தி இந்து தமிழ் நாளிதழில், நவம்பர் 16ஆம் தேதி , கே.கே.மகேஷ் எழுதிய "எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?" என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கான மறுப்பு கட்டுரை இது. 24.10.2016 அன்று, வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி குறித்த விமர்சனமாகவே மகேஷ் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
திராவிடர் கழகம் எம்.ஜி.ஆருக்கு ஏன் நூற்றாண்டு விழா எடுக்கிறது என்கிற கேள்வியும் விமர்சனமும், அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே எழத் தொடங்கி விட்டது. அந்த விழாவில் பேசிய, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்தக் கேள்விக்கான பதிலை தன் உரையில் விளக்கமாகக் கொடுத்தார். அந்த உரை பெரியார் வலைக்காட்சி யூடியூப் சேனலில் அப்படியே இருக்கிறது. விழா நடந்த அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்த விடுதலை நாளிதழில், "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - ஏன்?" என்கிற தலைப்பில் விளக்கமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாளர் மகேஷ், கி.வீரமணியின் உரையை முழுதாகக் கேட்டதாகவும் தெரியவில்லை, விடுதலையில் வந்த கட்டுரையை வாசித்ததாகவும் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஏன்?
"31% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக்கியது என்று எம்ஜிஆர் செய்த திராவிடர் இயக்கம் சார்ந்த பணிகளுக்காக எடுத்த விழா இதுவென்று சொல்லியிருந்தால், வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்கலாம்" என்று மகேஷ் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
வீரமணி தன்னுடைய 37 நிமிட உரையில் சுமார் 17 நிமிடங்கள், சமூகநீதி காரணங்களுக்காகதான் எம்.ஜி.ஆருக்கு இந்த விழாவை எடுக்கிறோம் என்று மிக விளக்கமாகப் பேசியிருக்கிறார். எப்படி தவறான ஆலோசனையின் காரணமாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கொண்டுவர எம்.ஜி.ஆர் முயன்றார், அந்த முயற்சியை முறியடிக்க திராவிடர் கழகம் ஆற்றிய பணி என்ன, நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு எம்.ஜி.ஆர் எப்படி தன் தவறை தானே திருத்திக்கொண்டார், தவறை திருத்திக்கொண்டது மட்டுமல்லாமல் எவரும் எதிர்பாராத வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். எம்.ஜி.ஆர் செய்த அந்தச் செயல்தான், பிற்காலத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜெயலலிதா உறுதியாக இருந்ததற்கும் அடித்தளமாக அமைந்தது. இப்படி, இந்தக் காரணங்களுக்காகதான் நாம் எம்.ஜி.ஆருக்கு விழா எடுக்கிறோம் என்று தெளிவாக விளக்கினார் வீரமணி. திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று சமூகநீதி என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்திய மகத்தான பணியைச் செய்தவர் என்கிற காரணத்தால், அவரால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நன்றியுணர்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று, வீரமணி அழுத்தம் திருத்தமாக அந்த விழாவிலேயே பேசினார். நாம் எம்.ஜி.ஆரை வள்ளல் என்பது, அவர் பணத்தை வாரிவழங்கிய வள்ளல் என்பதற்காக அல்ல. சமூகநீதிக்கொடியை உயர்த்தியவர் என்பதற்காகதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
உண்மை இப்படி இருக்கும்போது, கட்டுரையாளர் மகேஷ், அவரே எழுதியிருப்பதைப் போல, வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தானே ஒரு முன்முடிவை எடுத்துக்கொண்டு போதிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல், தன் விமர்சனங்களைக் கட்டுரையில் மேலும் தொடர்கிறார். “பகுத்தறிவாளர்கள் ஒன்றும் கி.வீரமணியின் பக்தர்கள் அல்ல” என்பது போன்ற தாக்குதலையும் தொடுக்கிறார்.
திராவிடர் கழகமும் எம்.ஜி.ஆரும்
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திராவிடர் கழகம் பெரும்பாலும் எதிர்நிலையில் இருந்து விமர்சனப்போக்குடன் நடந்து கொண்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் பதிவு செய்யத் தவறிவிட்டார் கட்டுரையாளர். அதே சமயம், திராவிடர் கழகத்தின் மீது விமர்சனமாக எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரையில், பொத்தாம் பொதுவாக, எந்த அடிப்படையுமின்றி, "முதலில், பயம் காரணமாக எம்ஜிஆர் ஆட்சியை விமர்சிக்கத் தயங்கினார்கள்" என்று குறிப்பிடுகிறார்.
எம்.ஜி.ஆர். தலைமையில் தமிழ்நாட்டு ஆட்சி இருந்தபோது, கிட்டத்தட்ட 13 ஆண்டு காலத்தில் பெரும்பாலும் திராவிடர் கழகம் அந்த ஆட்சிக்கு எதிர்நிலையில்தான் இருந்தது. பல போராட்டங்களையும், எதிர்ப்பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளது. அந்தக் காலக்கட்டதில், திராவிடர் கழகமும் திமுகவும் நெருங்கிய தோழமையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதிமுகவிற்கும், வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பெரிய அளவில் நட்புறவு இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திருவாரூர் தங்கராசு தலைமையில் செயல்பட்ட போட்டி திராவிடர் கழகத்தை, சிலகாலம் ஊக்குவித்து ஆதரித்தவர் எம்.ஜி.ஆர்.
மிகக் குறிப்பாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவர எம்ஜிஆர் அரசு முடிவுசெய்தபோது, அதை மிகக் கடுமையாக எதிர்த்து மக்களிடம் அம்பலப்படுத்தும் வேலையை திராவிடர் கழகம்தான் முன்னின்று நடத்தியது. எம்.ஜி.ஆர் ஆட்சி பிறப்பித்த அரசாணையை தீயில் எரித்து, அதன் சாம்பலை மூட்டை மூட்டையாக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள் திராவிடர் கழகத்தினர். அப்படியிருந்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டு, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியபோது, அவருக்கான பாராட்டுவிழாவை வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் அப்போதே நடத்தியது. அவர்களைப் பொருத்தவரை, கொள்கை அடிப்படையில் பாராட்ட வேண்டிய விசயத்தைப் பாராட்டியிருக்கிறார்கள், எதிர்க்க வேண்டிய விசயத்தை எதிர்த்திருக்கிறார்கள்.
திராவிட இயக்கமும் எம்.ஜி.ஆரும்
"திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர்" என்று வீரமணி பேசியதாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். உண்மையில் வீரமணியின் உரையில் இத்தகைய வார்த்தைகளோ கருத்தோ இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் வீரமணி பேசாத வார்த்தைகளின் மீது கட்டுரையாளர் விமர்சனங்களை அடுக்குகிறார். அதாவது, "(எம்.ஜி.ஆர்) திராவிடர் கழக வேரிலிருந்து கிளர்ந்தெழுந்தவரா? அதுவும் கிடையாது. சிறுவயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்” என்கிறார். எம்.ஜி.ஆர் சிறுவயதில் காங்கிரஸில் இருந்தார் என்பது எந்த வகையிலும் இந்த விவாதத்திற்குப் பயனற்றது. காரணம், தந்தை பெரியாரே தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் இருந்துதான் தொடங்கியிருக்கிறார், இன்னும் சொல்லப்போனால் அவர் மிகத் தீவிரமான காந்தியின் பற்றாளராகவும்கூட இருந்திருக்கிறார். நீதிக்கட்சிக்கு எதிராக ஒரு பார்ப்பனரல்லாத தலைவரை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காகதான் பெரியாரையே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியது. அதற்காக இப்போது நாம் பெரியாரை காங்கிரஸ்காரர் என்று மதிப்பிடமுடியுமா?
எம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத நம்பிக்கைகளை சீண்டுவதைப்போன்ற வசனங்கள் பேசுவதை அவர் தவிர்த்தார், இடத்துக்கேற்றபடி இந்துவாகவும் அவதாரம் எடுத்தார், தனது கொள்கை ‘திராவிடம்’ என்று சொன்னதில்லை, ‘அண்ணாயிஸம்’ என்று புதிதாக ஒன்றைச் சொன்னார். இவ்வகையான விமர்சனங்களை கட்டுரையாளர் அடுக்குகிறார். இவையெல்லாம் ஆய்வுப்பூர்வமான விமர்சனங்களாக நமக்குத் தெரியவில்லை.
என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது, என்.எஸ்.கே மூலமாக பெரியார் நடத்திய குடியரசு இதழ்களைப் படித்ததாகவும், அது தன் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு சமயம், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழா ஒன்றில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியதுண்டு. “மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படிச் கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள். டாக்டர்களின் திறமைக்கு உத்தரவாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் ‘திருநீறு குணமாக்கிவிடும்’ என்று செல்லுபவர்களை என்ன சொல்லுவது’’
பிறகொரு சந்தர்ப்பத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தன்னுடைய மதம் என்கிற இடத்தில், இந்து மதம் அல்ல, திராவிட மதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தன்னுடைய கடைசிகாலம் வரை, தீபாவளி உள்ளிட்ட எந்த இந்துமதப் பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்துச் சொன்னவரில்லை. தன்னுடைய அலுவலகத்திலும் வீடுகளிலும் பொங்கல் விழாக்களை மட்டும்தான் அவர் கொண்டாடியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் தன் பெயரை தமிழுக்கு மாற்றிக்கொள்ளவில்லை என்பதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. கருணாநிதி என்கிற பெயர்கூட தமிழ்ப் பெயர் இல்லைதான். தங்களுடைய திரைப்படத் துறையில் அந்தப் பெயருடன் வெற்றிபெற்று அந்தப் பெயர் பிரபலமானதற்கு பிறகு, அதை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுகூட அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். இது அதிகம் முக்கியத்துவமில்லாத விமர்சனம் என்றே நான் கருதுகிறேன்.
இடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர் என்று எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். ஆனால் உண்மையில், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபிறகு, அவருக்குத் துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் பொதுவுடமை கட்சியினரும் முஸ்லிம் லீக் கட்சியினரும் என்பதுதான் வரலாறு.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, 1982ஆம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கை, இன்றளவும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் அந்த கோரிக்கைக்கு ஆதரவானவர்தான் என்பதற்கு இது ஒரு சான்று.
ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர். இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.
பெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் மிகச்சிறப்பாக அரசின் சார்பில் ஓர் ஆண்டு முழுக்கக் கொண்டாடினார். பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஈரோட்டிற்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடர் என்ற நினைவுச்சின்னத்தை அமைத்தார். பெரியார் பொன்மொழிகள் என்ற நூலுக்கு இருந்த தடையை நீக்கினார்.
எம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பற்று இருந்ததா இல்லையா என்று ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பது என் வேலையல்ல. ஆனால் கட்டுரையாளர் மகேஷ், எம்.ஜி.ஆருக்கு திராவிட இயக்கக் கொள்கைப் பற்று எதுவும் இருக்கவில்லை என்று சொல்லி நிராகரிப்பதற்கு கொடுத்திருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதையே பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆர்எஸ்எஸ்ஸும் எம்ஜிஆரும்
எம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ்/இந்துத்துவா சார்பாளர் என்கிற முன்முடிவுடனேயே இதைக் கட்டுரையாளர் மகேஷ் அனுகியிருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை என்கிறார் கட்டுரையாளர். அது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை கிடையாது. இடஒதுக்கீடே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை. எம்.ஜி.ஆர் முயற்சி செய்ததை கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அணுகுமுறை என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய அந்த முயற்சியை, அன்றைய சிபிஎம் கட்சி ஆதரித்தது, சிபிஐ கட்சி எதிர்த்தது என்பதையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானது. எம்.ஜி.ஆர் அந்த முயற்சியைக் கைவிட்டபிறகு, அதிரடியாக பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு அளவை 50 விழுக்காடாக உயர்த்தினாரே, அது கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ் விரோத அணுகுமுறை.
கொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலைக்கழகத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதற்கு அன்னை தெரசாவின் பெயரை அவர் வாழும் காலத்திலேயெ சூட்டினார். அதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷேக் அப்துல்லாவை அழைத்திருந்தார். அன்னை தெரசா பெயரைச் சூட்டுவதும் ஷேக் அப்துல்லாவை விருந்தினராக அழைப்பதும் ஆர்.எஸ்.எஸ் சார்பு செயல்பாடுகளா?
மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் உதவியதாக, ஆர்எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியான கட்டுரையில் வந்த தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் மகேஷ்.
ஆனால் மண்டைக்காடு கலவரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்ன நிலைப்பாடு எடுத்திருந்தார் என்பதைத் தேடி பார்த்திருக்க வேண்டும். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது குறித்துத் தம் அரசின் கருத்தைப் பதிவு செய்துள்ளார். காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு (29.3.1982) சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே _ அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை. மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்;அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’
அதன்பிறகு, டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார்.
“கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?
பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள் படித்தவர்கள், யோசித்துச் செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.
அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.
அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.
இதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் உணர வேண்டும்.
இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது. “
வரலாறு இப்படி இருக்க, ஆர்.எஸ்.எஸ். ஏன் இப்போது எம்.ஜி.ஆரைக் கொண்டாடுகிறது என்கிற கேள்வியை திராவிடர் கழகம் எழுப்புவதில் உள்ள நியாயத்தையும் தர்க்கத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?
எம்.ஜி.ஆர் கண்டிப்பாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை. திராவிடர் கழகம்கூட அவர் ஆட்சியில் இருந்த 13 ஆண்டுகாலத்தில் பெரும்பாலும் அவரைக் கடுமையான விமர்சனப் போக்குடன் தான் அணுகியிருக்கிறது. எந்தப் பொதுத் தேர்தலிலும் அவருடைய கட்சியை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடத்திய பல்வேறு மனித உரிமை மீறல்களும், வன்முறைச் சம்பவங்களும், கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் எம்.ஜி.ஆரை தங்களவராகக் கற்பிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் திரிபுவாத பிரச்சாரத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும், எம்.ஜி.ஆரை கொண்டாடுவதற்கு திராவிடர் கழகம் முன்வைக்கும் காரணங்களைத் திரிபுவாதம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று, சமூகநீதி என்கிற இடஒதுக்கீடு கொள்கையாகும். தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இருப்பது, நாம் கொண்டிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கை. இதற்கு அடித்தளம் இட்டு, 49 விழுக்காடாக இருந்த மொத்த இடஒதுக்கீடு அளவை 68 விழுக்காடாக உயர்த்திய எம்.ஜி.ஆரை திராவிட இயக்க வள்ளல் என்றழைப்பது பொருத்தமாகும். சமூகநீதிக் கொள்கையில் அக்கறைகொண்ட அனைவரும், குறிப்பாக அனைத்து பெரியார் இயக்கத்தினரும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவேண்டும்.
- பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.
(உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)