vasanthidevi thirumavalavan

முதல்வர் செயலலிதாவிற்கு எதிராகப் பேராசிரியர் வசந்திதேவி அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள்; ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்திச் சாதனை புரிந்திருக்கிறார்கள். தேர்தலில் வசந்திதேவி வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ விடுதலைச் சிறுத்தைகள் இப்பொழுதே மகத்தான வெற்றியைப் பதித்து விட்டார்கள்.

முதலில் விடுதலைச் சிறுத்தைகள் தம் மீதான தலித் கட்சி, அதுவும் தலித்தில் ஒரு பிரிவினருக்கான கட்சி என்ற முத்திரையை உடைத்திருக்கிறார்கள். அண்மையில் திருமா அளித்த நேர்வொன்றில் விசிக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான கட்சி என வலியுறுத்தியிருந்தார். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அனைத்துச் சனநாயக ஆற்றல்களையும் ஒன்றிணைக்கும் தேவையையும் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது அவர் கூற்றில் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு ஏற்படவில்லை. சொந்தப் பட்டறிவே அதற்கான காரணம்.

அது திருமா அவர்களின் அரசியல் தொடக்கக் காலம். அப்பொழுது தலித் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முதல் கலந்துரையாடல் ஈரோட்டில் நடைபெற்றது. அதில் தோழர்கள் திருமா, பொழிலன், அதியமான் முதலானோர் கலந்து கொண்டனர். தலித் அல்லாத தோழர் குறிஞ்சி அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதற்கடுத்த கலந்துரையாடல் கோவையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள என்னையும் அழைத்திருந்தனர். கோவைக்குத் தோழர் அதியமான்தாம் என்னை அழைத்துச் சென்றதாக நினைவு. குறிஞ்சி இந்நிகழ்வுக்கு வரவில்லை. ஆனால் கலந்துரையாடல் தொடங்கவிருந்த நிலையில் என்னை அதில் அனுமதிக்க மறுத்து விட்டனர். நான் அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டேன். காரணம் நான் தலித் இல்லை என்பதுதான். முதல் கூட்டத்தில் குறிஞ்சியை அனுமதித்தவர்கள் பின்னர் தலித் அல்லாதவரை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்ததின் காரணம் விளக்கப்படவில்லை.

இன்று தலித்துகளுக்கான கட்சி என அறியப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலித் அல்லாத ஒருவர் போட்டியிடுவது எவ்வளவு பெரிய மாற்றம். வசந்திதேவி தேர்வை முற்போக்காளர் அனைவரும் வரவேற்கின்றனர். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் விரோதக் கூட்டணி எனக் கடுமையாக விமர்சித்த (பார்க்க கீற்று இணைய இதழ்- மக்கள் நலக் கூட்டணியா மக்கள் விரோதக் கூட்டணியா?) என்னைப் போன்றோரையும் கூட இத்தேர்வு கவர்ந்திழுத்திருப்பது விசிகவுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வெற்றிதான்.

வெற்றி தோல்விகளைப் பற்றிய கவலை இல்லை என்றால் தேர்தலைக் கூட நம் போராட்டக் களங்களில் ஒன்றாக மாற்ற முடியும். அதற்கு வெற்றிக் கூட்டணி தேவை இல்லை. கொள்கைக் கூட்டணிதான் தேவை. இதைத்தான் மேலே குறிப்பிட்ட அக்கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன். வசந்திதேவி அவர்களும் இதைத்தான் வேட்பாளர் அறிமுகத்திற்குப் பின்னரான நேர்வில் அடிக்கோடிட்டுள்ளார்கள்.

“யாரையும் எதிர்க்க வேண்டும் என்பதற்காகப் போட்டியிடவில்லை. சில விஷயங்களை முன் வைக்க வேண்டும் என்று போட்டியிடுகிறேன். கல்வியில் நான் கொண்டுள்ள கொள்கை ம.ந.கூட்டணியின் குறைந்தபட்சச் செயல்திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தக் கூட்டணி சார்பில் போட்டியிட ஒப்புக் கொண்டேன். தேர்தலில் வெற்றி பெறுவேனா என்று தெரியாது. ஆனால் என்னால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.”(தி இந்து, தமிழ் ஏப்பிரல் 21)

இங்கு விசிக வசந்திதேவியைத் தேர்ந்தெடுத்திருப்பது கொள்கைக் கூட்டணி. வசந்திதேவி விசிக கட்சியினர் இல்லை. விசிகவில் உறுப்பினராகச் சேரவில்லை என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். விசயகாந்த் போல் ஊரறிந்தவரோ பெருவாரியான வாக்குகளைத் தம் கைவசம் வைத்திருப்பவரோ அல்லர் அவர். விசிக அவரைத் தேர்வு செய்ததற்கான காரணம் அவர் தாங்கி நின்ற கொள்கைகளே.

அதிகாரத்திற்கு ஆதிக்கத்திற்கு ஆணவத்திற்கு அகம்பாவத்திற்கு செயலலிதா குறியீடென்றால் அவ்வெல்லாவற்றிற்கும் எதிரான குறியீடே வசந்திதேவி அவர்கள். அவர்களின் ஆசிரியப் பணிக்காலம் தொடங்கி இன்று வரை எல்லா வகையான அதிகார ஆதிக்க வடிவங்களையும் எதிர்த்து நிற்பவர். ஆகச் சிறந்த அறிவுப் புலமை பெற்றவர். எனினும் எளிமையிலும் எளிமையானவர். துணைவேந்தராகப் பதவி வகித்த காலத்திலும் அவர் அதிகாரத்தை வெளிப்படுத்துவராக இருந்ததில்லை. ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவர். தம் செயல்பாடுகளில் அதை அவர் மெய்ப்பித்து வந்துள்ளார்.

சர்க்கரைச் செட்டியார் மகள் வழிப் பேத்தியான வசந்திதேவி அவர்கள் அகமணமுறையை உடைத்தெறிந்த குடும்ப மரபு உடையவர். சாதியைக் கட்டுடையாமல் காத்து வரும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக உறுதியுடன் போராடும் சீரிய பெண்ணியல்வாதி. சிசுக்கொலைக்கெதிரான அவருடைய களப்பணிகள் மாற்றத்திற்கு வித்திட்டவை. மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் பொறுப்பேற்று அவர் ஆற்றிய பணிகளை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வித் தளத்தில் அவர் ஆற்றி வரும் பணிகள் தமிழ்நாட்டுக் கல்வி வரலாற்றில் வரலாறாக அமையக் கூடியவை. தாம் ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு பொறுப்பிலும் மன ஓர்மையுடனும் பிறருக்கு எடுத்துக் காட்டாகவும் செயல்பட்டவர் என்று அவரைப் பாராட்டுகிறது ஆங்கில இந்து நாளேடு (ஏப்பிரல் 21). நேர்மை அவர் வாழ்வின் அடிநாதமாக விளங்குகிறது என்பது அதன் புகழ்மொழி.

இங்கே ஓரிரு நிகழ்வுகளை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ்த்தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக 18-09-2005 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரை நினைவை விட்டு அகலாதது. அம்மாநாட்டிற்கு அப்போதைய துணைவேந்தர்கள் சிலரையும் பல்துறை அறிஞர்களையும் அழைத்திருந்தோம். தமிழ்வழிக் கல்விக்குப் பாடாற்றுவர்களாகப் பெயர் பெற்றிருந்த அவர்களில் சிலரை மாநாட்டிற்கு வரவழைத்து அனுப்பி வைப்பதற்குள் நாங்கள் பட்டபாடு பெரும்பாடு. கசப்பான பட்டறிவுகள் அவை.

ஆனால் எங்களுக்குச் சிறிதளவும் சிரமம் ஏற்படுத்தாமல் தங்கள் சொந்த செலவில் வருகை தந்து மாநாட்டிற்குச் சிறப்பு சேர்த்தவர்கள் இருவர். ஒருவர் வசந்திதேவி அவர்கள். இன்னொருவர் ஆசிரியர் சமுதாயத்தால் எஸ்எஸ்ஆர் என அன்போடு அழைக்கப்படும் இராசகோபால் அய்யா அவர்கள். இருவருமே தங்குவதற்கான அறை ஏற்பாடோ மாநாட்டு அரங்கிற்கு வர மகிழுந்து ஏற்பாடோ எதுவும் வேண்டாம் என மறுத்து விட்டார்கள். எங்களிடம் தொகை எதுவும் வாங்க மறுத்த இருவரும் மாநாட்டிற்கு நன்கொடை அளித்துச் சென்றனர் என்பது கூடுதல் சிறப்பு. அதிலும் இராசகோபால் அய்யா அவர்கள் அஞ்சலில் அனுப்பி வைத்த காசோலை வந்து சேரவில்லை என அறிந்தவுடன் இன்னொரு காசோலையை முகமலர்ச்சியுடன் வழங்கிச் சென்றார்.

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்வழிக் கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள் சிலவற்றில் வசந்திதேவி அவர்களுடன் பங்கு பெற்றிருந்தாலும் ஈரோடு கொங்கு அரங்கில் அரசு சார்பில் நடைபெற்ற தாய்மொழிக் கல்வி அரங்கில் அவர்கள் ஆற்றிய கனலுரைதான் மறக்க இயலாதது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் அவர்களின் ஏற்பாடு அது. அக்கருத்தரங்கில் குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டார். ஆங்கிலவழிப் பள்ளி நடத்துவதின் நோக்கம் பண ஈட்டலே ஒழிய கல்வியை வளர்ப்பதன்று என்று முழங்கிய பேராசிரியர் அவர்கள் கல்வி வணிகர்கள் தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதாகச் சாடினார். அரங்கில் ஆங்கிலவழிப் பள்ளி நிறுவனர்கள் சிலரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மனதிலும் தைக்கும்படியாக அவ்வுரை அமைந்திருந்தது.

வசந்திதேவி அவர்கள் ஓர் அரசியல்வாதி என்ற முத்திரையுடன் செயல்படவில்லையே ஒழிய தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் அவர் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். தமிழ்நாட்டின் முற்போக்கு அரசியலை முழுமையாக அடையாளப்படுத்தும் அவர் தமிழ்நாட்டுப் பிற்போக்கு அரசியலின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரரான செயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட அத்துணைத் தகுதிகளையும் பெற்றவர். தமிழ்நாட்டின் மாற்று அரசியலை முன் வைக்கும் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். தேர்தல் அரசியலை முற்றாகப் புறக்கணிக்கும் ஆற்றல்கள் கூட ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடாக இப்போட்டியைக் கருதி ஆதரிக்கலாம். அதனால் அவர்கள் நிலைப்பாட்டிற்கு எந்த ஊறும் ஏற்படாது. மாறாக முற்போக்கு ஆற்றல்கள் ஒன்று சேர வழி வகுக்கும்.

கடைசியாக ஒன்று. உண்மையிலேயே கருணாநிதிக்குச் செயலலிதாவைத் தோற்கடிக்கும் எண்ணம் இருப்பின் திமுக வேட்பாளரை விலக்கிக் கொண்டு வசந்திதேவி அவர்களை ஆதரிக்க வேண்டும். ஏற்கனவே திமுக அவ்வாறு செய்ததற்கான வரலாறு இருக்கிறது. 1991ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் செயலலிதாவை எதிர்த்து தாயக மறுமலர்ச்சிக் கழகம் சார்பில் டி.இராசேந்திரன் போட்டியிட்ட பொழுது திமுக தன் வேட்பாளரை விலக்கிக் கொண்டு இராசேந்திரனை ஆதரித்தது. அப்போது செயலலிதாவைத் தோற்கடிப்பதே ஒரே நோக்கம் என அறிவிக்கப்பட்டது. இப்பொழுதும் அதே நோக்கத்தை முன் வைத்து திமுக தன் வேட்பாளரை விலக்கிக் கொண்டால் அது பெரும் தாக்கம் செலுத்தக் கூடிய அரசியல் வல்லாண்மையாக அமையும்; வரலாறும் வாழ்த்தும்; ஒரு மிகச் சிறந்த கல்வியாளரையும் பெரியாரியச் செயல்பாட்டாளரையும் ஆதரித்த பெருமையும் வந்தடையும். செய்வாரா கருணாநிதி? அவருக்கு நெருக்கமாக இருக்கும் சுபவீ போன்ற கல்விப் புலம் சார்ந்த அறிஞர்கள் எடுத்துரைப்பார்களா?

1967இல் காமராசரை எதிர்த்து நின்ற சீனிவாசனுக்கு மாணவர் படை ஒன்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தது. அன்று காங்கிரசின் மீதும் ப்கதவச்சலத்தின் மீதும் மாணவர்களுக்கிருந்த ஆற்றவொண்ணாச் சினம் கல்வித் தந்தை காமராசரைத் தோற்கடித்தது. செயலலிதா ஒரு மக்கள் விரோதச் சக்தி. தோற்கடிக்கப்பட வேண்டியவர். அவர் ஒன்றும் தோற்கடிக்கப்பட முடியாத பேராற்றல் அன்று. பர்கூரில் அன்று பெரிதாக அறியப்படாத சுகவனத்தால் தோற்கடிக்கப்பட்டவர்தான். இன்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் களமிறங்கினால் வசந்திதேவி அவர்களுக்கு வெற்றிக் கனியைப் பரிசாக வழங்கலாம். அத்தகைய ஓர் அணியை விடுதலைச்சிறுத்தைகள் திரட்ட வேண்டும். செய்வார்களா?

எது எப்படி இருப்பினும் வசந்திதேவியைத் தம் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த விடுதலைச்சிறுத்தைகளை வாழ்த்துவோம். செயலலிதாவைத் தோற்கடிக்க வல்ல ஓர் அணியைத் திரட்ட அவர்களுக்கு உதவுவோம்.

(ஒரு பின் குறிப்பு. இந்து சமஸ் கட்டுரையை என் கட்டுரையை எழுதிக் கீற்றுவுக்கு அனுப்பும் நிலையில்தான் பார்த்தேன். அதுவும் என் நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் கட்டுரைதான்.)

- வேலிறையன்

Pin It