இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் இக்கதியில் தொடரும் கொலைகள் போரெனும் அழிவுப் பாதைக்கு நாட்டை இட்டுச் சென்று தமிழ் மக்களைப் பேரபாயத்துக்குள் தள்ளி விடும் எனவும் தமிழ் தகவல் நடுவம் எச்சரிக்கை செய்கின்றது. அறிவுத்திறனாளிகள், சமூக சேவையாளர்கள், கல்விமான்கள், பெண்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், மதகுருமார்கள், செய்தியாளர்கள், சட்ட வல்லுநர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுநலவாதிகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகிய பல தரப்பட்ட மக்கள் இவ்வாறான படுகொலைகளுக்கு இலக்காக்கப்படுவது பெரும் விசனத்துக்குரியதாகும். சமுதாயத் தூண்களாக விளங்கும் இவர்கள் ஒவ்வொருவரும் எமது சமூகத்தின் இன்றியமையாத சிறப்பு அம்சங்களாகத் திகழ்பவர்கள். அவர்களது கனவுகள், அபிலாசைகள், கொள்கைகள், திட்டங்கள், அர்ப்பணிப்புகள் அனைத்துமே சமூகத்துக்குப் பயனில்லாமல் மரணத்துடன் மடிந்து விடுகின்றன.

கொலை செய்யப்படும் ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு குடும்பம் உறவு கிராமம் என ஒரு பரந்த சமூகமே உள்ளது. ஒரு மனிதக் கொலையினால் ஒரு உயிர் மட்டும் அழிக்கப்படுவதில்லை, அவரைச் சார்ந்த சமூகத்தின் ஒரு பகுதியும் சிதைக்கப்பட்டு அதனின் எதிர்காலம் எதிர்பார்ப்பு கனவுகள் அனைத்துமே கரைக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடரும் கொலைகளினால் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாக ஒதுங்கி நிற்க மக்கள் முற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொடூரமான கொலை தமிழ் தகவல் நடுவத்தைப் பேரதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இவர் 1985ம் ஆண்டிலிருந்து நடுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆவணப்படுத்துதல் மனித உரிமைகள் பேணுதல் போன்றவற்றில் அவர் எம்முடன் செயற்பட்டவர். தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடிய ஒருவரை நாம் இன்று இழந்து நிற்கிறோம். தமிழ் தகவல் நடுவம் மட்டுமன்றி மனித உரிமைச் சமூகமும் அவரின் இழப்பால் பாதிக்கப்படுவது நிச்சயம்.

பொதுமக்கள் மீது அண்மைக்காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கண்டிக்கப்பட வேண்டிய வன்முறை, அச்சுறுத்தல், அர்த்தமற்ற கொலைகள் தொடர்பாக தமிழ் தகவல் நடுவம் ஆழ்ந்த கவலையை அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் சகல தரப்பினராலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையிட்டுக் கவலையுறும் அதேவேளை இத்தகைய சம்பவங்கள் சாதாரணமானவை, தவிர்க்க முடியாதவை எனக் கருதப்படும் நிலை காணப்படுவது எமக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பொதுமக்களைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதாலும் அவர்களைக் கொலை செய்வதன் மூலமாகவும் சமூகத்தைச் சீர்திருத்தலாம் எனவோ நமது இலக்குகளை அடையாலாம் எனவோ அல்லது சமூக மேம்பாட்டுக்கு வழிகோலலாம் எனவோ எண்ணுவது அறிவற்ற தன்மையாகும். எவராலும் ஒரு பொழுதும் இத்தகைய கொடூரச் செயல்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாதென்பது மட்டுமன்றி நீதிக்கான போராட்டங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதற்கு எந்தவித நியாயமும் இல்லை என்பது அனைவர் மனதிலும் பதிய வேண்டும்.

சகிப்புத் தன்மையற்று தப்பெண்ணம் கொண்டு பிற அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்காது நீதிக்குக் கட்டுப்படாமல் வன்முறையை ஊக்குவிக்கச் செயற்படும் தன்மையையும் மனித உரிமைகள், நியாயம், எமது எதிர்காலம் ஆகியவற்றைச் சீரழிக்கும் கொடூரச் செயல்களையும், தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற பேதங்களுக்கு அப்பால் கால தாமதமின்றி ஒரு குரலாக எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாதென உறுதி கூறுமாறு அனைவரையும் தமிழ் தகவல் நடுவம் வேண்டி நிற்கிறது. வீணான கொலைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் இதற்காக அனைத்துச் சமூகங்களும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமெனவும் தமிழ் தகவல் நடுவம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உறுதி கூற வேண்டுமெனவும் இதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி வெளிப்டையாகக் கூற வேண்டுமெனவும் தமிழ் தகவல் நடுவம் வேண்டுகோள் விடுக்கிறது.

இந்தத் துன்பமான வேளையில் திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்களுக்கும் வழிபாட்டுத்தலத்தில் காயமடைந்த ஏனையோருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமிழ் தகவல் நடுவம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைவார்களென நம்பிக்கை கொண்டுள்ளது.

தமிழ் தகவல் நடுவம்
பத்திரிகை வெளியீடு
04-01-2006

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Pin It