8 வயது சிறுமி ஆசிஃபா, காஷ்மீரில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாகத் தூக்கியெறியப்பட்டாள். 8 வயது சிறுமிக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என ஊடகங்களும், பலரும் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் அதையும் கடந்து ஆசிஃபா பிறந்த மாநிலம் அவளது கொலைக்கு மற்றொரு காரணமாய் இருக்கிறது என்பதையும், அந்த மாநிலத்தில் கற்பழிப்புகளும், கொலைகளும் புதிதல்ல என்பதையும் பேச மறந்து விடுகிறார்கள்.

நாட்டின் 500 ஆண்டு கால வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித்தை இடித்தது இந்துக்கள் அல்ல, அதற்கு முன்னால் நடத்தப்பட்ட ரதயாத்திரை அரசியலும் ராமர் கோவில் பெயரால் நடத்தப்பட்ட அரசியலும் தான். ஒரு தவறை செய்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனையை விட அதற்குக் காரணமாக அமைந்த சூத்திரதாரிக்கு அதிக தண்டனை தரப்பட வேண்டும் என்பதே நியாயமானது. அதே வகையில் இன்று காஷ்மீரகத்தில் 8 வயது சிறுமியை சிதைத்தவர்கள் மட்டுமே குற்றவாளியாகி விட மாட்டார்கள். அங்கு நடைபெறும் தொடர் கற்பழிப்புகளுக்கு காரணமாக விளங்கும் அரசியல் சக்திகளும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

asifa agitation

இந்திய நாட்டின் இராணுவத்தினரே ஒரு கிராமத்தை முழுவதுமாக அங்கிருக்கும் ஆண்களை எல்லாம் கடத்தி விட்டு அக்கிராமத்தின் பெண்களை கற்பழித்த சம்பவங்களெல்லாம் காஷ்மீரில் நடைபெற்றதுண்டு. காஷ்மீரைப் பாதுகாக்கும் காவல் அதிகாரிகளின் மீதும், இராணுவத்தினர் மீதும் அதிக அளவில் கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. இந்தப் பின்னணி காரணங்களே காஷ்மீரிகள் மீதான அத்துமீறல்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

காஷ்மீரின் அவலங்களில் சில

காஷ்மீரில் இன்றுவரை 12000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். காஷ்மீரில் மட்டுமே காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் நடத்தும் இயக்கம் ஒன்று உள்ளது.

காஷ்மீரின் ஒரே கிராமத்தில் 900 பிணங்கள் ஒரே புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டது. 900 பேர்களைக் கொன்று புதைகுழியில் புதைக்கும் காரியத்தை அரசின் உதவியில்லாமல் செய்ய முடியாது என எல்லோராலும் நம்ப முடியும். ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையும் யார்மீதும் இல்லை. இறந்தவர்கள் யார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கொலை செய்யப்படுகிறார்கள் காஷ்மீரிகள்.

2009 ல் ஆயிஷா மற்றும் நிலோபர் என்ற இரு பெண்கள் பாதுகாப்புப் படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்றுவரை குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எழுத்தாளர் அருந்த திராய் ஒருமுறை பேசும் போது, "காஷ்மீர் ஒன்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியல்ல" என்று பேசினார். அதையொட்டி வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் கூறியது, "காஷ்மீர் பற்றி நான் பேசியவை லட்சக்கணக்கான மக்கள் இங்கு தினமும் பேசுவது தான். அதையே பல ஆண்டுகளாக எழுத்தாளர்களும், விமர்சகர்களும் சொல்லி வருகிறார்கள். இந்த பூமியில் மிகவும் குரூரமான இராணுவக் கெடுபிடிகள் நிறைந்த, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த காஷ்மீர் மக்களுக்காகவும், காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து பண்டிட்களுக்காகவும், தலித் இராணுவ வீரர்களுக்காகவும் தான் பேசினேன். காஷ்மீரில் நடக்கும் ஆக்கிரமிப்பிற்கு தங்கள் வரிப்பணத்தை தாரை வார்த்து தந்து கொண்டிருக்கும் இந்திய குடிமக்களுக்காகவும் தான் பேசினேன். நேற்று நான் காஷ்மீரின் சோபியான் என்ற பகுதிக்குச் சென்றிருந்தேன். இப்பகுதி ஆப்பிள்கள் அதிகமாக விளையும் பகுதி. இங்கே தான் கடந்த வருடம் ஆயிசா , நிலோபர் இருவரும் சிதைக்கப்பட்டு இங்கிருக்கும் ஓடையில் அவர்களது உடல்கள் வீசப்பட்டிருந்தது. நிலோபரின் கணவர் ஷக்கீல் அவர்களை சந்திக்கும்போது அவருக்கு தன் மனைவிக்கான நீதி கிடைக்கும் என்று துளி கூட நம்பிக்கை இல்லை என்கிறார். எங்களுக்கு விடுதலை வேண்டும் என்கிறார்." ( அருந்த தி ராய் 26-10-10)

காஷ்மீரில் வாழ்ந்து வந்த ஹாஜிராவுக்கு நடந்த நிகழ்வு, காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கக்கூடிய அநியாயத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் நம் கண் முன் நிறுத்தும். ஹாஜிரா அவருடைய நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் அவர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் பள்ளிக்குச் சென்ற நான்கு பேரில் கடைசி மகன் மட்டும் தான் திரும்பி வந்தான். மற்ற மூவர் எங்கே என பெற்றோர்கள் ஊர் முழுக்கத் தேடினார்கள். பள்ளியில் நண்பர்கள் அவர்கள் மூவரையும் ஆயுதப்படையினர் தான் அழைத்துச் சென்றார்கள் எனக் கூறியதும், இராணுவ முகாமில் தங்கள் குழந்தைகளைக் கேட்டு கதறினார்கள். பாதுகாப்பு படையினர் "இங்கே இல்லை, எதற்கும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாக்கும் படையினருக்கும் ஏற்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பாருங்கள்" என பிணவறைக்கு கைகாட்டினர். அங்கே பெயர் பட்டியலில் பெயர் இல்லாததைக் கண்டு மகிழ்வதற்குள் ஒரு தாதிப்பெண் மூன்று சிறுவர்களின் சடலத்தையும் பெற்றோர் முன் காட்டினாள். உடம்பெல்லாம் குண்டுகளுடன் சடலமாக தன் பிள்ளைகள் கிடந்ததைக் கண்டு கதறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தன் மகனைக் கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏற்கனவே இப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் இயக்கத்தில் இணைந்து பெரிய அளவில் போராட்டத்தைத் தொடந்தார்கள். ஆனால் இறுதியில் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து தன் கடைசி மகனுடன் மட்டுமே நம் வாழ்வு என வாழ்க்கையைத் தொடர்ந்த நேரத்தில் திடீரென்று தன் வீட்டுக் கதவைத் தட்டி, அவரது கடைசி மகனையும் ஆயுதப்படை இழுத்துச் சென்றது. எல்லாம் இழந்த நிலையில் போராட்டமே வாழ்க்கை என ஹாஜிரா தன் வாழ்வை அமைத்துக் கொண்டாள். ஹாஜிராவின் கணவர் தன் நம்பிக்கைகளை முற்றிலும் இழந்து படுத்த படுக்கையானார். ஒருநாள் அவரின் உயிரும் பிரிந்து விட, தன் மூன்று மகனையும் புதைத்த இடத்திற்கு அருகே தன் கணவனையும் புதைத்து விட்டு அதற்கு அருகில் தனக்கான குழியையும் தோண்டி தினந்தோறும் அந்த குழியைப் பராமரித்து வருகிறார் ஹாஜிரா.

காஷ்மீரின் புல்வாமா கிராமத்தில் சமதுல்லாஹ் கானானெய், குலாம் நபி வாணி என்ற இருவரையும் ஆயுதப்படை விசாரணை என அழைத்துச் சென்றது. அவர்களைத் திரும்ப அழைத்து வர அப்பகுதியின் காணமால் போனவரை மீட்கும் குழுவின் தலைவர் பால்காரர் குர்ஷித் அகமது, பாதுகாப்பு படையினரிடம் சென்று அவர்களை விடுவிக்கச் சொல்லி கேட்ட போது, 40,000 ரூபாயைத் தந்துவிட்டு நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போ என்றார்கள். அடுத்தநாள் இருவரையும் அழைத்து வர குலாம் நபி வாணி மனைவியும், சமதுல்லாஹ் கானானெய் மனைவியும் பால்காரர் குர்ஷித்தும் இணைந்து சென்றார்கள். அங்கே அதிகாரியிடம் கேட்டவுடன், "அவர்கள் இருவரும் எங்களுக்கு எதிராகவே திமிராகப் பேசினார்கள். அதனால் என்கவுண்டர் செய்து விட்டோம்" என்றார்கள். இருவரது மனைவியும் கதறி அழுதார்கள். குர்ஷித் காசையும் வாங்கிட்டு கொன்னுட்டிங்களே எனக் கேட்க, அவரையும் அடித்து கொன்று விடுவோம் என மிரட்டி அனுப்பிவிட்டார்கள். புல்வாமா கிராமமே உடைந்து போனது.

சரி காசு போனால் போகட்டும் இருவரது உடலையாவது வாங்கி விடலாம் என முடிவு செய்து, காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் கழகத் தலைவி பர்வீனா அவர்களின் உதவியை நாடினார்கள். பர்வீனாவும் அதிகாரிகளைச் சந்தித்து உடலைப் பெற அனுமதி கடிதம் வாங்கி விட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள். ஆனால் அங்கிருந்த இரண்டு பிணங்களின் ஒன்றில் மன்சூர் அஹ்மது டிரேலி என்றும், மற்றொன்றில் மஹ்மத் யூசஃப் என்றும் எழுதி இருந்தது. மீண்டும் இராணுவ முகாமிற்கு வந்து பர்வீன் அவர்கள் கேட்ட போது, நாங்கள் அவர்களைத் தான் அழைத்து வந்தோம் என சாதித்தனர். பால்காரர் குர்ஷித் "40,000 பணத்தையெல்லாம் வாங்கினார்கள். இப்போது இப்படி சொல்கிறார்கள்" என புலம்பி அழுதார். இறுதிவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் எனவும் தெரியவில்லை. இறந்த உடல்கள் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இதே போல் தான் காஷ்மீரிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுகின்றனர், வஞ்சிக்கப்படுகின்றனர்.

இது போலே ஆயிரம் நிகழ்வுகள் காஷ்மீரில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

சட்டப் போராட்டங்கள்

காஷ்மீரில் நடக்கும் ஆயுதப்படையினரின் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக கடிதங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள் காஷ்மீரிகள். ஆனால் அமைச்சகம் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. இதுவரை 42 மனுக்களை நிராகரித்துள்ளது. இதில் 32 மனுக்கள் கற்பழிப்பு சார்ந்த புகார்கள். இந்த கற்பழிப்புக்கு பலியானவர்கள் எல்லாம் தீவிரவாதத்தோடு தொடர்புடையவர்களா என்ற ஆய்வை ‘தி இந்து’ பத்திரிக்கை நட த்தி, அதில் பலியானவர்கள் யாருக்கும் தீவிரவாத்துடன் தொடர்பில்லை என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தது. உதாரணத்திற்கு சில வழக்குகள்..

1991ல் முகம்மது அய்யூப் பாட் என்பவரின் உடல் ‘DAL LAKE’ எனும் ஏரியில் மிதந்தது. அவனது செயல்பாடுகள் பற்றிய ஆய்வில் அவன் எந்த தீவிரவாத செயல்களோடும் சம்பந்தப்பட்டவனல்ல என்று ஆய்வின் மூலம் தெளிவானது. அய்யூப்பைக் கொன்று அவனது உடலை எறிந்தது இராணுவத்திலுள்ள ஓர் அணி பதவியைச் சார்ந்த குல்சான் ராவ் என்பதும் தெரிய வந்தது. இவர் காஷ்மீரில் களத் துப்பாக்கி பிரிவில் பணியாற்றுபவர். 2003ம் ஆண்டு இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து மனுக்களையும் நிராகரித்தது உள்துறை அமைச்சகம்.

1997ஆம் ஆண்டு பீர்வா என்னுமிடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள். இதில் இராணுவத்திலுள்ள பெரிய அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இது சம்பந்தமான வழக்கை 2001ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. அதற்காக சொல்லப்பட்ட காரணம் வினோதமானது. அதாவது கற்பழிக்கப்பட்ட பெண், தன்னை கற்பழித்த அதிகாரியின் அங்க அடையாளங்களை சரியாக சொல்லவில்லை என்பதே நிராகரிக்கப்பட்ட தற்கான காரணம் என்றது உள்துறை அமைச்சகம். இது எவ்வளவு கேவலமானது. தன்னைக் கற்பழிக்க வந்தவரின் அங்க அடையாளங்களை சரியாக சொல்லவில்லை எனக் கூறி மனுவை நிராகரிப்பது. அதையும் மீறி அப்பெண் வேறு சாட்சியங்களைக் கொண்டு அந்த அதிகாரியே குற்றவாளி என நிரூபித்தாள். மீண்டும் அமைச்சகம் வேறு சாட்சியை கேட்டது. அம்மக்கள் குற்றவாளிக்கு நெருக்கமானவரையே சாட்சியாகக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இருந்தும் இறுதியில் மனு நிராகரிக்கப்பட்ட து.

1997ல் அப்துல் ஹாலிக் லோனி என்ற இளைஞனை “3 கோனிபிரிவு” என்ற இராணுவப் பிரிவினர் மக்கள் முன்னிலையில் அடித்தே கொன்றார்கள். இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகள் சாட்சியம் சொல்ல முன்வந்த நிலையிலும் இராணுவத்தினர் மீது நடவடிக்கை இல்லை. இப்படியான வழக்குகள் நிறையவே இருக்கிறது. ( ஆதாரம் – THE HINDU 7/2/2012)

கொலைக்குற்றங்களில் நாடு முழுவதும் தண்டிக்கப்படுபவர்கள் 36.7%. அதாவது நூறு கொலைக்குற்ற வழக்குகள் பதிவானால் 36.7 வழக்குகளில் தண்டிக்கபடுகிறார்கள். ஆனால் இதுவே காஷ்மீரில் 17.1%. அதாவது நூறு வழக்குகளுக்கு 17 வழக்குகளில் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள்.

அதுபோலவே இந்தியாவின் இதர பகுதிகளில் கற்பழிப்பு குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்கள் 26.6%. ஆனால் காஷ்மீரில் அது வெறும் 2.1%. அதாவது குற்றவழக்கில் பதியப்படும் 100 வழக்குகளில் வெறும் 2.1 வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை ஐ.நாவில் எடுத்து வைக்கப்படும் போது, காஷ்மீரில் நடக்கும் கொலைகளை விசாரிக்கவும், அறிக்கைகளை வெளியிடவும் ஒரு தனி அதிகாரியை ஐக்கிய நாடுகள் அவை நியமித்தது. அதன் பெயர், UNITED NATIONS SPECIAL REPORTER ON EXTRA JUDICIAL, SUMMARY OF ARBITRARY EXECUTIONS. இந்த அதிகாரி பொறுப்பில் இருந்த கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் தனது ஆய்வு அறிக்கையில் கூறியது, "காஷ்மீரில் செயலில் இருக்கும் ஆயுதந்தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரம் (AFSPA)மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறது. மக்களின் “RIGHT TO LIFE” உயிர் வாழும் உரிமையை முற்றாக மறுத்துவிடுகின்றது. ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டில் இதற்கு எந்த வேலையுமில்லை. இந்த சட்டத்தை நீக்குவத மூலம் அரசு மக்களின் வாழும் உரிமையை மதிக்கின்றது என்ற செய்தியை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யலாம்" எனக் கூறியுள்ளார். (ஆதாரம்: THE HINDU March 31, 2012)

எந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாத அரசு இந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.

8 வயது சிறுமிக்கும் காஷ்மீர் நிலைக்கும் என்ன சம்பந்தம்?

காஷ்மீர் மதரீதியாக முழுமையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் இந்துக்கள் மனதில் காஷ்மீரிகளைத் தொடர்ச்சியாக தங்களது எதிரியாகவும், தன் நாட்டின் எதிரியாகவும் உளவியல் ரீதியாகவே மாற்றும் முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன இந்துத்துவ அரசியல் சக்திகள். இதற்காக அவர்களுக்கு அரசாங்க ரீதியிலும் அதிகாரத்திலும் பல்வேறு உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த உளவியல் அம்மக்களை காஷ்மீர்களுக்கு எந்த தொந்தரவு நிகழ்ந்தாலும் அதை தேசத்தின் வெற்றியாகக் கருதும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. காஷ்மீரிகள் கொல்லப்பட்டால் ‘தீவிரவாதி கொல்லப்பட வேண்டியவனே' என ஆர்ப்பரிக்கிறார்கள். காஷ்மீருக்கு எதிரான எல்லா சம்பவங்களும் தன் நாட்டிற்கு நன்மை தரும் என உளவியல் ரீதியாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த உளவியல் மாற்றமே இன்று 8 வயது குழந்தையை சிதைத்துக் கொன்றவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் மக்களை அணிதிரள வைத்திருக்கிறது. உண்மையில் காஷ்மீரில் நடந்த, நடக்கக்கூடிய கொடுமைகளுக்கு காரணம் அங்கு நடைபெறும் ஆயுதப்படையின் அத்துமீறல்களும், அங்கு நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகளும் தான்.

- அபூ சித்திக்

Pin It