மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க வேண்டுமென்பதாகவும் முயற்சி எடுத்தும் வருகின்றோம்.

இதைப் பற்றி பல சமூக மகாநாடுகளிலும், பல சீர்திருத்த மகாநாடுகளிலும் பேசி தீர்மானங்களும் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் அதை அனுசரித்து அது அமுலில் வரத் தக்க ஏற்பாடுகள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உடனே அங்கு மதம் வந்து குறுக்கே விழுந்து அம்முயற்சிகளை அழிப்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றதும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே பெரிதும் நாம் மனித இயற்கைக்கு விரோதமான மதங்களும் கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டுமென்று முயற்சித்து வருகின்றோம். இம்முயற்சிக்கு யார் எதிரிடையாக இருந்தபோதிலும் நாம் ஒருசிறிதும் லக்ஷியம் செய்யாமல் இடையூறான மதங்களையும் அதற்கு ஆதாரமான சாமிகளையும் கூட ஒழித்தாக வேண்டும் என்றே சொல்லுகின்றோம்.

periyar 650சமீப காலத்தில் சென்னை சட்ட சபையில் இது விஷயமாய் சட்டம் செய்வதைப் பற்றி வாதம் நடைபெற்ற சமயத்தில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைச் சேர்ந்த மாஜி மந்திரி சர். ஏ.பி. பாத்ரோ அவர்கள் சற்று மாறுதலாய் பேசியதற்காக அவரை, ‘பார்ப்பனரல்லாதார் கக்ஷி ஸ்தானத்தை ராஜிநாமா கொடுத்துவிட்டு பார்ப்பனர் கக்ஷிக்கு போய்விட வேண்டுமென்றுகூட எழுதியிருந்தோம். அவரை, ‘இனி பார்ப்பனரல்லாதார் கக்ஷியைச் சேர்ந்தவர் என்று சொல்வது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானம்’ என்று கூட எழுதியிருந்தது வாசகர்களுக்குத் தெரியும். இந்நிலையில் சென்ற வாரம் இந்தியா சட்டசபையில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போது தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் பெரிதும் இம்மசோதாவிற்கு விரோதமாய்ப் பேசியிருப்பதாகவும், பலர் தனி விண்ணப்பம் கொடுத்து இருப்பதாகவும் அதில் சில மகமதிய அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருப்பதாகவும் தெரிய வருவதுடன் பல சங்கராச்சாரிகளும் சாஸ்திரிகளும் ‘ராமராஜ்யம்’ நடத்தும் மகாராஜாக்களும் இம் மசோதாவுக்கு விரோதமாய் அரசப் பிரதிநிதியிடம் தூது போனதாகவும் தெரிய வருகின்றது.

இந்த வருணாச்சிரமக்காரரோடு சில மகமதியர்களும் சேர்ந்து கொண்டதானது அச்சமூகத்திற்கே அவமானத்தை விளைவித்த காரிய மென்பதோடு மனித சமூக உரிமைக்கே கேடு விளைவித்ததாகுமென்றே கருதுகிறோம் . அவர்களைப் பற்றிய மற்ற விஷயங்களையும், அதில் இவர் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து வாழ வேண்டிய அவசியத்தில் இருக்கிற விஷயங்களையும் வெளிப்படுத்தவும், அவர்களைக் கண்டிக்கவும் ஆன காரியங்களை அச்சமூகத் தலைவர்களுக்கும் அச்சமூக பத்திரிகைகளுக்குமே விட்டுவிட்டு நமது பிரதிநிதி என்னும் உரிமையின் பேரால் நடந்து கொண்டவர்களைப் பற்றி சற்று விசாரிப்போம்.

இது விஷயமாய் இந்திய சட்டசபையில் நடந்த முழு விபரத்தையும் எழுத நமக்கு போதிய இடமில்லாவிட்டாலும் அம் மசோதாவிற்கு விரோதமாய்ப் பேசிய தமிழ்நாட்டுப் பிரதிநிதியும் இந்து மத வருணாசிரமப் பிரதிநிதியும் ஆகிய திரு. எம்.கே. ஆச்சாரியார் அவர்களின் போக்கை சற்று கவனிப்போம்.

திரு. ஆச்சாரியார் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில், “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை” என்றும், “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்து விடும்” என்றும், “குடும்ப வாழ்க்கை துக்கமயமாகி சதா ஆபத்திற்குள்ளாகி இருக்கும்” என்றும், “புருஷர்களுக்கு சிறைத் தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும்” என்றும், “பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசி இருக்கின்றதாக தெரிய வருகின்றது. இவைகள் (சு-மி, த-நா) பத்திரிகைகளில் காணப்படுகின்றதுடன் சுதேசமித்திரன் நிரூபரும் திரு. ஆச்சாரியாரை ஆதரித்தும் புகழ்ந்தும் எழுதி இருக்கின்றார்.

பாலிய விவாகமில்லாவிட்டால் பெண்கள் கற்பு கெட்டுப் போகும் என்று சொல்வதும் வாழ்க்கையில் துக்கம் ஏற்படும் என்று சொல்வதும் எவ்வளவு மனந்துணிந்து சொன்ன அயோக்கியத்தனமான வார்த்தைகளாகும் என்பதை வாசகர்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். இது பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப் பற்றி அவ்வளவு கவலை இல்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி என்கின்ற முறையில் பேசியிருப்பதால் நாம் அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

நம்மில் அனேகர்கள் இதுவரை பெண்களை சுமார் இருபது வயது வரை கூட வைத்திருந்து விவாகம் செய்து கொடுக்கின்றார்கள் என்பதும், இப்போதுதான் வர வர பார்ப்பனீயத்திற்கு அடிமைப்பட்டு பார்ப்பனர்களைப் பார்த்து காப்பியடித்து தாங்களும் உயர்ந்த ஜாதிக்காரர் என மதிக்கப்பட வேண்டும் என்கின்ற ஆசையில் பலர் சிறுபிராயத்திலேயே கலியாணம் செய்து விடுகின்றார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. திரு. ஆச்சாரியாரின் வாக்குமூலப்படிக்குப் பார்த்தால் பக்குவமான பின்னோ, பக்குவமாகி 2 வருஷம் 4 வருஷம் பொறுத்தோ விவாகம் செய்யப்பட்ட பெண்கள் கற்பில்லாமல் விபசாரிகளான பிறகுதான் விவாகம் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக ஏற்படுகிறது. திரு. ஆச்சாரியார், ஒரு சமயம் தாம் மற்றவர்களைப் பற்றி அப்படிச் சொல்லவில்லையென்றும், தம்முடைய சமூகத்தைப் பற்றித்தான் தாம் சொன்னதாகச் சொல்வாரானால் தம் சமூகத்துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கல்யாணமில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்று கருதிச் சொன்னவராகவே நினைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தியாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரு. ஆச்சாரியார் இப்படிச் சொல்ல நேர்ந்தது அந்தப் பார்ப்பனியத் தன்மையே யொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பனியத் தன்மையான இந்து மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணமாகக் காட்டி உறுதி வாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி என்னும் ‘உத்தம ஸ்திரீ’யின் யோக்கியதையைப் பார்த்தால் மற்ற பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாவது:-

“ஸ்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாகக் காவல் காக்க வேண்டும்”.

என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தைக் காப்பாற்றினதாக இந்து மதம் - அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம் சொல்லுகிறது. இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது திரௌபதையும் அருந்ததி சொன்னதைதான் சொல்லி சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:-

“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக இருக்க முடியாது” என்பதாக பாரதத்தில் இதைப் பற்றிச் சொல்லும் போது “வசிஷ்டர் நல்லற மனைவியை அணையாள்” அதாவது அருந்ததிக் கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்கைகளையுடைய இந்த இந்துமதப் பிரதிநிதியிடம் அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இதே யோக்கியர் தான் மூன்று வருஷத்திற்கு முன் திருச்சியில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “ஒரு பார்ப்பனரல்லாத பையனுடன் ஒரு பார்ப்பனப் பையன் ஒரு வேளை சாப்பிட்டால் ஒரு மாதம் பட்டினியிருப்பேன்” என்று சொன்னவர். இப்படிச் சொன்னபிறகுதான் செங்கல்பட்டு வடஆற்காடு தென்ஆற்காடு ஜில்லாக்களின் பிரதிநிதியாக அச்சில்லாவாசிகள் அவரை இந்தியா சட்டசபைக்கு அனுப்பினார்கள். இவருடைய தேர்தலுக்காகத்தான் பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள், காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் தொண்டை கிழியப் பிரசாரம் செய்தார்கள்.

எனவே இதிலிருந்தே நம் நாட்டு ஓட்டர்களின் யோக்கியதையையும் தேசீயவாதிகளின் யோக்கியதையையும் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

தவிர, இப்படிப்பட்ட ஆசாமிகளையும் இவர்களுக்கு ஆதாரமாயுள்ள மதங்களையும் இவர்களை இந்திய சட்டசபைக்கனுப்பிய காங்கிரஸையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் யோக்கியர்கள்தான் மிஸ் மேயோ-வைக் குற்றஞ் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்பதை வாசகர்களே தெரிந்து கொள்வார்களாக.

நிற்க, திரு. ஆச்சாரியார் சொன்ன மற்றொரு விஷயத்தைப் பற்றி கவனிப்போம். அதாவது பால்ய விவாகம் செய்யாவிட்டால் குடும்ப வாழ்க்கையில் துக்கம் ஏற்படுமென்கிறார்.

என்ன துக்கமேற்படுமென்பது நமக்கு விளங்கவில்லை. அதைப் பற்றி விரிக்க நமக்கு வெட்கமாயிருக்கிறது. அன்றியும் புருஷர்கள் சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாய் விடுமென்றும் சொல்லுகிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவு படுத்துவதாகிறது. இந்து மதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணாசிரமும் பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் அஸ்திவாரமாகக் கொண்டதாதலால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய சட்டசபைப் பிரதிநிதிகளிடத்திலிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.

உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே, கடவுள் பெண் சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில் சந்தேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்படவும் செய்ததிலிருந்தும், சீதையும் ஒரு சமயத்தில் புருஷனை விட்டுப் பிரிந்தபோது, “இதோ பார் நான் இப்பொழுதே கர்ப்பமாயிருக்கிறேன்”; என்றும், “இது புருஷனிடத்திலேயே உண்டான கர்ப்பம்” என்றும் வயிற்றைத் திறந்து காட்டியதோடு, தான் கொஞ்சகாலம் புருஷனைவிட்டு நீங்கி இருக்க நேருவதாலேயே தான் விபசாரத்தனம் செய்து கர்ப்பந்தரித்து விட்டதாக தன் புருஷன் கருதக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருப்பதிலிருந்தும் (வால்மீகி ராமாயணம்) திரு. ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரிய மொன்றுமில்லை.

ஆனால் இவைகள் மனிதத் தன்மைக்கு ஏற்றதான வார்த்தைகளாகுமா என்றும் நமது பெண் சகோதரிகளுக்கு நியாயம் செய்ததாகுமா என்றும் கேட்கின்றோம். இதைக் கேட்ட அன்னிய நாட்டார்கள் என்ன நினைப்பார்கள். எனவே நமது மக்களின் முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் ஏற்றதான சீர்திருத்தங்கள் செய்யப் புறப்படும் போதெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தார் இருந்து கொண்டு நம்மை இழிவுபடுத்தி முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு வருவதை இனி எத்தனை காலத்திற்குத்தான் நாம் பொறுத்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. இவை இப்படியிருக்க இவ்விஷயங்களில் ஒரு சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமல் தேசத்தின் பேராலும், சாமியின் பேராலும், சமயத்தின் பேராலும், சமயாச்சாரியாரின் பேராலும், புராணங்களின் பேராலும் உலகத்திற்கு நன்மையைச் செய்கிறவர்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வருகிறவர்களைப் பார்க்கும்போது திரு, ஆச்சாரியாரை விட இக் கூட்டத்தார்களே அதிகமான அயோக்கியர்களும் கொடுமைக்காரர்களும் மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு எதிரிகளுமாவார்கள் என்று தோன்றுகிறது.

ஆதலால் பொது மக்கள் இதிலிருந்தாவது அறிவு பெற்று தேசீயமென்றும், சைமன் பகிஷ்காரமென்றும், சமயப் பாதுகாப்பென்றும், தேசீயத் திட்டமென்றும், முழு சுதந்திரமென்றும் சொல்லிக் கொண்டு திரியும் சுயநல வீணர்களின் வலையில் சிக்கி ஏமாந்து போகாமல் உண்மையான சீர்திருத்தத்திற்கும் சுயமரியாதைக்கும் ஏற்ற கொள்கைகளில் ஈடுபட்டு அரசியலையும் சமூக இயலையும் கைப்பற்றி அதை தக்க வழியில் திருப்ப வேண்டியது அவசியமென்று மற்றுமொரு முறை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 23.09.1928)

Pin It