தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் புடவை என்பது, பண்பாட்டு ஆடையாகவும், பரம்பரை ஆடையாகவும் இருந்து வருகிறது. கட்டிய சேலையோடு அவள் வந்தால் போதும் என்று காதலன்களும் நான் கட்டிக் கொண்டு வந்த சேலை கிழிந்து நார் நாராகி விட்டது. தீபாவளிக்காவது ஒரு சேலை எடுத்துக் கொடுப்பீர்களா? என்று மனைவிகளும் வசனம் பேசுவது மிகவும் சகஜமாகி விட்டது.

உலகிலேயே மனிதகுலம் உடுத்தும் ஆடைகளில் மிகப் பெரியது எது? என்று கேட்டால் அது, நம் தமிழ்நாட்டுப் பெண்கள் அணியும் புடவை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அதே போல, உலகிலேயே விலை உயர்ந்து ஆடை எது? என்கிற கேள்விக்கும், கல்யாணங்களில் பணக்காரப் பெண்கள் சுமந்து கொண்டிருக்கும் பட்டுப்புடவை என்றுதான் பதில் சொல்லியாக வேண்டும்.

ஒரு பட்டுப்புடவை வாங்குவதற்காக வங்கிகளில் யாரும் கடன் வாங்குவதில்லையே தவிர, ஒரு உயர்ந்த பட்டுப்புடவை வாங்கச் செலவாகும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி ஒரு சிறு தொழிலையே நடத்தலாம் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது. சரி பட்டுப்புடவைகள் வாழ்வின் விழாக்களோடும் கௌரவத்தோடும், பெண்களின் அழகோடும் சம்பந்தப்பட்டது என்கிற கருத்தை ஜீரணிக்க முடியவில்லையென்றாலும் விழுங்கியாவது வைப்போம். அதைத் தவிர்த்து தமிழ்ப் பெண்கள், எப்போதும் உடுத்திக் கொண்டு நடமாடும் சாதாரண புடவைகள் அவர்களின் வாழ்க்கைக்கும் வசதிக்கும் உகந்ததுதானா?

சாதாரணமாக ஒரு புடவை என்ன விலை என்பது, அதை வாங்கி கொடுப்பவருக்கும், விற்பவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகி விட்டாலும், அதன் நீளமும், அகலமும் அதை உடுத்திக் கொள்பவருக்கு மட்டுமல்ல. அது உலர்ந்து கொண்டிருக்கும்போது வேடிக்கைப் பார்க்கிறார்களே... அவர்களுக்கும் தெரியும்.

வகைகளிலும், விலைகளிலும்தான் புடவைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறதே தவிர, அவைகளை உடுத்திக்கொள்ளும் பெண்களைப் பின்னுக்கு இழுத்துப் போடுவதில் எல்லாப் புடவைகளுமே ஒரே சீராகத்தான் செயலாற்றுகின்றன. துவைப்பதற்குத் தேவையான தண்ணீர், உலர்த்துவதற்குத் தேவையான இடம், மடித்து வைப்பதற்கான நேரம், உடுத்திக் கொள்வதற்கான நேரம் என்று எல்லா விலைப் புடவைகளுமே ஒரே ஒழுங்கில்தான் செயலாற்றி வருகின்றன.

சராசரியாக ஒரு புடவையைத் துவைப்பதற்கு இருபது நிமிடங்கள் செலவாகிறது. அதைக் காயப் போடுவதற்கு ஒரு ஐந்து நிமிடம். காய்ந்த பின்பு, மடித்து அயர்ன் செய்வதற்கு ஒரு பத்து நிமிடம். அதே சேலையை உடுத்திக் கொண்டு புறப்பட வேண்டுமெனில் குறைந்தபட்சம் (ஒரு மணி நேரம் சார்õ என்று பல ஆண்கள் ஆட்சேபிப்பது கேட்கிறது) இப்படியாக ஏறக்குறைய ஒரு புடவை, ஒரு பெண்மணியின் ஒரு மணி நேரத்தை, நேரடியாகவும், மறைமுகமாகவும் கபளீகரம் செய்து விடுகிறது.

நேரச் செலவு, பணச் செலவு போன்றவற்றையெல்லாம்கூட பொருட்படுத்தாமல் விட்டு விட்டு. பெண்களுக்குப் புடவை, சமூகச் சிக்கலைத் தராத சௌகர்யமான ஒரு ஆடைதானா? என்று ஆராய்ந்தால் அப்படியும் இல்லை.

உலகிலேயே பெரியதான அந்த ஆடை உடுத்திக்கொள்பவரின் உடல் தெரியாமல் இருக்கும் வண்ணம் அமைக்கப்படவில்லை. புடவை என்பது இப்படித்தான் இருக்கும். அதை உடுத்திக் கொள்ளும் போது நீங்கள் இப்படியெல்லாம் காட்சி அளிப்பீர்கள் என்கிற, என்றோ நெய்த அந்த முடிவு இன்னமும் சுமக்கப்படுகிற நிலைதான் பரவலாகக் காணப்படுகிறது.

சற்று கூர்ந்து கவனித்தோமானால் சேலை என்பது பெண்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட வலையாகவே தெரிகிறது. இந்த வலையில் தீப்பிடித்து இறந்து போகும் பெண்கள் ஏராளம். இந்த வலை வாகனச் சக்கரங்களில் சிக்கிச் கழன்று விடுவதால், அதை எடுத்து முடிக்கும்வரை யாருடைய சட்டையிலாவது தன் மானம் காத்து மனமொடிந்து நிற்கும் மங்கையர் எராளம். இந்த வலை சரியாக மூடாததால் வெறிப் பார்வைகளைச் சகித்துக் கொண்டு புழுங்கும் பெண்மணிகள் ஏராளம். இப்படியாக இன்னும் எவ்வளவோ ஏராளங்களைச் சொல்லலாம்.

துரத்தும் போதும் ஒட முடியாத, துரத்திக் கொண்டும் ஒட முடியாத வித்தியாசமானதொரு ஆடை இது. பல நூறு ஆண்டுகளாகப் பண்பாடு என்கிற பெயரில் இந்த ஆடை புழக்கத்தில் இருப்பதாலும், பெண்களின் வசதிக்கேற்றபடி வேறு விதமான ஆடைகள் அறிமுகப்படுத்தப்படாததாலும்தான், பெண்கள் சேலைகளை நேசித்துப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, மனப்பூர்வமாக அவர்களுக்கு அந்த ஆடையின் மீது அப்படியொன்றும் பிடிப்பு கிடையாது, சே இந்த சேலை வேற என்று சலித்துக் கொண்டு அதை சரி செய்து கொள்ளும் பெண்களும் இந்தப் புடவையைக் கட்டிகிட்டு புறப்படறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். புடவை கட்டிய ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும், போட்டுக் கொள்ள வசதியான நாகரிக ஆடைகளின்மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது. பழகிப் போனதால்தான் புடவையை கட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி பேண்ட் சட்டை அணிந்து கொண்டு இரண்டு சக்கர வாகனங்களில் வேகமாகப் போகும் பெண்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்கிறார் வழக்கறிஞரும், பேச்சாளருமான திருமதி அருள்மொழி.

தையல் இயந்திர வசதி இல்லாத காலகட்டத்தில் தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள்தான் புடவையும், கச்சையும் தையல் இயந்திரம் வந்த பிறகு கச்சை ஜாக்கெட் ஆக மாறிவிட்டது. புடவை மட்டும் புடவையாகவே இருக்கிறது.

புடவை, இன்றைய பெண்களுக்கு வழங்கும் சமூகச் சிக்கல்களும் நிறைய உண்டு. பேருந்தில் தளர்ந்து விட்ட தனது சேலையைச் சரி செய்து கட்டிக் கொள்ள இடமில்லாமல் மிகவும் தளர்ந்து போனார் ஒரு பெண்மணி. நெரிசலில் நீந்தி பேருந்தைவிட்டு இறங்கிவிட்ட பின்பும் சில பெண்கள் தனது சேலை முந்தானையைச் சிரமப்பட்டு இழுப்பதும் ஆங்காங்கே காணப்படும் காட்சியாகி விட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால், ஆண்களுடன் சேர்ந்து சரிசமமாக உழைக்கவும், உயரவும் முனைந்திருக்கும் பெண்களுக்கு புடவை என்பது பொருத்தமான ஆடையாகத் திகழவில்லை. அதனால்தான், இது வேலைக்கு ஆகாது என்று முடிவோடு இன்றைய இளம் பெண்கள் ஓடியாடி வேலை செய்ய வசதியாக இருக்கும் ஆடைகளுக்கு மாறிவிட்டார்கள். புடவை என்னோடு போகட்டும் என் மகள் அவளுக்கு வசதியானதை அணிந்து கொள்ளட்டும் என்று தன் கனவை தனது மகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளும் தாய்மார்களும் இருக்கிறார்கள்.

சௌர்யமான ஆடை, அசௌகர்யமான ஆடை என்றுதான் நாம் பார்க்க வேண்டுமே தவிர சேலை கட்டியவள் குடும்பப் பெண்; மாடர்ன் டிரஸ் அணிந்தவள் அடங்காப் பிடாரி என்கிற பழைய தமிழ்த் திரைப் படங்களின் கருத்தை நாம் ஏற்கத் தேவையில்லை.

எந்த ஒரு செயலுக்கும் இரண்டு விதமான தடைகள் இருக்கின்றன. ஒன்று நேரடியானது. மற்றொன்று மறைமுகமானது. நேரடியான தடைகளை விட மறைமுகமான தடைகளே சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு பல நூறு முறை மாராப்பைச் சரி செய்ய வேண்டிய விதத்தில் ஒரு ஆடை அமைக்கப்பட்டிருக்கும்போது சம்பந்தப்பட்ட கைகள் சமூகத்துக்காகப் பாடுபடுவது, எப்படிச் சாத்தியமாகும்?

சேலை கட்டும் பெண்களுக்கு வாசம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சியை விட, அது அவர்களுக்கு விஞ்ஞான பூர்வமாகவும், வசதியாகவும் இருக்கிறதா என்பதை ஆராய்வதுதான் பெண்களுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள கடமையாக இருக்கும்.

ஜெயபாஸ்கரன்

Pin It