தமிழக வரலாறு குறித்த பன்னூலாசிரியர் கோ. தங்கவேலு கடந்த ஜூலை மாதம் 18 ந்தேதி சென்னையில் மரணமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் அஞ்சிப்புத்தூர் கிராமம் விவசாய தலித் குடும்பத்தில் பிறந்த இவர் குடும்ப வறுமை காரணமாக ரெயில்வே மெயில் சர்வீஸில் பணியாற்றிக் கொண்டே படித்தார். 17 ஆண்டுகள் சென்னை மாநிலக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறையில் சாதிரீதி யான பிரச்சினை எழுந்து நீதிமன்றம்வரை சென்றது. அப்பிரச்சினையை தவிர்க்கும் பொருட்டு பொதுவான நபர் என்ற அடிப்படையில் கோ. தங்கவேலு அவர்களை துறைத்தலைவராக அழைத்துக் கொண்டது மதுரை பல்கலைக்கழகம் அழைத்த தருணத்தில் அவர் சென்னை மாநிலக்கல்லூரி யிலிருந்து ஓய்வும் பெற்றிருந்தார்.

கோ. தங்கவேலு வரலாறு தொடர்பான நூல்களையே எழுதியிருக்கிறார். அவற்றுள் பாடநூல் சார்ந்துதான் அதிகம் எழுதினார். தமிழ்நாடு அரசு வெயீடான ஜப்பான் வரலாறு, தியாகராஜர் என்பவரோடு சேர்ந்து எழுதிய சம்புவராயர் வரலாறு, 1978 ல் பழனியப்பா பிரதர்ஸ் இரண்டு தொகுதிகளாக வெளியிட்ட இந்திய வரலாறு, இந்திய கலை வரலாறு, தாய்நில வரலாறு (இரண்டு தொகுதிகள்) போன்றவை முக்கிய நூல்களாகும். தமிழ் வளர்ச்சித்துறை எட்டு தொகுதிகளாக வெளியிட்ட தமிழக வரலாற்று தொகுதிகள் முதற்தொகுதியை தவிர்த்து ஆங்கிலேயர் வருகை வரையிலான தொகுதிகள் இவரின் மேற்பார்வையின் கீழ் உருவாகி வெளியாயின.

கோ. தங்கவேலு பொதுவான வரலாற்று நூலாசிரியர் என்பதைத் தாண்டி தலித் வரலாறு குறித்தும் புலமை உடையவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. ஒரு நூற்றாண்டு தலித்வரலாறு பற்றி அறிவுடைய கடந்த தலைமுறையினரில் கடைசி நபர் இவர்தாம். அன்பு பொன்னோவியம், தி.பெ. கமலநாதன் போன்று வெப்படையாகவும், அரசியல் தன்னுணர்வோடும் இவர் செயற்படவில்லை எனினும் தலித்வரலாறு குறித்த விழிப்புணர்வு உடையவராக இவர் இருந்தார். தகவல் பிழைகள், தொடர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் அவரின் வரலாற்று நூல்கல் உண்டெனினும் ஆவணங்கன் அடிப்படையில் தலித்வரலாறு குறித்து எழுதியிருப்பாரேயானால் தலித்துகளின் அரசியல் கண்ணோட்டம் குறித்த பங்கு புலப்பட்டிருக்க முடியும். இத்தளத்தில் அவர் அதிகம் எழுதவில்லை என்றாலும், தலித் போராட்டங்கள் குறித்த ஓர்மையை அவரின் பொதுவான வரலாற்று நூல்களிலேயே பார்க்க முடியும் என்பதுதான் அவரின் சிறப்பு. தலித் அடையாளத்தை தனித்து எழுதுவது ஒருவகையான போக்கு. ஒட்டுமொத்த வரலாற்றுத் தளத்திலேயே தலித்வரலாற்றிற்கு முக்கியத்துவம் தந்து எழுதுவது மற்றொரு போக்கு. தலித் போராட்டத்தை பொதுவான போராட்டமாக பார்க்கக்கோரும் பார்வைதான் இரண்டாவது போக்கு. இந்த இரண்டாவது போக்குதான் கோ. தங்கவேலுவுடையது. இந்திய விடுதலைப்போராட்டம், தமிழக அரசியல் போராட்டங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதும்போது அதில் எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்ற ஆளுமைகள், அவர்கன் பணிகள் குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். அவர் இரண்டு பாகங்களாக எழுதிய தாய்நில வரலாறு என்ற நூல்.

மாறிவரும் ஆய்வுமுறைகளுக்கேற்ற வரலாறு எழுதுவது குறித்த நவீன அணுகுமுறைகள் அவரிடம் இல்லையெனினும் தம் கடைசிக்காலத்தில் தலித் வரலாறு சார்ந்த நூல்களை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசர்’’ என்ற அவரின் நூல் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியானது.

கோ. தங்கவேலுவை வழிகாட்டியாகக் கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1995 இல் வேலாம்மாள் என்பவர் செய்த எம்ஃபில் ஆய்வேடுதான் அயோத்திதாசரைக் குறித்து கல்வித்துறையில் வெளியான முதல் வெயீடாகும். அண்மையில் இவர் எழுதி கையெழுத்துப் பிரதிகளாக நின்றுபோன இரண்டு நூல்கள் சாதியும் நிலமும், mrning star f M.C.Rajah ஆகியவையாகும். தமிழக சமூகநீதி போராட்டம் குறித்த Social Justice in Tamilnadu என்ற ஆங்கில நூலைத் தொகுத்தவர். சகஜானந்தர் குறித்தெல்லாம் கட்டுரைகள் இடம் பெற்றுள்ள இந்நூலில் கி. வீரமணி, பேரா. சந்திரபாபு ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வழக்கறிஞராகவும் பதிவுசெய்து கொண்டு பணியா ற்றிய இவரின் எல்லா நூல்களிலும் தனித்தமிழ் ஈடுபாடும், புறக்கணிக்கப்பட்ட மக்கள் குறித்தான அக்கறையும் நீங்காமல் இடம்பெற்று வந்தன.

- ஸ்டாலின் ராஜாங்கம்

Pin It