எதிர்கொண்ட சாதிமுகம் சார்ந்த அனுபவங்களாகவோ வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அனுபவங்களையும் அவர் அழுதுகொண்டோ அல்லது வேதனையுடனோ சொல்பவரில்லை.

"புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷ்ஸ் ' புத்தகத்தில் புதுமைப்பித்தனைப் பற்றி ராஜ்கெளதமன் "எதைப்பற்றி எழுதினாலும் புதுமைப்பித்தனிடம் முண்டியடித்துக் கொண்டு வருவது நகைச்சுவைதான். இது கேலி, கிண்டல், பகடி, விகடம், எள்ளல் என்று பலபடியாக வெளிப்படும். அவருடைய கிண்டலுக்கு ஆளாகத நபர்களே கிடையாது, அவர் உட்பட" என்று சொல்லுவார். அவர் புதுமைப்பித்தனுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும். அவருடைய ஆய்வு கட்டுரைகளில் கூட வெளிப்படும் கேலி, கிண்டல் , எள்ளல் தொனி அவருடைய தனித்துவம்.

அண்மையில் அவருக்கு விளக்கு இலக்கிய அமைப்பின் புதுமைப்பித்தன் விருது - வழங்கப்பட்டது. பொதுவாக அவர் விருதுகளை விரும்புவதில்லை. அவருக்கு விருது கொடுத்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா என்று கூட சிலர் நினைக்கிறார்கள். அண்மையில் அவரை சந்தித்தேன். அத்தருணத்தில் அவர் வாங்கிய முதல் விருது என்ற பேச்சு வந்தப்போது அவர் உடனே சொன்னார் "இல்லை இல்லை.. இது நான் வாங்கிய இரண்டாவது விருது!" என்று.

எப்போது முதல் விருது வாங்கீனீர்கள் என்ற கேட்டவுடன் "அப்போது நான் மூன்றோ நாலோ படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கயிற்றில் மிட்டாய்களைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அக்கயிற்றை மேலும் கீழுமாக அசைப்பார்கள். எங்கள் கைகள் இரண்டையும் பின்பக்கமாகக் கட்டியிருப்பார்கள். நாங்கள் குதித்து குதித்து அந்த மிட்டாயை வாயால் கவ்வி பிடிக்க வேண்டும்... அப்போட்டியில் நான் ஜெயிச்சிட்டேன். நான் வாங்கிய முதல் விருது அதுதான்..!" என்றார்.

அவரும் நானும் சுற்றி இருந்தவர்களும் வாய்விட்டு சிரித்தோம். ஆனால், இது வெறும் கதையல்ல. இக்கதைக்குள் பல செய்திகள் இருக்கின்றன. பல விருதுகளின் கதைகளும் இதற்குள் அடக்கம்தானே!

அவருடைய நாவல்கள் சுயசரிதையாகவும் பரந்து பட்ட ஒரு காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் அதனால் ஏற்படும் அக புற போராட்டங்களையும் உள்ளடக்கியது. அவருடைய மொழியாக்கங்கள் தனித்த இன்னொரு ஆய்வுக்குரியன.

ராஜ்கெளதமன் முன்வைக்கும் சில ஆய்வு முடிவுகள் கவனிக்கதக்கவை.

* தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிகு பண்பாட்டுக் கூறுகளை அடித்தட்டு மக்களான பாணர் விறலியர் பாடல்களிலிருந்தும் சடங்க்குகளிலிருந்தும் புலவர் மரபு பெற்றது .

* அச்சமூக மாற்றம் அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களின் விதிகளையும் கவனத்தில் கொண்டு வளர்சிதை மாற்றங்களுக்குள்ளாகியது.

* தலித்திய இலக்கியத்தின் அழகியல் என்பது மாற்றம், புரட்சி, கலகம் ஆகியவற்றை சார்ந்தது.

* அறிவுஜீவி இலக்கியக்காரர்களுக்கு தலித் இலக்கியம் பிரச்சாரமாக தோன்றலாம். அவர்கள் பரவசப்படுகிற இலக்கியத்தில் மிகவும் தந்திரமாக அரசியல் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் தலித் விடுதலை இலக்கியத்தில் இப்படி மேட்டிமைத்தனமான தந்திரம் இருக்காது.

- புதிய மாதவி, மும்பை

Pin It