இயற்கை, ஈ போன்ற தரமான படங்களை இயக்கிய- தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜனநாதனின் மூன்றாவது படமாக தீபாவளிக்கு வந்துள்ள படம் பேராண்மை. பரீஸ் வசீலியவ் எழுதிய அதிகாலையின் அமைதியில் என்கிற சோவியத் நாவலின் நினைவுகளோடு என்கிற எழுத்துக்கள் திரையில் ஓட, படம் ஆரம்பமாகிறது. நாம் நிமிர்ந்து உட்கார்கிறோம். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் கூலிப்படைகளுக்கு எதிராகப் போராடிய செஞ்சேனையின் ஒரு சிறு படைப்பிரிவின் தியாகத்தைப் பேசும் அதிகாலையின் அமைதியில் நாவலில் வருவதைப்போலவே ஒரு ஆண் கமாண்டரின் கீழ் இயங்கும் ஐந்து பெண் என்சிசி கேடட்டுகள் பற்றிய கதை இது எனலாம். அவர்கள் காட்டுக்குள் பயணித்து -சர்வதேச முதலாளிகளின் கைக்கூலிகளாக காட்டுக்குள் நுழையும் வெள்ளைக்கார பயங்கரவாதிகளோடு மோதி இந்திய சாட்டிலைட் பயணத்தை சிதைக்கும் அவர்களது திட்டத்தை முறியடிக்கிறார்கள்.

இந்த ஒருவரிக் கதையைக்கேட்டால் ஏதோ ரோஜா, ஜெய்ஹிந்த் மற்றும் பல விஜய்காந்த் படங்களைப்போல போலித் தேசபக்த முலாம் பூசிய ஒரு ஈயம் பித்தளைப் படம்தான் இது என்று தோன்றும். அல்ல. நிச்சயமாக அல்ல. இது அவ்விதம் அல்லாது மிகத் துணிச்சலாகப் பல விஷயங்களைப் பேசும் படமாக வந்துள்ளது.

முதலில் கதாநாயகன் துருவன் (ஜெயம் ரவி) ஒரு மலைவாழ் மக்கள் இனத்தைச்சேர்ந்தவன்.பழங்குடிச் சமூகத்தினன். தன்னுணர்வும் தெளிந்த அரசியல் ஞானமும் தன் இனம் புறக்கணிக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் வலியோடு உணர்கிற இளைஞனாக இருக்கிறான். அரசியல் பொருளாதாரம் படிக்காமல் இச்சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது என்று போதிக்கிறவனாக தன் இனத்துப் பிள்ளைகளுக்கு காடா விளக்கொளியில் இரவுப்பாடசாலை நடத்துகிறவனாக இயங்குகிறான்.

பழங்குடி மக்களைக் காட்டுமிராண்டிகளாக , நாகரிகம் பெறாத மனிதர்ளாகக் கருதுகிற அதிகாரியின் கீழும் அதே உணர்வுகளோடு பழகும் உயர்சாதி மாணவிகளோடும் பணிபுரியும் வலியை படம் நமக்கு அதே அழுத்தத்துடன் தருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒன்றல்லவா இது. காட்டைத் தாயாக நேசிக்கிற காட்டுவாசிக்கும் அவர்களைக் காட்டை விட்டுத்துரத்துகிற நவீன இந்திய அரசுக்கும் இடையில் நடக்கும் நீண்டகால யுத்தத்தின் சுவடுகளை படமெங்கும் காண முடிகிறது.

மற்ற சாதி மாணவிகள் துருவனை அப்படிப் பார்க்க அஜிதா என்கிற முஸ்லீம் மாணவி மட்டும் துருவனை மனிதராக உயர்ந்தவராகக் கருதுவதும் அவர்மீது நேசம் கொள்வதும் இப்படத்தின் மிக முக்கியமான பகுதி எனலாம். தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லீம்கள்தான் என்று விஜய்காந்த் முதல் கமல் வரை தமிழ் சினிமாவில் எல்லோரும் தங்கள் படங்களில் சொல்லிக்கொண்டிருக்க அதற்கெல்லாம் ஆப்பு வைத்தது போல இப்படத்தில் அஜிதா கதாபாத்திரம் உலவுகிறது-நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்கிறது.

கார்ல் மார்க்சின் மூலதனமும் தஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும் தாமிரபரணியைக் குடிக்கும் கோக்கோகோலா என்னும் புத்தகமும் வாசிக்கிற ஒரு இடதுசாரிக் காட்டுவாசியைக் கதாநாயகனாகக் கொண்ட படம் தமிழில் அபூர்வமல்லவா? படத்தின் இறுதியில் துருவன் மாணவிகளுக்குச் சொல்கிறான் “பொதுவுடமை அரசியலுக்கு மேலாக உலகத்தில் எதுவுமில்லை

போலித் தேசியம் பேசாமல் தேசத்திற்குள் ஆழ ஊடுருவிக்கிடக்கும் சாதி அரசியலையும் அழுத்தமாகப் பேசுவதால் இது உண்மையிலேயே மிகத் துணிச்சலான முயற்சி என்று நாம் கைதட்டிப் பாராட்ட வேண்டும்.

கதைக்கு அப்பால் படம் முழுக்கக் காடு - அடர்ந்த பசிய காடு - திரைமுழுக்க விரிந்து விரிந்து நம் மனங்களை அள்ளிக்கொள்கிறது.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவில் நாம் சில மணிநேரம் காட்டுக்குள்ளேதான் வாழ்கிறோம். வித்யாசாகரின் இசை காட்டுக்குள் நாம் இருப்பதான உணர்வைத் துல்லியமாக்கித் தருகிறது. படத்தில் காதல் காட்சிகள் இல்லை. குத்துப்பாட்டுகள் இல்லை. ஒருசில நிமிடங்கள் வந்து போகிற கல்லூரி மாணவிகளின் கலாட்டா மற்றும் அருவிக் குளியல் காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் கூடச் சுத்தமான ஒரு படமாக வந்திருக்கும். காட்டில் நடக்கும் போர்க்காட்சிகள் தமிழில் எப்போதாவதுதான் காணக்கிடைக்கும். போருக்கு நடுவே கல்லூரி மாணவிகள் சீரியஸ்ஸாகவும் இறுக்கமாகவும் இருந்திருக்கலாம். சில இடங்களில் அவர்கள் ஜாலியான மூடில் இருபது நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.இதுபோன்ற சில்லறைத் தவறுகளை இவ்வளவு சீரியஸ்ஸான ஒரு இயக்குநர் எப்படி அனுமதித்தார்?

கதாநாயகனைப்போல அந்த மாணவிகளின் கதாபாத்திரங்கள் அவர்களின் குணாதிசயங்கள் படத்தில் அழுத்தமாகக் கட்டமைக்கப்படவில்லை. அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் செறிவான படமாகியிருக்கும்.

வனவாசிக் கிராமத்தை வனக்காவலர்கள் சூறையாடும்போது கால்கள் இல்லாத அந்த வனவாசி தன் கைகளையே கால்களாக்கிப் பாய்ந்து வன அதிகாரியின் மேல் பாயும் காட்சி உடம்பைப் புல்லரிக்க வைக்கும் காட்சியாகும். அது வெறும் சண்டைக்காட்சியாக அல்லாமல் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட ஒரு பழங்குடி மகனின் பாய்ச்சல்லாகவே அர்த்தமாகி நம்மைக் கிளர்ச்சியூட்டுகிறது. இவ்வளவு வரலாற்றுணர்வுடன் இயங்கும் ஒரு இயக்குநரை நாம் இப்படத்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பாவப்பட்ட பாகிஸ்தான்காரனையே விரோதியாகக் காட்டிக் காட்டி அலுப்பூட்டிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகில் வெள்ளைக்கார நாய்களை எதிர்த்துப் போராடும் சரித்திர உணர்வோடும் பசுமை இயக்க உணர்வோடும் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கான குரலோடும் வந்திருக்கும் இப்படத்தைச் சமூக உணர்வுமிக்க ஒவ்வொருவரும் மனம் திறந்து பாராட்டவேண்டும்.

- சதன்

Pin It