குஜராத் கலவரம் நடந்து முடிந்து ஏறக்குறைய 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் வழிகாட்டுதல்படி இன அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் சமன்புராவில் உள்ள குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

zakia jaferyகலவரம் நடப்பதற்கு முன்பு இசான் ஜாப்ரி அதிகார மட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுடனும் குறிப்பாக மோடியுடனும் தொலைபேசியில் பேசியுள்ளார். எப்படியாவது இந்தக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தும்படியும் அப்பாவி முஸ்லீம்களைக் காப்பாற்றும்படியும் மோடியிடம் மன்றாடி இருக்கின்றார். அவரிடம் மோடி “நீங்கள் இன்னும் கொல்லப்படாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என வக்கிரமாக பேசியதுடன் மிகவும் கீழ்த்தரமாக திட்டியுள்ளார். இதை இசான் ஜாப்ரி அப்போது தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த அந்த அப்பாவி முஸ்லீம்களிடம் சொல்லி வேதனைப்பட்டு இருக்கின்றார். பின்பு வேறுவழியில்லாமல் தம்மை நம்பி வந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அவரே சென்றிருக்கின்றார்.

உடல் முழுவதும் மதவெறியால் நிரப்பப்பட்ட அந்தக் காவி பயங்கரவாதிகள் இசான் ஜாப்ரியை துண்டுத்துண்டாக வெட்டி கொலை செய்து அவர்களது மொழியில் சமாதானத்தை நிலைநாட்டி இருக்கின்றார்கள். மேலும் அவரது வீட்டில் அடைக்கலம் தேடிவந்த முஸ்லீம்கள் அனைவரையும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பார்க்காமல் அந்தப் ‘பாரத மாதாவின்’ பிள்ளைகள் மனித இனமே வெட்கி தலைகுனியும் வண்ணம் மிகக்கொடூரமாக கொலைசெய்து தங்களது மதவெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

இந்த இனப்படுகொலையில் தொடர்புள்ள மோடி உட்பட அனைவர் மீதும் விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஜாகியாவின் புகார் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ யின் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. 6 வருடங்கள் விசாரணையை மேற்கொண்ட இந்தக்குழு இறுதியில் மோடி உட்பட இதில் தொடர்புள்ளதாக கூறப்படும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற அரிய உண்மையைக் கண்டுபிடித்தது. எனவே குற்றம் சாட்டப்பட்ட மோடி உட்பட அனைவரையும் விடுவித்து வழக்கை முடித்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்று அனைவரையும் விடுவித்தது.

இதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாகியா. உச்ச நீதிமன்றமோ மீண்டும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாகியா மனுதாக்கல் செய்யலாம் என சொல்லி அவரை திரும்ப குஜராத்துக்கே அனுப்பியது. ஜாகியா அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 514 பக்கங்கள் கொண்ட அவரது மனுவில் சீடிக்களும் 3 இணைப்பு ஆவணங்களும் இடம்பெற்றது. 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி கலவரம் குறித்து விசாரித்த சிறப்புப் புலனாய்வுக்குழு போதிய ஆதாரங்கள் இருந்தும் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரின் மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆகவே அந்த குழுவின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீதான குற்றப் பத்திரிக்கையை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் மோடியின் குஜராத்தில் அனைத்து அரசு கட்டுமானங்களும் காவிமயமாக்கப்பட்டுவிட்டது என்பதை அகமதாபாத் பெருநகர மாஜிஸ்டேட் நீதிமன்றம் நிரூபித்தது. அது ஜாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கலவரத்தில் மோடி உட்பட மற்ற அனைவருக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்து வந்தது. அதன் தீர்ப்பு ஜூன் 2 ஆம் தேதி வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 66 பேரில் 6 பேர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டனர். எஞ்சியுள்ள 60 பேரில் 24 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. அதில் 11 மீது மட்டுமே கொலை குற்றமும் 13 பேர்மீது மற்ற பிரிவுகளின் கீழ் குற்றம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மீதமுள்ள 36 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும் கூட்டுச்சதி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம் இந்தக் கலவரம் தன்னெழுச்சியாக நடந்த ஒன்றாக காட்ட நீதிமன்றம் முற்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட பிபின் படேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ஜி. எர்டா போன்றவர்கள் விடுவிக்கப்பட்டனர் இந்நிலையில் தண்டனை விவரத்தை 6 ஆம் தேதி அறிவிப்பதாக சொன்ன நீதிமன்றம் பின்னால் 9, 11, 13 என தள்ளிப் போட்டுக்கொண்டே சென்றது. கடைசியாக ஜூன் 17 ஆம் தேதி தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.

அதில் கொலை குற்றம் சாட்டப்பெற்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ஒரு நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை வழங்குவதற்கு எதற்காக நான்கு முறை தண்டனை தேதி தள்ளி வைக்கப்பட்டது என தெரியவில்லை. இதன் பின்னணியில் ஏதோ உள்ளடி வேலைகள் நடைபெற்று இருக்குமோ என இயல்பாகவே சந்தேகம் எழுகின்றது. ஆனால் மோடி ஆட்சியில் இருக்கும் போது நேர்மையான தீர்ப்பை இதில் பெற்றுவிட முடியும் என நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஏற்கெனவே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்த வழக்கிலும் அதேதான் நடந்துள்ளது. முக்கிய குற்றவாளிகளை நீதிபதி பி.பி தேசாய் வேண்டுமென்றே ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துள்ளார்.

மேலும் தீர்பில் “குல்பர்க் படுகொலை சம்பவம் நடந்த நாள் நாகரிக சமூகத்தில் ஒரு இருண்ட தினம் . வன்முறை சம்பவம் நடந்த பிறகு குற்றம் சாட்டப்பட்ட 90 சதவீதம் பேர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது யாரும் புகார் சொல்லவில்லை. ஜாமீன் காலத்தில் தவறு இழைத்ததாகவும் புகார் வரவில்லை. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க தகுந்த வழக்காக இதை கருதவில்லை……” என்று கூறியிருக்கின்றார். நீதிபதி ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுக்காமல் தன்னுடைய ‘இந்து’ மனக்கண்ணோட்டத்தில் இருந்து தீர்ப்பு கொடுத்திருக்கின்றார். நீதிபதியின் முதன்மையான நோக்கம் குற்றவாளிகளைக் கூடுமான வரைக்கும் தப்ப வைப்பதாகவே இருந்துள்ளது. 90 சதவீதம் பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் என்பதும், அவர்கள் மீது யாரும் புகார் சொல்லவில்லை என்பதும் எப்படி மரண தண்டனை வழங்கத் தகுதியில்லாத வழக்காக இதை மாற்றும் என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை குற்றம் சாட்டப்பெற்ற அனைவரும் முஸ்லீம்களாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பொது மனட்சாட்சியை திருப்திபடுத்த அவர்கள் அனைவருக்கும் நீதிபதி மரண தண்டனை வழங்கியிருப்பார் என நினைக்கின்றேன்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியிருக்கின்றார். ஏற்கெனவே 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த காலங்களில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எப்படி பொறுப்பற்று நடந்து கொண்டது என்று நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம். இந்தியாவின் அனைத்து அதிகார அமைப்புகளும் காவிமயமாய் மாற்றப்பட்டிருக்கையில் ஜாகியா ஜாப்ரியின் நீதிக்கான போராட்டம் வெல்லுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜாகியா ஜாப்ரிக்கு எப்படியும் நீதியை நேர்மையான வழியில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பது போல அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களுக்கும் இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி இல்லாமல் போனால் அதற்குத் தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்த இந்திய அரசே முழு பொறுப்பு.

- செ.கார்கி