water bookநக்கீரனின் 'ஆறாண்டுகாலக் கள ஆய்வுகள்; இரண்டரை ஆண்டு கால எழுத்து முயற்சியின்' விளைவாக 'நீர் எழுத்து' என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. 'தமிழகத்தின் தண்ணீர் ஆவணமாக' உள்ள இந்த நூல் வெளிவந்து ஓராண்டிற்குள்ளாகவே நன்கு கவனம் பெற்றுள்ளது. இந்த நூலிற்காக 'சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான' விகடன் விருதை நக்கீரன் பெற்றுள்ளார்.

'சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால நீர் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி' என்று சரியாகவே முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நக்கீரன்.இவர் பெரியாரால் பெயரிடப்பட்டவர்.

அதனால்தானோ என்னவோ சமூகநீதியை மனதில் கொண்டு தரவுகளை தருகிறார், வியாக்கியானம் செய்கிறார்; ஒப்பிடுகிறார். "புட்டிநீரின் 'மறைநீர்' அளவு 6 லிட்டர். பணக்காரர்க் குடிப்பது ஒரு லிட்டர்தான் எனினும் அவர் தூக்கி வீசும் காலிப்புட்டி என்பது 5 லிட்டர் நீர். அருந்தும் அளவில் சமமாக இருக்கும் நீர், நுகரும் முறையில் பாகுபாடாக அமைகிறது. இதில் யார் நீரை வீணடிப்பவர்" என்கிறார். மன்னர் காலத்தில் இறையிலி நிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை தற்கால சிறப்பு பொருளாதார மண்டலத்தோடு ஒப்பிடுகிறார்.

நீருக்காக தன்னுயிர் ஈந்த தோழர். லீலாவதிக்கு' முதல் பக்கத்தை ஒதுக்கியுள்ள இவர் உள்ளாட்சி நிறுவனங்கள் குறித்து பல ஆழமான கேள்விகளை எழுப்புகிறார். 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் தண்ணீர் தனியார் நீர் நிறுவனங்களின் கைக்கு போகிறது என்கிறார். 'பெண்களால் நிர்வகிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நீர்ச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என்கிறார்.'

'சென்னையில் 2005 ல், 2015 ஐவிட அதிக மழை பெய்தது. அப்போது ஏன் இந்த அளவுக்கு பாதிப்பில்லை' என்கிறார். மழை குறைவாகப் பொழியும் இஸ்ரேல் நாட்டு அனுபவம், இலாபவேட்டைக்காக அலையும் பன்னாட்டு நிறுவனங்கள், மன்னர் காலத்து நீராண்மை (Water Management) என பலவற்றை இந்த நூல் பேசுகிறது.

சூழலியல் ஆர்வலரான நக்கீரன் ஏற்கெனவே 'கண்ணுக்குத் தெரியாமல் களவுப் போகும் நீர்' 'உயிரைக் குடிக்கும் புட்டி நீர்' என்ற நூட்களை எழுதியவர். அதன் தொடர்ச்சியாக இந்த நூலைப் படைத்திருக்கிறார். எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆழமான நூலைப் படைத்துள்ளார். புதிய தமிழ் வார்தைகளை பயன்படுத்துகிறார் (அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லலாமோ ?) உதாரணமாக satellite க்கு செய்மதி, Pump க்கு எக்கி, Harmone க்கு இயக்குநீர் போன்ற வார்த்தைகள் ஆச்சரியத்தைத் தருகின்றன.

வள்ளுவர் சொல்லும் 'நோய்நாடி' குறளுக்கு ஒப்ப தண்ணீர் குறித்த அனைத்தையும் இந்த நூலில் காணலாம். 'நீர் அதிகாரம்' 'நீர் அறிவியல்' 'நீர்ப் பண்பாடு' 'பருவமழை' நீர் நிலைகள்' 'ஆறுகள்' 'நீராண்மை' 'ஆறுகள் இணைப்பு' 'நீர்த்தரவுகள்' என ஒன்பது அத்தியாயங்கள் இந்த நூலில் உள்ளன.

ஆறுகள் இணைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஏற்றுக் கொள்ளத்தக்க வாதங்களை வைக்கிறார். பெய்யும் மழையில் 10 சதத்தை சேகரம் செய்தாலே அனைவருக்கும் தேவையான நீரைத்தர முடியும் என்கிறார். 'நீர் என்பது நமது உரிமை' என்கிறார்.

நீர் சேதாரம் ஆவதை தடுக்கும் வழிமுறைகள், வெளிநாட்டு அனுபவங்கள், காடுகளின் அவசியம் பற்றி பேசுகிறார். 'ஆறுகள் தேசிய மயம் என்பது மாநிலங்களிடமிருந்து ஆற்றை திருடுவது' என்கிறார். தேயிலை, காபித் தோட்டங்கள் நீராண்மையில் வகிக்கும் பங்கு பற்றி பேசுகிறார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கூடாது என்கிறார்.

இந்த நூலில் தண்ணீரோடு தொடர்புடைய முக்கியமான ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பழ.கோமதிநாயகம், கே.எல்.ராவ், ஆர்தர் காட்டன், ராஜஸ்தானினில் ஐந்து ஆறுகளை மீட்டெடுத்த ராஜேந்தர் சிங் என பலர் வருகின்றனர்.

நீரைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள கொள்கைகள், சர்வதேச தீர்மானங்கள், பல்வேறு நீர்நிலைகளின் பெயர்கள், அதன் தன்மை,பயன்பாடு என அனைத்தையும் நாம் சுவாரசியமாக படிக்கலாம்; நம் முன்னோர்களின் அறிவு குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூட்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலின் இறுதிப் பகுதியில் நாம் செய்ய வேண்டியது குறித்து ஒரு பட்டியல் தருகிறார். அவை அனைத்துமே சாத்தியமானவை; எச்சரிக்கை செய்பவை; நம்பிக்கை தருபவை. மொத்தத்தில் இந்த நூல் ஒரு வழிகாட்டி; போர்வாள்.

வெளியீடு: காடோடி,நன்னிலம்,செல்பேசி: 8072730977 ரூ.250/பக்கங்கள் 248/ஆகஸ்டு 2019.

- பீட்டர் துரைராஜ்.

Pin It