ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு கொள்கை அளவில் இசைந்திருக்கும் வேளையிலும், அது தொடர்பான சிக்கல்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.

இன்றைய ஆந்திர மாநிலத்தில் ஆந்திரம், தெலங்கானா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. பேசும்மொழியால்,  பண்பாட்டுப் பொதுமையினால் அவை மூன்றும் ஒத்த போக்குடையவைகளே. எனவே தெலங்கானா தனி மாநிலப் போராட்டம், தேசிய இனப் போராட்டம் அன்று. எனினும்  தெலங்கானா பகுதி  பிற பகுதியினரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது என்பதும், ரெட்டியார், தேஷ்முக் போன்ற ஆதிக்க சாதியினரின் பிடியில் உள்ளது என்பதும் உண்மை.

மேலும்  வரலாற்று அடிப்படையில் மூன்று பகுதிகளும் ஆண்டுகள் பலவாய்ப் பிரிந்தே கிடந்தன. ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலங்கானா 1948 வரையில் நிஜாம் மன்னரின் ஆட்சியின் கீழ் தனி சமஸ்தானமாக இருந்தது. கடற்கரையை ஒட்டிய ஆந்திராவின் பகுதிகள், அன்றைய சென்னைத் தலை மாகாணத்துடன் இணைந்திருந்தன. சென்னைத் தலை மாகாணம் ஒரிசாவின் தென்மாவட்டம் வரையில் நீண்டிருந்தது. ராயலசீமா இரண்டு மாகாணங்களில் பரவிக் கிடந்தது. எனவே நிர்வாக அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் அவை வெவ்வேறு தளத்தில் இருந்தன.

1953 ஆம் ஆண்டு, ஆந்திராவைத் தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து பொட்டிஸ்ரீராமுலு சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் இறந்தும் போனார். இறப்புக்குப் பின் அவர் கோரிக்கை நிறைவேறியது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதான் மூன்று பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஆயிற்று. எனினும் அவர்களுக்குள் ஒரு முழுமையான ஒட்டுறவு ஏற்படவில்லை.

தெலங்கானாவில் கிருஷ்ணாவும் கோதாவரியும் ஓடினாலும், அதன் விளைச்சலெல்லாம் கடலோரப்பகுதியின் ஆந்திராவிற்கே போய்ச் சேர்ந்தது. ஐதாராபாத்தில் கணிப்பொறி உயர் தொழில் நுட்பம் மேம்பட்டிருந்தாலும், அதனால் தெலங்கானா மக்கள் பயன்பெறவில்லை. அப்பகுதியின் 80 விழுக்காடு விளைநிலங்கள், வெறும் 4 விழுக்காட்டினராக இருக்கும் ஆந்திர ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகளிடமே சிக்கியிருந்தன. மண்ணின் மைந்தர்களோ வெறும் கூலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் வாழ்ந்தனர். அவர்களின் பேச்சு மொழி கூட ஆந்திர மக்களின் கேலிக்கு உள்ளாயிற்று. எப்படி இங்கே மெட்ராஸ் தமிழ் என  ஒரு வட்டார வழக்கு கேலி செய்யப்படுகிறதோ, அதைப்போலவே அங்கு தெலங்கானாத் தெலுங்கு நகைச்சுவை மொழியாயிற்று.

இதுபோன்ற பல காரணங்களால் 1946 ஆம் ஆண்டே வீரம் செறிந்த ஒரு போராட்டம் தெலங்கானாவில் அரங்கேறியது. 1946 ஜுலை முதல், 1951 அக்டோபர் வரை ஐந்தாண்டுக்கும் மேலாக நடைபெற்ற அந்தப் போராட்டம்தான் விடுதலை பெற்ற இந்தியா சந்தித்த முதல் ஆயுதப் புரட்சி. அந்தப் போர், முதல் இரண்டாண்டுகள் ஐதாராபாத் நிஜாமை எதிர்த்தும், அடுத்த மூன்றாண்டுகள் இந்தியத் துணை இராணுவத்தை எதிர்த்தும் நடைபெற்றது. நலகொண்டா, வாராங்கல், கம்மம் மாவட்டங்களில் வாழ்ந்த, ஆயுதம் பற்றி ஏதும் அறியாத உழவர்கள் ஆயுதப்பயிற்சி பெற்று அந்நீண்ட போரை நடத்தினர். பிறகு வேறு பல மாவட்டங்களுக்கும் அப்புரட்சி பரவியது. அப்போர், மன்னருக்கும், பெருநிலக்கிழார்களுக்கும் எதிராக நடந்த ஒன்றாக மட்டுமன்றி, தேசிய இனச் சிக்கலின் இன்னொரு வடிவமாகவும் அமைந்தது.

இப்போது நடைபெறும் போராட்டம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னாரெட்டியால் தொடங்கப்பட்ட ஒன்று. மக்களின்ஆதரவு இருந்த போதும் அவர் அதை முறையாக எடுத்துச் செல்லாமல், மத்தியில் ஆண்ட காங்கிரசோடு சமரசம் செய்துகொண்டு அவர் மட்டும் முதலமைச்சர் ஆகிவிட்டார். பிறகு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்தார். போராட்டத் தலைமை செய்த தவறினால் அந்தப் போராட்டமே மெல்ல மெல்ல மறைந்து போய்விட்டது. ஆனாலும் அப்போராட்டத்தின் விளைவாய்த்  தெலங்கானா பகுதியைச் சார்ந்த சென்னாரெட்டி, நரசிம்மராவ் ஆகியோர் பெரும்பதவிகளில் அமர்ந்தனர். அப்போதும் ரெட்டிகளும் ராவ்களும்தான் பெரும்பயன் அடைந்துள்ளனர் என்பதையும், அப்பகுதியில் வாழும் எண்ணற்ற பழங்குடி மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒரு பயனையும் அடையவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இன்றைய போராட்டத்திற்கு அங்குள்ள ஏற்றத் தாழ்வுகளே பெரிதும் காரணமாய் உள்ளன. அவற்றைச் சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், புதிய மாநிலத்தை உருவாக்குவதன் மூலம் எந்தத் தீர்வையும் எட்டிவிட முடியாது. அடிப்படையில் வேறுவேறு நோக்கங்களுக்குத் தான் இந்தப் போராட்டம் பயன்பட்டுள்ளது. மத்திய அரசைப் பொறுத்தளவு தெலங்கானா பகுதியில் உள்ள நக்சலைட்டுகள் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் அதனை திசைதிருப்பவாவது வேண்டிய தேவை உள்ளது. சந்திரசேகர ராவுக்கோ, கடந்த தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியைச் சரிகட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. இருவருக்கும் அந்த வகையில் இந்தப் போராட்டம் உதவியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜகன்மோகனின் பின்புலமும் இதில் இருப்பதாகத் தெரிகிறது.அதே நேரத்தில் வேறு சில சிக்கல்களுக்கும் இது வழி வகுத்துள்ளது. மேலும் பத்துப் புதிய மாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இன்னும் சில எழ வாய்ப்புள்ளது.

மாநிலங்களைப் பிரிக்கவே கூடாது என்பதன்று நம்முடைய வாதம். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில்தான் 1956 ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதென முடிவெடுக்கப்பட்டது. அத்தகைய மறு ஒழுங்கமைப்பு முடிந்ததற்குப் பின்னாலும், வளர்ச்சிப்போக்கில், குஜராத், அரியாணா போன்று மேலும் சில மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தேசிய இன அடிப்படையில் இப்போதும் அந்தப் பகுப்பு நிறைவடையாமல்தான் உள்ளது. மேற்குவங்கத்தில் இருந்து கூர்க்கா மாநிலம் பிரிக்கப்படவேண்டும் என்பது அதுபோன்றதே. அதில் நியாயம் உள்ளது. சாதி அடிப்படையில் தென் தமிழ்நாடு என ஒரு மாநிலம் வேண்டும் என்று கோருவது நியாயமற்றது.

மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்கப்பெற்றதை இன்றும் நாம் முழுமையாக வரவேற்கின்றோம். இருப்பினும், ஒரே தேசிய இனத்திற்குள் காணப்படும் சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் நம்மால் ஏற்கவோ ஆதரிக்கவோ முடியாது. எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பிரிந்து போகும் எண்ணம் இயல்பாக எழவே செய்யும். சமத்துவம் தான் எப்போதும் ஒற்றுமைக்கான முன் நிபந்தனை. அதனை மனத்தில் கொண்டு, ஆந்திரா தெலங்கானா மக்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு களைந்திருக்க வேண்டும். தவறியதால்தான் இன்று இந்த நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. இப்போதேனும் அந்த முயற்சியில் அரசுகள் ஈடுபடவேண்டும். இல்லையேல் தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிந்து போக வேண்டும் என்று கோருவதில் எந்தப் பிழையும் இல்லை.

சிக்கல்களின் வேர்களை ஆராயாமலும், குறைகளைத் தீர்க்க முயலாமலும் பட்டினிப் போராட்டம், வன்முறைகள் கண்டு அஞ்சி எடுக்கப்படும் முடிவுகள், மேலும் மேலும் புதிய சிக்கல்களுக்கே வழி வகுக்கும்.

- சுப.வீரபாண்டியன்

Pin It