மார்ச் - 8 உலக பெண்கள் நாள்

மனித இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்கள் மிகப்பெரும் பான்மையும் ஆண்களால் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. மிச்சப்பட்டு நிற்கின்ற மிகச்சில பக்கங்களில் வாழ்கின்ற பெண்களும்கூட ஏதோ ஒரு புள்ளியில் ஆணாதிக்கத்தின் மிச்ச சொச்சங்களைச் சந்தித்தே, தன் இருப்பை உறுதிசெய்து கொண்டிருக்கின்றனர். காரணம் முடிவெடுக்கின்ற, தீர்மானிக்கின்ற இடத்தில் ஆண்கள்தான் இருந்து கொண்டிருக்கின்றனர்.

சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம், மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான். நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் சமமாக நடத்தப்படாத நாடு முன்னேறாது.

‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இந்த அறிவியல் உலகத்தில் பெண்கள் நுழையாத துறைகளே இல்லையே ! விண்வெளியில் கூடப் பறக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமலா இதையயல்லாம் செய்ய முடிகிறது அவர்களால். இன்னும் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் பற்றிப்பேசுவது தேவையற்றது’ - இப்படிப் பலர் பேசுகிறார்கள். சிறு விழுக்காட்டினரின் வளர்ச்சியைக் காட்டி, ஒட்டுமொத்தப் பெண்கள் சமூகமும் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இதன் மூலம் பெண்களின் உணர்வுகள் வடிந்து, இவர்கள் காட்டும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள வலியுறுத்துகின்றனர் என்றே சொல்லவேண்டும்.

ஆணாதிக்கச் சட்டத்தில் அறிவியலுக்கு இடமில்லை, ஆதிக்கத்திற்கும், அடிமைத் தனத்திற்கும் தான் இடமிருக்கிறது என்பதை 18/20.02.2012 ஆகிய இரண்டு நாள்களில் நாளேடுகளில் வெளி வந்த கீழ்க்கண்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

செய்தி 1: ஆடி மாதத்தில் கருத்தரித்ததற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.
செய்தி 2: தன்னுடைய அனுமதி இன்றித் தன் மனைவி கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டதால், ஆத்திரமடைந்த கணவன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி.

இந்த அறிவியல் உலகத்தில் பெண்ணடிமை ஏது என்பவர்கள், முதல் செய்திக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறார்கள்? ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் சிசுவுக்கு ஆகாது என்பதால் அந்தக் காலத்தில் ஆடியில் கருத்தரிக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இன்று கருத்தரிக்காமல் இருப்பதற்குக் கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன. அப்படியே கருத்தரித்தாலும் வெயிலை விரட்டக்கூடிய மின்விசிறி இல்லாத வீடே இல்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்தப் பெண் கருத்தரித்ததில் அவள் கணவனுக்குப் பங்கில்லையா? திருமணம் என்னும் வியாபாரத்தில் ஆணும் பெண்ணும் பங்குதாரர்கள் என்பார் தந்தைபெரியார். அந்த வியாபாரத்தில் ஏற்படும் இலாபம், நட்டம் இரண்டிற்கும் இருவரும்தானே பொறுப்பாளிகள். ஆனால் இங்கே பெண் மட்டும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.

எப்போதும் ஆண்களின் குற்றங்களுக்கும், தவறுகளுக்கும், பெண்கள் தார்மீகப் பொறுப்பேற் கின்ற வகையில்தான் குடும்ப அமைப்புகள் இருந்து வருகின்றன. குடிகாரக் கணவனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். சூதாடியைச் சகித்துக்கொள்ள வேண்டும். வீட்டுப்பேச்சு வெளியில் போகாமல் குடும்பம் நடத்துவதுதான் நல்ல மனைவிக்கு இலக்கணம். இலக்கணம் கொஞ்சம் மாறினாலும், அவள் குடும்பப் பெண் என்னும் தகுதியை இழந்தவளாகி விடுவாள். அதிலும் இந்த ‘குடும்பப் பெண்’ என்கிற பதம் இருக்கிறதே, இது பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்புப்பட்டம் போன்றது. ஓர் ஆணைப் பார்த்து யாரும், ‘அட குடும்ப ஆண் போலத் தெரிகிறாரே’ என்று சொல்வதில்லை.

இரண்டாவது செய்திக்கு வருவோம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல, முடிவெடுக்கின்ற அதிகாரம், தீர்மானிக்கின்ற உரிமை ஆணிடம்தான் இருக்க வேண்டும் என்கின்ற ஆணாதிக்க சமூகத்தின் விதியை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. பெண்ணுக்கு முடிவெடுக்கின்ற உரிமை இல்லை என்பதே குடும்ப நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மை.

women_370பெண்களின் முன்னேற்றத்திற்குக் குழந்தைப்பேறு தடையாக இருக்கிறது என்றார் பெரியார். காரணம் குழந்தை வளர்ப்பு முழுக்க முழுக்கப் பெண்களின் கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. மனைவியைக் கருத்தரிக்க வைப்பது மட்டுமே ஆண் என்று சொல்லிக் கொள்கின்ற கணவனின் வேலையாக இருக்கிறது. கருவைச் சுமப்பது, பேறுகால வேதனையைத் தாங்குவது, இரவு பகல் கண் விழித்துக் குழந்தையை வளர்ப்பது என அத்தனை சுமைகளையும் தாங்குவதற்குப் பெண் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறாள்.

எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், குழந்தை வேண்டுமா வேண்டாமா என்பதைப் பெண் தீர்மானிக்க முடியாது. மனைவியின் உடல் மீது கணவனுக்குத்தான் சகல அதிகாரங்களும் இருக்கின்றன. தன் உடல் நலத்தை முன்னிட்டு கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ளக்கூட கணவனின் அனுமதி இன்னும் இங்கே தேவைப்படுகிறது. இந்தக் கணினி உலகத்தில் இன்னும் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று பேச்சுக்கள் பொருளற்றவை எனச்சொல்லும் அறிவாளிக் கூட்டங்கள் இரண்டாவது செய்திக்குத் தரும் பதில் என்ன?

எதன் தொடக்கமும் ஆண் என்ற கணவனிடமிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது விதியாக்கப்பட்டு, அதைப் பெண் என்ற மனைவியையும் ஏற்கச் செய்திருக்கிறது ஏற்றத் தாழ்வுள்ள இந்தச் சமூகம். எங்கும் எதிலும் மனைவியின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. ஆணாதிக்கம் என்பது பொதுப்புத்தியில் ஆழப்புதைந்து கிடக்கும் கேவலமான எண்ணம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பக்திமான்கள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்த எண்ணம் பதிந்துகிடக்கிறது.

பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் போராடிய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நம்மைநாம் தன் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது. உண்மை கசந்தாலும், வேதனையோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மேடைகளில் பேசுகின்ற பெண் உரிமை, வீட்டில் மறுக்கப்படுகின்ற நிலையைப் பார்க்க முடிகிறது. நான் அனுமதிக்கும் எல்லை வரைதான் உனக்கான சுதந்திரம் செல்லுபடியாகும் என்ற ஆணாதிக்கம் முற்போக்காளர்களாகவும், பெரியாரியல்வாதிகளாகவும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களிடமும் கூடத் தவிர்க்க முடியாத ஒன்றாகப் படிந்து கிடக்கிறது.

ஆடி மாதத்தில் கருத்தரித்த மனைவியைக் கொன்றவனும், தன்னைக் கேட்காமல் மனைவி கருத்தடை சாதனம் பொருத்திக்கொண்டதால் தீக்குளிக்க முயன்றவனும், தங்கள் செயல் பெண்ணுரமைக்கு எதிரானது, ஆணாதிக்கப்போக்கு என்பதை கோட்பாட்டு ரீதியாக அறிந்திருக்க நியாயமில்லை. அப்படியானால் அனிச்சை செயல்போல இப்படி நடந்துகொள்வதற்கு அவர் களைத் தூண்டியது எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

பெண்ணானவள் ஆணுக்குக் கீழானவள், சொந்தக் கருத்துகளோ, விருப்புகளோ வைத்திருக்கக் கூடாதவள் என்று காலங்காலமாக இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்த கற்பிதங்களின் தன்னிச்சையான விளைச்சல்கள் இவர்கள். புரையோடிப்போன ஆதிக்கச் சமூகத்தில், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் அடிமைத்தனத்தை உணர முன்வராததும், அதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் வாழ்க்கைமுறை என்று கருதிக்கொண்டிருப்பதுமான நிலையே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

“பெண்கள் சுதந்திரத்திற்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாகவேண்டும். நான் அடிமையாய்த்தான் இருப்பேன்; நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக்கூடாது என்பதில் அர்த்தமே இல்லை” என்று அய்யா பெரியார் சொன்னதைப்போல, தங்கள் எண்ணங்களில் தெளிவு பெறப் பெண்கள் முயலவேண்டும். பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களிலிருந்து ஆண்கள் விடுதலைபெற வேண்டும். சக மனு´யான பெண்ணை அவமானப்படுத்துவதோடு, தாங்களும் கேவலப்பட்டு நிற்கின்ற நிலையைத் தவிர்க்க வேண்டும். இதைத்தான் பெரியார் இப்படிச் சொன்னார்: பெண் தன்னைக் காத்துக்கொள்ளும் தகுதி பெற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. அது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

நூற்றாண்டைக் கடந்து எழுச்சியூட்டிக் கொண்டிருக்கும் மகளிர் நாள் நிகழ்வுகள் அரங்குகளுக்குள்ளேயே முடிந்து போய்விடாமல், மக்களைத் தேடி, குறிப்பாகக் கிராமங்களைத் தேடிச் செல்ல வேண்டும். பெண்ணியவாதிகளும், சமூக விழிப்புணர்வு இயக்கங்களும் தங்கள் செயல்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தினால் ஒழிய, இன்றைய நிலை மாறாது.

Pin It