பெரியார் திராவிடர் கழகத்தினரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கண்டித்திருக்கிறது. ‘இந்து’ பத்திரிகை தாக்கப்பட்டதற்காக, மார்க்சிஸ்ட்டு கட்சியினர் கண்ணீர் வடிக்கிறார்கள்.

“விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்த வன்முறையாளர்கள் அறிவித்திருப்பது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலேயாகும்” என்று அக்கட்சியின் செயற் குழு தீர்மானம் கூறுகிறது. நடந்த தாக்குதல் பெரியார் திராவிடர் கழகம் தீர்மானம் போட்டு, கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடந்த ஒன்று அல்ல. உணர்வுள்ள கழக இளைஞர்கள். தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் - ‘தீக்கதிர்’ திரித்து கூறுவதுபோல், விடுதலைப்புலிகளுக்கு எதிரான விமர்சனத்துக்காக அந்த எதிர்ப்பு காட்டப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட, அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் நடைபெறும் நாளன்று, ‘தமிழகத்தில் இனவெறி ஆபத்து’ என்று கட்டுரை எழுதி, ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனக் குரல் கொடுப்பதே இனவெறி என்று ‘இந்து’ எழுதியதற்காக எழுந்த எதிர்வினைதான் அந்தத் தாக்குதல். ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யாமல் போரைத் தொடர வேண்டும் என்று கூறுகிறது அக்கட்டுரை.

நியாயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே இதைக் கண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கிஞ்சித்தும் மதிக்காமல் ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதல் தொடர வேண்டும் என்ற ஆத்திரமூட்டக்கூடிய கட்டுரை வெளியிடுவோரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், பெரியார் திராவிடர் கழகத்துக்கு ‘வன்முறையாளர்கள்’ பட்டம் சூட்டுகிறது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

மக்கள் மீது ராணுவத் தாக்குதலை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று எழுதும் ‘இந்து’வை ‘அகிம்சாமூர்த்தி’ என்கிறார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘மனுதர்ம’ப் பார்வையிலிருந்து மீளப் போவதே கிடையாதா?

Pin It