தமிழ்நாடு முழுக்க கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தன்னார்வலர்கள் என்கிற பெயரில் குண்டர்களை இத்தேசம் முழுவதும் அனுப்பி "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" என்கிற முழக்கத்தை முன் வைத்து களமிறங்கி இருக்கிறது வாசுதேவன் (ஈசா) கும்பல்.
ஒவ்வொன்றாக பறிபோகும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க நாம் நமது இன்னுயிர்களை ஈந்து போராடிக் கொண்டு இருக்கையில், தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டங்களான கதிராமங்கலம் காப்புப் போராட்டம், நெடுவாசல் காப்புப் போராட்டம், நியுட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், சிங்கள கடற்படைக்கு எதிரான தமிழ்நாட்டு மீனவர்கள் போராட்டம், மதுக்கடைகளை மூடும் போராட்டம், நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம், வடசென்னையில் தொழிற்சாலைகளுக்கு எதிரான சுற்றுச்சூழல் காப்புப் போராட்டம், சென்னை மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடுக்கு எதிரான போராட்டம் என நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி போராட்டக் களமாக தகித்துக் கொண்டிருக்கையில் இதையெல்லாம் கண்கொண்டு காணாத இவர்கள் ஏதோ பிறிதொரு அயல்நாட்டில் வாழ்வதைப் போல எண்ணிக் கொண்டு, உப்புச் சப்பில்லாத, உடனடியாகத் திட்டம் தீட்டி உடனடி பலன் தர வாய்ப்பில்லாத, இந்தி(ய) நாட்டு ஆறுகளை மீட்கக் கூடுவோம் என்கிற முழக்கத்தை வீதிக்கு கொண்டு வந்து பொதுவெளியில் பரபரப்பாக்குவது கயமைத்தனம் ஆகும்.
வேற்றுமையில் ஒற்றுமை, நாமெல்லாமல ஒருதாய் மக்கள் என்று கதைவிடும் இவர்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை தர மறுத்து இந்நாட்டு வேளாண்குடிகள் உயிர்துறக்க கரணியமாக அமையும் அண்டை தேச(மாநில)ங்களையோ, எல்லா தேசிய இனங்களையும் கட்டிப் போட்டு ஒற்றையாட்சி செய்யும் இந்தி(ய) ஆளும் கும்பல்களையும் கேள்விக்குள்ளாக்காமல் ; இந்தி(ய) நாடு முழுவதும் ஓடும் ஆறுகளை எப்படி காக்க முனைவார்கள் என்று எண்ணிப் பார்த்தல் நலம்.
'நீங்கள் கொடுக்கும் தவறிய அழைப்பு இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும்' என்று பிதற்றித் திரியும் இவர்கள் விளம்பரப்படுத்தும் தொலைபேசி எண்கள் இதற்கு முன்பு பாரதிய சனதா கட்சியும் , அக்கட்சியினைச் சார்ந்தவர்களும் தத்தமது கொள்கைப் பரப்புரைகளுக்கு பயன்படுத்திய அதே தொலைபேசி எண்களைத்தான் இநத ஈசகும்பலும் தற்போது பயன்படுத்துவதாக சான்றுடன் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணமிது. இதைத்தான் இக்கும்பல் பரப்புரையாக அச்சு ஊடகம், காட்சி ஊடகம், குமூக ஊடகம் உள்ளிட்ட எல்லா வகையிலும் விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதற்கு குமூக அக்கறை உள்ளவர்களாக மக்களால் அறியப்பட்ட திரைத்துறையினர் சிலரை மடைமாற்றி இவர்களுக்கு ஆதரவாகவும் பயன்படுத்திக் கொள்கிறது. போர் நடவடிக்கைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தமிழர்களை போருக்குத் தயாராகும்படி அழைத்த வெள்ளித்திரையில் வேடமிட்டாடும் இரசினிகாந்து போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டு தமது விளம்பரப் பரப்புரைக்கு கூடுதல் பலம் சேர்த்துக் கொள்ளும் நயவஞ்சக செயலும் ஓசையின்றி நடந்தேறி வருகின்றன.
இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலும் நம்பகத் தன்மை மிக்கதொரு பிம்பத்தை கட்டமைக்க வாசுதேவ வணிகன் தானே தனது மகிழுந்தில் கோவை முதல் தில்லி வரை சாலை வழியாக ஏறத்தாழ 7,000 அயிர மாத்திரி (கி.மீ) தூரம் செல்வதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. பயணம் செய்யும் (G63 AMG எஸ்யூவி) மகிழுந்தின் விலை 2.17 கோடி உரூபாய். (இஃது சாலை வரி, காப்பீட்டுத் தொகை, பதிவுத்தொகை உள்ளிட்ட மற்றவை சேர்ககப்படாத தில்லி மாநகரத்தில் மகிழுந்து விற்பனையாளரின் அடக்க விலை என்றறிக) இந்த மகிழுந்து ஒரு படி(லிட்டர்)க்கு ஐந்து அயிர மாத்திரி (கி.மி) தூரம் மட்டுமே செல்லும் திறனுடையது. மேலும், ஒரு அயிர மாத்திரி தூரம் செல்லும்போது 322 அயிரச்சீறெடை (கி. கிராம்) அளவிற்கு கரிவளியை (கார்பன் டை ஆக்சைடு) இது உமிழ்கிறது.
மொத்த பயணத் தொலைவை பார்க்கையில் இந்த மகிழுந்து எந்தளவிற்கு கல்நெய் (பெட்ரோல்) எரிக்கப்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகையினை வெளியேற்றும் என்பதை கணக்கிட்டு அறிக. இதுமட்டுமின்றி வாசுதேவனின் பயணத்துக்கென உதவியாக வரும் பிற ஊர்திகள் வெளியிடும் மாசு மற்றும் அவை எரியூட்டும் எரிபொருள் ஆகியவை இவற்றில் அடங்கா. இப்படியாகப்பட்ட தகிடுதத்த வேலைகளை கட்டமைத்துக்கொண்டுதான் நதிகளை மீட்போம் வெங்காயத்தைக் காப்போம் என்ற கூவிக்கொண்டு திரிகின்றனர்.
தமிழ்நாடு எல்லா வகையிலும் வளங்குன்றி பாலைநிலமாக மாறி வருகையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாட்டின் முதலைமச்சராய் இருப்பவரையும் , முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமை குறித்த வாய் திறக்காத மலையாள நாட்டு முதல்வராய் இருப்பவரையும் இவ்வாசுதேவ கும்பல் சந்திப்பதிலிருந்தே இதன் போக்கினை ஒருவாறு ஊகித்து அறிய இயலும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அரணாக விளங்கும் வெள்ளிமலையை (வெள்ளியங்கிரி) தூர்த்து, தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து கிடைக்கக்கூடிய மழை பொய்த்துப்போக ஒருவகையில் காரணியமாக உள்ள இவ்வாசுதேவ கும்பல் திடீரென்று இயற்கை மீதும், ஆறுகள் மீதும் கரிசனம் உள்ளவர்கள் போன்றும், அடிக்கடி மரக்கன்று நடும் விழாக்களை விளம்பரப் படுத்திக் கொண்டே ஏமாற்றித் திரிவதை நாம் மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். சாதியத்தின் இருப்பு,மாந்த நேயமற்ற தன்மை, ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவற்றை முதன்மையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் இந்துத்துவத்தை ஆதரித்துக் கொண்டே எவ்வித உழைப்பும், உற்பத்தியும் மேற்கொள்ள இயலாத இந்த வாசுதேவக் கும்பல் தமிழ்நாட்டை விட்டே ஒடிப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இவ்வாசுதேவ கும்பல் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சூழலில் அடுத்த குர்மீது இராம் இரகீமாக சிறைக்கம்பிகளை எண்ணுவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில் நம் தமிழ்நாட்டை அடுத்த அரியானாவாக மாற்ற இங்குள்ள வாசுதேவ அடியாட்கள் ஒன்றிணைந்து கலவர பூமியாக மாற்றுவதற்கு முன் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
கோலா பன்னாட்டு நிறுவனத்தால் தாமிரவருணி ஆற்றுநீர் உறிஞ்சப்பட்டு வருவதையோ, பெருமுதலாளிகளால் நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் கலப்பதையோ, வெங்காலூரின்(பெங்களூர்) கழிவுகள் திட்டமிட்டு காவிரியாறு தமிழ்நாட்டுக்குள் வருமுன் கலக்கப்பட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைவதையோ, காவிரியில் தமிழர்களின் சட்ட வெற்றியால் கிடைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமலும் உரிய நீர் வழங்கப்படாமல் இருப்பது குறித்தோ, உச்ச அறமன்றம் நூற்றி ஐம்பத்தி இரண்டு அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் என முல்லைப் பெரியாறு வழக்கில் தீர்ப்பு வழங்கியும் அதை நடைமுறைப் படுத்தாததால் நமக்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் போனது பற்றியோ, பாலாற்றில் ஆந்திரம் ஏழு தடுப்பணைகள் பன்னிரெண்டு அடிவரை உயர்த்தியதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் கூட நமக்கு கொஞ்ச நஞ்ச தண்ணீர் கூட வர வாய்ப்பில்லாதது குறித்தோ, நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பட்டின மக்கள் அள்ளிக் குடித்த கூவம் ஆற்று நீர் இன்று கழிவுநீர் போக்கும் கால்வாயாக உள்ளதை மீட்கும் விழிப்புணர்வை உருவாக்குவதையோ மேற்கொள்ளாமலும், வடசென்னையின் உயிர்மூலமான கொற்றலை ஆறு இன்று தொழிற்சாலைகளின் கழிவுகளை கடலுக்கு சுமந்து செல்லும் அவல நிலையில் இருப்பதைக் குறித்தோ வீதிக்கு வந்து நியாயம் பெற எத்தனிக்காத இவர்கள் இன்று ஆறுகள் மீட்புப் பற்றி பேசுவது கடைந்தெடுத்த கயமைத்தனம் அன்றி வேறல்ல.
தமிழ்நாட்டின் சிக்கல்கள் எதற்கும் செவிசாய்க்காமல் ஒகம்(யோகம்), இருக்கை (ஆசனம்) என்றும் காட்டை அழித்து யாதொரு பயனுமற்ற சிலை என்கிற ஒன்றினை மிகுந்த பொருட்செலவில் நிறுவி, தன் மனம் போன போக்கில் தானுண்டு தன் தவப்பள்ளி (ஆசிரமம்) நலனுண்டு என்று தன்னல முற்றுரிமை ( ஏகபோக) வாழ்க்கை வாழும் வாசுதேவ கும்பல் கூறும் இயற்கை காப்பு முழக்கம் என்பது ஏமாற்று வேலையன்றி வேறன்று.
எல்லா வகையான ஒகம்(யோகம்), இருக்கை (ஆசனம்) பயிற்சி என எல்லாவற்றையும் தன்வாழ்நாளில் தனது உடலுழைப்பின் வழியாக மேற்கொண்டு சீரிய வாழ்வு வாழும் உழைக்கும் மக்களாகிய எம்மிடம், உழைக்காமல் உண்டு கொழுக்கும் கூட்டத்தாருக்கு கூறுவதைப் போலவே வாய்ச்சொல் கூறி வயிறு வளர்க்கும் வாசுதேவக் கும்பலை சிலர் தமது அறிவுக்கண்களை இறுக மூடிக்கொண்டு பின்செல்வதை எச்சரித்து விழிப்படைய வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கடந்த ஆண்டு (2016) யமுனை ஆற்றங்கரையில் இரவிசங்கர கும்பல் உலக பண்பாட்டுத் திருவிழா என்கிற பெயரில் கூத்தடித்து, யமுனை ஆற்றினை சின்னாபின்னாமாக்கிய போது அக்கும்பலை தடுத்து நிறுத்தவோ, எதிர்த்து குரலெழுப்பத் திரணியில்லாத வாசுதேவ கும்பல் இப்பொழுது நதிகளை மீட்போம் என்று ஓலமிடுவது பரிகளைக் காக்க அல்ல, தின்று தீர்க்க முயலும் ஓநாய்க்கூட்டம் என்றறிக. ( 'சீர்கேடான யமுனை ஆற்றினை சீராக்க இரவிசங்கர் கும்பலிடம் நூறு கோடி உரூபாய் தண்டத் தொகை வலிந்து பெற வேண்டும்' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக தீர்ப்பு கொடுத்ததையும் ஒப்பிட்டு நோக்குக.)
மதம் சாராத ஆன்மீகம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு ஒகம்(யோகம்) வணிகனாக உழைக்காமல் உண்டு கொழுத்துக் கொண்டே இயற்கை மீது பற்று கொண்டவர்கள் என்று படம் காட்டும் வாசுதேவ கும்பல் கால ஒட்டத்தில் கரைந்து போவார்கள் அல்லது கரைக்கப் படுவார்கள்.
- அசுரன் கா.ஆ.வேணுகோபால்