கட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்....

கட்டலோனியப் பிரதமர் ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக மாறிவிட்டது என்று அறிவித்துள்ளார். மேலும்,சர்வதேச நாடுகள் கட்டலோனியா நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்நிலையில்,ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் பிலிப் கட்டலோனியா தனி நாட்டுக் கோரிக்கைக்காக அந்த மாநிலம் நடத்திய பொது வாக்கெடுப்பு முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இது போன்றதொரு சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

catalonia students

ஸ்பெயினைப் பொருத்தவரை தனி நாட்டுக்கான வாக்கெடுப்பையே அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அறிவித்துவிட்டது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன் இவ்வாக்கெடுப்பை ஒழுங்கு செய்பவர்கள், வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள், வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை அறிவித்துக் கொள்பவர்கள் என அனைவர் மீதும் கடும் சட்டம் பாயும் என எச்சரித்தது. அதையும் மீறி தேர்தல் நடந்த போது தேர்தல் சாவடிகளைக் கைப்பற்றியும், கட்டலோனியா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கோரத்தாண்டவமாடியது இதையும் மீறி 43 விழுக்காடு மக்கள் கலந்து கொண்டு 92 விழுக்காடு மக்கள் கட்டலோனிய விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பையும் சுதந்திரத்திற்கான பிரகடனத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் சட்டவிரோதமாகத் கருதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனது.

கட்டலோனிய விடுதலைப் பிரகடனத்தை அறிவித்த அடுத்த நாளே கட்ட லோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் அறிவித்துள்ளார் மேலும் திசம்பர் - 21 தேதி கட்டலோனியாவிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கட்டலோனியாவில் பதவி வகித்த காவல்துறை உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டலோனிய வாக்கெடுப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது. கட்டலோனிய பிரதமர் கார்லஸ் ப்யூஸ்மண்ட் மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது. அவர் ஸ்பெயின் விருந்து வெளியேறியுள்ளார் பெல்ஜியம் நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார். மேலும், பலர் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்திக்க நேரிடும்.

கட்டலோனியா மீது இராணுவ ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரத்தை ஸ்பெயின் நாடாளுமன்றம் அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய்க்கு வழங்கியுள்ளது. எனவே, கடும் தாக்குதலை கட்டலோனியா மீது நடத்துவதற்கு ஸ்பெயின் அணியமாகிக் கொண்டிருப்பதாகவே நமக்குத் தெரிகிறது. ஏற்கனவே பாஸ்க் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இப்படித்தான் தடுத்து நிறுத்தியது.இது குறித்து பின்னர் பார்க்கலாம்.

கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை முந்திக் கொண்டு நிராகரித்துள்ளது. ஈழ விடுதலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த இலங்கையிடம் இது எதிர்பார்த்ததுதான்.

கட்டலோனிய நெருக்கடியை ஸ்பெயினும் கட்டலோனிய அதிகாரிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்பெயினுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்று கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையே மெக்சிகோவும் வலியுறுத்தியுள்ளது.

கட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோஸ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிற இந்தியாவின் கருத்து என்ன தெரியுமா? அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்ளாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையிடனும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் இரவீஸ் குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.

எந்தவொரு தேச விடுதலைப் போரட்டத்தையும் தனக்கு சாதக அம்சங்களிலிருந்து தான் வல்லரசு நாடுகள் அணுகும் என்பது யதார்த்த நிலைமை அப்படி, கட்டலோனியாவா ? ஸ்பெயினா ? என்றால் வல்லரசு நாடுகளின் தற்போதைய நண்பன் ஸ்பெயின் தான் இப்படியான நிலைமையில் கட்டலோனியா என்னவாகும்?

- க.இரா.தமிழரசன்

 

 

Pin It