கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘‘ஆண்களும், பெண்களும் சமம்தானே. பெண்களின் உரிமைக்காக எத்தனையோ சட்டங்கள் வந்துவிட்டனவே. முன்ன மாதிரியெல்லாம் இல்லீங்க. பெண்கள் இப்போதெல்லாம் பணிகளுக்காக வெளியே வர்றாங்க. எல்லா வேலைகளிலும் பெண்கள் இருக்காங்களே. பொறியியல் படிப்புக்குக்கூட, பெண்கள் நிறைய படிக்க வர்றாங்க. படிச்சு முடிச்சு வேலைக்கு போறாங்க. பாருங்க. பேருந்துகளிலும், மின்சாரத் தொடர் வண்டிகளிலும் கூட்டம், கூட்டமாக பெண்கள் பணிக்குச் சென்றுத் திரும்புவதைப் பார்க்க வில்லையா? பெண்கள் கொஞ்சம் அல்லது அதிகமாகவே, அடங்கிப் போகிறார்கள் என்பதால், தனியார் நிறுவனங்கள் கூட, பெண்களை அதிகம் பணிக்கு எடுக்கிறார்கள். இதனால் ஆண்களுக்குத்தான் வேலை  கிடைக்காமல் போகிறதே தவிர, ‘‘இப்போதெல்லாம் பெண்களுக்கு எப்படியும் வேலை கிடைத்து விடுகிறது. முன்னப் போல இல்லீங்க இப்போவெல்லாம்." இப்படிப் பல ஆண்கள் பொது வெளிகளில் சிலாகித்து வருவதை நாம் எங்கும் காண்கிறோம். உண்மையில் அப்படி வேலைக்குச் செல்லும் பெண்கள் எப்படிப்பட்ட ‘மன நிலையில்’ இயங்குகிறார்கள் என்பதை ஒரு கட்டுரை சமீபத்தில், ஒரு அச்சு ஊடகத்தில் எழுதியிருந்தது.

மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் ஆகப் பணிபுரியும் ஒரு பெண். பணி நிமித்தமாக நாடு முழுவதும் அலைய வேண்டியவர். தனது கைப்பையில் இரண்டு பொருட்களை கட்டாயம் எடுத்துச் செல்கிறாராம். ஒன்று ‘மின்னதிர்வு துப்பாக்கி’. இரண்டாவது ‘பெப்பர் ஸ்ப்ரே’. ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் வருகின்ற  செய்திகளான, ‘‘பணிக்குச் செல்லும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை’’ என்ற விவரங்கள், அந்தப் பெண் பணியாளரை, இப்படிச் சிந்திக்க வைத்திருக்கும். அல்லது தயார் நிலையில் இருக்க வைத்திருக்கும். பொதுச் சேவைகளில் ஓடும் பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும், வாகனங்களிலும், ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி, போன்ற நவீன புதிய வரவுகளில், ‘‘வருவாயை ஒட்டிய சிக்கனத்திற்காக’’ சென்றே ஆகவேண்டும் என்ற நிலையில், பணிக்குச் செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள்  என்ன படித்தார்கள் என்பதோ, எத்தனைப் பட்டங்களை வாங்கினார்கள் என்பதோ, பணியில் எந்த அளவு உயர் நிலையில் இருக்கிறார்கள் என்பதோ, அதிகாரம் கொண்ட பதவியில் இருக்கிறார்களா என்பதோ, காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்பதோகூட, அவர்களது பயணங்களில் பாதுகாப்பைத் தீர்மானிப்பதில்லை. அவர்கள் பெண்கள் என்ற ஒன்று மட்டுமே, அவர்கள் மீது ‘‘வக்கிர சிந்தனையாளர்களின்’’ உரசல்களோ, எதிர்பார்ப்புகளோ, அத்து மீறல்களோ குறிவைத்து நடத்தப்படுகின்றன. இத்தகையப் ‘பாலியல் தொல்லைகளைத்’ தவிர்ப்பதற்காக, தங்களது சம்பளத்தில் கணிசமானப் பகுதியை அவர்கள், ‘தனியாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு’ செல்ல வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் மேலோட்டமாக மேலே கூறியுள்ளபடி பேசித்திரியும் ஆண்களுக்குத் தெரியுமா? இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கிறார்களா?

இவை தவிர, எத்தனை வீடுகளில், குழந்தை பராமரிப்பை, ஆண்கள் மேற்கொள்கிறார்கள்? பணிக்குச் செல்லும் தாய்மார்கள்தானே குழந்தைப் பராமரிப்பைக் கவனிக்கிறார்கள்? குழந்தை வளர்ப்பிற்கு கவனம் செலுத்துவதற்காக, முற்போக்கு கருத்துக்கள் கொண்ட, பெண் உரிமை பேசும்  பெண்கள் கூட, ‘பணிக்கு தொடர் விடுப்பு’ போடுவதோ, ‘பணியை விட்டு விடுவதோ’ செய்கிறார்களா இல்லையா? உங்கள் சமூகம், ‘பெண்களுக்கு படிக்க வாய்ப்பு, பணியில் வாய்ப்பு’ என வாய் கிழிய பேசினாலும், ‘பணியில் தொடர வாய்ப்பு இல்லாத’ ஒரு நியதியைத் தானே கொண்டுள்ளது.? அதிலும் சிறு வயதிலேயே தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறேன் அல்லது பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறேன் என்று, எண்ணிப்பார்க்கும் பெண்கள், தனது பெண் குழந்தையையாவது அப்படி உள்ளாகாமல் காப்பதற்காக "பாதுகாப்பு ஏற்பாடுகளை" செய்துகொள்ளும் எண்ணத்திற்குச் செல்கிறார்களா இல்லையா? இதற்காகவே  தனது படிப்பிற்கு ஏற்ற உயர்பதவிகளில் இருக்க வேண்டிய பெண்கள் கூட, தனது குழந்தையின் பாதுகாப்பை நேரடியாகக் கவனிக்கும் பொருட்டு, சாதாரண வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அந்த அச்சு ஊடகக் கட்டுரை எடுத்துக்காட்டியது.

2004ஆம்  ஆண்டிலிருந்து, இன்று வரை  இரண்டு கோடி பெண்கள் தங்களது அலுவலகப் பணிகளிலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஒரு கணக்கை, உலக வங்கி ஆய்வு கூறுவதாக அந்தக் கட்டுரைத் தெரிவிக்கிறது.  உலகில் பெரும் நகரங்களான, நியூயார்க், லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் வாழும் மக்களது மொத்த மக்கள் தொகை இரண்டு கோடி. அதற்குச் சமமான அளவில், உலகெங்கும் பணிகளிலிருந்து காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றால், இந்த உலகமே வெட்கப்பட வேண்டாமா? அப்படியானால் இத்தகைய அவல நிலை, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் பூராவும் இதே நிலைதான் என்பதை உணர வேண்டும். அதாவது, இந்த உலகமே ‘ஆணாதிக்க உலகமாக’, ‘ஆண்களின் நியாயங்களை மட்டுமே சிந்திக்கும் உலகமாக’ இருப்பது உணரப்பட வேண்டும். ஆகவே, பெண்கள் அதிகமாக வேலைக்கு வருவதையும் படிக்க வருவதையும் பற்றி வாய் கிழிய பேசும் ‘பெரு மக்கள்’  இந்த புள்ளி விவரங்களைக் கண்ணுற்றப் பிறகாவது, இனி ‘வாயை மூடிப் பேசுங்கள்’ என்று திரைப்படப் பெயரைத்தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

தொடரும்