edappadi k palanisamy and jayalalitha

சசி சிறைக்குச் சென்ற பின்னரும் இழுபறி தொடர்கிறது. கூவத்தூரிலிருந்து எம்எல்ஏக்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. விளைவாக, கவர்னர் இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலையில் எடப்பாடியை அழைத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு, அவர்களின் பிழைப்பு முக்கியம். அதற்கு முக்கியம், கொள்ளைக் கம்பெனியான அதிமுக உருக்குலையாமல் இருப்பது. ஆனால், அதிமுக பல்வேறு சிக்கல்களில் இருக்கிறது.

1. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது அக்கட்சியின் விதிகளின்படி செல்லாது என்பதால், எதிர்கால, தேர்தல்கள்/ தேர்தல் கமிஷன்/ நீதிமன்ற வழக்குகள் என்று வந்தால் அக்கட்சி பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

2. அக்கட்சியின் சொத்துகளில் மற்றொரு பெரும்பகுதி, அதாவது கணக்கில் காட்ட முடியாத கொள்ளைப் பணம், சசிகலா கோஷ்டி மற்றும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிடியில் இருக்கிறது. எனவே, கட்சிக்குள் பிளவு பெரும் சிக்கலைக் கொண்டுவரும். அதனை அறிந்தே ஓபிஎஸ் ஒன்றுபட வேண்டும் என்று சிக்னல் கொடுக்கிறார்.

கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டால், அதிமுகவின் இரண்டு தரப்பும் சிக்கலுக்கு ஆளாகும். முன்னிறுத்த ஒரு மாய பிம்பம் இல்லை. ஆவிகள் ரொம்ப நாள் கூட வராது. கைச்செலவுக்கு காசு வேண்டும். காசில்லை என்றால், பிரியாணி, சாராயம் வாங்கித் தந்து கூட்டம் சேர்த்து செல்வாக்கு மாயையைக் கட்டியெழுப்ப முடியாது. எது அதிமுக என்ற கேள்வியில் கட்சியின் சட்டப்பூர்வ சொத்துகள் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? கள்ளச் சொத்துகளை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களே சுருட்டிக்கொண்டால் என்ன செய்வது? அப்படியாயின், இதுவரை சொத்து சேர்க்காத எம்எல்ஏக்கள் என்ன ஆவார்கள்? ஜெயாவுக்கு ஏற்பட்ட கதி போல, வழக்குகள் பாய்ந்தால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்ன செய்வது?

இந்தக் கேள்விகள் ஓபிஎஸ் கோஷ்டிக்கும் இருக்கிறது, கூவத்தூர் கோஷ்டிக்கும் இருக்கிறது.

 அப்படியாயின், இப்போது முக்கியம் ஆட்சியல்ல.. சொத்து சேர்க்க வாய்ப்பு கொடுத்த அதிமுக என்ற கொள்ளை கம்பெனியைக் காப்பாற்றுவதே முக்கியம், அப்போதுதான் ஆட்சி நிலைக்கும், கொள்ளை தொடரும், அடித்த கொள்ளையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று இரு தரப்பாரும் நினைக்கலாம்.

சசிகலா பொதுச்செயலாளர் ஆனது முதல், தினகரன் திடீர் உறுப்பினராகி, அதே கணத்தில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆனது, கட்சிக் கம்பெனியின் மீது சசியின் குடும்பம் பிடியை இறுக்குவதற்கான முயற்சி. அதுபோல சாதிச் சமன்பாட்டு (தேவர்- கவுண்டர்) அரசியல் பகிர்வையும் அது காட்டுகிறது.

இதற்கு முன்பு, ஓபிஎஸ்ஸோடு தீபா இணைந்தார். மற்றொரு வாரிசான தீபக் மன்னார்குடியோடு நெருக்கத்தில் இருக்கிறார். தீபா- தீபக் போன்ற இரத்த வாரிசுகள் இருப்பது அதிமுகவின் அடித்தளமாக இருக்கிற, பின்தங்கிய சிந்தனை உள்ள மக்கள் மத்தயில் உள்ள செல்வாக்கு மண்டலத்தை அதிமுகவின் பிடியில் வைத்திருக்க உதவும்.

மற்றொரு பிரச்சனை, பலப்பரீட்சையில் அதிமுகவில் பிரிவுகள் தோற்க, உடனடி தேர்தலைச் சந்திக்கும் நிலை வந்தால், சிக்கல் இரண்டு கோஷ்டிக்கும்தான். கட்சியின் சின்னம், சொத்து, அத்துடன் கட்சி பற்றிய தாவாக்கள், இவற்றுடன் முந்தைய தேர்தல்கள் போல, கொள்ளைப் பணத்தை லாரிகளில் ஏற்றி இறக்கி செலவு செய்ய முடியாத நிலை என்றானால், அதிமுகவின் எந்தப் பிரிவும் தாக்குப்பிடிக்க முடியாது.

அதிமுகவின் முன்னணி தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு கட்சி என்ற கொள்ளை கம்பெனி உருக்குலையாதிருப்பது முக்கியம். எனவே, ஒன்றுபடுவார்களா? பிரிந்து அழிவார்களா?

sasikala and ops and edapppadi

இதற்கிடையில், விரைவில் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் சொல்கிறார். திமுக என்ற வல்லூறு அதிமுகவை தேர்தல் சிக்கலில் தள்ளி கதையை முடித்துவிடலாம் என்று காத்திருக்கிறது

பிஜேபி என்ற அகில இந்திய வல்லூற்றின் நோக்கம், தமிழக ஆட்சியைக் கைப்பற்றுவதில்லை. அது உடனடியாக முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். மத்திய அரசில் பிஜேபி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள போதுமான எம்பிகள் (சட்டங்கள் நிறைவேற்றப்படுவது, ஜனாதிபதி தேர்தல் இன்ன பிற) அவர்களின் முதல் நோக்கமாக இருக்கும். நடைபெற்று வரும் பிற மாநிலத் தேர்தல்களின் முடிவை ஒட்டி கிடைக்கும் எம்பிகள் பலத்தை ஒட்டி பிஜேபியின் மேற்சொன்ன அணுகுமுறையில் சிறு மாற்றங்கள் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அவர்கள் அதிமுகவின் 50 +/- எம்பிகள் தங்கள் பக்கம் உறுதியாக நிற்பதை விரும்புவார்கள்.

பிஜேபியின் இரண்டாவது கவனம், தான் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பளிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்பது. ஒருவேளை அடுத்து வரும் (முறையாக 5 ஆண்டு/ அல்லது முன்பு) தேர்தலில் பிஜேபியோடு ஒரு திராவிடக் கட்சி கூட்டு சேர்ந்தால், அவர்களின் எம்எல்ஏ/ வாக்கு அடித்தளம் அதிகமாகும். இப்படியான வாய்ப்பளிக்கும் கட்சி (இன்றைய நிலவரத்தில்) அதிமுக மட்டுமே.. அது சிதைந்துபோனால்...? அப்படியொரு கேள்வியும் பிஜேபிக்கு இருக்கும்.

எனவே, அளிக்கப்பட்ட 15 நாள் என்ற அவகாசம் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் சரிபார்த்து, அதிமுக பிஜேபி ஆகிய இரண்டு மக்கள் விரோதக் கட்சிகளுக்கும் பொருத்தமான தீர்வைக் கொண்டுவர மட்டுமே பயனாகும்.

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கும். இவற்றைத் தாண்டி எதிர்பாராத வேறு சிலவும் நடக்கலாம்.

ஆனால், அது எதுவும் தமிழகத்திற்கு நல்லதல்ல. ஆட்டத்தைக் கலைப்பதுதான் நல்லது. தேர்தலை நோக்கித் தள்ளுவதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது. சிதைந்து கிடக்கும் அதிமுக மேலும் சிதையவும், பயங்கர ஜனதா கட்சியின் திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளவும் அதுதான் வழி. வறட்சி, பொருளாதார சீர்குலைவு, வேலையிழப்பு, செயல்படாத அரசு என்ற சிக்கலில் தவிக்கும் தமிழக மக்களுக்கும் அதுதான் நல்லது.

அதிமுக கொள்ளையர்களின்- சதிகாரப் பிஜேபியின் திட்டம் அதற்கு எதிராக தமிழக மக்களின் நல்வாழ்க்கை என்ற நிலையில் இடதுசாரி கட்சிகளும், விசிக போன்ற கட்சிகளும், சிறுபான்மையினரின் ஜனநாயகக் கட்சிகளும் ஏன் கரம் கோர்க்கக் கூடாது?

தேர்தலை நடத்து என்று ஏன் அரசியல் இயக்கம் துவங்கக் கூடாது?

- சி.மதிவாணன்

Pin It