I
பிடல் காஸ்ட்ரோ ஒரு மாபெரும் புரட்சியாளர் என்பதிலோ, அவர் கடந்த அறுபது ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார் என்பதிலோ எவருக்கும், எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும், சந்தேகமிருக்க அவசியமில்லை. பிடல் காஸ்ட்ரோவுக்கு எமது சிரம் தாழ்ந்த செவ்வணக்கம் உரித்தாகிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இதனை விரித்து எழுதுவது இல்லை. பிரச்சினை, கியூபாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான கிரன்மா இன்டர்நேஷனல் இதழில், 2011 மார்ச் 2-3 திகதிகளில் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ எழுதிய லிபியா குறித்த இருபகுதிகளிலான அவரது கட்டுரை (NATO's Inevitable War : Fidel Castro Ruz : Granma International : March 2 and 3 in Two parts, 2011) குறித்தது. அந்தக் கட்டுரை மன்த்லி ரெவியூ, கவுன்டர் பன்ச், கியூபா டுடே உள்பட அநேகமாக புகழ்வாய்ந்த உலகின் மிகப்பல இடதுசாரி இணையங்களிலும் மறுபதிப்பாக வந்திருக்கிறது.
உலகின் மரபார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் லிபியா குறித்த பார்வைகளில், இன்றைய நிலையில் பிடல் காஸ்ட்ரோவின் பார்வையே பாதிப்புச் செலுத்துகிறது. பிடலின் லிபியா பற்றிய கட்டுரையை, அதனது முக்கியமான பல பகுதிகளை தவிர்த்துவிட்டு, தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் சுருக்கமாக மொழிபெயர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ்நாளேடான தீக்கதிர் (அரபு மக்களின் எழுச்சியும், அமெரிக்காவின் எரிச்சலும் : 06 மார்ச் 2011) வெளியிட்டிருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் லிபியா குறித்து இரண்டு விஷயங்களை வலியுறுத்திய சுருக்கமான அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறது. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என்பது ஒரு விடயம், லிபியாலில் அகப்பட்டிருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிறிதொரு விடயம். இதுவன்றி வேறேதுவும் அந்த அறிக்கைகளில் இல்லை.
எதேச்சாதிகரிகளுக்கு எதிரான அனைத்து மத்தியக் கிழக்கு மக்களது எழுச்சிகளையும் ஆதரித்து வரும் மத்தியக் கிழக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகளான எகிப்து, துனீசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதன்மையாக கொடுங்கோலன் கடாபிக்கு எதிரான மக்கள் எழுச்சியை வரவேற்றிருக்கிறது. துனீசிய கம்யூனிஸ்ட் கட்சி அதனுடன் நேட்டோ தலையீட்டையும் நிறுத்துமாறு கோரியிருக்கிறது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியும், அவுஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியும் முதலாக கடாபிக்கு எதிரான மக்கள் எழுச்சியை வரவேற்றுவிட்டு, அப்புறமாகத்தான் நேட்டோ பற்றிப் பேசுகிறது.
பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Great Britain : Weekly Worker : 03 March 2011), கடாபியை வெளிப்படையாக ஆதரிக்கும் டேனியல் ஒர்ட்டேகாவினதும், சேவாசினதும் நிலைபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன், கடாபியின் படைகளுடன் சேர்ந்து பாட்டாளிவர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவேண்டும் என சேவாஸ் சொல்லாதுததான் மிச்சம் என நக்கலாகவும் குறிப்பிட்டிருக்கிறது. அதே வேளை ஏகாதிபத்தியத் தலையீட்டையும் அது மறுத்திருக்கிறது. கொடுங்கோலன் கடாபியை எதிர்த்துப் போராடும் லிபியப் புரட்சியாளர்களை அது ஆதரித்திருக்கிறது.
தனது அல்ஜிஜீரா தொலைக்காட்சி உரையாடலில் லிபியாவின் மக்கள் எழுச்சி குறித்து வரவேற்றிருப்பதோடு (A New Beginning? : Riz Khan in conversation with Tariq Ali : Alzazaeera Documentary : 02 March 2011), எதேச்சாதிகாரியான கடாபி குறித்து படுநக்கலான ஒரு புனைவையும் எழுதியிருக்கிறார் உலகின் மிகமுக்கியமான மார்க்சியக் கோட்பாட்டாளரும், நியூ லெப்ட ரிவியூ ஆசிரியர் குழு உறுப்பினருமான தாரிக் அலி. அமெரிக்க மனித உரிமையாளரான நோம் சாம்ஸ்க்கி லிபிய எழுச்சியை அங்கீகரித்திருப்பதோடு, அமெரிக்க-மேற்கத்தியத் தலையீட்டை நிராகரிக்கும் அவர், ஐக்கியநாடுகள் சபை இதில் தலையிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.
லிபியாவின் மக்கள் எழுச்சி பற்றியும் கடாபி பற்றியும் எந்த மதிப்பீடும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக லிபியா மக்கள் தமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அருள்வாக்கு வழங்கியிருக்கின்றன இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள்.
பிடல் காஸ்ட்ரோ, தனது கட்டுரையில் மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு உலகின் பிரச்சினைகளைத் தனக்குச் சாதகமாகக் குழப்புகிறது என்பதனையும், அது எவ்வாறு உலக அல்லது லிபிய அல்லது மத்தியக் கிழக்கு மக்களை சூழ்ச்சித் திறத்துடன் (manipulation) கையாள்கிறது என்பதனையும் அவர் விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறார். எகிப்திய துனீசிய மக்கள் எழுச்சிகளுக்கும் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசங்களாகச் சில விஷயங்களை முன்வைக்கிறார். தமது பொருளியல் ஆதிக்கத்தின் பொருட்டும் - தற்போது மனித உரிமை என்பதன் பொருட்டும் அமெரிக்க - மேற்கத்திய - நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு எவ்வாறு வரலாறு முழுவதும், ஸ்பெயின், வியட்நாம், அங்கோலா, ஈராக், ஆப்கான என அந்த நாடுகளைச் சுடுகாடுகளாக ஆக்கின என்பது குறித்த தனது தீர்க்கதரிசனங்களை முன்வைக்கிறார். லிபியாவின் தலைமை குறித்துத் தான் எதுவும் சொல்லவிரும்பவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். லிபியா குறித்து இடதுசாரிகள் இன்று செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஒரு முன்மொழிவையும் அவர் அறுதியாக முன்வைக்கிறார்.
II
கை டெபோர்ட், ழான் போத்ரிலார், நோம் சாம்ஸ்க்கி என ஊடகங்களின் பாரபட்சம், பிம்ப ஆதிக்கம், நகல் போலி உலகம் என தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சன், ஜெயா தொலைக்காட்சிகள் பற்றி அறிந்தவர்களுக்கு, அதனது பிம்பத் தொகுப்பு பற்றி அறிந்தவர்களுக்கு நாம் முன் சொன்ன மூவர் குறித்தெல்லாம் விலாவரியாக விளக்கிக் கொண்டு இருக்கத் தேவையும் இல்லை. ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்துலகம் என்பதனை தத்தமது அரசியல் விவாதங்களின் தர்க்கமுறையாகப் பாவிப்பதும், தாம் அடையவிரும்புகிற எல்லைக்கான ஆதாரங்களை அதனின்றும் பெருவது என்பதும் வழமையாக இருந்து வருகிறது.
இடதுசாரிகள் மேற்கத்திய ஊடகங்களால் உருவாக்கப்படும் பொய்கள் குறித்து அதிகமும் கூறிவந்திருக்கிறோம். இணக்கத்தை உற்பத்திசெய்தல் (Mnaufactering Consent :1988) எனும் தனது நூலில் நோம் சோம்ஸ்க்கி இது குறித்து குறிப்பான அமெரிக்கச் சூழலிலான ஆய்வுகளையும் செய்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி தகவல் யுத்தத்தில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம், கதார் நாட்டு தொலைக்காட்சிச் சேவைலயான அல்ஜிஜீரா பெற்றி பெற்றிருக்கிறது எனக் கவலையுடன் அறிவித்திருக்கிறார் ஹிலாரி கிளின்டன் (Hillary Clinton: We're Losing the War : Alexander Cockborn : Counter punch : 4-6 March 2011). இன்று இணையதளத்தைப் பயன்படுத்தி எவரும் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் தவிர்த்த பிற ஊடகங்களையும் அறிந்து கொள்ள முடியும். லிபியா குறித்து அறிந்து கொள்ள நினைக்கிற ஒருவர், இன்று நியூயார்க் டைம்ஸ், வாசிங்டன் போஸ்ட், சிஎன்என், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க ஊடகங்களையும், தி டைம்ஸ், தி டெலிகிராப், ஸ்கை, பிபிசி போன்ற மேற்கத்திய ஊடகங்களையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அமெரிக்காவில் டெமாக்ரஸி நவ், பிரித்தானியாவில் த கார்டியன், எகிப்தில் அல் அஹ்ரம், கதாரில் அல்ஜஜீரா போன்ற மாற்று ஊடகங்களையும் ஒருவர் கண்ணுறமுடியம். அமெரிக்க-மேற்கத்திய அதிகார மையங்களுக்கு எதிரான, உண்மைக்கு அருகிலான தகவல்களைத்தான் நான் பின்குறிப்பிட்ட ஊடகங்கள் அனுதினமும் முன்வைத்து வருகின்றன. லிபியாவில் என்ன நடக்கிறது என்கிற குழப்பம் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களோடு, நான் பின்னர் குறிப்பிட்ட பிற ஊடகச் செய்திகளையும் கவனித்து வருகிற எவருக்கும் வருவதற்கான சாத்தியமேயில்லை.
தகவல்களை நாம் இருவகைகளில் புரிந்து கொள்ளலாம். முன்கூட்டியே தயாரித்து வைக்கப்பட்ட, கருத்தியல் முடிவுகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது முதலாவது முறை. நடந்ததை நடந்தவாறு புரிந்து கொண்டு, புறநிலைநீதியான மதிப்பீட்டுக்கு வருவது பிறிதொரு முறை. முதலாவது அணுகுமுறை உலகைப் புரிந்துகொள்வதிலும் வியாக்யானப்படுத்துவதிலும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது.
லிபியாவில் இன்று உண்மையில் என்னதான் நடக்கிறது? லிபியப் பிரச்சினையில் முதல் முரண்பாடாக இருப்பது, ஏகாதிபத்தியத்திற்கும் லிபிய அதிபரது கொள்கைக்கும் இருக்கும் முரண்பாடா? அல்லது 42 ஆண்டுகளாகத் தனது குடும்ப அதிகாரத்தை வைத்திருக்கும் எதேச்சாதிகாரியான கடாபிக்கும், அவரைப் பதவி விலகக் கோரும் - பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைக் கோரும் - வெகுமக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கும் இருக்கும் முரண்பாடா? இதனைப் புரிந்து கொள்வதில் மேற்குலகிலும்-அமெரிக்காவிலும்-மத்தியக் கிழக்கிலும் வாழும் இடதுசாரிகளுக்கும் மார்க்சியர்களுக்கும் எந்தவிதமான மயக்கங்களும் இல்லை. கடாபிக்கு எதிர்நிலையிலும், அவருக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு ஆதரவாகவும்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் கடாபியே கோரிக் கொள்கிற மாதிரி - அவரது நோக்கில் முதலாளித்துவம் தவிர்த்த, கம்யூனிசமும் அல்லாத மூன்றாவது பாதை அல்லது இஸ்லாமிய சோசலிசம் - அவரைச் சோசலிஸ்ட் எனவோ, இடதுசாரி எனவோ, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் எனவோ அவரைக் கருதுகிற எவரும் இங்கு இல்லை. சமவேளையில் இன்னொன்றையும் இவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தமது எண்ணெய்வள ஆதிக்கத்தின் பொருட்டு லிபியாவில் ராணுவத்தை இறக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட அவை தருணம் பார்த்திருக்கின்றன என்பதனையும், அதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன எனவும் இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால், மத்தியக் கிழக்கு மக்களும், லிபிய மக்களும் தமது பட்டறிந்த சொந்த அனுபவங்களில் இருந்து போராட எழுந்திருக்கிறார்களேயல்லாது, அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் எதுவும் அவர்களது எழுச்சிகளைத் தூண்டவும் இல்லை, அவர்களது எழுச்சிக்கான கருத்துருவாக்கத்தில் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இதற்கு மிக வலுவான சான்றாக இருப்பது, அமெரிக்காவின் மாமன்-மச்சான்கள் ஆள்கிற சவுதி அரேபியாவில் மக்கள் தமது ஜனநயக உரிமைகளுக்காகத் தெருக்களில் இறங்கிவிட்டார்கள். சவுதி மன்னர் அனைத்துவிதமான ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்துவிட்டு நடுங்கிப்போய் அரண்மனைக்குள் பிதற்றிக்கொண்டிருக்கிறார்.
III
எகிப்துப் பிரச்சினையில் கியூபப் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவுக்கு எந்தவிதமான குழப்பங்களும் இல்லை (The Revolutionary Rebellion in Egypt : We support the valiant Egyptian people and their struggle for political rights and social justice : Fidel Castro Ruz : Granma International: 13 February 2011). வீரஞ்செறிந்த எகிப்திய மக்களையும், அவர்களது அரசியல் உரிமைகளுக்கும், சமூக நீதிக்குமான அவர்களது போராட்டத்தை ஆதரிக்கிறோம் என மிகத் தெளிவாக எகிப்து குறித்த தனது கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ பிரகடனம் செய்கிறார். எகிப்திய அரசியல் தலைமையின் அரசியல் தன்மை பற்றியும், மக்கள் எழுச்சிகளின் நோக்கு மற்றும் அரசியல் தன்மைகள் பற்றியும் இக்கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ திட்டவட்டமான சொற்களில் தெளிவுபடுத்துகிறார். ஆனால் லிபியா பற்றிய கட்டுரையில் லிபியாவின் அரசியல் தலைமை குறித்துக் கருத்துச் சொல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்கிறேன்(abstained)’ என்கிறார் பிடல் காஸ்ட்ரோ. அதுபோலவெ அந்த மக்கள் எழுச்சியின் தன்மையும் நோக்கும் பற்றி எதனையும் அவர் சொல்வதில்லை. மாறாக இதுபற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்கிறார்.
கடாபியினது அரசியல் தலைமைத்துவம் லிபியாவில் கல்வி, மருத்துவநலம், உற்பத்தி போன்றவற்றில் சாதித்திருப்பவை குறித்து அவர் பட்டியலிடுகிறார். லிபியாவில் உணவுத் தட்டுப்பாடோ வறுமையோ இல்லை என்கிறார். லிபியக் குடிமகனின் வாழ்காலம் ஆப்ரிக்கக் கண்டத்திலேயே அதிகமானது என்பதனையும் குறிப்பிடுகிறார். இன்றைய லிபியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 21 சதவிதமாக இருக்கிறது என்றாலும், பிடல் காஸ்ட்ரோ சொல்கிற தரவுகள் எவற்றையும் நாம் மறுக்க வேணடியதும் இல்லை. ஓரு நாட்டின் வளமையை அல்லது வல்லமையை மதிப்பிடுவதற்கு இவை மட்டுமே போதுமானது இல்லை. அந்த நாட்டில் அரசியல் ஜனநாயகம் இருக்கிறதா, சிவில் சமூக நிறுவனங்கள் இயங்குகிறதா, தொழிற்சங்கங்கள் இயங்க வாய்ப்பிருக்கிறதா, அதிகாரவர்க்கம் பிரதிநிதித்துவ அடிப்படை கொண்டிருக்கிறதா, ஊடக சுதந்திரம், கலைஞர்களுக்கான சுதந்திரம் போன்றவைகள் அங்கு இருக்கின்றனவா எனும் கேள்விகள் அனைத்தும் மிகமுக்கியமானவை. இலத்தீனமெரிக்க வரலாற்றாசிரியரான எடுவர்டோ கலேனியாவின் சொற்களில் சொல்வதானால், சுதந்திரமும் சமூகநீதியும் ஒன்றிணைந்தது. ஓன்றில்லாமல் பிறிதொன்று இல்லை. மேலாக, மத்தியக் கிழக்கு-வட ஆப்ரிக்க வெகுமக்களின் இந்த எழுச்சி, அந்தப் பிதேசங்களின் சர்வாதிகாரிகள், முடிமன்னர்கள், குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு எதிரான எழுச்சிகள். அரசியல் ஜனநாயகம், பிரதிநித்துவ அடிப்படை, மனித உரிமைகள், சமூகநீதி போன்றனவே இந்த மக்களைப் போராட உந்தியிருக்கும் அடிப்படைகள்.
கடாபி 42 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கிறார். அவருக்கு மிகமிக விசுவாசமான 15,000 பேரைக் கொண்ட ஆயுதப்படைப்பிரிவு, அவரது இளையமகனின் பெயரால், கமிஸ் பிரிவு என அழைக்கப்படுகிறது. அந்தப் படைப்பிரிவே இன்று மக்களை ஒடுக்குவதில் முன்னணிப்படையாக உள்ளது. அவரது இரண்டாவது மகனான சையிப் அரசிலோ அல்லது படைப்பிரிவிலோ எந்தப் பொறுப்புகளும் கொண்டவர் இல்லை. அவரது நிர்வாகத்தில் பில்லியன் டாலர்கள் பெறுமதியிலான அறக்கட்டளைகள் இயங்குகின்றன. இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிகஸ் அமைப்புக்கு அவரது பெயரிலான அறக்கட்டளை வழங்கிய நன்கொடைகள் தொடர்பாக அதனது நிர்வாகி பதவி விலகியிருப்பது அதற்கான சிறிய சான்று. அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களில் தனது தந்தையின் சார்பாகவும், லிபிய அரசின் சார்பாகவும் அவர்தான் இன்று பேசுகிறார். கிளரச்சியாளர்களை நோக்கி லிபியா இரத்தக்க கடலாக ஆகும் எனக் கர்ஜித்தவர் அவர்தான். கடாபியை இந்தக் காரணத்தினால்தான் அவர் அதிகாரத்தினின்று வெளியேற வேண்டும் எனக் கிளர்ச்சியாளர்கள் கோருகிறார்கள்.
கடாபி அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் எனக் கோரும் லிபியப் புரட்சியாளர்கள் கோரிக்கை, பலவிதங்களில் எகிப்து துனிசீயப் புரட்சியாளர்களின் கோரிக்கையை ஒத்தது. அவர்கள் முபாராக்கையும் பென் அலியை மட்டுமே விலகச் சொல்லவில்லை. அவர்கள் உருவாக்கிய அமைப்பை முற்றிலும் கலைக்கவெனவே அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். விளைவாகவே முபாராக்கின், பென் அலியின் அரசியல் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் விரட்டப்பட்டு, புதிய பிரதமந்திரிகளை அவர்கள் அமர்த்தியிருக்கிறார்கள். யேமானிலும் பெஹ்ரைனிலும், ஜோர்தானிலும் இதுவே கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. காரணம் யாதெனில், இந்த ஆட்சியாளர்களால் பல பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களாக இந்தப் பிரதேசத்தின் மக்கள் இருக்கிறார்கள். முவம்மர் கடாபி தொடர்ந்து 42 ஆண்டுகளாக எதேச்சாதிகாரியாக, குடும்ப அதிகாரத்தை நிலைநாட்டியவராக, சிவில் சமூக அலகுகளை நிராகரித்தவராக, ஊடக சுதந்திரத்தை மறுத்தவராக, தொழிற்சங்கங்களை, அரசியல் கட்சிகளை தடை செய்தவராகத்தான் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்.
எழுபதுகளின் இந்திய அவசரநிலைக் காலத்தையும், இநதிராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தியின் வெறியாட்டங்களையும் ஞாபகம் கொள்ள முடியுமானால், இன்று கடாபியின் இரண்டாவது மகன் சையிப் எந்த அரச அல்லது படைத்துறை அதிகாரமும் இல்லாமல் பெற்றிருக்கும் அதிகாரத்தையும் ஆணவத்தையும், அதனை கடாபி அங்கீகரித்திருப்பதையும் ஒருவர் உணரமுடியும்.
அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஈராக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட, லெபனானிய கம்யூனிஸ்ட் கட்சியோடு பிற மத்தியக் கிழக்கின் இடதுசாரிகளும் அங்கீகரித்திருக்கும் இத்தகைய பகுப்பாய்வை பிடல் காஸ்ட்ரோவும், சேவாசும், ஒர்ட்டேகாவும், இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வந்து அடையமுடியாமல் இருப்பதற்கான காரணம்தான் என்ன?
இத்தகைய நிலைபாட்டை அவர்கள் வந்து அடைவார்களானால் அப்போது தேசிய சோசலிசம் என்பதன் பெயரால் நடைபெறும் ஒற்றைக் கட்சி அதிகாரத்தைப் பற்றியும் தியானென்மென் சதுக்க மனிதஉரிமைப் படுகொலைகள் பற்றியும் அவர்கள் பேச வேண்டியிருக்கும். கியூப சமூகம் குறித்த விமர்சனங்களைக் கொண்ட ஜேம்ஸ் பெட்ராஸ், எடுவர்டோ கலியானோ போன்றவர்களின் விமர்சனங்களையும் அவர்கள் செவிமடுக்க வேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்த கியூபாவின் வெளிநாட்டுக் கொள்கை குறித்தும் அவர்கள் பேசவேண்டியிருக்கும்.
சர்வதேசியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களுடனான சர்வதேசியமா அல்லது ஒடுக்கும் தேசத்துடனான சர்வதேசியமா என்கிற அடிப்படைக் கேள்வியையும் அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்டாலினிய வகையிலான இடதுசாரித் தேசிய சோசலிசம் மட்டுமல்ல, பிறவகையிலான ஒடுக்குமுறை தேசிய சோசலிசங்களும் காலாவதியாகிவிட்டன என்பதனையும் அவர்கள் ஒப்ப வேண்டியிருக்கும். இந்த நிலைபாடு அவர்கள் இதுவரை பேசிவந்த, இப்போதும் பேசிக் கொண்டிருக்கிற நிலைபாடுகளுக்கு எதிராக இருக்கும். இந்தக் கருத்தியில் நிலைபாட்டிலிருந்தே அவர்கள் கடாபி எனும் கொடுங்கோலன் குறித்தும், லிபிய மக்களின் எழுச்சியின் தன்மை குறித்தும் எந்தவிதமான கருத்தும் சொல்லாது தவிர்க்கிறார்கள்.
பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் மக்களை சூழ்ச்சித் திறத்துடன் குழப்புதாகப் பேசும் எடுகோளுக்கான புள்ளி, புரட்சியாளர்கள் தமது நோக்குகளாக - குறிப்பாக நேட்டோ நாடுகளின் தலையீடு மற்றும் விமானங்கள் பறக்காத வான்வெளியை (no-fly-zone) குறித்து உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை என்பதோடு, அதனை ஏகாதிபத்திய ஊடகங்கள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கின்றன எனச் சொல்கிறார். இது மிகவும் முக்கியமான ஒரு மதிப்பீடு. அது அப்படித்தான் இருக்கிறது.
லிபியாவின் இரண்டாவது பெரிய நகரும் விடுதலை செய்யப்பட்ட பிரதேசமுமான பெஞ்சாயை மையமாகக் கொண்டு இயங்கும் இடைக்கால நிர்வாக அமைப்பின் தலைவரும், அதனது அதிகாரப் பூர்வப் பேச்சாளரும், இவர்களது ராணுவப் பிரிவின் தலைவரும் இது குறித்து தமது கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடும் எமக்குத் தேவையில்லை. எமது பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம் என்கிறார் இடைக்கால நிர்வாகத்தின் தலைவர். இடைக்கால நிர்வாகத்தலைவரின் கருத்தையே பிரதிபலித்திருக்கிறார் அதிகாரபூர்வப் பேச்சாளர். படைத்துறைத் தலைவர் இவைகளிலிருந்து வித்தியசமாக இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறார். லிபியாவுக்குள், நிலத்தில், எந்தவிதமான அந்நியப் படைகளும் நிலைகொள்ளாமல், கிளர்ச்சியாளர்கள் மீது விமானம் மூலம் குண்டுவீசிக் கொல்வதைத் தடுப்பதற்காக சர்வதேசிய நாடுகள் விமானம் பறக்காத வான்வெளியை உருவாக்க வேண்டும் என அவர் கோருகிறார் (Libya : wikipeida : as on 06 March 2011.
அரசியல் முடிவும், களத்திலுள்ள ராணுவத் தாக்குதலின் தன்மையை எதிர்கொள்வது குறித்த தந்திரோபாயமும் எதிர்கொள்ளும் முரண் இது. என்றாலும், மூவருமே ஒரு விதத்தில் ஒத்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, லிபியாவில் அமெரிக்க-மேற்கத்திய படைத்துறைத் தலையீடு என்பது மிகப்பெரும் பேரழிவையும், நீண்ட கால அழிவையும் தரும் என்பதனை அவர்கள் உணரந்திருக்கிறார்கள். அந்த வகையிலேயே அத்தகைய தலையீட்டை, படைத்துறையின் நிலம்சார் இருப்பை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அதே வேளையில், நூற்றுக்கணக்கிலான போர்விமானங்களையும், குண்டுவீச்சு உலங்கு வானூர்திகளையும் கொண்ட கடாபியின் ராணுவத்தை, அவர்கள் வான்மூலம் தாக்குதல் தொடுத்தால் தம்மால் தொடர்ந்து நின்றுபிடித்துப் போராட முடியுமா என்ற கேள்வியும் அவர்களிடம் இருக்கிறது.
விமானப் பறப்பற்ற வான்வெளியை உருவாக்குவது என்பது ஒரு ராணுவ நடவடிக்கை என்பதனை அமெரிக்காவும் மேற்குலகும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஒப்புதலுடன்தான் அது நடைபெறவேண்டும் என பிரான்ஸ் சொல்கிறது. கடாபியும் அவரது குடும்பத்தினரதும் பயணங்களையும் சொத்துக்களையும் முடக்குவதோடு பொருளாதாரத் தடைவிதிப்பையும் ஆதரித்த ரஸ்யாவும் சீனாவும் இந்தத் திட்டத்தனை மறுக்கின்றன.
லிபிய அரசு விமானம் மூலம் குண்டுவீசி மக்களைக் கொல்கிறது என்பது உண்மையா? அதற்கான ஆதாரங்கள் எதனையும் தம்மால் காணமுடியவில்லை என அறிவித்திருக்கிறது ரஸ்ய அரசு. தாம் வெகுமக்களின் மீது குண்டுவீசிக் கொல்லவில்லை என அறிவித்திருக்கும் லிபிய அரசு, பயங்கரவாதிகளை (கிளர்ச்சியாளர்களை) அச்சுறுத்துவதற்காக நாங்கள் விமானத்திலிருந்து குண்டுகளைப் போடுவது உண்மைதான் எனவும், அவர்களைக் கொல்வதற்காக அதனை வீசவில்லை எனவும் அறிவித்திருக்கிறது. பயங்கரவாதிகள் கையில் ஆயுதங்கள் போய்ச்சேராமல் இருப்பதற்காக, ஆயுதக் கிடங்குகளை விமானக் குண்டுவீச்சின் மூலம் அழிக்கிறோம் எனவும் அறிவித்திருக்கிறது. லிபிய அரசு விமானக் குண்டுவீச்சுக்களை நிகழ்த்துகிறது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அது நிராயுதபாணியான வெகுமக்களின் மீது வீசப்படுகிறதா என்பதுதான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.
வெகுமக்களின் மீது வீசப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அப்போது ரஸ்யா-சீனா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலைபாடு எத்தகையதாக இருக்கும் எனும் கேள்வி இப்போது முக்கியமான கேள்வியாக இருக்கும். அதுவரையிலும் உள்நாட்டு ஆயுதக் கலவரங்களை ஒரு அரசு அடக்கும்போது பிற அன்னியநாடுகள் தலையிடுவது என்பது சர்வதேசியச் சட்டங்களுக்கு உட்பட்டது அல்ல எனவும், ஈராக், ஆப்கானிய யுத்தங்களில் அமெரிக்க-மேற்கத்திய ராணுவத் தலையீடுகளை மத்தியக் கிழக்கு வெகுமக்கள் எதிர்த்தார்கள் எனவும், இவ்வாறான சூழலில் தமது தலையீடு எதுவித விளைவுகளைத் தரும் எனும் தயக்கத்தில் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் இருப்பதாலேயே அவை தயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிபிசி-அல்ஜிஜீரா என வேறுபட்ட பார்வைகள் கொண்ட ஊடகங்களின் பகுப்பாய்வுகள் சொல்கின்றன. என்றாலும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏதேனும் ஒரு வகையில் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றன.
பிடல் காஸ்ட்ரோ இத்தகைய தலையீடுகள் நிச்சயமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கப் போவதில்லை என்கிறார். ஸ்பெயின் முதல், வியட்னாம் ஈராக, அங்கோலா, ஈராக், ஆப்கான் வரை அவர் சொல்கிற ஆதாரங்களை எவரும் மறுக்கவியலாது.
இந்த மிகப்பெரும் சிக்கலான முரணில் தீர்மானிப்பவர்களாக யார் இருக்கப் போகிறார்கள்? முடிவுகளை எடுக்கப் போகிறவர்களாக யார் இருக்கப் போகிறார்கள்? நிச்சயமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான லிபிய மக்களும், ஒடுக்குமுறையாளனான கடாபியும்தான் இருக்கப் போகிறார்கள்? இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் இவர்களது இருத்தலுக்கான முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஒப்பவே பிரச்சினைகள் பரிமாணம் பெறும். எனில் இவர்கள் எடுக்கும் முடிவுகளில் எவரின் சார்பாக இடதுசாரிகள் நிற்க வேண்டும் என்புதுதான் இன்றுள்ள முக்கியமான கேள்வி.
கடாபி இன்றைய நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்பதும், மத்தியக் கிழக்கு நிலைமையில் அவர் இன்று ஒரு இடதுசாரிப் பாத்திரமோ அல்லது முற்போக்கான பாத்திரமோ வகிப்பார் எனக் கருதுவதும் ஒரு நகை முரண்.
வெகுமக்கள் கிளர்ச்சியாளர்களை அவர் பயங்கரவாதிகள் என்கிறார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்கிறார். முழு மத்தியக் கிழக்கு மக்கள் கிளர்ச்சிகளையும் அவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் என்கிறார் (Gadaffi seeks UN probe in to Unrest : Alzazeera : 06 March 2011). தான் தோற்றால் லிபியாவில் 15 இஸ்லாமிய பயங்கரவாத பிரதேசங்கள் அமையும் என்கிறார். நான் இதுவரை உங்கள் நண்பனாகத்தானே இருந்தேன். உங்களது யுத்தத்தை நான் நடத்துகிறபோது ஏன் இதனை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்கிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோடு பேசும்போது காஷ்மீரில் நீங்கள் செய்வது போலத்தானே நான் லிபியாவில் செய்கிறேன், என்னை ஆதரியுங்கள், எனது எண்ணெய் வளத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தருகிறேன் என்கிறார். இவருக்கு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளனின் முகத்தை வழங்குவது முற்றிலும் யதார்த்தத்துக்குப் புறம்பானதாகும்.
மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகள் நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எழுச்சி அல்ல. அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்தியங்களக்கு ஆதரவானதும் அல்ல. அது பிடல் காஸ்ட்ரோ - லிபியா நீங்கலாக - சரியாக மதிப்பிடுவது போல அது ஜனநாயகத்துக்கும் சமூகநீதிக்குமான எழுச்சி. இது விடயத்தில் நாம் பிற மத்தியக் கிழக்கு மக்களோடு நிற்பது போலவே, திட்டவட்டமாக லிபிய மக்களின் பக்கம் நின்று, கடாபியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
பிற விளைவுகள், கடாபியினது நகர்வுகளைப் பொறுத்தே அமையும், அமெரிக்க-மேற்கத்தியத் தலையீடுகளை இன்று நிராகரிக்கிற லிபியக் கிளரச்சியாளர்கள், தம்மீது விமானத் தாக்குதல்களை நிகழ்த்தி கடாபி கொல்வாரானால், ஆயுத வழியில் அதனைத் தாக்குப் பிடிக்க முடியாத அவர்கள், அப்போது உலகத் தலையீடுகளை, அது ஐக்கிய நாடுகளின் ஒன்றினைந்த அல்லது அமெரிக்க-மேற்கத்தியத் தலையீடே என்றாலும் அதனை அவர்கள் ஏற்பார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்று எந்த அமெரிக்க-மேற்கத்திய ஆயுதங்களைப் பாவித்தபடி, அவர்களது நண்பனாகத் தோற்றம் காட்டியபடி, கடாபி லிபிய மக்களைக் கொல்கிறாரோ, அதே ஆயுதங்களைத் தம்மைக் காத்துக் கொள்வதற்காக லிபிய மக்கள் ஏற்பார்களானால் எவரே அவர்களைத் தடுக்க முடியும்? லிபிய மக்கள்தான் தமது தலைவிதியைத் தீர்மானிப்பார்கள் எனில், அதற்குப் பின் வரும் காலங்களின் தலைவிதியையும் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். இதற்கான நம்காலத்திய சாட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சிக்கு எதிராக ஈராக்கின் சகலபகுதிகளிலும் கிளர்ந்து எழுந்திருக்கிற மக்கள் போராட்டங்கள்.
சதாமுக்கு எதிராகப் போராடிய ஈராக்கிய மக்கள், அதன் மீதான அமெரிக்க-மேற்கத்திய ஆக்கிரமிப்பின் போது அதனை எதிர்த்துப் போராடிய ஈராக்கிய மக்கள், இன்று அதனது சார்பான ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
IV
லிபியாவில் நேட்டோவின் தவிர்க்கவியலாத் தாக்குதல் திட்டத்தினை முறியடிப்பதற்காக, அது நிகழும் முன்னாலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பிடல் காஸ்ட்ரோ. அந்த வகையில் வெனிசுலாப் புரட்சியாளரான சேவாசின் பேச்சுவார்த்தை முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
அதற்கான சாத்தியம் மத்தியக் கிழக்கு நிலைமையில் இல்லை. லிபியப் புரட்சியாளர்களைப் பொறுத்து இதனை நிராகரித்துவிட்டார்கள். 2011 பிப்ரவரி 15 ஆம் திகதி லிபிய அரசினால் கைதுசெய்யப்பட்ட ஒரு மனித உரிமை வழக்குரைஞரை விடுதலை செய்வதற்காகப் போராடிய வெகுமக்களின் மீது காவல்துறையை ஏவிவிட்டு இரண்டு பேரைக் கொலை செய்தார் கடாபி. அன்று கொல்லப்பட்டவர்களின் சவ ஊர்வலம் நடந்துபோது அந்த ஊர்வலத்தின் மீதும் தாக்குதல் தொடுத்தனர் கடாபியின் காவல் படையினர். தனது ஆட்சியின் கீழான அனைத்துப் போராட்டங்களையும் கடாபி ஆயுத முனையிலேயே எதிர்கொண்டிருக்கிறார். அவர் ஆயுத முனையிலேயே எவரையும் தான் வெல்லமுடியும் எனக்கருதிச் செயல்படுகிறார்.
இப்போது எதுவேனும் முன்னெடுப்பு இருக்குமானால் அது எவ்வாறு கடாபி தனது அதிகாரத்திலிருந்து வெளியேறுவது என்பது குறித்ததாகத்தான் இருக்க முடியும். அவரை அதிகாரத்தில் தொடர்ந்து இருத்தி வைத்துக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அது இருக்காது என்பதனை புரட்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு சேவாசின் முன்மொழிவை வரவேற்றிருக்கிறது. அமெரிக்கா-பிரித்தானியா போன்றன நிராகரித்திருக்கிறது என்பதனையும் தாண்டி, இதில் இறுதிக் குரலாக இருக்கப்போவது புரட்சியாளர்களின் குரலாகத்தான் இருக்கப் போகிறது.
பிடல் காஸ்ட்ரோ, சேவாஸ், டேனியல் ஒர்ட்டேகா போன்றோர் இப்பிரச்சினையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் முகாந்திரத்தை மிக விரிவாகத் தமது அறிக்கைகளிலும் எழுத்துக்களிலும் முன் வைத்து, முவம்மர் கடாபியின் சார்பு நிலையில் இருந்துதான் பேசுகிறார்கள். லிபியப் புரட்சியாளர்களின் நிலைமையில் இருந்து, அவர்களது சார்பு நிலைகளிலிருந்து அவர்கள் பேசவில்லை. இலங்கைப் பிரச்சினையிலும் சேவாஸ் மகிந்தாவின் யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றுதான் வர்ணனை செய்தார். விடுதலைப் புலிகள் எனும் அமைப்பையும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையையும் அவரால் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியவில்லை. இப்போதும் போராடும் சக்திகளின் குணம் குறித்த தமது சம்சயங்களை எழுப்பியபடிதான் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவகையிலான கடாபி ஆதரவு நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.
லிபிய நிலைமை பல்வேறுவிதங்களில் ஈழ நிலைமைகளுடன் ஒப்பிடத் தகுந்த பண்புகள் கொண்டிருக்கிறது. கடாபி புரட்சியாளர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்கிறார். மகிந்தாவும் அவ்வாறுதான் இன்று வரை சொல்கிறார். ஏகாதிபத்தியவாதிகளுடன் குலவிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் வேஷம் கட்டுகிறார் கடாபி. மகிந்த ராஜபக்சே., இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கிக் கொண்டு, அமெரிக்க-மேற்கத்திய முதலீடுகளையும் வரவேற்றுக் கொண்டு, அவ்வப்போது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் முகம் காட்டுகிறார்.
போராளிகளின் மனித உரிமைகள் சார்ந்தும் நமக்குச் சில படிப்பினைகளை மத்தியக் கிழக்கு அனுபவங்கள் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்கள்திரளின் எழுச்சிகள். இவை எவற்றின் மீதும் எவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எவரும் சுமத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அமெரிக்க-மேற்கத்திய அரசுகளோ அல்லது மனித உரிமை அமைப்புக்களோ அல்லது இடதுசாரிகளோ, தாராளவாதிகளோ எவரும் இந்த எதிர்ப்பு இயக்கங்களின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையோ, பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களையோ வைக்கமுடியாது. புரட்சியின் தார்மீக அறங்கள் கடைபிடிக்கப்பட்ட போராட்டங்கள் இவை. துரதிருஷ்டவசமாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினாலும், உலகின் மனித உரிமைகள் அமைப்புக்களாலும், உலக அரசுகளாலும், இடதுசாரிகளாலும், தாராளவாதிகளாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், ஜனநாயக மறுப்பு சார்ந்த விமர்சனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஓருவகையில் ஈழவிடுதலைப் போராட்டத்தை, அதனது தார்மீகத் தன்மையை இப்பிரச்சினைகள் பின்தள்ளின எனவே சொல்ல வேண்டும். பின்வரும் விடுதலை அமைப்புக்கள் பொருட்படுத்த வேண்டிய மீள்பரிசீலனையாகவே நாம் இதனை முன்வைக்கிறோம்.
மாபெரும் இலத்தீனமெரிக்கப் புரட்சியாளனான சேகுவேரா பிடலுக்கு ஒரு பாடல் எனும் தனது கவிதையில் இவ்வாறு கூறுகிறான்-
எம் வழியில் ஈய ரவை குறுக்கிடுமேயானால்
நாம் கேட்பதெல்லாம் எமது கெரில்லா எழும்புகளை மூட
அமெரிக்க வரலாற்றுத் திசைவழியில்
கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி
வேறெதுமில்லை.
மாபெரும் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவிடம் மீளவும் இப்படிக் கேட்பதற்கான தகுதி, 2011 பிப்ரவரி 15 ஆம் திகதி லிபியாவின் பெஞ்சாய் நகரில், மனித உரிமை வழக்குரைஞர் பாதி தெர்பிலின் விடுதலைக்காகப் போராடி, கடாபியின் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிராயுதபாணிகளான அந்த இரு போராளிகளுக்கும் இருக்கிறது எனவே நாம் கருதுகிறோம்.
- யமுனா ராஜேந்திரன் (