சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி, தமிழகத்தில் எப்படியாவது காலுன்ற எவன் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கும் பிஜேபிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. அதுவும் தற்போது ஆதரவு எஸ்சி பட்டியலில் இருக்கும் பள்ளர் சாதித் தலைவரான கிருஷ்ணசாமியிடமிருந்தே கிடைத்திருப்பது பிரியாணித் திருடர்களை கிளுகிளுப்படையச் செய்திருக்கின்றது. கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது அவரிடம் இருந்து ஐந்து பொன்னாரும், பத்து இல.கணேசனும், இருபது எச்.ராஜாவும் எட்டிப் பார்த்ததை யாரும் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. வரும் காலங்களில் பிஜேபி தனது மேடைகளில் கிருஷ்ணசாமியை ஒரு பிரச்சார பீரங்கியாக பயன்படுத்திக் கொள்ளலாம், அந்தளவிற்கு மனிதர் சித்தாந்த ரீதியாக முழு காவியஸ்த்தனாக மாறி இருக்கின்றார்.

dr krishnasamyஅந்தப் பேட்டியிலே பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். அதிலே முக்கியமானவை, "திராவிட இயக்கங்கள் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. ஹிந்தியை திராவிட இயக்கங்கள் எதிர்க்கக் கூடாது, அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்யும் காலித்தனங்களுக்கும் பிஜேபிக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது" . மேலும் "தேவேந்திர குல வேளாளர்களுக்கு தலித் இட ஒதுக்கீடு வேண்டாம், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை, கொடுப்பதாய் இருந்தால் தனியாக தலித் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை எடுத்துவிட்டு பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வைத்தோ, இல்லை தனியாகவோ கொடுங்கள்" என்றும் கோரிக்கை வைத்தார். இதே கருத்தை தமிழ் இந்து நாளிதழின் பேட்டியிலும் (03/05/2017) முன்வைத்திருக்கின்றார். கிருஷ்ணசாமி அவர்கள் நிறமாறிவிட்டார் என்பதையே அவரது கருத்துக்கள் காட்டுகின்றது.

கிருஷ்ணசாமி அவர்கள் தலித்துக்கள் பட்டியலில் இருந்து பள்ளர் சமூகத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. நிச்சயமாக பள்ளர் சமூகத்தை மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சமூக மக்களும் தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதுதான் எல்லா முற்போக்குவாதிகளின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தில் இருந்து விடுபடுவது என்பது மீண்டும் இந்துமதத்தில் ஒரு படி மேலே இடம் கேட்பதா? இல்லை தன்னை பஞ்சமன் என்று ஒதுக்கி வைத்த பார்ப்பன இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதா? என்பதில் தான் நம் நோக்கம் நேர்மையானதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். கிருஷ்ணசாமி முன்வைக்கும் தீர்வு என்பது இந்தப் பார்ப்பன இந்துமதத்தில் தாழ்த்தப்படவன் என்ற பட்டத்தில் இருந்து சூத்திரன் (வேசி மகன்) என்ற பட்டத்திற்கு பதவி உயர்வு கேட்பதாகும். இதை எந்த வகையிலும் ஒரு முற்போக்கான செயல்பாடாக பார்க்க முடியாது. தலித்துகள் என்ற பட்டத்தை ஒழிப்பது என்பது இந்துமதத்தை ஒழிப்பது என்பதில் தான் சாத்தியமாகும். இல்லை என்றால் குறைந்தபட்ச நிவாரணமாக தீண்டாமையைக் கடைபிடிக்காத எதாவது ஒரு மதத்திற்கு மாறிக்கொள்ளலாம். (கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் நாயகனான அம்பேத்கர் பூர்வ பெளத்தத்தைப் பரிந்துரை செய்திருக்கின்றார்).

கிருஷ்ணசாமி அவர்கள் இது போன்ற கருத்தை தனிப்பட்ட முறையில் பேசி இருந்தால் கூட சரி, மனிதர் உணர்வுப் பூர்வமாக தான் சார்ந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய இதுபோன்று பேசுகின்றார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் இந்தக் கருத்துடன் சேர்ந்து இந்தியை எதிர்க்கக் கூடாது, அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும், நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலனடைவார்கள், ஆர்.எஸ்.எஸ் சின் வன்முறைக்கும் பிஜேபிக்கும் சம்மந்தம் இல்லை என்ற தொனியில் பேசுவதை எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது உள்ளபடியே கிருஷ்ணசாமி காவிப் பேய்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார் என்பதைத்தான் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. கிருஷ்ணசாமியின் உண்மையான நோக்கம், தான் சார்ந்த பள்ளர் சாதி மக்களுக்கு நன்மை செய்வதல்ல, அவர்களைப் படுகுழியில் தள்ளுவதே ஆகும்.

தமிழகத்தில் இருக்கும் சில பள்ளர் சாதி அமைப்புகள் தங்களை தீண்டாமைக் கொடுமையில் இருந்து விடுபடவைக்க பிஜேபியால் தான் முடியும் என நினைப்பது அவர்கள் எந்த அளவிற்குப் பார்ப்பன நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. பொதுவாக அவர்களுக்கு சாதி தீண்டாமை என்பதெல்லாம் இந்து மதத்தோடு தொடர்புள்ளது, இந்து மதம் உள்ளவரை சாதிய தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விடுபடமுடியாது என்ற கண்ணோட்டம் எல்லாம் இருப்பதில்லை. ஒரு வேளை இருந்தாலும் பொறுக்கித் தின்ன துடிப்பவர்களுக்கு அது எல்லாம் ஒரு பெரிய விடயமாகத் தெரிவதில்லை. அதுதான் அவர்களை பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உடன் ஒன்றாக இணைய வைப்பது. அதற்கு முன்னோட்டமாக ஒரு ஆண்ட பரம்பரை கதையை உருவாக்க வைப்பது. கிருஷ்ணசாமி அவர்கள் பள்ளர் சாதி மக்களை ஆண்ட பரம்பரையாகக் கருதி இந்து சனாதன அமைப்பில் ஓர் உயர்ந்த இடம் கேட்பதற்கும் அர்ஜுன் சம்பத் போன்ற பார்ப்பன அடிவருடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தோர் என அழைக்குமாறு கேட்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே இந்துமதத்துக்குள் அந்த மக்களை தொடர்ந்து இருக்க வைக்கும் சதியே அல்லாமல் வேறு இல்லை.

தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தை நீக்கிவிட்டு பார்ப்பன சனாதன இந்துமதத்துக்குள் வேறு ஒரு உயர்ந்த இடம் கொடுத்து இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கத் தெரிந்த கிருஷ்ணசாமி அவர்களால் "நாங்கள் இந்துக்கள் அல்ல" என அறிவித்துவிட்டு இட ஒதுக்கீடு கொடுங்கள் எனக் கேட்கத் துணிவு இல்லாமல் போனதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தக் காரணம் அவரது கால்கள் தற்போது கமலாலயத்தின் பக்கம் போக துடித்துக் கொண்டிருப்பதுதான். கிருஷ்ணசாமி பிஜேபியிடம் விலை போனாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பிஜேபியிடம் போவதற்குக் கொள்கைசார்ந்த வேறு எந்தக் காரணங்களும் இருப்பதுபோலத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பள்ளர் சாதி அமைப்புகள் மற்றுமின்றி வேறு பல தலித் அமைப்புகளுடனும் பிஜேபி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பை சித்தாந்த ரீதியாக தெளிவாக உள்வாங்கிக்கொண்டு கட்சி நடத்தும் தலித் அமைப்புகள் அவர்களின் வலையில் விழ மறுத்து வருகின்றன. அண்ணன் திருமா அவர்கள் கூட பிஜேபிக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டோடு இருந்து வருகின்றார். தற்போது அதில் அதிகம் விழுந்துள்ளது பள்ளர் சாதி அமைப்புகள் தான்.

மதுரையில் 06/08/2015 ஆம் ஆண்டு தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை என்ற பள்ளர் சாதி அமைப்பு அமித்ஷாவை அழைத்துவந்து மாநாடு நடத்தியது நமக்குத் தெரியும். அந்த மாநாட்டில் பேசிய பள்ளர் சாதித் தலைவர்கள் ஒரே குரலாக சொன்ன விடயம் 'தாங்கள் ஆண்ட பரம்பரை. எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம், அரசின் எந்தச் சலுகையும் வேண்டாம்' என்பதுதான். அந்த அமைப்பின் தலைவர் தங்கராஜ் பேசியதை நாம் மீண்டும் ஒரு முறை பார்த்தோம் என்றால் இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

''தமிழகத்தில் ஒரு கோடி தேவேந்திரர்கள் வாழ்கிறார்கள். தேவேந்திரனை தெய்வமாக வணங்கும் எங்கள் சமூகம் பசுவை தெய்வமாக வணங்கியும், மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களாகவும், கோயில் திருப்பணிகள் செய்தும், விவசாயத்தொழில் செய்தும், நாட்டை ஆண்டும் உள்ளோம். மீனாட்சியம்மன் கோயிலை கட்டியவர்கள் நாங்கள்.

இவ்வளவு பாரம்பரியம் நிறைந்த எங்கள் சமூகத்தை 1935ல் பிரிட்டிஷ் அரசு பட்டியல் இனமென்று அறிவித்தது. எங்கள் பாரம்பரிய பெருமையை சொல்ல யாருமில்லை. எங்களை தீண்டத்தகாதவர்களாக தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும், அறிவு ஜீவிகளும் குறிப்பிட்டு வந்தார்கள். எஸ்.சி. என்றும், தலித் என்றும் இழிவுபடுத்தினார்கள். எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட இழிவை நீக்க வந்தவர் அமித்ஷா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். அவர்தான் மத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேந்திர சமுதாயம் பசுவை வணங்கக் கூடியவர்கள். மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் என்றார். அதைக் கேட்ட பின்புதான் எங்கள் சமுதாயத்தின் மதிப்பு உயர்ந்தது. அதனால்தான் எங்கள் சமூகக் காவலன் அவர் தலைமையில் நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, பாரம்பரியமிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற பிரகடனத்தை இங்கு வெளியிடுகிறோம்.”

“நம் பாரத நாட்டில் சாதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டு. அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறோம். அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்தால்தான் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்கும். எங்கோ நடக்கும் காதல் திருமணங்களை பத்திரிக்கைகள் எழுதி பெரிய பிரச்னை ஆக்குகின்றன. அதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழகத்தில் சாதிப்பிரச்னையே இல்லை. தினமும் குளிக்காதவன், மாட்டுக்கறி சாப்பிடுகிறவன், சுத்தமில்லாதவன், இவர்கள்தான் தீண்டத்தகாதவன் என்று மனு சொல்கிறார். நாங்கள் அந்த லிஸ்டில் வரமாட்டோம். எங்களை தேவேந்திர குல வேளாளரென்று அறிவிக்க மற்ற சாதியினரும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்தச் சலுகையும் வேண்டாம். எங்கள் குல தெய்வமாக தேவேந்திரனாக அமித்ஷா தெரிகிறார்" என்றார்.

குருமூர்த்தி பேசும்போது, ''நானே தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். தங்கராஜிடம் பேசியபின்புதான் அவர்கள் சாதிப் பெருமைகள் தெரிந்தது. இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தார்கள். புதிய சிந்தனைகளை வளர்த்தார்கள். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்கப் பார்த்தார்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதியையும் தன்னை உயர்ந்த சாதியாக நினைக்க ஆரம்பித்தால் நாட்டில் சாதிச் சண்டையே வராது. நான் கூட போன பிறவியில் தேவேந்திரனாக பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

அமித்ஷா பேசும்போது, ''உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் ஒரு மாணவன் சமர்ப்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும்போது, எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாமென்று கூறும் ஒரு சமுதாயத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற வைப்பேன்'' என்றார்.

மேலும், ''எங்களுக்கு அரசாங்கம் எந்த சலுகைகளையும் அளிக்க வேண்டாம். இட ஒதுக்கீடு வேண்டாம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. பெருமை மிகுந்த சாதியை சேர்ந்தவர்கள். அதனால், எங்களை பட்டியல் சாதியில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணையில் அறிவிக்க வேண்டும்" என்ற பிரகடனத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் கையெழுத்திட்டனர். ( நன்றி விகடன்)

இதை விட இவர்கள் பார்ப்பன அடிவருடிகள் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது அது தான் சார்ந்த பள்ளர் சமூக மக்களை பார்ப்பன கும்பலிடம் அடமானம் வைப்பதுதான். பார்ப்பனப் பொறுக்கி எச்சிகலை ராஜாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும், இல.கணேசனும், கொலைகாரன் அமித்ஷாவும் இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தில் இருந்து மீட்டெடுக்கும் அத்தாரட்டியாக , தேவதூதுவன்களாகத் தெரிகின்றார்கள் என்றால், பெரியார் பிறந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ். காலிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்க விலை போன தலித் விரோதிகள் என்றுதான் நாம் சொல்லமுடியும். பள்ளர் சமூக மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் தன்னுடைய சாதியத் தீண்டாமையில் இருந்து நிரந்தரமாக வெளிவர வேண்டும், அதற்கான முன்முயற்சிகளை அந்த அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். அவர்கள் முன் இரண்டு தீர்வுதான் உள்ளது ஒன்று தங்களை மதமற்றவர்கள் என்று அறிவித்துக்கொண்டு இட ஒதுக்கீட்டை தக்க வைத்துக்கொள்வது. இல்லை என்றால் தீண்டாமையைக் கடைபிடிக்காத ஒரு மதத்தைத் தழுவுவது. அப்படி இல்லாமல் இது போன்று ஆர்.எஸ்.எஸ் காலிகளின் தயவில் தங்களை தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள நினைப்பது தன்மானமற்ற, சுயமரியாதை உணர்வு இல்லாத கேடுகெட்ட அடிமை சிந்தனையாகும்.

- செ.கார்கி

Pin It