தமிழகத்தில் உயர் கல்வி பயில்வதற்கு கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி கல்விக் கடன் மறுக்கப்படுவதாக குற்றசாட்டு தினம் தினம் எழுவது உண்டு. இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வி முடிப்பதற்குள் எத்தனை முறை கல்விக் கடன் வாங்க வேண்டிய நிலைமை வரும் என்பது தெரியவில்லை 

விண்ணை முட்டும் கல்விக் கட்டணம்

school girl 350எஸ்.வி.எஸ் யோகா கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது அந்தக் கல்லூரியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய சொந்த வேலைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்தினர் என்பது தான். இதனைத் தொடர்ந்து, தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையாணது தமிழகமெங்கும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில், ‘தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு’வின் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டண நிர்ணய அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இன்னும் பல அதிர்ச்சிகள்!

அக்குழுவின் கட்டண நிர்ணயத்தின்படி, தமிழகத்தில் பெருநகரங்களில் உள்ள சில தனியார் பள்ளிகளின் கட்டணம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான கட்டணத்தைவிட அதிகம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலுக்கான கட்டணம் 19 ஆயிரம் ரூபாயாக இருக்கும்போது, சென்னையில் உள்ள ஒரு முன்னணி பள்ளியில் L.K.G கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் என்று இந்தக் குழு நிர்ணயித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் 10 ஆயிரமாக இருந்தால் இந்த பள்ளிகளின் விடுதிக் கட்டணம் அதைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல, மதுரை, ஈரோடு, மற்றும் கோவை ஆகிய மாநகரங்களில் உள்ள சில முன்னணிப் பள்ளிகளில், 30ஆயிரம் ரூபாய்க்கு மேல் L.K.G -சேர்க்கைக்கான கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் என்பது கல்விக் கட்டணம் மட்டுமே. இதைத் தவிர்த்து அவர்கள் வசூலிக்கும் இதர கட்டணம் என புத்தகம், விடுதி, போக்குவரத்து, மேலும் பல கட்டணம் இதில் உட்படுவது இல்லை. இந்த இதர கட்டணங்களைச் சேர்த்தால் ஆண்டுக் கட்டணமானது 1 லட்சத்தை தாண்டும். இதற்கு இந்த நிர்யணக் குழு எனப் செய்யப் போகிறது?

ஏற்கெனவே பெரும்பாலான தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணத்தினைப் பல்வேறு காரணங்கள் கூறி வசூலித்து வரும் சூழலில், இந்தப் புதிய கல்விக் கட்டணமானது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக மனஅழுத்தம் தரும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது. பல பெற்றோர்கள், குழு நிர்ணயித்த கட்டணத்தைதான் கட்டுவோம் என தமிழகம் முழுவதும் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடுபவர்களின் குழந்தைகளுக்கு, பள்ளிகள் தங்களாலான அனைத்து வகை அழுத்தத்தையும் கொடுத்து வருகிறன்றன. இதைப் பற்றி புகார் செய்தால் செய்முறை மதிப்பெண் மற்றும் அகமதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களைக் குறைத்துவிடுவார்களோ என்ற பயமும் பொற்றோர்களிடம் இருக்கிறது. இதை அரசும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய சூழலில், குழு நிர்ணயித்த கட்டணமே விண்ணை முட்டும் அளவிற்கு கூடினால், விளைவுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்! இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அந்தத் தீர்ப்பானது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இந்தக் குழுவின் கட்டண நிர்ணயத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது. கடிவாளம் இருந்தபோதே, சில சி.பி.எஸ்.இ பள்ளிகள் ஒன்றாம் வகுப்பிற்கே ஒரு லட்சத்துக்கும் அதிகமாக கட்டணம் வாங்கியது. இனி அப்பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வாங்குவார்கள் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

அரசுப் பள்ளிகளுக்கு என்ன குறை?

அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் இல்லையா?அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லையா? என்று அரசுப் பள்ளியில் சேர்க்கச் சென்னால், ‘அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புதான் மோசமாக உள்ளதே... அங்கு எப்படி குழந்தைகளைச் சேர்க்க முடியும்? கடன் வாங்கியாவது கட்டணத்தைக் கட்டினால்தான், குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்' என நாம் நம்புவோமானால், நாம் நம்மையும் அறியாமல் பிள்ளைகளை பெரும் கடனுக்கு ஆளாக்குகிறோம் என்றே கூறலாம். நீங்கள் உங்கள் குழந்தைகளின் பள்ளி ஆண்டுக் கட்டணமாக குறைந்தது ரூபாய் 20 ஆயிரத்தை தனியார் பள்ளிகளில் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பகுதிகளில் இதுபோல் 20 பேர் இதே கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்கிறார்கள். அப்படியானால் ரூபாய் 4 லட்சம். இது எவ்வளவு பெரிய தொகை...! நீங்கள் 20 பேர் சேர்ந்து, தனியார் பள்ளியில் கொட்டும் அத் தொகையைக் கொண்டு உங்கள் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளைவிட சிறந்ததாக ஆக்க முடியுமே..! 

‘ஹா... இதெல்லாம் என் வேலையா...?’ என்று நீங்கள் நினைத்தால், இந்த சமூக கட்டமைப்பை நினைத்து ஆயுளுக்கும் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். உங்கள் கைப்பேசிக்கு வீட்டுக் கடன் வேண்மா? அல்லது வாகனக் கடன் வேண்டுமா? என்று அழைப்புகளில் கல்விக் கடன் வேண்டுமா?என்ற அழைப்பு வரும் நிலையை உருவாக்கிவிடும். உங்கள் வாழ்க்கையில் பல கடன்கள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்ட நிலையில் கல்விக் கடனும் அந்த வரிசையில் இணையும்.

- கண்ணன் ஜீவா

Pin It