Annaduraiதம்பி! எதற்கு இந்த அவசர கடிதம் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

தம்பிக்கு என நீங்கள் எழுதிய அனைத்து கடிதங்களும் இன்றும் வாசிக்கவேண்டிய அறிவு களஞ்சியம். அரசியல் களத்தில் நீங்கள் வீசிய கருத்து வாள்களுக்கு புறமுதுகிட்ட கூட்டம் இன்று கழகத்தின் நிழலில் காய்வதை கண்ணீர்விட்டு கதறும் உங்கள் தம்பிகள் பலர். பார்ப்பனீயத்தை ஒழிப்போம் என்று புறப்பட்ட புலி நீங்கள். கண்ணீர் துளிகளே! என் கண்மணிகளே என்று 1949 செப்டெம்பர் திங்கள் இராபின்சன் பூங்காவில், கொட்டும் மழையில் கழகத்தை கண்ணீருடன் துவங்கினீர்கள். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை 'தம்பி வா! தலைமை ஏற்க வா!' என அழைத்து தலைமை பொறுப்பில் அழகு பார்த்தீர்கள். கழகம் வெற்றி பெற்று உங்களது தலைமையில் அரசமைத்ததும் தந்தை பெரியாரை அமைச்சர்களுடன் சென்று திருச்சியில் சந்தித்து கழக ஆட்சியை கொள்கைக்கு அற்பணித்தீர்கள். தமிழர் வாழ்வே கனவாகி போனதால் தமிழாகவே வாழ்ந்தனால் மதறாஸ் என்றிருந்ததை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றி முதல் தீர்மானமாக்கியது உங்களது அரசு. தமிழின விடிவிற்கான அரசியல் இலக்குகளை அடைவதற்காக அன்று கழக ஆட்சியில் திட்டங்கள் பல தீட்டினீர்கள். அரசியல் விடுதலைக்காய் உதித்த உதயசூரியன் உங்களை இழந்தது எமக்கு மிகப்பெரிய இழப்பு என்பதை நாங்கள் உணர்ந்து ஆண்டுகள் பல.

பஞ்சைப் பராரிகளான சாமானிய மக்களின் விடுதலைக்கும், தமிழின வளர்ச்சிக்குமாக முற்போக்கு சிந்தனை வாளுடன் தமிழகத்திற்கு தி.மு.கழகம் என்ற அரசியல் இயக்கத்தை அன்று விட்டு சென்றீர்கள். இன்று கொள்கையிழந்த உவர்நிலமாய் கழகம். பணம் சம்பாதிப்பது, பதவிவெறி, குடும்ப அரசியல் கழகத்தின் வேர்முதல் கிளை வரை. அன்று கழக வேட்டி கட்டுவது என்பது இலட்சியம். இன்று பொருளாதாரத்தை பெருக்க தேவையான அடையாளம். மூடநம்பிக்கையாளர்களர்கள், மதவெறியாளர்களின் மிரட்டல்களை எதிர்த்து, தினக்கூலி வருமானத்தில் நிலம் வாங்கி கழக கொடி நட்ட வீரர்கள் அன்றைய கழக தம்பிகள். இன்று கழக கொடி உடன்பிறப்புகளுக்கு கரன்சி கட்டி எடுக்கிற பைகளாகி போனது. அன்று அறிவுப்போரில் கழக தம்பிகள் பட்டை தீட்டப்பபட்டனர் கழக பாசறைகளில். இன்று தள'பதி'களுக்கு கொலுபொம்மைகளாய் பல்லிளித்து பதவியில் ஒட்டியிருக்கும் பரிதாபம் உடன்பிறப்புகளுக்கு. அன்று கழகம் சார்ந்தவர்கள் குடும்பமும் கழக சிந்தனையில் வளர்ந்தது. இன்று கழக குடும்பங்கள் இரகசியமாக பார்ப்பனீய மடங்களில் மண்டியிட்டு கைகட்டி நிற்கும் அவலம். அன்று கழகத்தவர் கொள்கை பரப்ப ஊடகங்களை தொடங்கினர், இன்று உடன்பிறப்பு குடும்பங்களுக்கு பார்ப்பனீய, மூடக் கருத்துபரப்பி பொருளீட்டும் மூலதனம் ஊடகங்கள். கலந்துரையாடி சேர்ந்து முடிவெடுத்தது அந்தக் காலத்து கழகம், இப்போதெல்லம் கோபாலபுரத்து குறிப்புகளே முடிவாகி போகிறது. வாழ்க ஜனநாயகம்!!!

உங்களுக்கு பின்னர் கழகத்தில் ஒழுங்கில்லை, ஊழல் மலிந்துள்ளது என உங்கள் பெயரில் புது அமைப்பு கண்டார். இன்று அந்த அண்ணாயிச கழகம் பார்ப்பனீயமே நமோ! வர்ணதர்மமே சரணம் என பார்ப்பனிய தலைமைக்கு அடிபணிந்து கிடக்கிறது. இப்போதெல்லாம் அண்ணாயிசம் பேசுவர்கள் தந்தை பெரியாரின் அறிவுக்கருத்துக்களுக்கு பதில் கேரளத்து சோதிடரிடம் திருவுள சீட்டு போட்டு பார்த்து தான் மலர்வளையம் வைக்க கூட வருகிறார்கள். அன்று கனகவிசயன் தலையில் கல் சுமந்து கண்ணகிக்கு சிலை வடித்தான் சேரன் செங்குட்டுவன் என்று வரலாற்று பெருமைகளை பேசினர் தம்பிகள். இன்று மன்னனின் மகுடம் சாய்த்து நீதி நிறுவிய தமிழச்சி கண்ணகி சிலையகற்ற வண்டியனுப்புகிறார்கள் இரத்தத்தின் இரத்தங்கள். இப்போதெல்லாம் பச்சை நிறம் தான் ராசி நிறம், அதற்கு கொள்கை குன்று காளிமுத்து புது விளக்கம் தருவார் சட்டப்பேரவையில்.

தம்பீ! வீறுகொள்! என்று அறிவு கருத்துக்களால் நீங்கள் பட்டை தீட்டிய தம்பிகள் இன்று சிதறி சின்னாபின்னமாகி, அடைய வேண்டிய அரசியல் இலக்கிகளை பற்றி கவலையில்லாமல். அறிக்கைகளும், மறுப்பு அறிக்கைகளுமாக அடைமொழியில் வாய்கூசும் பேச்சுக்களில் திட்டுவது தான் இன்று தமிழ்மக்களது அரசியல் அரங்கு. போலியாக புகழ்வதும், வீரம் பேசுவதுமாக சட்டப்பேரவையின் நாற்காலிகள் நகர்கிறது. ஆரிய உதட்டுடன் திரவிட உதடு கலந்ததல்ல வியப்பு. ஆரிய அரசியலும் திராவிட அரசியலும் கைகோர்க்கும் இழிநிலை.

அன்று இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை தமிழகத்து சிற்றூர்கள் வரை எதிர்ப்பு காட்டி ஜாதிய ரீதியான கல்வியை துரத்திய சீர்திருத்த வீரர் நீங்கள். அதனால் தான் இன்று செருப்பு தைக்கும் தொழிலாளி மகனுக்கு கல்விக்கு போகவும், வேறு வேலை பார்க்கவும் குறைந்த அளவு வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால், உடன்பிறப்புகளும், இரத்ததின் இரத்தங்களும் தமிழ்பேச தெரியாத, தமிழில் பேசினால் இழிவு என நினைக்கிற தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். கல்வியை கூறுபோட்டு விற்கும் வணிகக்கூடங்களுக்கு உங்கள் பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள் இன்றைய தம்பிகள்.

இயற்கை பேரழிவுகளிலும் பணம் சேர்க்குமளவு இதயமற்றவர்களாகி போனது தம்பிகளது மனது. தமிழ்த்தாயின் தலைமகனே! தூங்கியது போதும். துயிலெழுந்து படை நடத்த வாருங்கள். அறிவுக்கருத்துக்களால் தமிழர் மனதை மீட்கும் கழகப்படை வீரர்களை 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' கொண்ட இலட்சிய வீரர்களாய் வழிநடத்த வாருங்கள். இன்று காலை விடிந்ததும் மலர் தூவ, மாலையிட வருகிற இன்றைய தலைவர்களிடம் நெஞ்சை சுடும் வண்ணம் கேளுங்கள். மறுமுறை தமிழ்தாயின் மடியினில் புதுவடிவுடன் வாருங்கள் எங்கள் இதயம் நிறைந்த அண்ணா! அதுவரை வியலுக்காய் காத்திருக்கும் கழகமும், தமிழகமும்!

அன்புடன்,
திரு

Pin It