கர்நாடக ஓகேனகல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய “விழாவில்” (இதனை ரஜினி ஒரு இனிமையான ஒன்றுகூடல் என்றார் என்பது வேறு) ரஜினி மற்றும் சத்தியராஜ் பேசி சர்ச்சையாக்கப்பட்டது. அப்புறம் ரஜினி தசாவாதாரம் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சிலர் சர்ச்சையாக்கியினர். காரணம் கருத்து கந்தசாமிகள் ஆளும் இவ்வுலகில் தனக்கு மலச்சிக்கல் என்றால்கூட அதை ஒரு பிரபலம் எதாவது கருத்து சொல்லி அங்கீகரிக்க வேண்டும் என்கிற க.க.க.க.க. (கருத்தை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் கருத்து கந்தசாமிகள்) உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் பிரபலங்களை முன்வைத்து தங்களது வியபார உலகை கடைவிரிக்கின்றன ஊடகங்கள். அதிலும் தமிழ் ஊடகங்கள் சொல்ல வேண்டியதில்லை.

அவை பிரபலங்களிடம் கொண்டிருக்கும் உறவு என்பது சம்பந்திகள் போல கொடுக்கல்-வாங்கல் உறவுதான். ஒரு கட்டத்தில் தனக்கான சரக்காக ஒரு சாதரணரை பிரபலமாக்குவது. அப்புறம் அவர் பிரபலமானவுடன் அந்த சரக்கை வைத்து தன்னை பிரபபலமாக்கிக் கொள்வது. இது ஒருஅலகிலா விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த ஆட்டத்தின் உச்சகட்டமாக உள்ளது தமிழ்த்திரையுலகு. தமிழ் ஊடகங்கள் திரைப்படம் இன்றி வாழமுடியாத நிலையை எய்தியுள்ளன என்றால் அது மிகையாகாது. ஒருகாலத்தில் திரைப்படங்கள் ஊடகங்களை நம்பி இருந்தது. இன்று திரைப்படமே ஒரு ஊடகமாக மாறி உள்ளது. நேரடியாகவே அவை விளம்பர பலகைகள் மற்றும் பயன்படுத்தம் பிராண்டுகள் நேரடியாகக் காட்டி விளம்பரங்கள் செய்வதாக மாறியுள்ளன.

கலை, அழகியல் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வலுவான ஊடகம் திரைப்படம். ஒரு தத்துவமாகவும், குறிகளின் கூட்டியக்கமாகவும் உள்ளது திரைப்படம். இந்த வலுவுள்ள ஊடகத்தில் நடித்து, பத்திரிக்கை மற்றும் அரசியல் சக்திகளால் கட்டமைக்கப்பட்ட மிகை-பிம்பமே ரஜினி என்கிற பிம்பம். மிகை-பிம்ப வாழ்க்கை என்பது தமிழனின் தனிச்சொத்து என்பது சொல்லாமலே விளங்கும். புதுமைப்பித்தன் கூறியதுபோல உலகில் குரங்குதான் முதலில் பிறந்தது என்றால் அதிலும் “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குரங்கு தமிழ்க் குரங்கே“ என்பது நமது அலாதியான ஒரு வரலாற்றுப் பெருமிதம். இத்தனை பெருமிதம் உள்ள தமிழர்கள் எப்பொழுதும் ராஜராஜ சோழன் துவங்கி ரஜினிவரை ஒரு மிகை பிம்பத்துடன் தங்களை அடையாளம் கண்டு வாழ்தல் என்பது ஒரு சாதரண வாழக்கை நிலையாகிவிட்டது.

தமிழர்கள் ஒரு பிளவுண்ட மனநிலையை சாதரணமாகக் கொண்டவர்கள் என்பதற்கு உதாரணம், தேசிய இனப்பிரச்சனை எனப்படும் "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு" என்று திரையில் ஆடிப்பாடி வளர்க்கப்பட்ட இனப்பிரச்சனை இந்தியாவிலேயே முதலில் முகிழ்த்தது தமிழகத்தில்தான், தமிழ் அல்லாத பிரபலங்கள் எம்ஜியார் துவங்கி ரஜினி, விஜயகாந்த் வரை அரசியல் ஆதிக்கம் செய்யும் நிலை உள்ளது. நமது பிரச்சனை தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்கிற இனவாதப் பிரச்சனை அல்ல. யாரையாவது யாராவது ஆண்டுவிட்டுப் போகட்டும், ஆனால் அதற்காக செய்யப்படும் ஏமாற்று வேலைகள், முட்டாள்தனங்களுக்கு பட்டம் கட்டி மகிழ்வது, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் ஊடகப் புரளிகள்தான் இங்கு நாம் பேசுவது. தமிழகமே மின்தடையில் (பவர்கட்டில்) உள்ளபோது ரஜினி வீட்டில் மட்டும் மின்தடை என கட்டம்கட்டி செய்திபோடும் அளவிற்கு இந்த ஊடக வியாதி பரவியிருப்பது முக்கியமான புள்ளியாகும்.

சமீபத்தில் தசாவாதாரம் படத்தின் ஒலித்தகடு வெளியீட்டு விழா அதற்கு ஜாக்கிசான் வருகை தமிழக முதல்வர் வருகை இப்படியாக ஒரு விளம்பர வியபார விழா ஒன்று நடத்தப்பட்டது. பல கோடிகள் புரளும் ஒரு வியாபாரம், என்ன செய்வது சந்தைப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. அச்சந்தைப்படுத்தலின் ஒரு விளைவே ஊடகக் கும்மிகள். ஒரு வருடமாக ரஜினியின் சிவாஜி குறித்து கும்மியடித்து முடிந்து அடுத்த சுற்றாக தசாவாதாரம் துவங்கி உள்ளது. வெகுசனப் பண்பாடு என்பது குறித்து பழைய வகைப்பட்ட பிரிவினைகளான உயர் மற்றும் தாழ் பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் ஒன்றிற்குள் ஒன்று மயங்கி குழம்பி இன்றைய உலகம் ஒருவகை மீ-யதார்த்தக் கூறுகளைக் கொண்ட உலகமாக மாறிவிட்டது.

வாழ்க்கை குறிப்பாக நகர வாழ்க்கை என்பது அதன் யதார்த்த தளத்திலிருந்து நகர்த்தப்பட்டு சினிமா காட்டும் மீ-யதார்த்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் காதிலியை சந்திக்கும்போது ஒரு திரைப்படக் காதலன் காதலியை சந்திப்பதைப் போலத்தான் சந்திக்கிறீர்கள். இன்னும் நுட்பமாக உங்கள் பாலியல் கிளர்ச்சி என்பதில் இன்று திரைப்பட மிகைபிம்பக் கூறுகள் இல்லாமல் சாத்தியமில்லை. நீங்கள் ஒரு மாற்றுப் பால்-உடலை திரைப்படம் ஒழங்கமைத்து காட்டும் காம-வேட்கையுடன் அது காட்டும் முறையில்தான் புணர்கிறீர்கள் என்பது மிகையான கூற்றாகாது. உடல் என்பதில் தசைகளின் இடத்தை மின்னணு செல்லூலாய்ட் சில்லுகள் கைப்பற்றிவிட்டன. இனி புணர்ச்சி என்பது உடலை புணர்வதல்ல, உடலாக உருவகிக்கப்பட்ட மின்திரை பிம்பத்தைதான் என்பதும் ஒரு மிகைக்கூற்று அல்ல.

மத்தியகால ஐரோப்பாவில் மதங்கள் மற்றும் மறுமலர்ச்சிக்கால அற-ஒழுக்கங்கள் ஒழங்கமைக்கப்பட்ட புனிதப் பாலியலை முன்வைத்தபோதுதான் பிரஞ்சில் உள்ள ஒரு அரசக் குடும்பத்தைச் செர்ந்த கனவானான “மக்கி தி சாத்” தனது எதிர்ப்பாக ஒரு உடல்ரீதியான மிகைப் பாலியல் கலகத்தை நிகழ்த்தினான். தனது நூலுக்கு “படுக்கைஅறையில் தத்துவம்” என்று பெயரிட்டு பாலியலின் அதீதத்தின் மூலம் உடலினை மத இறுக்கத்திலிருந்து விடுவிக்க முயன்றான். பாலியல் குற்றம் காரணமாக தனது 32 ஆண்டுகால வாழ்வை சிறையிலும் மனநோய் விடுதியிலும் கழித்தவன்.

உடலை வலித்தலின் மூலம் உணரவேண்டிய நிலைக்கு மனித தன்னிலை தள்ளப்பட்டுவிட்ட ஒரு துயரமே அவனது எழுத்துக்கள். பாலியல் என்பது உடல் உணரும் ஒரு மகிழ்வானுபவம் என்பதை சொல்ல அதீத பாலியலை முன்வைத்து அவன் தேடிய உடலே அவனது எழுத்துக்கள். ஆக, அன்றைய மதம் மற்றும் அற-ஒழுக்கங்களுடன் சேர்ந்து இன்று திரைப்படமும் உடல்களை மின்பிம்பங்களாக மாற்றிக் கொண்டுள்ளது என்பதையே சாத்தின் தீவர எழுத்தியக்கம் நமக்குச் சொல்லிச் செல்கிறது.

பாலியல் மட்டுமின்றி, குடும்ப உறவுகள் குறித்த தமிழ்த்திரைக் கட்டமைவுகள் பற்றி சொல்லவே வேண்டாம். ஒருபடத்தில் நடிகர் மணிவண்ணன் கூறுவார். ஒரு வெள்ளையின மாது பெண் தெய்வமான சாமியின் கழுத்தில் உள்ள தாலியைப் பற்றிக் கேட்பாள் "வாட் இஸ் திஸ்?" என்று. அதற்கு மணிவண்ணன ஒரு அருமையான பதிலைச் சொல்வார். 'தி இஸ் த சென்டர் தீம் பார் டமில் பிலிம்" என்று. தாலி இல்லாவிட்டால் பல தமிழ் படங்கள் வர வாய்ப்பே இருந்திருக்காது. தாலி இல்லாவிட்டால் தமிழ்பட திரைக்கதையாசிரியர்கள் பாடு படு திண்டாட்டம்தான்.

ஆக, "சங்ககாலத்தில் மீன்கள்" என்பது போல் "தமிழ் திரைப்படத்தில் தாலி" என்று ஒரு முனைவர் பட்ட ஆய்வே செய்யலாம். இது ஒருபுறமிருக்க குடும்ப உறவுகள் என்னவாகியது என்று பாருங்கள். நீங்கள் உங்கள் யதார்த்த அண்ணனிடம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் பேசும்போது, உண்மையில் நீங்கள் பேசுவது திரைப்பட உருவாக்கியுள்ள லட்சிய அண்ணனிடம்தான். நீங்கள் விரும்பும் அம்மா அல்லது நீங்கள் பாசம் செலுத்துவதாக எண்ணும் அம்மா திரைப்பட அம்மாதான். உங்கள் அம்மாவிற்கும் நீங்கள் ஒரு திரைப்பட மகன்தான்.

“திரைத்தனம்” என்கிற ஒன்று மெல்ல உருவாகி வாழ்வின் படலமாக அனைத்து தளத்திலும் விரவி நீக்கமற நிறைந்துவிட்டது. இப்படி அப்பா, அம்மா, தங்கை. மனைவி என குடும்ப உறவுகளை மீள் உருவாக்கம் செய்து எப்படி பழகுவது? எப்படி அனுகுவது? என்பதெல்லாம் ‘சினிமாத்தனமாக’ மாறிவிட்டது என்பதைவிட சினிமாவைத்தான் இனி 'வாழ்க்கைத்தனமாக' இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்றைய இயலுலகு என்பது தமிழ் புனைகதைகளில் உருவாகி அதற்குள் குடியேறும் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியமே எஞ்சியுள்ளது. கலைதான் விடுதலைக்கான வழிபோலும்.

இப்படியாக திரைப்படம் கட்டமைத்த திரைத்தனத்தின் ஒரு நேரடி விளைவாக உள்ளதே ரஜினி என்கிற பிம்பம். ரஜினி தனது மனித ஆளுமையிலிருந்து ஒரு இயக்கமுள்ள (சரியாகத்தான் ரோபோ என்று அவரை வைத்து படம் எடுக்கிறார்கள்.) காட்சிப் பொருள். ஊடகங்கள் அரசியல் சுயநலமிகள் மற்றும் ரசிகர் என்கிற பிழைப்புவாதக் கும்பல் சேர்ந்து அவரை காட்சிப்படுத்தி தங்கள் தீனியை தின்று தீர்க்கின்றன. ஒருவகையில் ரஜினியின் நிலை வருந்ததக்கதுதான். அவர் தனது ஒப்பனை கலைத்து மனிதனாக மாற யாரும் விடப்போவதில்லை. அவரும் ஆளும் கனவிலிருந்து விடுபடப்போவதில்லை. “வெற்றிப் பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி” இல்லை என்று கண்ணதாசன் மனம் நொந்து பாடியது சரிதான் போலும்.

சார்லி சாப்ளின் தனது "சர்க்கஸ்" என்கிற படத்தில் இந்த முரணை நுட்பமாக வெளிப்படுத்துவார். அதாவது இயல்பாக இருத்தலே கோமாளித்தனமாக மாறிவிட்டதால் கோமாளியாக இருப்பதே இயல்பானதாக மாறிவிட்ட ஒரு வாழ்க்கை அது. இதைதான் கமல் தனது அபூர்வ சகோதரர்கள் படத்தில் காட்டியிருப்பார். அப்பு கோமாளியாக நடித்து யதார்த்த வாழ்வில் அவரது காதலியே அவரை கோமாளியாக எண்ணி விடுவாள். கோமாளிக்குள் இருப்பது ஒரு உடலும் சதையும் உள்ள மளிதன் அல்ல. அவனது ஒப்பனைதான் உடல், அவனது வாழ்க்கை, அர்த்தம் எல்லாம். தனக்கும், தனது வாழ்விற்கும் ஒரு அர்த்தம்தர பழிவாங்கும் தொடர் நிகழ்வில் ஈடுபட்டு தனது கோமாளித்தனத்தை பதலீடு செய்வான் குள்ளன் அப்பு. ரஜினியின் அரசியல் பிரவேசம் துவங்கி ஆன்மீகம் வரை இந்தவகை பதிலீடு முயற்சியே.

நடிகர் நாசரின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த ஞான. ராஜசேகரனின் “முகம்” இந்த ஒப்பனை அடிப்படையிலான ஒரு “நடிக-வாழ்வின்” அபத்தத்தை சொல்லும் படம். அதில் ஒரு நாடக நடிகனான நாசர் அகோரமான முகத்தைக் கொண்டிருப்பார். ஒருமுறை விபத்தாக ஒரு அழகான முகமூடி அவரது முகத்தில் ஒட்டி பிய்க்க இயலாமல் இறுகிவிடும். அந்த முகமூடி முகத்துடன் தமிழ் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார். அவரது முகத்தில் மையல் கொண்ட தமிழ்ப் பெண்கள் கூட்டம் அலையும். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவியான ரோஜா நாசர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து அவரை திருமணம் செய்வார்.

ஒருநாள் அவரது முகமூடி கழன்றுவிடும். ஆனால் அவரது உண்மையான முகத்தை யாரும் ஏற்காமல் நீ அந்த நடிகன் இல்லை என்று வீட்டைவிட்டு துரத்தி விடுவார்கள். மீண்டும் தேடி அந்த முகமூடியை ஒட்டிக்கொண்ட பின் அவரை ஏற்றுக் கொண்டாடும் சற்றுமுன் அடித்து துரத்திய அந்த மக்கள் கூட்டம். இதுதான் இன்றை தமிழ்த் திரைப்படம் உருவாக்கிய பிம்பம் பற்றிய ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். உண்மையில், ரஜினியின் நிலை இதுதான். அடிக்கடி ஊடகத்தில் இப்படி எதாவது செய்யாவிட்டால் அவரது வாழ்வை அவரே அர்த்தமற்றதாக ஆக்கிக்கொள்ள வேண்டியநிலை வந்துவிடும்.

இது ஊடகம் உருவாக்கிய பிம்பம் அல்ல அவரது திறமை அடிப்படையிலேயே அவரது படங்கள் ஓடுகிறது என்றும், மணிச்சித்திரத்தாழ் என்கிற மலையாளப்படத்தை சந்திரமுகி என்கிற பெயரில் மறு-உருவாக்கம் செய்த படத்தில் வேறு ஒருவர் நடித்திருந்தால் ஒடாது என்பது போன்று வைக்கப்படும் ஒரு வாதத்தை எடுத்துக் கொள்வோம்.

1. தமிழ்படங்களில் ரஜினியின் படங்கள் மட்டுமே ஓடுவதில்லை. தவிரவும் ஆட்டுக்கார அலமேலு என்கிற வெற்றிப்படம் ஆட்டை நம்பி ஓடிய படம் இப்படி மிருகங்களை வைத்து ஓடிய எண்ணற்ற படங்கள் உள்ளது. ஜெகன்மோகினி என்கிற படம் பேய்கள் என்கிற நகைச்சுவையான வேடிக்கை தொழில்நுட்பத்தை வைத்து ஓடியது. பட வெற்றி என்பது ஒரு நடிகனின் உயர்வை காட்டுவதாக ஆகாது. ரஜினி உருவாக்க விரும்பும் அரசியல் மற்றும் பொது பிம்பங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால் அவரை குறித்தும் அவரது வெற்றிக் குறித்தும் சமூக நோக்கில் ஆயந்து புரிந்து கொள்வது அவசியம்.

2. “மணிச்சித்திர தாழ்” மலையாளத்தில் குடியரசுத்தலைவர் விருது வாங்கியது. நடித்த சோபனா ஊர்வசி பட்டம் பெற்றார். மலையாளப்படம் ஒரு வெற்றிப்படமே. அதில் கதாநாயகன் மோகன்லால் இடைவேளையில்தான் அறிமுகம் ஆவார். அதனுடன் ஒப்பிட்ட பேச எந்த தகுதியும் சந்திரமுகிக்கு இல்லை. அப்படத்தில் உளவியல் அறிஞர் பிராட்லியின் சீடராக அறிமுகம் ஆவார் மோகன்லால். இப்படத்தில் ரஜினி கால்வைத்தால் புயல் அடிக்கும் எனவும் ஆன்மீகவாதியாக அறிமுகம் ஆகும் சாமியார் ஒரு போலி சாமியார் அளவிற்கே காட்டப்படுகிறார். தவிரவும் மலையாளப்படம் ஒரு புதிய முயற்சியாக சிஸோபெரனியா எனும் மனச்சிதைவிற்கு நமது பேயோட்டும் மரபை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய வைத்திய முயற்சியை முன்அனுமானித்தது. முள்ளை முள்ளால் எடுக்கும் வைத்தியமுறை. பி.வாசு தாலி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை நாயகனாக கொண்டு படம் பண்ணியவர். அவரிடம் உளவியல் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

3. ரஜினி அடுத்தவன் மனைவியுடன் கொஞ்சும் ஒரு மலினமான நகைச்சுவை வேறு இதில். அதற்கு வடிவேலை ஆண்மையற்றவராக நக்கலடிக்கும் கதைவேறு. மேடைகளில் ஆன்மீக ஒழுக்கம் பேசபவர் இவ்வசனங்களை படங்களில் ஏன் பேசுகிறார்? படத்தில் பெண்களை கவரும் ஒரு கதாபாத்திரமாக காட்டப்படுவது என்பது சாதரண விஷயம் இல்லை. வாழ்க்கை சினிமாவாகும் காலத்தில் நாம் இல்லை. சினிமா வாழ்க்கையாக மாறிவிட்ட காலத்தில்தான் இருக்கிறோம். நமது மொத்த வாழ்வையும் சினிமாத் தொலைக்காட்சி துவங்கி பத்திரிக்கைகள் வரை அனைத்தும் தீர்மானிப்பதாக அர்த்தம் உள்ளதான ஒரு "நகல்போலி" (நன்றி நாகார்ஜீனன்) உலகில் வாழகிறோம். தொட்டுணரும் உண்மை எதுவும் இல்லை.

கட்டமைக்கப்பட்ட இப்படித்தான் தொட்டுணர வேண்டும் என்று ஊடகங்கள் சொல்லித்தந்த உண்மைகள்தான் உள்ளன. ஒரு பொருளை எப்படி உணர்வது என்பதையும்? எப்படி அதை அனுபவமாக மாற்றுவது என்பதையும்? ஊடகங்களே தீர்மானிக்கின்றன. அதனால் ரஜினி என்கிற பிம்பத்தை மட்டும் அவை கட்டமைப்பதில்லை, அந்த பிம்பத்தை எப்படி நுகரவேண்டும் என்றும் சொல்லித் தருகின்றன. அதனால் இன்று நீங்கள் உங்கள் விருப்பு அடிப்படையில், அப்படி ஒன்று உங்களுக்கு இருக்கிறதா? சாத்தியமா? என்பது மற்றொரு கேள்வி என்றாலும், ரஜினியை ரசிக்க ஊடகங்கள் சொல்லித்தந்த வண்ணம் உள்ளன. ஊடகங்கள் எதை சிறந்த மக்கள் ரசனையாக இன்று கட்டமைத்து காட்டகின்றனவோ அந்த அடிப்படையில்தான் ரசிக்க வேண்டும். சரக்கை உற்பத்தி செய்வது மட்டுமல்ல சரக்கை எப்படி நுகர்வது? என்பதும் இன்று சரக்கு உற்பத்தியுடன் சேர்ந்த ஒன்றாக மாறிவிட்டது.

4. பிரச்சனை ரஜினியை முன்வைத்து கட்டமைக்கப்படும் பிம்பங்கள்தான். தமிழ்த் திரைப்பட வியபார உத்திகள்தான் அவரது வெற்றிக்கு காரணமே ஒழிய ரஜினி என்கிற தனிநபர் சாதனை அதில் எதுவும் இல்லை. ரஜினி என்கிற பிம்பம் ஒரு அரசியல் பிம்பம். அது கட்டமைக்கும் உடல்கள், தமிழ்ச் சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு சீரழிவு அரசியல் போக்காகும். ரஜினி சினிமா மூலம் கொண்டாட்ட மனநிலையை உருவாக்குவதில்லை ஒரு மலினமான உணர்வுகளையே வளர்த்து வருகிறார். அதனால் அதை பொழுதுபோக்கு படங்களாக பார்க்கவே இயலாது. லியோனி கூறுவதுபோல் மெனக்கெட்டு தலையை சீவி பின் கலைத்துவிடும் ஸ்டைல் என்கிற ஒன்றுதான் ரஜினியின் தனிமனித பாதிப்பிற்கு ஒரு உதாரணம்.

5. இப்படம் மலையாள மூலத்தில் மாற்றாமல் அப்படியே நேர்மையாக எடுத்து மக்களிடம் வெற்றியடைந்திருந்தால் ரஜினியின் செல்வாக்கை சோதித்து பார்த்திருக்கலாம். ஒரு தொழிலில் தன்னம்பிக்கை அவசியம். ரஜினிக்கு அது இல்லை என்பது வெட்ட வெளிச்சம். தன்னை மட்டுமே நம்பி சோதனையாக எடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால் அந்த பக்கமே போவதில்லை. படம் எடுப்பதற்கு முன்பாக அவர் பார்க்ககும் சோதிட, எண்கணித, நாடி இன்னபிற மற்றும் வேண்டுதல்கள், காவுகள், யாகங்கள் இப்படி அது ஒரு தனி பட்ஜெட். இரண்டும் ஒரே எழுத்தில் வைத்து எடுத்தால் ஓடும் என்று நாடி சோதிடம் சொல்லி அவரது ஆன்மீக குருவின் நல்லாசியுடன் எடுக்கப்பட்ட “பாபா” என்னவாகியது? (உதாரணம் ராகவேந்திரா, வள்ளி, பாபா போன்றவை) ஓடவில்லை என்றவுடன் சிம்மராசி 4 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யக்கூடாது என்றார்கள். அப்புறம் ஒரு நல்லநாளில் சந்தரமுகி. ஆக, இதுதான் தன்னம்பிக்கையா? சினிமா வெறும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொன்டது என்பதை அவரே "ஓடும் குதிரையில்தான் பணம் கட்டுவார்கள்" என்று வெளிப்படையாக அறிவித்தவர்.

6. மலையாளப்படம் நோய் பற்றியது தமிழ் சந்திரமுகி பேய் பற்றியது. பி. வாசுவின் படங்கள் மிகவும் மலினமான தற்குறியான செண்டிமெண்ட்களை உள்ளடக்கியே வருபவை. உதாரணம் சின்னத்தம்பி. அவரது குசேலரும்கூட இப்படித்தான் எஞ்சிய சக்கையாகவே வரும் என்பது தெரிந்ததே. 40-நடிக நடிகைகளின் ஆட்டம் என்று விற்பனையை அதிகப்படுத்தும் சந்தை நொக்கில் ஓடவைப்பதன் மும்மரமே படத்தில் உள்ளது. ரஜினி படங்கள் இளைஞர்களுக்கானவை அல்ல. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கானவை. சந்திரமுகி அந்த இரு தளங்களில் கவனமாக இருந்தது. ரஜினியின் வெற்றியே ஆண்-பெண்களின் மனதில் உலவும் எதிர்-நாயக (ஆண்டி-ஹீரோ) செண்டிமெண்ட்தான்.

இந்த எதிர்-நாயக பிம்பம் என்பது ஆண்-பெண் இருபாலரின் ஒடுக்கப்பட்ட பாலியலின் ஒரு உளவியல் புள்ளியை தொடுகிறது என்பது முக்கியமான விஷயம். இங்குதான் மர்க்கிதிசாத் முன்வைக்கும் வன்முறை சார்ந்த மீ-புனைவு (பாஃண்டஸி) பாலியல் வழியாக, ஒரு உடல் உணரும் சாத்தியங்களுக்கான கற்பணார்த்த உளவியல் கூறின் தடத்தை உணர முடிகிறது. குழந்தைகளை கவரும் சில்மிஷங்கள். பொதுவாக பேய் மற்றும் மாயாஜாலங்கள் பெண்கள், குழந்தைகளைக் கவருவதுதான். அதை சந்திரமுகி சரியாகவே செய்தது. தவிரவும் அப்படம் ரஜினியின் பழைய படமான ஆயிரம் ஜென்மங்களின் ரீமேக்தானே ஒழிய 'மணிச்சித்திரத்தாழ்' அல்ல.

6. படம் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளது. அதை ஒரு குறிப்பிட்ட நடிகனின் தலையில் வைப்பதன் மூலம் அவனை ஒரு வியாபார சரக்காக மாற்றும் வணிகத் தந்திரமே ரஜினியின் வெற்றிக்கு பின் இருப்பது. ரஜினியை முன்வைக்கும் ஆதரிக்கும் சக்திகள் அரசியல் பின்புலங்களை ஆய்வதும், அவரது நேரடி அரசியல் ஆதரவையும் ஆராய்ந்தால் அவர் தமிழ்ச் சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் குறிப்பாக இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு அரசியலுக்குத் துணைபுரிபவர் என்பதை உணரலாம்.

மேலும், ரஜினி குறித்து தாகம் - மே 2007 - இதழில் வெளிவந்த ரஜினி பிம்பமும் உண்மையும் என்ற தலைப்பில் திருவாளர் தினா எழுதிய கட்டுரை இதனை மேலதிகமாக விளக்குகிறது. கடைசியில் தன்னை ரஜினி ரசிகன் என்றுக் கூறிக் கொள்ளும் நபர்கள் என்ன சொல்வார்கள் “ரஜினியின் வளர்ச்சி கண்டு பொறாமை” என்பார்கள். கையலாகாதவனின் கடைசி ஆயுதம் அதுதானே. எதிரியை திட்டிவிட்டு தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வது. இறுதியாக சமூக உணர்வுள்ள யாரும் இத்தகைய பிம்ப அரசியலை ஒரு சீரழிவு சக்தியாகவே பார்ப்பார்கள். அல்லது உங்கள் சமூக உணர்வின் மட்டத்தை அளவிட இன்று இது ஒரு அளவுகோல் என்பதே எனது நிலைப்பாடு.

இன்று தமிழக அரசியல் சூதாட்டத்தில் யார் ஆடுதன் ராஜா? யார் ஹாட்டின் ரானி? யார் ஜோக்கர்கள்? என்பது புரியாதவர்கள் இதை படித்தாகவோ அல்லது பார்த்ததாகவோ வெளியே சொல்லாமல் இருப்பதே நல்லது.

- ஜமாலன்

Pin It