கற்கால மனிதன் தன்னுடைய உணவுத் தேவைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் காட்டு மிருகங்களைத் தன்னுடைய உடல் வலிமையின் மூலம் வேட்டையாடினான். தன்னைவிட உடல் வலிமை அதிகம் கொண்ட மிருகங்களையும், குறைவாகக் கொண்ட மிருகங்களையும் வேட்டையாடினான். தன்னுடைய உறவுகளையும், உடைமைகளையும் பாதுகாக்க சக மனிதர்கள் மீது தன் வீரத்தைக் காட்டி பாதுகாத்தான். பிறகு தன்னுடைய வாழ்வியல் சூழல்கள்-எல்லைகளை விரிவாக்கம் செய்ய தன் வீரத்தின் மூலம் முயற்சி செய்து வெற்றியும் கண்டான்.

Muthuramalingam stillமனிதன் தோன்றியதிலிருந்து தற்போதுவரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து முன்னேறிவந்த பொழுதும், சக மனிதன் மீது நடத்தப்படும் உடல்ரீதியான வன்முறையே வீரம் என்கிறான். திரைப்படங்களும் அதையே முன்மொழிந்து காலங்காலமாக சிறப்பாக செய்தும் வருகின்றன. படத்தின் நாயகன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அடித்துத் துவைத்து தன்னுடைய வீரத்தை பறைசாற்றுவார். இதைப்பார்க்கும் ரசிகர் கூட்டம் என்பது தன்னைச் சுற்றி வசிக்கும் மற்றவர்களின் மீது எப்பொழுது வேண்டுமானலும் வன்முறை என்ற வீரத்தைக் காட்டத் துடிக்கும். குறிப்பாக மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... நிச்சயம் அது வீரம் (வன்முறை) சார்ந்த படமாகவே இருக்கும். அதில் அரிவாள், இரத்தம், பழிவாங்குதல், பெரிய மீசை என்பது குறிப்பிட்ட சமூகத்திற்குரிய பெருமைப்படக் கூடிய விசயமாகவும், மற்ற சமூகத்தினர் அவர்களைப் பார்த்து அஞ்ச வேண்டும் என்பது போலவும் காட்சிகள் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் எப்படிப்பட்டவனாகிலும் அவன் மதித்து நடத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எல்லா மனிதனுக்கும் தனித்துவம் உண்டு. அதை எவரும் களங்கப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வோர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவர். ஆனால் இது போன்ற வீரம் என்ற பெயரில் வன்முறையைத் தூக்கி நிறுத்தும் படங்களால் மனித உரிமை என்பது ஏதோ வேற்றுக்கிரகவாசிகளுக்கானது என்பது போல் இருகின்றது.

ஆதிக்கச் சாதிகளின் தலைமையின் கீழ் அனைவரும் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடனே பல படங்கள் வந்துள்ளன. ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஒரு ஊருக்கோ அல்லது 18 பட்டிக்கோ அனைத்து சாதியினருக்குமான தலைவராக இருக்கும். தலைவர் சொல்படித்தான் அனைவரும் நடக்கவேண்டும். நல்லது கெட்டது அனைத்தும் அவரது ஆலோசனையின்படிதான் நடக்கவேண்டும். இருவருக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவர் சொல்வதுதான் நியாயமான இறுதியான தீர்ப்பு. அதைத்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு அங்கு வேலையே இல்லை. பெரும்பாலும் தீர்ப்பு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக இருக்கும். ஒரு மனிதனை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் அதைத்தான் நாட்டாமைகள் வழங்குவார்கள். தங்களின் ஆதிக்க சாதி மனோபாவத்தாலும், தங்களிடம் உள்ள வன்முறையாலும் அதை நிறைவேற்றுவர், சட்டத்தைப் பற்றிய எந்த ஒரு கவலையும் பயமும் இல்லாமல். இவ்வாறான சமூக ஒதுக்கல்கலைத் தாங்கிவரும் படங்கள் வெகுஜன ஊடகத்தின் மூலம் இச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன. இவையெல்லாம் நடந்த காலகட்டம் எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும். திரைப்படத்துறை என்பது எவ்வளவோ நவீன மாற்றங்களை கண்டிருந்தாலும் இதில் “சாதியத்தை மறுகட்டமைப்பு செய்யும்” பழமைவாதம் மட்டும் இன்றும் மாற மறுக்கிறது. இத் திரைப்படங்களின் இயக்குநர்கள் குறிப்பிட்ட சாதியின் பிம்பத்தை எவ்வாறு மற்றவர்களின் மனதில் கட்டமைக்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டே செய்கின்றனர்.

இன்னும் சில படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை எந்தச் சூழ்நிலையிலும் வன்முறையை கையிலெடுப்பவர்களாக காட்டுவதன் மூலம் மற்ற சமூகத்தினர் அவர்களைப் பார்த்துப் பயம்கொள்ள வேண்டுமென்றும் அவர்களிடம் எவ்வகையிலும் மோதவேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாது என்ற நோக்கிலேயே உளவியல் ரீதியாக கட்டமைக்கப்படுகின்றன. வீரம் (வன்முறை) என்பது அவர்கள் சாதிக்கே உரிய சொத்தாகவும், அவர்களை எதிர்ப்பவர்களைக் கொலை செய்யக்கூட தயங்காதவர்களாகவும், கொலைகள் செய்து சிறை செல்வது (சட்டத்தை மதிக்காமல்) அவர்கள் சமூகத்திற்கே உரிய பெருமைப்படத்தக்க செயலாகவும், அவர்கள் சமூகத்திற்கென்றே தனித் திமிர் இருப்பதாகவும், கட்டப் பஞ்சாயத்து செய்வது அவர்களின் குலத்தொழிலாகவும் காட்டப்படுகின்றன.

இதுபோன்ற சமூகத்தைப் பிளவுபடுத்தும் சாதிய வன்முறைத் திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகத்து இளைஞர்களை அதே போன்ற வன்முறையில் இறங்கச் செய்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் பொழுது குறிப்பிட்ட சமூகத்து இளைஞர்களை அதை நோக்கி நகர்த்தாமல் வன்முறையை மற்ற சமூகத்தின் மீது காட்டும்படி தூண்டும் விதமாக வீரம் (வன்முறை எண்ணம்) இருக்கவேண்டும் என்பதுபோல் மாற்றிவிடுகின்றன. இதை அவர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதே வன்முறையை செயல்படுத்தத் துவங்குகின்றனர். தங்கள் வீட்டு விழாக்களிலும் ஊர்த் திருவிழா போன்ற பொது விழாக்களிலும் சாதிப்படங்களில் வரும் வன்முறை வசனங்களை பிளக்ஸ் போர்டுகளில் வைத்து மற்ற சாதிகளுக்கு தாங்கள் வீரமானவர்கள் (வன்முறையாளர்கள்) என்று காட்டுகின்றனர்.

இவ்வாறான வன்முறையில் மேலோங்கிய சாதியப் படங்கள் சமுதாயத்தில் சாதிரீதியான பிளவுகளையே ஏற்படுத்துகின்றன. மற்ற அனைத்து ஊடகங்களையும் விட சினிமா மக்களை சுலபமாக சென்றடைகின்றன. மேலும் மக்கள் மனதில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியின் வாழ்வியலை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் படம் எடுப்பது தவறல்ல. ஆனால் அவர்களை வன்முறையாளர்களாகவும், மற்ற சமூகத்தினருக்கு மேலானவர்களாகவும், மற்றவர்களை தங்களது வீரத்தின் (வன்முறையின்) மூலம் அடக்கி ஆள்பவர்களாகவும் சித்தரிப்பது ஒரு கட்டத்தில் அவர்களை பொதுச் சமூகம் புறந்தள்ளக்கூடிய சூழ்நிலைக்கே வழிகோலும்.

சினிமா என்பது சமூக எதார்த்தத்தை அதற்கே உரிய அழகியலோடும் பொழுதுபோக்கு உணர்வுடனும் சொல்லுகின்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஊடகம். அதில் மிகையான, காலத்திற்கு ஒவ்வாத விசயங்களை மிகையாகச் சொல்லி சாதிய வன்முறையைத் தூண்டுவது நமது சமூக அமைதிக்கு ஏற்றதல்ல.

- சி.வெங்கடேஸ்வரன், சமூகப்பணி ஆய்வாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி

Pin It