bjp tamilnadu

நம் தமிழகத்தில் இன்னம் இரண்டு மாதங்களில் தேர்தல். பல கட்சிகள் கூட்டணிக்காக சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி விட்டன.

 இதில் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாவின் நிலை மிகப் பரிதாபமானது. அவர்களை எவரும் சீந்துவாரில்லை. ஏன் அப்படி? ஏனென்றால் பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் இருக்கும் ஓட்டும் குறைந்து டெபாசிட் காலியாகிவிடும் என்கிற பயம்தான்.

மேலும் அந்தக் கட்சி மத்தியில் கோலோச்சினாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு குண்டுமணிளவு கூட மக்களுக்கு நன்மை செய்யவில்லை. ஆனால் வாய்ச்சவடாலுக்கு மட்டும் குறைவில்லை.

மீனவர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தர துப்பில்லை.

பதவிக்கு வரும்முன் ஆதார் கார்ட் தேவையில்லை என்று உதார் விட்டவர்கள் பதவிக்கு வந்தபின் வேறு பல்லவி பாடுகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் அவர்களுக்கு ஒரு விளையாட்டுப்போல்.

இப்போது கடைசியாக தமிழக விவசாயிகளின் - கவனியுங்கள் தமிழக விவசாயிகளின் நிலங்களில் மட்டும் - அவர்களின் சொந்த நிலத்தைத் தோண்டி கெயில் குழாய் பதிக்கப் போகிறார்களாம். நாம் கேவலப் படுவதற்கு இது ஒன்றுதான் பாக்கி. உச்ச நீதி மன்றம் இதற்கு கடைசி ஒப்புதலும் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு மட்டுமே ஒரு அரசாணையை பிறப்பித்து இந்த அவலத்தை தடுத்து நிறுத்த முடியும்.

எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் என்னவெனில் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் இதைப் பெரிதாக எடுத்துப் பிரச்சாரம் செய்யாமல், உப்பு சப்பில்லாத மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதுதான்.

மற்ற அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு, நெடுஞ்சாலை அருகிலேயே கெயில் குழாய்கள் கொண்டு செல்லப் படுகின்றன. அனால் தமிழகத்தில் மட்டும் நம் விவசாயிகளின் நிலங்களை தோண்டுவார்களாம். இது நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்? நம் ரத்தம் கொதிக்க வேண்டாமா? அடுத்தவன் நம் மனைவியை கேட்பதற்கும், நம் விளைநிலத்தை தொடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இப்போதும் ஒன்றும் தாமதமில்லை. Better late than never. நாம் இந்த தேர்தலை முறையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. உடனடியாக நம் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி சிரோன்மணிகள் டெல்லிக்குப் படையெடுத்துச் சென்று, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து ‘கெயில் நிறுவனக் குழாய்கள் தமிழக விவசாயிகளின் நிலத்தில் பதிக்கப் படாது’ என்கிற உத்தரவாதத்துடன் ஒரு அரசாணையைப் பெற்றுக்கொண்டு வர முடியுமா? தேர்தலைக் காரணம் காட்டி அமீத்ஷாவைப் பயமுறுத்தி காரியத்தை சாதித்துக்கொண்டு வெற்றியுடன் திரும்ப முடியுமா? அந்த யோக்கியதை இருந்தால் மட்டுமே அவர்கள் தமிழக மக்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியும். அப்படி இல்லையெனில் நம் தமிழக விவசாயிகளும், தமிழக மக்களும் ஒரு ஓட்டுகூட பாரதீய ஜனதாவுக்கும் அதைச் சார்ந்த கட்சிகளுக்கும் போடக்கூடாது. சபதம் ஏற்றுக் கொள்வோமா?

சென்ற மத்திய ஆட்சியின்போது நாராயணசாமி என்கிற மத்திய உப மந்திரி இருந்தார். அவர் பாண்டிச்சேரி போகும் வரும் போதெல்லாம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்து உளறிக் கொட்டுவார். பார்க்க, கேட்க ஒரே காமெடியாக இருக்கும். அதே மாதிரி இந்த மத்திய ஆட்சியில் பொன்னர் ஆகி விடுவாற்போல் எனக்குத் தோன்றுகிறது. பொன்னரை மத்தியில் மதிப்பதேயில்லை. அவர் பாண்டிச்சேரி இவர் நாகர்கோவில்...அவ்வளவுதான் வித்தியாசம்.

டாக்டர் தமிழிசை, ஹெச் ராஜா, இல கணேசன் போன்றோர் இங்கிருந்தபடி வறட்டுத் தொண்டையில் கத்துவதை விட்டு விட்டு டெல்லிக்குச் சென்று நம் விவசாயிகளுக்காக காரியம் சாதிப்பார்களா? அரசாணையுடன் கம்பீரமாக திரும்பி வந்து மக்களை சந்திப்பார்களா?

சாதித்தால்தான் உங்களுக்கு தமிழகத்தில் ஒரு குறைந்தபட்ச மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் முக்காடு போட்டுக்கொண்டு முடங்கி விடுங்கள்.

பார்க்கலாம் உங்கள் வீரத்தை....

- எஸ்.கண்ணன்

Pin It