“அரசியல் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார், நாங்க சாம்பாதிக்கிறோம்; நாங்க சாப்பிடுகிறோம். எங்களுக்கு யாரும் வந்து எதுவும் செய்யல... போயி உங்க வேலையப் பாருங்க” இப்படி பேசுபவர்களைக் கடந்து வராமல் எந்த ஒரு நபரும் அரசியலில் இருக்க முடியாது. பெரும்பாலான மக்களின் மனநிலை இப்படித்தான் இருக்கின்றது. தேர்தல் நேரத்தில் வாக்களிப்பது மட்டுமே தன்னுடைய ஒரே கடமை. மற்றபடி அதைப்பற்றி பேசுவதோ, ஏன் நினைப்பதோ கூட வீண் வேலை என்ற உணர்வுதான் பெரும்பாலான மக்களிடம் இருக்கின்றது. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்பதுதான் தொன்றுதொட்டு இருந்துவரும் சாமானிய மக்களின் அரசியல் மரபு. சாமானிய மக்களின் அன்றாட வாழ்வதாரப் பிரச்சினைகளை அரசியல் பாதித்தாலும், அதை அந்தக் கணநேரத்தில் விமர்சனம் செய்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க அவர்கள் நகர்ந்து விடுவார்கள். அதை விடுத்து அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் யோசிப்பது கிடையாது. மக்களிடம் இப்படியொரு மனப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றது.
ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் தினம் தினம் அவர்கள் உழைத்துதான் ஆகவேண்டும். மற்றபடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக அல்ல, சாதாரணமாக ஈடுபடுவது கூட தங்களது இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கும் செயலாகவே சாமானிய எளிய மக்களால் பார்க்கப்படுகின்றது. பொதுவாகவே அவர்கள் இந்த அரசு இயந்திரம் சாமானிய மக்களுக்கானது கிடையாது என்பதை தம்முடைய நடைமுறை அறிவின் மூலம் தெரிந்துவைத்து இருக்கின்றார்கள். தங்களது அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை ரேசன் கார்டு போன்றவற்றுக்காக கூட அவர்கள் அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கையூட்டு கொடுத்தே நிறைவேற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் நடவடிக்கை என்பது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றாகவே தெரிகின்றது. விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் அவர்களைப் பெருமளவில் பாதித்தாலும் அதை ஒன்றும் செய்யமுடியாது, அனைவருக்குமானது நமக்கும் என்று சகித்துக்கொண்டு ஏற்று பழகிவிட்டார்கள். மக்களின் இந்த மனநிலைதான் ஆட்சியாளர்கள் ஊழல் செய்து கொட்டமடிப்பதற்கு ஏதுவாகின்றது.
இது ஒரு பக்கம் என்றால் இந்திய மக்களின் மனது இப்படி அரசியலற்றுப் போவதற்கு இன்னொரு முக்கிய காரணம் காலங்காலமாக இந்த மண்ணில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் அதிதீவிரமான மூடநம்பிக்கை. அதுதான் இந்திய மக்களை அரசியல் எழுச்சி கொள்ளாமல் தடுத்து வைத்திருக்கின்றது. தங்களது அன்றாடப் பிரச்சினைகள் அனைத்தையும் கடவுள் தீர்த்து வைத்து விடுவார். வழிபாடுகளே தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள போதுமானது; அதைத்தாண்டி வேறு எதுவும் தேவையில்லை என்று நினைக்கின்றார்கள். எப்படி தீவிரமான பொருள்முதல்வாதி தான் சார்ந்து கட்சி கேடுகெட்ட தனமாய், ஈனத்தனமாய் நடந்துகொள்ளும் போது அதில் இருந்து விலகி மாற்று ஒரு கட்சியில் சேர்கின்றானோ, அதே போல ஒரு தீவிரமான கருத்துமுதல்வாதி தான் கும்பிடும் கடவுள் தன்னைக் கைவிட்டு விட்டதாய் நினைக்கும் போது கடவுள் நம்பிக்கையைக் கைவிடுவதற்குப் பதில், அவன் இன்னொரு கடவுளை நாடிச் செல்கின்றான். அதுவும் கைவிட்டுவிட்டதாய் நினைக்கும் போது மறுபடியும் வேறொரு கடவுளை நாடிச் செல்கின்றான். எந்தச் சூழ்நிலையிலும் அவன் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்வது கிடையாது. ஒரு பல்துறை மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருத்துவர் இருப்பது போன்று குடும்பப் பிரச்சினை தீர, வயிற்றுவலி குணமாக, செல்வம் சேர, குழந்தை பாக்கியம் கிடைக்க, இன்னும் தேர்வில் வெற்றிபெற , காதலில் வெற்றிபெற என அனைத்துக்கும் கடவுள்கள் இங்கு இருக்கின்றார்கள். இப்படி வாழ்வில் தினம் தினம் சந்திக்கும் அனைத்து அன்றாட பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள கடவுள்கள் இருக்கும் போது அந்த மக்கள் எதற்காக அரசியல்வாதிகளையும், அரசு இயந்திரத்தையும் நம்பப் போகின்றார்கள்?
இந்திய மக்களின் இந்த மலிவான சிந்தனை முறைதான் அவர்களை இன்று இந்த நிலையில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றது. இந்தியா முழுவதும் இதுவரை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏறக்குறைய 50 பேர் இறந்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சொல்லொண்ணா துயரத்தில் முழ்கிக் கிடக்கின்றார்கள். சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அந்த மக்களின் எதிர்வினை இதற்கு எதிராக எப்படி இருந்தது என்று பார்த்தால் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகின்றது. இதற்கு மேல் சாமானிய மக்கள் மீது கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் இதையும் சகித்துக்கொண்டு புலம்புவதைத் தவிர வேறொன்றையும் செய்ததாகத் தெரியவில்லை. சில இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவையும் கூட கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் சில பிழைப்புவாத அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகவே இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் கூட தீவிரமான அரசியல் செயல்பாடுகளில் இறங்க பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டுகின்றார்கள். வீதியிலே இறங்கி மோடியின் இந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க அவர்கள் தயாராக இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக நடந்த அரபு வசந்தம் போன்ற ஒன்றை இங்கு நினைத்துப் பார்க்கவே முடியாது போலிருக்கின்றது.
கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை என அனைத்துமே இந்த மக்களைச் சூழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை உலகில் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் இருக்கின்றது. இப்படி எல்லாமே இருந்தும் ஏன் இந்த மக்கள் போராடத் தயாராக இல்லாமல் இருக்கின்றார்கள். இந்தக் கேள்விதான் பெரும்பாலான சமூக மாற்றத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கும் சக்திகளை உலுக்கி எடுக்கும் கேள்வியாக உள்ளது. இதற்குக் காரணமாக இருப்பது இந்த மக்களிடம் இருக்கும் தீவிரமான மூடநம்பிக்கைதான். வங்கியிலோ, இல்லை ஏடிஎம்மிலோ பணம் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் அரசு இயந்திரத்துக்கு எதிராக தம்முடைய கோபத்தை திருப்புவதற்குப் பதில் கோயில்களின் பக்கம் திருப்புகின்றார்கள். வங்கிக்கோ, இல்லை ஏடிஎம்மிற்கோ போகும் முன் கோயிலுக்குச் சென்று ‘கடவுளே இன்றைக்காவது எனக்குப் பணம் கிடைக்க ஏற்பாடுசெய்’ என மனமுருக வேண்டிக் கொள்கின்றார்கள். இந்த மனநிலைதான் அவர்களை இப்படி ஒரு மோசமான காலகட்டத்தில் கூட அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து தவிர்க்க இயலாமல் அவர்களைத் தடுக்கின்றது.
மோடியின் இந்த அடிமுட்டாள் தனமான முடிவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது ஏழை எளிய சாமானிய மக்கள் தான். பணக்காரர்கள் எல்லாம் தங்களிடம் உள்ள பணத்தை வங்கி மேலாளர்களின் உதவியுடனும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவும் இன்னும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பல சாமானிய மக்கள் மூலமாகவும் கமிசன் அடிப்படையில் பெரிய அளவில் மாற்றிவிட்டார்கள். எந்தவித முன்யோசனையும் இன்றி பைத்தியக்காரத்தனமாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே முடங்கிப்போய் உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயத்தை சந்தித்து இருக்கின்றார்கள். பல தொழிற்சாலைகளில் சம்பளம் பழைய ரூபாய் நோட்டுக்களிலேயே தரப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மோடியோ இப்படி ஒரு பஞ்சமா பாதக செயலை செய்துவிட்டு துடித்துக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து வாழ்த்து சொல்லுகின்றார். 2022 க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என்கின்றார். மோடி ஆட்சியில் இருந்து இறங்கும் முன் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்கள் சாமாதிக்குள் குடிபோய்விடுவார்கள். பிறகு யாருக்கு மோடி வீடுகட்டி தரப் போகின்றார் எனத் தெரியவில்லை. ஒருவேளை தாம் 2022 வரை பிரதமராக இருந்தால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமாதி கட்டிவிடுவேன் என்பததைத்தான் மோடி தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் மொழியில் சொல்கின்றாரோ என்னவோ!.
ஆனால் இதில் மையமாக குறிப்பிட வேண்டிய பிரச்சினை என்னவென்றால் மோடியின் இவ்வளவு பயங்கரமான பொருளாதார தாக்குதலுக்குப் பிறகும் இந்த மக்கள் பெரிய அளவில் எழுச்சி கொள்ளவில்லை என்பதுதான். இந்தியாவில் ஒரு புரட்சி சாத்தியம், நிச்சயம் அதற்கு ஏற்றாற்போல இந்த மக்களை மறுவார்ப்பு செய்யமுடியும் என களத்திலே போராடிக் கொண்டிருக்கும் சக்திகள் இந்த பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களது போராட்ட வழிமுறைகளை கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டும். பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடையும் போது வர்க்கப் போராட்டம் கூர்மையடைகின்றது என்று நினைத்துக் கொண்டுதான் அவர்கள் எப்போதும் பொருளாதாரப் பிரச்சினைகள் சார்ந்த போராட்டங்களையே முன்னெடுக்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்கு அதை பொய் என்று நிரூபிப்பதாய் உள்ளது. நாம் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், இந்த மக்களிடம் இருந்து தீவிரமான மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டாமல் இந்தியாவில் புரட்சி ஒருக்காலும் சாத்தியமில்லை என்பதுதான். மதவாதிகளும், சாதியவாதிகளும், பூசாரிகளும் இந்த மக்களை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை நாம் இல்லாமல் செய்ய வேண்டும். இல்லை என்றால் எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வந்தாலும் மக்கள் புரட்சிகர அணிகளில் சேருவதற்குப் பதில் ஆன்மீக வியாபாரிகளிடம் சேர்வதற்கான வாய்ப்புதான் உருவாகும்.
இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் நாம் செயலாற்ற வேண்டும். மதவாதிகளுக்கும், சாதியவாதிகளுக்கும் அரசியல்வதிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் இடையே உள்ள கூட்டை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் தனக்கான பிரச்சினைகளைத் தீர்க்கும் இடம் கோவில் அல்ல, மாறாக தம்மைப்போலவே சாமானிய மக்களின் வாழ்க்கைக்காவே போராடும் கட்சிகள் என்பதை உணர்வர்கள். அரசியல் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுங்கும் மக்களுக்கு ஏன் அரசியல் கட்டாயமாக தேவைப்படுகின்றது என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அரசியலை விட்டு விலக விலக இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதையும் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என்பதையும் உணர்த்த வேண்டும். இந்த நிலையை எட்டாத வரை சாமானிய மக்களை போராட்ட பாதைக்குத் திருப்புவது என்பது முடியாத காரியம்தான்.
- செ.கார்கி