இந்திய அரசு, ஆட்சியாளர்கள், இந்தியாவில் உள்ள மாநில உரிமைகளில், ஆட்சி அதிகாரங்களில் தலையிடுவதும் அத்துமீறிச் செயல்படுவதும் தனக்கு எல்லையில்லா அதிகாரம் உள்ளது என்ற நினைப்பில், தாங்கள் நினைத்தவாறெல்லாம் செயல்படலாம், செயல்பட முடியும் இதற்கு எந்தவிதமானதொரு தடையும் இல்லை என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அவ்வாறு செயல்பட முடியுமா? அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? என்றால்! பதில் இல்லையென்பதே! பிறகு இவ்வாறு அடாவடித்தனமாக செயல்படக்கூடிய காரணம்! மாநிலங்களுக்கென எந்தவிதமான உரிமைகளும் இருக்கக்கூடாது. குறிப்பாக மாநிலம் என்கின்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் குறிப்பாக பா.ஜ.க.வின், (இதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சின்) எண்ணம், விருப்பம், திட்டம் எல்லாம். இதே எண்ணம் கொண்ட அமைப்புகள் இந்துக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்ற போர்வையில் சுற்றிக்கொண்டிருக்கும் மதவாத அமைப்புகள், அல்லக்கைகள் நிறைய உள்ளன. இதுபோன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. பா.ஜ.க.வின் சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்கள்.

இந்தியாவில் மாநிலங்களற்ற, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஆட்சியாளர்கள். அது அதிபர்கள் ஆட்சிமுறை, குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் மன்னராட்சிமுறை. இதில் தேர்தலெல்லாம் இல்லை. வாரிசுகள்தான் ஆட்சியாளர்கள். ஆசைப்படுவது சரி அதற்காக ஈனமானமில்லாமல் ஆசைப்பட்டால் எப்படி? இந்தியா முழுமைக்கும் ஒரே மொழியாக, ஒரே மொழி பேசும் மக்களாக, ஒரே கடவுள் அந்த ஒரேக்கடவுளை அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வணங்கவேண்டும். சூழல் அவ்வாறுதான் உள்ளதா? அவ்வாறு அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், அது உங்களுக்கே பிடிக்காதே! பிறகெப்படி?

நல்ல தலைவனுக்கு அழகு! எவ்வாறாயினும் மக்கள் ஒற்றுமைதான் பிரதானமென்று செயல்படுவான் காரணம் நாட்டில் வறுமை நிலையில் வாழ்வதைக்கூட புரிந்துகொள்ள முடியும் காரணம், இது புறக்காரணம். இதனை மிகச்சரியாக அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மிகவிரைவில் வறுமையை ஓட்டிவிட, ஒழித்துவிட முடியும். அப்பவும், ஏன் அனைத்திற்கும் அடிப்படை இந்த ஒற்றுமைதான். இதை நாட்டில் ஏற்படுத்துவதுதான் அவசியம். ஏனெனில் நாட்டில் ஒற்றுமையில்லாமல், வேறுபட்டு இருப்பதற்கு அகக்காரணம்தான் முழுமுதற்காரணம். அதாவது நாம் அன்றாடும் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், நமது சிந்தனை தனித்தனியாக இருப்பதே தங்களுக்கான தகுதி, மரியாதை, உயர்ந்தவனென மூளையில் ஏற்றிவிடப்பட்டுள்ள விஷமப்பிரசாரத்தை, நயவஞ்சக திட்டத்தை உண்மையென நம்பி மக்கள் தனித்தனியாக ஒதுங்கி இருப்பது, ஒதுக்கி வைத்திருப்பது. இதை, இந்த மக்களும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இதை ஏற்றுக்கொண்டதுதான், இந்தக் கயவர்களின் வெற்றி. அது இனியும் காலமெல்லாம் இவ்வாறே இருக்க வேண்டுமென்பதுதான் இந்தக் கயவர்களின் விருப்பம். தவறி, மக்கள் ஏதாவதொரு தலைவனாலோ அல்லது தன்னெழுச்சியாகவோ ஒன்றுபட்டால் அது இதுபோன்ற மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சிகொண்ட கட்சி, அமைப்புகளுக்குப் பிடிக்காது. மக்களுக்குள் ஒற்றுமை அறவே இருக்கக்கூடாது ஆனால் நாடு மற்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பார்கள். மன்னிக்கவும், ஒற்றுமையாக அல்ல! ஒரே மாதிரி மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் அடிமைபோல் இருக்க வேண்டுமென்பது. இதுவே இவர்களின் இவர்கள் கூறும் ஒற்றைதே(சிய)சம்.

இவர்களுக்கு ஒன்று விளங்கவில்லையா? இல்லை இது அவசியமில்லையென்று நினைத்துவிட்டார்களா? தெரியவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் அவர்களின் தனித்த அடையாளங்களோடு, சுயமரியாதையோடு, அவர்களின் உரிமைகளோடு வாழும் முழு அதிகாரத்தை, அந்தந்த மாநில மக்களுக்கு அளித்தால்தான் இந்தியா என்ற ஒன்று இப்படி கூட்டாக இருக்கும். ஒற்றைதேசம் என்று கூவிக்கொண்டிருக்கும் கூட்டத்தாருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒரேமாதிரி ஆக்குவதற்கு முன்னோட்டமாக நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், இது வேண்டாம் அனைத்து தேசிய கட்சிகளையும், இதுவும் வேண்டாம், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இந்த இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஐந்து ஆண்டுக்கு காங்கிரசில் உள்ளவர்கள் யாராவது தலைவராகவும் நாட்டை ஆள்பவர்களாகவும் இருந்து, நாட்டை வழி நடத்தட்டும், அதன்பிறகு அடுத்த ஐந்து ஆண்டுக்கு பா.ஜ.க மீதிபணியைத் தொடரும் என்ற எண்ணத்திற்கு ஒற்றை தேசமென கூக்குரலிடும் கும்பல்கள் இதை ஏற்பார்களா? முடியுமா? முடியாதது மட்டுமல்ல, இதை ஏற்கவே முடியாது என்பதோடு கோபம் தலைக்கு சுர்ரென்று ஏறும்.

அதுபோலவே, ஏன்? அதைவிட பலமடங்கு கோபம்தான் எங்களுக்கும் வருகிறது. நீங்கள் ஒற்றை அடையாளத்துடன், ஒற்றை பழக்கவழக்கங்கள் கொண்ட, ஒற்றைக் கடவுள், ஒரே மாதிரியான காவி நிறம் கொண்ட இந்(தியா)துத்துவா நாடு என்று சொல்லும்போது.

இந்தியா என்பது தனித்த அடையாளத்தையோ அதிகாரத்தையோ கொண்ட தேசமல்ல என்பதற்கு இந்திய அரசிலமைப்புச் சட்டமும், தேர்தல் முறையும் சான்று. (தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், தேர்தல் சீர்திருத்தம் வேண்டுமேன்பெது ஒருபுறம், இந்த அரசுகளின் செயல்பாட்டால் இன்றுள்ள தேர்தல் முறையே வேண்டாமென்று கூக்குரலும் ஒருபுறம் ஓங்கி ஒலிக்கிறது.) இது ஒருபுறமிருக்க மேலே சொன்னவற்றைப் பார்ப்போம்.

இந்திய அரசாங்கத்திற்கு பிரதமரும் மற்ற அமைச்சர்கள் அனைவரும் வேண்டுமென்றால் இதற்கு மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில், இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து மாநில மக்களும், அந்தந்த மாநிலங்களில் தங்களுக்குப் பிடித்த எதாவது ஒரு தனிநபரையோ அல்லது எதாவது ஒரு கட்சியைச் சார்ந்த வேட்பாளரையோ ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பினால்தான், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், உள்விவகாரம், வெளிவிவகாரம், திட்டம், சட்டம் மற்றும் இந்திய நாட்டின் பிரதமர் இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதா? இல்லை மறுபடியும் இந்தப் பதவியும் அதிகாரமும் கிடைக்குமோ, கிடைக்காதோ? வாய்த்தபோதே உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்துக்கொள்ளலாம். ஒபாமா நம் நாட்டுக்கு வந்தால் அவர் வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு ஆடை அணியட்டும் நாம் மூன்று, நான்கு ஆடை அணியலாம். அதிலே நமது பெயர் பதித்த ஆடையைகூட அணியலாம் எவன் கேட்பான், எவன் அப்பன் சம்பாதித்த துட்டு. எவனோ கஷ்டப்பட்டு வேர்வையை, ரத்தத்தை சிந்தி சம்பாதித்த, வரிகட்டிய பணம்தானே. இதில் நமக்கென்ன! இங்கே வந்தது நஷ்டம், கஷ்டம். போடா எவன் கேட்பான்? அப்படியே கேட்டாலும் நாம் அவர்களை கண்டுகொள்ள வேண்டுமா என்ன? நமக்குத்தான் காதே கிடையாதே, வாய் மட்டுந்தான் உள்ளதென இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களே புரிந்துக் கொண்டார்கள். நமக்கென்ன நாம் கடிவாளம் கட்டிய குதிரை. நமக்குத் தெரிந்ததை, நாம் செய்ய நினைப்பதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்கின்ற வேலையை செய்துகொண்டே இருப்போம்.

பேராபத்துகள் கொண்ட திட்டமென பல மாநிலங்கள் எதிர்க்கின்றனவா அப்படியென்றால் அந்தத் திட்டத்தை தமிழ்நாட்டுக்கு அனுப்பு. பெருவெள்ளம் வந்து நிறைய மக்களெல்லாம் வீடுவாசல் இல்லாமல் வீதியில தவிக்கின்றார்கள் அய்யா! ‘’கண்டுக்காத’’. தமிழ்நாட்டு முதல்வர் பாதிப்புக்குண்டான நிவாரண நிதி கேட்கிறாங்கையா! ‘’கம்முனுகெட.’’ அய்யா மழையில்லாம விவசாயம் பண்ண முடியல! ‘’அது வருணபகவானுக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சனை’’. வறட்சியால பயிரெல்லாம் கருகிப்போச்சியா! ‘’அது அக்னிப்பகவானுக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சனை’’. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அடித்து விரட்டுகிறார்கள், சுடுகிறார்கள் நிறையப்பேர்கள் இறந்தும் இருக்கிறார்கள்! ‘’அது தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் உள்ள பிரச்சனை.’’ ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகிறார்கள், செம்மரம் வெட்டினார்கள் என்று இருபது தமிழர்களை ஆந்திர வனத்துறை சுட்டுக்கொலை செய்துள்ளனர். ‘’அது தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவிற்கும் உள்ள பிரச்சனை.’’ கர்நாடகா காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குத் தர மறுக்கிறார்கள் மேகதாதுவில் புதிய அணைகட்ட முயற்சிக்கிறார்கள் ‘’அது தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவிற்கும் உள்ள பிரச்சனை.’’ முல்லைப்பெரியார் அணையிலிருந்து கேரளா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள் ‘’அது தமிழ்நாட்டுக்கும், கேரளாவிற்கும் உள்ள பிரச்சனை.’’

அய்யா! ‘’என்னய்யா’’? இதுமட்டுமல்ல இதுமாதிரி எல்லா மாநிலங்களிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பிரச்சனை! ‘’சரி.’’ என்ன சரின்னு எனக்குப் புரியலையா? இப்படியே போனா அனைத்து மக்களும் செத்துவிடுவார்கள். நீ இப்பத்தான் விசயத்திற்கே வந்திருக்க. ‘’அதுதானையா நம்ம ஆசை விருப்பம் எல்லாம்.’’ அப்புறம் எதற்கு இந்த நாட்டுக்கு பிரதமரென நீங்களும் மற்ற அமைச்சர்களும் பிறகு இந்த மக்களுக்கு யார்தான் நல்லது செய்வது? பாதுகாப்பது? ‘’யார்ரா இவன்’’? இருக்கிற இடம் தெரியாத இருந்த, நம்மள இந்த நாட்டு மக்கள் முன்னாடி நிறுத்தி, இவர் நல்லவர், வல்லவர் குஜராத்தை வளரச்செய்தவர், நாடு வளர்ச்சிபெற, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற இவரை பிரதமராக்குங்கள் என்று சொல்லி, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, அதற்காகவே பல ஆயிரம்பேர் ஆட்களை நியமித்து ஊரில் உள்ள அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி, ட்விட்டர், பேஸ்புக், வாட்சப் என அனைத்திலும் என் முகம் தெரியும்படி செய்து, தினமும் மக்கள் ஏதாவதொரு வடிவத்தில் என் முகத்தைப் பார்த்தே ஆகவேண்டும், என்னைப்பற்றி பேசியே ஆகவேண்டுமென்ற சூழலை ஏற்ப்படுத்தியதோடு என்னை இந்தப்பதவியிலும் அமர்த்திய கார்ப்பரேட் முதலாளிகளின் காலுக்கு நான் விசுவாசமாக இருக்கவேண்டுமா? அல்லது இந்த நாட்டு வீணாப்போன மக்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமா? அய்யா இப்படி பேசினால் எப்படி! தேர்தல் வந்தா மக்களைப் போய்ப்பார்க்க வேண்டுமே? ‘’போய் பார்ப்போம்.’’ உங்களுக்கு போட மாட்டாங்களே! ‘’பரவாயில்லை’’ பிறகு எப்படி வெற்றி பெறுவீங்க? ‘’அடப்போடா ஈ.வி.எம் மெஷின் நம்ம கட்டுப்பாட்டில் இருக்கு அப்புறம் என்ன கவலை. போய் வேலையைப்பார்! ‘’போ நாம இப்படி பேசிக்கொண்டிருப்பதை எந்த கார்ப்பரேட் முதலாளிகள் பார்த்தால் கேட்டால் நம்மீது கோபித்துக்கொள்வார்கள்.’’

இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்மை ஆள்பவர்கள் வைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல்! ‘’வளர்ச்சி என்கின்ற பெயரில்’’ நமது மாநிலங்களில் உள்ள அனைத்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு வாழும் மக்களைக் கொன்று குவிக்கின்ற வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் இந்த மண்ணையும், மக்களையும் அந்தந்த மாநிலத்தில் வாழும் மக்களே தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் தங்களிடமே உள்ளது, என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து மாநில மக்களும் ஒன்றாகச்சேர்ந்து மக்களவைக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்கள் மூலம்தான் பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் இந்த ஆட்டமும், இந்தக்கூத்தும் என்பதை மறந்து செயல்படுகிறவர்களுக்கு அவர்கள் உணரும்படி செய்தால்? எவ்வாறு? நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டி அமைதியான முறையில் போராடினால் அதிகாரத்திலிருக்கின்ற திமிரில் அடக்குமுறையை ஏவிவிடும் அரசுக்கான அதிகாரத்தை அளிப்பது நாங்கள்தான்! என்பதை அமைதியாக, பெரும் புரட்சியாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றுசேர்ந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தால்! என்ன நடக்கும்?

நடப்பதைப் பார்ப்போமா?

Pin It