ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம். இந்த நாட்டில் அதாவது இந்தியாவில் பெண்களின் நிலை என்ன? சுதந்திரமாக இந்த நாட்டில் பெண் (கள்) குழந்தைகள் வாழ முடியுமா? அதற்கு இன்று நம் நாட்டை ஆளும் பா.ஜ.க மற்றும் அதன் பரிவாரங்கள் அதை அனுமதிக்குமா? நிச்சயம் இது நடக்காது காரணம் இதோ:-
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பிஜேபி பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அவர்கள் நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா மிகக் கொடூரமாக பிஜேபி- ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பேரணியில் கலந்து கொண்டார்கள்.
நாடு முழுவதும் மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் ஆசிஃபாவுக்காக குரல் கொடுத்தபோது காவி பயங்கரவாதிகள் ஆசிஃபாவின் கொலையை நியாயப்படுத்தி வந்தார்கள். கதவே இல்லாத கோயிலில் எப்படி அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்க முடியும் என்று கேள்வி கேட்டபுண்ணியவான் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த எச்.ராஜா. ஆனால் அது அப்பட்டமான பார்ப்பனப் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.
“அந்தப் பெண் கொல்லப்பட்டது நல்லது, ஏனெனில் அவள் கொல்லப்படவில்லை என்றால் நாளைக்கு இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக உருவாகியிருப்பாள்” என்று கேரளாவில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்த ஓர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சொல்லியதும் உண்டு..
இவ்வளவு நடந்தும் நமது பிரதமர் என்பவர் (மோடி) வாயைத் திறக்கவில்லை. அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கெட்டரஸ் இந்த கொடூரத்தைக் கண்டிக்கும் நிலை உருவான பிறகே மோடி வாய்திறந்தார்; அமைச்சர்களையும் பதவி விலக வைத்துள்ளார்.
இதுதான் பெண்கள் பற்றிய ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி காவி பயங்கரவாதிகளின் உண்மையான நிலைப்பாடு. அவர்களை இயக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனிய சித்தாந்தம் அடிப்படையில் பெண்களை மிகக் கீழ்த்தரமான உடைமையாகக் கருதும் கருத்தியலைக் கொண்டது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்திருப்பதற்குக் காரணம்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி 2015 ஆம் ஆண்டு மட்டும் 34651 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 4437 பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள், சிறுமிகள் மீதான வல்லுறவுத் தாக்குதல் வழக்குகளும், 2012-2016 இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 14913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக வன்முறை குறித்து ஒரு மணி நேரத்துக்கு 26 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
தொடர்ச்சியாக பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பதற்குக் காரணம் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனியத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்களாய் இருப்பதே ஆகும். பார்ப்பனியம் ஒட்டுமொத்தமாக பெண்களின் உரிமைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வுகள் கூட சுகாதாரம், பாகுபாடு பார்த்தல். கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள்கடத்தல் என்ற ஆறு பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பாகுபாடு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளில் எதுவும் மிகைப்பட்டது என்று நாம் கருதவில்லை.
கலாசார மரபுகள் என்ற பகுதியில் பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம், உடல்ரீதியான துன்புறுத்தல், பெண்சிசுக் கொலை போன்றவையும், பாலியல் வன்கொடுமை என்ற பிரிவில் பாலியல் ரீதியான வன்முறை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது போன்றவையும், ஆள்கடத்தல் பிரிவில் வீட்டில் அடிமைப்படுத்துதல், கொத்தடிமையாக நடத்துதல் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தியாவில் உள்ள 550 அறிஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா முதலிடத்திலும், ஆஃகானிஸ்தான் இரண்டாமிடத்திலும், சிரியா மூன்றாமிடத்திலும், சோமாலியா நான்காம் இடத்திலும், செளதி அரேபியா ஜந்தாம் இடத்திலும், பாகிஸ்தான் ஆறாம் இடத்திலும், காங்கோ குடியரசு ஏழாம் இடத்திலும், ஏமன் எட்டாம் இடத்திலும், நைஜீரியா ஒன்பதாவது இடத்திலும் அமெரிக்கா பத்தாவது இடத்திலும் உள்ளது. மேற்கூறிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும், அமெரிக்காவையும் தவிர பெரும்பாலான நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்துக்கொண்டுதான் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தும் இஸ்லாமிய நாடுகளை எல்லாம் விட்டுவிட்டு இந்தியாவிற்கு முதலிடம் கொடுத்தது இந்தியாவின் பெயரைக் கெடுக்க நடக்கும் சதி என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த நாடுகள் எல்லாம் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் செய்பவர்கள் இல்லாமல் இருப்பதால் ஒரு வேளை அந்த நாடுகளுக்கு முதலிடம் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் மோடி பதவியேற்றவுடன் சந்து பொந்துகளில் கஞ்சா விற்றவன், விபச்சார தொழில் செய்து வந்தவன், லேகியம் விற்றவன் என அனைவரும் சாமியார்கள் என்ற பெயரிலும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என்ற பெயரிலும் சுதந்திரமாக உலாவர ஆரம்பித்தார்கள். பாலியல் வழக்கில் மாட்டிய நித்தியானந்தா, ஆஸ்ராம்பாபு, ராம் ரஹீம் என அத்தனை சாமியர்களுடனும் நாட்டின் பிரதமர் நெருக்கமான உறவில் இருந்தார். ஒரு பிட்டு பட நடிகரை உத்திரப் பிரதேச முதலமைச்சர் ஆக்கினர். நாட்டிலேயே அதிகபட்சமாக பாலியல் குற்றவாளிகளை எம்.எல்.ஏ, எம்.பிக்களை கொண்ட கட்சியாக பாஜகவே விளங்குகின்றது. பாஜகவில் மட்டும் 12 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதே போல மற்றொரு காவிக் கட்சியான சிவசேனாவில் 7 பேர் உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பல காவி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட வழக்குகளில் அவர்களின் முறைகேடான பாலியல் உறவுதான் கொலைக்குக் காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அரியலூர் நந்தினியை கருவறுத்துக் கொன்ற மணிகண்டன் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவன். தமிழ்நாட்டுப் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்ய முயன்ற நிர்மலா தேவி பிஜேபியைச் சேர்ந்தவர். இதுபோன்ற நிலைமையை நாம் மற்ற நாடுகளில் பார்க்க முடியாது. அங்கே பாலியல் குற்றவாளிகள் மாட்டிக் கொண்டால் சட்டப்படி தண்டிக்க வாய்ப்பிருக்கின்றது. இஸ்லாமிய நாடுகளில் பல, மிகக் கொடூரமான தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியல்ல. நாட்டின் பிரதமர் பாலியல் குற்றவாளிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார். அவரது கட்சியினர் பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி போகின்றார்கள். அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை ஆதரித்துப் பேசுகின்றார்கள்.
நாட்டில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் பார்ப்பனியம் அங்கீகாரம் வழங்குகின்றது. வட மாநிலங்களில் நடைபெறும் கப் பஞ்சாயத்துக்கள் முழுக்க முழுக்க மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிராக நடத்தப்படுபவை. பெண்களுக்கு எதிரான வன்முறை என்று எடுத்துக்கொண்டால் வரதட்சணைக் கொலைகள், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் புரிந்துகொள்ளும் போது அல்லது அதற்கு சமூகம் மறுக்கும் போது, தங்களது பாலியல் தேவைகளை மாற்றுவழியில் பூர்த்திசெய்து கொள்ள முயலும் போது கொல்லப்படுவது, அல்லது அவர்களை சமூக புறக்கணிப்பு செய்வது, பெண் குழந்தைகள் பிறந்தால் சொத்து வெளியே சென்றுவிடும் என்று அதைக் கருவிலேயே அழிப்பது, வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்லி அவர்களை வீட்டிலேயே அடைத்துவைத்து அடிமையாக நடத்துவது, தங்களது வாழ்க்கை துணையைப் பற்றி சுதந்திரமாக முடிவெடிக்கும் வயது வருவதற்குள் வலுக்கட்டாயமாக சிறுவயதிலேயே திருமணம் செய்துவைப்பது, பெண்களை பாலியல் ரீதியான பொருளாகக் கருதி அவர்களை அழகுப் பதுமைகளாக நடத்துவது, சாதிக் கலவரங்கள் ஏற்படும் போதும் மதக்கலவரங்கள் ஏற்படும் போதும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதை இலக்காகக் கொண்டு செயல்படுவது என அனைத்துமே பார்ப்பனியத்தாலும், அது உருவாக்கிய சாதியாலும் இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்டது.
அதற்காக மற்ற மதங்கள் எல்லாம் பெண்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்திருக்கின்றது என்பது அர்த்தமில்லை. அனைத்து மதங்களுமே பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டதுதான். பெண்களின் மீது வன்முறை செலுத்துவதுதான். பல இஸ்லாமிய நாடுகள் மதரீதியான சட்டத்தை வரித்துக் கொண்டவை. அங்கே ஜனநாயகம் என்பது மதச்சட்டங்களுக்கு உட்பட்டவைதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்றதாக அறிவித்துக் கொண்ட நாடு. இங்கே பெண்களை மத ரீதியான கருத்தியலின் அடிப்படையில் ஒடுக்குவதையும், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடப்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு இஸ்லாமியப் பெண்ணோ அல்லது கிருஸ்தவப் பெண்ணோ பாலியல் வன்முறைக்கு பலியாக்கப்பட்டால் எந்த ஒரு இஸ்லாமிய, கிருஸ்தவ அமைப்புகளும் அந்தக் கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட மாட்டார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றுதான் போராடுவார்கள். ஆனால் இந்து அமைப்புகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவன் என்ன சாதி, குற்றம் புரிந்தவன் என்ன சாதி என்று பார்த்து, போராடலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும்.
இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள் மீதான வன்முறையைத் தீர்மானிப்பதில் சாதியும், அதைக் காப்பாற்றும் மதமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்களைப் பற்றி ஆண்கள் கொண்டிருக்கும் ஆணாதிக்க சிந்தனை மாற வேண்டும் என்றால் நாம் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றி பாதுகாக்கும் பார்ப்பன இந்துமதத்தை ஒழிக்க வேண்டும். மேலும் பெண்கள் தங்களை இழிவுபடுத்தும், அடிமைப்படுத்தும் மதங்கள் எதுவாக இருந்தாலும் அதைத் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு அதிலிருந்து வெளியேற வேண்டும். பெண்களின் மீது நிகழ்த்தப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் முற்போக்கு அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக களமாட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசை ஆட்சி அதிகாரதிலிருந்து அப்புறப்படுத வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அப்பணியை சிறப்பாக செய்து முடிப்போம் என்று உறுதியேற்போம்.