18 ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தின் போது இந்தியா முழுவதும் காலரா கொத்துக் கொத்தாக, குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராக மனித உயிர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது. காலராவினால் யாராவது ஊரில் இறந்து விட்டால் மக்கள் அந்த ஊரைவிட்டு காலி செய்து கொண்டு வேறு எங்காவது கிளம்பி விடுவார்கள். மக்கள் ஒரு பயத்தோடு தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். காலராவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆங்கிலேயர்கள் அமைத்த மருத்துவக் குழுவும் கூட எதனால் காலரா பரவுகிறது என்பதைப் பற்றிய சரியான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.

காலரா பரவியபோது இருந்த அதே அச்சம் , பயம் மீண்டும் சில நூறு வருடங்களுக்குப் பிறகு தமிழக மக்களிடம் காண முடிகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அகதிகளைப் போல மருத்துவமனைகளின் முன்னால் மரண பயத்தோடு காத்துக் கிடக்கிறார்கள். அண்மையில் பாண்டிச்சேரியின் ஜிப்மர் மருத்துவமனை, எழும்புர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையைச் சுற்றி வந்திருக்கிறேன். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் டெங்கு மருத்துவ சிகிச்சைக்காக காத்துக் கிடக்கிறார்கள்.

தமிழக சுகாதாரத்துறை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஒரே ஒருமுறை அரசு மருத்துவ மனைகளை சுற்றி வந்தால் போதும் அரசு தந்த புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளளாம். அரசு புள்ளிவிவரங்களை விட பல மடங்கு டெங்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இருக்குமென்பதே உண்மை. ஏனென்றால் டெங்கு பாதிக்கபட்டவர்களை காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களாக பதிவு செய்யுமாறு அரசு சுகாதாரத் துறை மறைமுகமாக பிற மருத்துவமனைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல ஆயிரம் அரசு சுகாதாரத் துறை ஊழியர்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் டெங்கு கட்டுபடுத்தப்படும் என்றும் கூறினார். அவர் சொல்லிய பின்பு தான் டெங்கு பாதிப்பும் டெங்கு மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கின. சுகாதாரத் துறை தயாராக இருந்தது என்றால், எப்படி டெங்குவை கட்டுபடுத்தப் முடியாமல் போனது? உண்மையில் அரசும் சுகாதாரத் துறையும் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அரசு தயாராக இல்லை என்பதற்கு ஒரேயொரு உதாரணம் மட்டுமே போதுமானது. டெங்கு கொசுவால் பரவுகிறது என்றால் அதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 6 மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதிக்கு மாநகராட்சியின் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் மாதம் ஒருமுறை வருவார். யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறாதா? கொசுத் தொல்லை இருக்கிறதா? என்பதை விசாரிப்பார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரைக் காண முடியவில்லை. அதேபோல் மாநகராட்சியில் கொசுவை கட்டுப்படுத்த அடிக்கப்படும் கொசு மருந்து அடித்தும் பல மாதங்கள் ஆகிவிட்டது. ஏன் இந்த மந்தநிலை ஏற்பட்டது? ஏனென்றால் இங்கு அரசு இயந்திரம் இயங்கவில்லை. அரசு ஊழியர்களைக் கட்டுபடுத்தவும் அவர்களைக் கண்காணிக்கவும் சரியான தலைமை இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் மொத்த அரசும் அரசு ஊழியர்களும் தேனிலவு காலத்தில் இருப்பதுபோல இருக்கிறார்கள்.

ஆனால் அரசு என்ன சொல்கிறது என்று பார்த்தால் பாதிக்கபட்ட மக்களையே குற்றவாளியாக மாற்ற முயற்சி செய்கிறது. மக்கள் சுகாதாரமாக இல்லாததால் தான் டெங்கு பரவுகிறது என எல்லா பழியையும் மக்கள் தலையில் தூக்கி வைக்கிறார்கள். இதில் சில அமைச்சர்கள் டெங்குவைப் பற்றிய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்கிறோமெனத் தெரியாமலே பேசிவிட்டுச் செல்கிறார்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்குத் தெரிந்ததை தானே பேசுவார்கள்.

இந்த டெங்கு பிரச்சனையை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டுமெனத் தோன்றுகிறது. நீட் போன்ற மத்திய அரசுத் தேர்வுகளுக்கு எதிராக நாம் வைக்கும் வலுவான காரணம், தமிழகம் மருத்துவ ரீதியாக வளர்ச்சி அடைந்த மாநிலம், எங்களின் சுகாதாரத்துறை மற்ற மாநிலங்களை விட வலுவானது. இந்தியாவின் மருத்துவ நகரம் சென்னை என ஆவேசமாகப் பேசுகிறோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை, சுகாதாரத் துறையில் தமிழகம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை, அதனால் தான் டெங்கு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக டெங்கு திட்டமிட்டு பரப்பப்படுகிறதோ என்ற அய்யம் ஏற்படுகிறது. அதனால்தான் மத்திய அரசும் இவ்வளவு நாள் டெங்கு பிரச்சனையில் மெத்தனமாக இருக்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும், நிலவேம்பு கசாயம் குடித்தால் டெங்கு சரியாகிவிடும் என்ற கருத்து மிக வேகமாகப் பரப்பப்படுகிறது. இந்தக் கருத்தை அரசும் திட்டமிட்டு பரப்புகிறது. சில அமைச்சர்கள் சாணி தெளித்தால் சரியாகிவிடும் என்கிறார். சில நடுநிலை அறிவாளிகளாக தம்மைக் காண்பித்துக் கொள்பவர்கள் வெடிவெத்தால் கொசு கட்டுப்படுத்தப்படும் என்கிறார்கள். தீபாவளிக்குப் பிறகு டெங்கு கட்டுக்குள் வரும் என்கிறார்கள். மொத்தத்தில் எல்லோரும் நம்மை பழமை வாழ்க்கைக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வேலையைத் திறம்பட அவரவர் திறமைக்கு ஏற்றவாறு செய்கிறார்கள்.

உண்மையில் நாம் மருத்துவ நெருக்கடிநிலை காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆங்கிலேயர் காலத்தில் காலராவைக் கட்டுப்படுத்தாமல் செயற்கை உணவு தானியப் பஞ்சத்தை ஏற்படுத்தி எப்படி நம் உணவுகளை இங்கிலாந்திற்கு கொள்ளை அடித்துச் சென்றார்களோ, அப்படித்தான் டெங்குவையும் கட்டுப்படுத்தாமல் செயற்கை மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன கொள்ளை போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- மணிகண்டன் ராஜேந்திரன்

Pin It