உலகமயமாக்கலுக்குப் பின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மனிதரும் தனக்கென வைத்திருந்த தனிப்பட்ட குணாதிசயங்கள் அனைத்தையும் முதலாளித்துவம் மாற்றி, தனக்கு ஏற்றார் போல தன்னை ஒத்த மனிதர்களாக, நாடுகளாக அவற்றை மாற்றிவிட்டது. இதைத்தான் மார்க்ஸ் சொன்னார் “முதலாளித்துவ வர்க்கம் அதன் உற்பத்திக் கருவிகள் அனைத்தின் விரைவான மேம்பாட்டின் மூலம், மிகப்பெரிய அளவில் வழிவகை செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சாதனங்கள் மூலம் அனைத்து தேசங்களையும் நாகரீகத்திற்குள் ஈர்க்கின்றது. அதன் உற்பத்திப் பொருட்களின் மலிவான விலைகள் அனைத்துச் சீனப்பெருஞ் சுவர்களையும் அடித்து நொறுக்கும் கனரகப் பீரங்கிகளாகும்… அது அனைத்து தேசங்களையும் அழிந்துபோகும் அச்சத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கடைபிடிக்க நிர்ப்பந்திக்கிறது…. ஒரே சொல்லில் சொல்வதானால், அது தன்னைப் போன்ற ஒரு உலகை உருவாக்குகிறது” என்று.

 அமெரிக்க தொடர்ச்சியாக தன்னை உலக மேலாதிக்க வல்லரசாக தக்க வைத்துக் கொள்ள என்னென்ன தில்லுமுல்லுகளைச் செய்கின்றதோ, என்னென்ன அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றதோ, அதெல்லாம் இப்போது அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றாக இல்லாமல், அது கால்பதித்த அனைத்து நாடுகளிலும், அவற்றில் வாழும் மனிதர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அது மேல்நிலையில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும். மோசடியும், அநாகரீகமும் நிறைந்த நாடுகளையும், மனிதர்களையும் உலகம் பூராவும் உருவாக்கி விட்டிருக்கின்றது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களிடமே திருடும் அளவிற்கு ஹைடெக் திருடர்களை உலகமயமாக்கல் தோற்றுவித்து இருக்கின்றது.

 ஆமதாபாத், கொல்கத்தா, குர்கான், நொய்டா போன்ற பகுதிகளில் கால்சென்டர் என்ற பெயரில் இயங்கிவந்த பல போலி நிறுவனங்கள் அமெரிக்கர்களை ஏமாற்றி ஏறக்குறைய 2000 கோடிக்கு மேல் கொள்ளையடித்து இருக்கின்றன. கொள்ளையடித்தவர்கள் மெகா திருடர்கள் என்பது போல கொள்ளையடிக்கப் பட்டவர்கள்களும் மெகா திருடர்களாக இருந்துள்ளனர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல அமெரிக்க அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்த நபர்களின் விவரங்களை அமெரிக்காவில் வாழும் இந்தியத் திருடர்கள் மூலம் இந்தக் கும்பல் பெற்றிருக்கின்றது. இந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு உள்நாட்டு பாதுகாப்புத் துறை, உள்நாட்டு வருவாய் துறை போன்றவற்றில் இருந்து பேசுவதாகக் கூறி அவர்கள் பெயர்களில் வாரண்டுகள் நிலுவையில் உள்ளதாகவும், நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவுகள் உள்ளதாகவும் மிரட்டி உள்ளனர். இதில் பயந்துபோன பல அமெரிக்கர்கள் போலியாக உருவாக்கப்பட்ட சேவை நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி உள்ளனர். இப்படி செலுத்தப்பட்ட 2000 கோடிக்கு மேல் பணத்தை நம் பாரத மாதாவின் பிள்ளைகள் சுருட்டியுள்ளனர்.

 இந்த மோசடியில் ஆமதாபாத் கால் சென்டர்கள் எச்குளோபல், கால்மந்த்ரா, வேர்ல்ட்வைட் சொல்யூசன், ஸோரீன் கம்யூனிகேசன்ஸ், சர்பா பி.பி ஓ சர்வீசஸ் போன்றவை ஈடுபட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலின் தலைவன் சாகர் தாக்கர் என்ற சாக்கி கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் இருந்து 2 கோடி மதிப்புடைய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 அமெரிக்கர்களை இந்தியர்கள் ஏமாற்றுவது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே இலங்கைத் தமிழரான ராஜரத்தினத்துடன் சேர்ந்த இந்தியரான ரஜத் குப்தா இன்சைடர் டிரேடிங் அதாவது நிறுவனங்களின் உள் நிலவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிந்து அதைவைத்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் பங்குகளை விற்று லாபம் அடைவது என்ற முறையை பயன்படுத்தி 75 பில்லியன் டாலர்களை மோசடி செய்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்றாகும். அதுபோல அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த வினோத் டட்லானி என்ற இந்தியர் 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலி கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி 200 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டார். அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிர்திஷ் படேல் மற்றும் அவரது மனைவி நிட்டா படேல் ஆகியோர் உரிய மருத்துவ உரிமம் இல்லாமல் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி, போலியான மருத்துவ அறிக்கைகளை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

 இந்தியா வல்லரசாக வருவதற்கான நல்ல அறிகுறிகளாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்!. ஏன் இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் ஆடையை அவிழ்த்து சோதனை போட்டாலும் சூடு சுரணையே இல்லாமல் திரும்ப திரும்ப அமெரிக்கா போகின்றார்கள் என்று இப்போதுதான் தெரிகின்றது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் பாரத மாதாவின் என்.ஆர்.ஐ குழந்தைகள் கவலைப்படப் போவது கிடையாது. நேர்மையான வழிகளில் ஈட்டப்படும் பணம் ஆடம்பர நுகர்பொருள்களை வழிபட நம்மை கட்டாயப்படுத்தும் இந்த உலகில் போதுமானதாக இருப்பதில்லை. முதலாளித்துவம் பெற்றெடுத்த ஆடம்பரக் கார்களும், அதி நவீன செல்போன்களும், சொகுசு மாளிகைகளும், ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் சித்தரவதை செய்கின்றது. அவற்றை அனுபவிக்காத மனிதனை அற்பப்பிறவிகளாக காட்சிபடுத்துகின்றது. பணம் சேர்ப்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலையை அது தனது வளர்ச்சிப்போக்கில் தோற்றுவிக்கின்றது.

 அமெரிக்கா போன்ற மேலாதிக்க வல்லரசு நாடுகள் தன்னை எப்போதுமே மேல்நிலையில் தக்க வைத்துக்கொள்ள மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை கொள்ளையிட்டது. ஒத்துவராத நாடுகளில் தனது உளவு அமைப்புகளின் மூலம் எதிர்ப்புரட்சி சக்திகளை உருவாக்கி கலவரங்களை ஏற்படுத்துவது, ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவது, படுகொலைகளில் ஈடுபடுவது என அனைத்தையும் செய்தது. ஆனால் நிலைமைகள் அப்படியே நீடிப்பதில்லை. கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இப்போது அவை மூன்றாம் உலகைச் சேர்ந்த நாடுகளின் தாக்குதலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாகிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் ஆகட்டும், இல்லை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் ஆசாஞ்சே விக்கிலீக்ஸில் கசியவிட்ட அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய தகவலாக இருக்கட்டும், இல்லை, அமெரிக்க பெரும் பணக்காரர்களை இந்திய கிரிமினல்கல் ஏமாற்றியதாக இருக்கட்டும், இது எல்லாம் சூழ்நிலை மாறுவதையே காட்டுகின்றது. அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒரு நாட்டையும் அதன் குடிமக்களையும் மூன்றாம் உலகைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பதே முதலாளித்துவம் எந்த அளவிற்கு அதன் இறுதிகட்ட நெருக்கடியில் சிக்கி உள்ளது என்பதைக் காட்டுகின்றது. இத்தோடு இது நின்றுவிடப்போவது கிடையாது. முதலாளித்துவம் தன்னைப் போலவே உருவாக்கிய குற்றக்கும்பல்கள் தொடர்ச்சியாக அதன் அமைப்புக்கே அழிவை ஏற்படுத்துவார்கள். இது உலக முதலாளித்துவம் தோற்றுவித்த தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.

- செ.கார்கி

Pin It