ஒரே தீர்ப்பில் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனித மனச் சான்றையே உலுக்கும் அதிர்ச்சியான தீர்ப்பாகும். இத் தீர்ப்பை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என எகிப்து அரசை வலியுறுத்துவதில் உலகெங்கும் உள்ள மனித உரிமை இயக்கங்களுடன் த.தே.பொ.க. தன்னை இணைத்துக் கொள்கிறது.
முஸ்லிம் சகோதரத்துவம் என்ற கட்சியின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சிக்கு எதிராக எகிப்து ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்தது.
எகிப்து சர்வாதிகாரி முபாரக் ஆட்சிக்கு எதிராக எகிப்திய மக்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வெற்றி பெற்று முஹமது மோர்சி தலைமையில் ஆட்சி உருவானது.
மோர்சி ஆட்சி இசுலாமிய மதவாதத்துடன் கூடிய ஆட்சியாக இருந்ததுடன் மக்கள் கிளர்ச்சியில் உறுதியளிக்கப்பட்ட பல சனநாயக சீர்திருத்தங்களை அரைகுறை அளவோடு நிறுத்திக் கொண்டது.
மோர்சி ஆட்சியை எதிர்த்து கடந்த ஆண்டு மீண்டும் எகிப்தில் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. மோர்சி ஆட்சிக்கு எதிராக செயல்பட தருணம் பார்த்து காத்திருந்த எகிப்து இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்துகொண்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இக் கிளர்ச்சியை ஒடுக்குவதில் எகிப்தின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தா எல்சிசி மிகக் கொடிய அடக்குமுறையை ஏவினார். அதன் ஒரு பகுதியாக மோர்சி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இரவு பகலாக தங்கி கிளர்ச்சி செய்துகொண்டிருந்த ஒரு முகாமின் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏறத்தாழ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக மோர்சி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013 ஆகஸ்டு 14 அன்று ஒரு காவல் நிலையத்தைத் தாக்கினர். அதில் சில காவலர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக எகிப்தின் மினியா நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நேற்று (28-04-2014) தீர்ப்பு வழங்கப்பட்டது.
மினியா நகர நீதிமன்றம் இத் தீர்ப்பில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முதன்மை ஆலோசகர் முகமது பத்தி உள்ளிட்ட 683 பேருக்கு மரணதண்டனை அளித்துள்ளது. இப்படி ஒரே கொத்தில் 683 பேருக்கு மரண தண்டனை விதிப்பது நாகரீக உலகத்தில் எந்த இடத்திலும், எந்த வழக்கிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நீதிமன்றப் படுகொலையாகும்.
எகிப்து நாட்டு சட்டப்படி இத் தீர்ப்பு அந் நாட்டின் உயர் மட்ட இசுலாமிய மதபீடமான கிராண்டு முக்தி ஒப்புதல் பெற்ற பிறகே செயலுக்கு வரும்.
எனவே எகிப்தின் தலைமை மத பீடம் இம் மரண தண்டனையை அங்கீகரிக்கக் கூடாது. முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி வலியுறுத்துகிறது.
காட்டுமிராண்டித் தனமான இவ்வாறான நீதிமன்ற முறையை உலகெங்கும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கண்டித்து எழ வேண்டும் என த.தே.பொ.க கேட்டுக்கொள்கிறது.
- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி