குழந்தைப் பருவத்தையே அனுபவிக்க முடியாமல் இழந்து தவித்தவர் ஒரு பெண் குழந்தைத் தொழிலாளியாகவே மிகுந்த வறுமைச் சூழலில் வாழ்ந்தவர்.

               ஆம்! ‘நிகோபெர்டா மென்சு’ குவாதமாலாவில் 1959 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் நாள், இந்திய வம்சா வழியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் பசிபிக் கடற்கரை ஓரத்தில் உள்ள வடக்கு மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவரது பெற்றோர் காப்பித் தோட்டத் தொழிலாளர்களாவர். கிராமத்தில் இருந்த கிறித்துவப் பள்ளியில் அச்சின்னஞ்சிறிய ‘கிளி’ தன்னுடைய ஆரம்பக் கல்வியைப் பயின்றது!. எட்டு வயதுச் சிறுமியாக இருந்தபோதே கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தினருக்கு உதவியது!.

            Rigoberta Menchu   இளம்பெண் ‘மென்சு’ அச்சிறு வயதிலேயே கத்தோலிக்கக் கிறிஸ்துவ தேவாலயங்கள் மூலம் சமூக சீர்திருத்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

               இவரது கிராமத்தில், ‘கம்யூனிச’ - தீவிரவாத – கொரில்லா யுத்த இயக்கம்’ செயல்பட்டுக் கொண்டிருந்தது. மென்சுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனர். இவரது தந்தையும், ஊர் மக்களும் ‘கிராமிய விவசாய சங்கத்தில்’ , சேர்ந்து செயல்பட்டனர்.

               ‘மென்சு’வின் சகோதரர் போராட்டத்தில் கலந்து கொண்டதையொட்டிக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஸ்பானிஷ் தூதரகம் முன்பு போராட்டம் நடத்திய, மென்சுவின் தந்தையும், கிராமத்து விவசாயத் தொழிலாளர்களும் இராணுவத்தினரால் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

               மென்சுவின் தாயாரும் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். தாய், தந்தை, சகோதரன் எனத் தமது குடும்பத்தினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டாலும், அடக்குமுறைக்கு அடிபணியாமல், விடுதலைக்குப் போராட உறுதி பூண்டார்!

               தமது இருபதாவது வயதில்தான் ஸ்பானிஷ் மொழியை கற்றுக் கொண்டார். அப்போது இவர் அதிகம் படிக்கவில்லை; என்றாலும் பேச்சுத் திறமையை நன்கு வளர்த்துக் கொண்டார். இவர் 1980 ஆம் ஆண்டில் பல போராட்டங்களுக்குத் தலைமையேற்றார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்.

               உழைக்கும் வர்க்கத்தின் உரிமை தினமான, ‘மே’ நாளை, 1981 ஆம் ஆண்டு மே முதல் நாள் குவாத மாலாவின் தலைநகரில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டி உரிமை முழக்கமிட்டுக் கொண்டாடச் செய்தார்.

               மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் குவாதமாலாவில் நாளுக்க நாள் தீவிரமடைந்து வந்தது. இராணுவத்தின் அடக்குமுறை, தலைவிரித்தாடியது. நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர். ‘மென்சு’ தலைமறைவாக இருந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இராணுவத்தினரால் ‘மென்சு’வின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவிற்குச் சென்றார். அங்கிருந்து கொண்டே குவாதமாலா விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வழி காட்டினார்.

               ‘மென்சு’, தமது வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும், அனுபவித்த கொடுமைகளையும், அரசின் அடக்கு முறைகளையும், தமது குடும்பத்தினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதையும் ‘எலிசபெத் பர்கோஸ் டீப்ரோ’ என்பவரிடம் விரிவாகக் கூறினார். அவர், ‘நான் தான் - நிகோபெர்டா மென்சு’    (I Rigoberta mencheu) என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதி நூலாக வெளியிட்டார். இந்த நூல் ‘ரிகோபெர்டா மென்சுவை’ உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தது. மேலும், இந்நூல் பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதால், பல நாடுகளுக்கும் மென்சுவின் போராட்ட வரலாறு பரவியது.

               மென்சு பற்றிய ‘குவாதமாலாவின் இந்தியப் பெண்’ (An Indian women in Guatemala) என்ற நூலும் வெளிவந்ததது.

               குவாதமாலா, கிராமிய விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக 1986 ஆம் ஆண்டு ‘மென்சு’ தேர்ந்தெடுக்கப்பட்டார். குவாதமாலாவின் விவசாயத் தொழிலாளர்கள் தம் போராட்டங்கள் குறித்தும், அரசின் அடக்குமுறைகள் பற்றியும் உலக மக்களுக்குத் தெரியப்படுதினார். மக்கள் விடுதலைக்கான இவரது பணியைப் பாராட்டி ‘ஓன் மார்க்கோஸ் விருது’ வழங்கப்பட்டது.

               இந்திய வம்சா வழியைச் சேர்ந்த குவாதமாலா மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் பெண் காவலராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டார். இவரது தீவிரமான போராட்டங்களையும், தியாகமிக்க வாழ்க்கையையும் பாராட்டி பல சர்வதேச பரிசுகள் வழங்கப்பட்டன.

               குவாதமாலாவில் உள்ள இந்திய வம்ச ‘மாயன்’ மக்களின் சமூக நீதிக்காகப் போராடியதற்காகவும், கிராமிய விவசாயத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காகவும், நிகரில்லாப் பெண்மணி ‘நீகோபெர்டா மென்சு’க்கு, உலகின் மிக உயர்ந்த ‘நோபல் பரிசு’ 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

               கம்யூனிச தீவிரவாதப் போராளியான இவருக்கு நோபல் பரிசு வழங்குவதற்கு குவாதமாலா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இவருக்கும் பரிசு வழங்கக் கூடாது என்றும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நோபல் பரிசுத் தேர்வுக் குழுவை அரசு நிர்ப்பந்தம் செய்தது.

               ஆனால், நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் தலைவர், அரசின் நிர்பந்தங்களைப் புறக்கணித்தார். “மென்சு வறுமையில் வளர்ந்த மாதரசி. இவரின் குடும்பம் தலைமறைவு வாழ்க்கையில் தத்தளித்தது; குடும்பத்தினர் இராணுவத்தினரால் மிருகத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காக, இவரது குடும்பத்தினர் விலை மதிக்க முடியாத தியாகம் செய்து உயர்ந்து உள்ளனர். இவரது சமூக அரசியல் போராட்டம் சின்னஞ்சிறு வயதுப் பெண்ணாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. போராட்டத்தின் முடிவு தான் அமைதியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டார். இன்றைக்கு ‘அமைதியின் சின்னமாக’ உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்” என்று அத் தேர்வுத் தலைவர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

               தமக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுத் தொகை முழுவதையும், குவாதமாலாவில் உள்ள இந்திய வம்சாவழியினரின் உரிமைக்காகப் பாடுபடும் அமைப்பிற்கே வழங்கிவிட்டார்.

               “புரட்சி என்பது, அதிகாரத்தை மக்களுக்கப் பகிர்ந்தளித்தல், அதை அடைவதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தேந்தெடுத்தேன், அதுவும் மலைவாழ் விவசாய மக்களின், விடுதலைக்காகத்தான்” - என்று உலகுக்கு ஓங்கி அறிவித்தார் ‘மென்சு’!

-              பி.தயாளன்

Pin It