செப்டெம்பர் 2, 2015 பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற் சங்கங்கள் கொடுத்த அழைப்பை ஏற்று மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நமது நாட்டுத் தொழிலாளர்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி பாராட்டுகிறது.

பொது வேலை நிறுத்தத்திற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே தொழிலாளி வகுப்பின் செயல் வீரர்கள் ஆயிரக் கணக்கான தெரு முனைக் கூட்டங்களையும், தொழிற்சாலை வாயில் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து வேலை நிறுத்தத்தின் நோக்கத்தை தொழிலாளர்களுக்கு எடுத்து விளக்கினர். போராட்டத்திற்கு ஒன்றுபட்ட தலைமையை அளிக்கும் பொருட்டு பல்வேறு தொழிற்சாலை மாவட்டங்களில் வெவ்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த செயல் வீரர்களை ஒரே தட்டியின் கீழ் கொண்டு வருவதற்காக கம்யூனிச செயல் வீரர்கள் பாடுபட்டனர்.

வேலை நிறுத்தத்திற்கு முந்தைய வாரங்களில் நாட்டின் எல்லா மாநிலங்களுடைய தலைநகரங்களில் மாநில தொழிற் சங்கக் கூட்டங்கள் நடைபெற்றன. கூடவே பெரும் தொழிற்சாலைகளிலும், சேவைகளிலும் உள்ள ஊழியர் அமைப்புகள் அவர்களுடைய மாநாடுகளை நடத்தி, தங்களுடைய குறிப்பிட்ட கோரிக்கைகளையும் வேலை நிறுத்த கோரிக்கைகளின் ஒரு பகுதியாக முன்வைத்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தை பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகள், அச்சுறுத்தல்கள், இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் பொய்யான தகவல்கள் மூலம் உடைப்பதற்கு முதலாளி வகுப்பினர் முயன்றனர். வேலை நிறுத்தம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றுவோம் என வாக்குறுதியளிப்பதன் மூலம் வேலை நிறுத்தத்தில் தொழிற் சங்கங்கள் ஈடுபடாமல் இருக்க அரசாங்கம் முயற்சித்தது. இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாதென பாஜக அரசாங்கம் தன்னுடைய தொழிற் சங்கமாகிய பிஎம்எஸ்-க்கு கூறியிருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் திருனால்முல் காங்கிரசு அரசாங்கம் "எந்த விலை கொடுத்தாவது வேலை நிறுத்தத்தை உடைப்போமென"அச்சுறுத்தினர். போக்குவரத்துத் தொழிலாளர்களும், பொதுத் துறைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக, அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர்  கட்டவிழ்த்து விடப்பட்டனர். போராடுகின்ற தொழிலாளர்களை தேச விரோதிகளெனக் காட்டுவதற்காக, அரசாங்கமும் ஊடகங்களும் எல்லா வழிகளிலும் முயன்றனர்.

இருந்துங்கூட வேலை நிறுத்தமானது வெற்றியடைந்தது. நாடெங்கிலும் உள்ள 15 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் இந்தப் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மத்திய தொழிற் சங்கங்களோடு இல்லாத ஆயிரக் கணக்கான பிற தொழிற் சங்கங்களும் தொழிலாளர் அமைப்புக்களும் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை தங்களுடைய சொந்த அழைப்பாகக் கருதி அதன் வெற்றிக்காக வேலை செய்த காரணத்தால், நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வட்டங்களிலும் வேலை நிறுத்தத்தின் தாக்கம் இருந்தது.

அதில் தில்லியின் மஸ்தூர் ஏக்தா கமிட்டி, இந்திய பெடரேஷன் ஆப் டிரேட் யூனியன்ஸ் - தில்லி, மும்பை - தானாவில் காம்கார் ஏக்தா கமிட்டி, லக்நோவில் ஒர்கர்ஸ் கவுன்சில், தமிழ்நாட்டில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மற்றும் பலரும் இவ்வாறு பங்கேற்றனர். குறைந்த பட்ச ஊதியம், எல்லாத் தொழிலாளர்களையும் பதிவு செய்ய வேண்டும், எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளில் விட்டுக் கொடுக்காமல் கடந்த சில ஆண்டுகளாக அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் தலைமையில் போராடியதன் விளைவாக தொழிற் சங்கங்களில் இல்லாத இலட்சக் கணக்கான தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

வேலை நிறுத்தத்தை அதிகார பூர்வமாக புறக்கணித்த சங்கங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்களும், செயல் வீரர்களும் வேலை நிறுத்தத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் மிகவும் கோபத்தோடு இருந்த காரணத்தால், வேலை நிறுத்தமானது பரந்துபட்டதாகவும், எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாகவும் இருந்தது. இதே காரணத்திற்காக, நகர்ப்புறங்களில் உள்ள எல்லா உழைக்கும் மக்களும் வேலை நிறுத்தத்திற்கு மிகுதியான ஆதரவளித்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் மூலம், முழுவதும் நியாயமற்ற, சுரண்டலான ஒடுக்குமுறையான முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும், முதலாளி வகுப்பு மற்றும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோத திட்டத்திற்கு எதிராகவும் தங்கள் இதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயைத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்காக சங்கம், கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஓய்வொழிவின்றி பாடுபட்ட ஆயிரக் கணக்கான தொழிற் சங்க செயல் வீரர்களை கம்யூனிஸ்டு கெதர் கட்சி பாராட்டுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கங்கள் 12 உடனடி கோரிக்கைகளை முன்வைத்தனர். (பெட்டியைப் பார்க்கவும்). தொழிற் சங்கங்களுடைய இக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற எந்த அரசாங்கமும், தொழிலாளி வகுப்பினரின் நலனை மட்டுமின்றி முழு சமுதாயத்தின் நலனுக்காகவும் செயல்படுவார்கள். இக் கோரிக்கைகள் புதியன அல்ல. தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்தே, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற் சங்கங்கள் இக் கோரிக்கைகளை எழுப்பி வந்திருக்கிறார்கள். ஏன் எந்த ஒரு அரசாங்கமும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை?

இதற்கான பதில், பொருளாதாரத்தின் போக்கு மூலதனத்தை மையமாகக் கொண்டிருக்கிறது என்பதும், அது மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருக்கிறது என்ற உண்மையிலும் இருக்கிறது. முக்கிய உற்பத்திக் கருவிகளை மிகப் பெரிய ஏகபோகங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த ஏகபோகங்கள் அரசையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் இந்தச் சிறுபான்மையினருக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் பொருளாதாரத்தின் போக்கை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

பெரும் ஏகபோக முதலாளிகளுடைய அரசாக இந்திய அரசு இருக்கிறது. சுதந்திரத்திலிருந்தே அது அவ்வாறு இருந்து வந்திருக்கிறது. எப்போதும் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் அமைக்கும் அரசியல் கட்சிகள், முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ப தத்தம் பங்கை ஆற்றுகிறார்கள். இந்த ஏகபோக முதலாளிகளுடைய மேலாளர்களாக (மேனேஜர்களாக) அவர்கள் செயல்படுகிறார்கள். அதே நேரத்தில், இந்த அமைப்பு ஒரு பக்கம் மிகப் பெரிய முதலாளிகளுக்கும், இன்னொரு பக்கம் உழைக்கும் மக்களுக்கும் என இருவருக்குமே சேவை செய்ய முடியுமென்ற மாயை நீடிக்க வேலை செய்கிறார்கள்.

90-களின் துவக்கத்தில் காங்கிரசு அரசாங்கத்தால் துவக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டமானது, பொருளாதாரத்தின் போக்கை திட்டவட்டமாக இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைத்தது. இந்தத் திட்டம் காங்கிரசு கட்சி தலைமை வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அது அதிகாரத்தில் இருந்தபோது செயல்படுத்தப்பட்டது.

பாஜக அரசாங்கம், இப்போது இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனுடைய "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற திட்டமானது, இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய ஏகபோகங்களுக்கு நாட்டை விற்பது தவிற வேறல்ல. காங்கிரசு, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த முதலாளி வகுப்பினரின் தொழிலாளர் விரோத, சமூக விரோதத் திட்டத்தில் உறுதியாக இருப்பதை நாம் கண்டு வந்திருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அது ஏழைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்டுள்ள உழைக்கும் மக்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அதேக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது இந்தத் திட்டத்தை அது தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது.

ஏகபோக முதலாளி வகுப்பின் கட்டளைக்கிணங்கி தற்போதைய பாஜக அரசாங்கம், பாதுகாப்பு, காப்பீடு, இரயில்வே போன்ற பல்வேறு துறைகளை அன்னிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விடுவதன் மூலம் அதனுடைய சமூக விரோதத் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஏகபோகங்களுடைய இலாப வேட்டைக்கு வரும் சிறிய இடையூறுகளைக் கூட களைவதில் அது குறியாக இருக்கிறது. காடுகளை வளர்ப்பது என்ற பெயரில் காடுகளைத் தனியார்மயப்படுத்துவது பற்றி அது பேசி வருகிறது. நகர்ப்புற நீர் வழங்குதல், மருத்துவம், கல்வி ஆகியவற்றைத் தனியார்மயப்படுத்த அது தளத்தை அமைத்து வருகிறது. பொது மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டு வருகின்றன.

நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் சட்டச் "சீர்திருத்தங்களில்" பாஜக, காங்கிரசு இருவருமே ஒன்றுபட்டிருக்கிறார்கள். இச் "சீர்திருத்தங்கள்", தொழிலாளர்களுடைய உரிமைகளை முடக்கி, அவர்களுடைய சுரண்டலைத் தீவிரப்படுத்தும். தொழிலாளர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல், தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற் சங்கம் உருவாக்குவதை மேலும் கடினமாக்கும், எந்த வகையான சமூகப் பாதுகாப்பும் இன்றி, முதலாளிகள் விருப்பம் போல தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், தூக்கியெறியவும் ஒப்பந்தத் தொழிலாளர்களை எடுப்பதை மேலும் சட்டரீதியாக ஆக்கும், வேலை நேரத்தை அதிகரிப்பதை சட்டரீதியாக ஆக்கும், ஆலைகளை மூடுவதையும் வேலை நீக்கம் செய்வதையும் எளிதாக்கும், இலட்சக் கணக்கான தொழிலாளர்களை தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தொழிற் தகராறுகள் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கும். மோசமடைந்து வருகின்ற தங்களுடைய வேலை நிலைமைகளுக்கு எதிராகவும், பொது மருத்துவ சேவைகள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் மருத்துவர்களும், செவிலியர்களும், ஆசிரியர்களும் போராடும் போது அவர்கள் "பொறுப்பற்றவர்கள்" எனவும், "சமூக விரோதிகள்" எனவும் தாக்கப்படுகிறார்கள். இவையனைத்தும் முதலாளிகளுடைய நலன்களுக்காக செய்யப்படுகின்றன. "தொழில் செய்வதை மேலும் எளிதாக்குவதே" தன்னுடைய நோக்கமென பாஜக கூறுவதன் பொருள் இதுதான்.

இது தான் மிகப் பெரிய ஏகபோகங்களுடைய நலனுக்கான முதலாளி வகுப்பின் திட்டமாகும். இது உழைக்கும் மக்களுடைய உரிமைகளுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் நேரெதிரானதாகும்.

தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும், சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டும், ஒரு ஐக்கிய நிலைப்பாட்டுடன் தொழிலாளி வகுப்பு, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதை நோக்கி பல்வேறு தொழிற் பேட்டைகளில் கட்சி சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற் சங்க செயல் வீரர்களுடைய கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். அந்தப் பகுதி அல்லது துறையிலுள்ள தொழிலாளர்களுடைய பிரச்சனைகளை விவாதிப்பதற்காக தொழிலாளர்களுடைய குழுக்களை வேலை செய்யுமிடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நாம் கட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து செயல் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும். தொழிலாளி வகுப்பினரின் எல்லா அரசியல் செயல் வீரர்களுக்கும் ஒரு புதிய உயர் மட்ட செயல்பாடுகளுக்கான தளத்தை பொது வேலை நிறுத்தம் உருவாக்கியிருக்கிறது. போராட்டதின் மூலம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐக்கியத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்வது அவசியமாகும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடைய உடனடி கோரிக்கைகள்

  • விலைவாசியைக் குறைத்து அதைக் கட்டுப்படுத்துதல்
  • நாடு தழுவிய அளவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 15,000
  • தொழிலாளருக்கு விரோதமாக தொழிற் சட்டத் திருத்தங்களை பின்வாங்க வேண்டும். இன்றுள்ள தொழிற் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • ஒப்பந்தத் தொழில் முறையையும், வேலையை வெளியே அனுப்புவதையும், தொழிலாளர்களை தினக் கூலிகளாக வைப்பதையும் ஒழித்துக் கட்டு.
  • எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்
  • சம வேலைக்கு சம ஊதியம்
  • வேளாண் தொழிலாளர்கள், பிற அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு
  • தனியார்மயத்தை நிறுத்தி அதைப் பின்வாங்கு
  • சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெறு
  • ஆங்கன்வாடி, ஆஷா போன்ற திட்டத் தொழிலாளர்களை முறைப்படுத்து
  • பாதுகாப்பு, இரயில்வே, நிதித் துறை மற்றும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நிறுத்து
  • நில கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெறு
Pin It