டில்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் டில்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. குற்றச் செயலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை வரவேற்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்ப்பரிக்கிறது.

மாணவியை பாலியல் வல்லுறவும், படுகொலையும் செய்த அந்த நான்கு இளைஞர்களும் குற்றவாளிகள் என்பதிலோ, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்பாவி மாணவியை கொடூரமாகக் கொன்ற அந்த மிருகங்கள் அதற்கு உரிய விளைவைச் சுமந்தே தீர வேண்டும். ஆனால், அந்த இளைஞர்கள் மட்டும் தான் இங்கே குற்றவாளிகளா என்பதே நம் கேள்வி.

திரையரங்குக்குச் சென்றால் அங்கே விரியும் வெண்திரையில் நடிகைகள் கவர்ச்சியுடன் காட்சியளிக்கிறனர். வீட்டில் தொலைக்காட்சியைத் திறந்தால் விளம்பர மாடல்களாக அரைகுறை ஆடையுடன் இளம்பெண்கள் அணிவகுக்கின்றனர். கிரிக்கெட்டை ரசிக்க விளையாட்டுத் திடலுக்குப் போனால் அங்கேயும் பெண்கள் ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

நட்சத்திர விடுதிகளில் நடனமாடுபவர்கள் பெண்கள், பார்களில் மது ஊற்றிக் கொடுப்பவர்கள் பெண்கள் என எங்கே சுற்றி எங்கே வந்தாலும் பெண்களை வெறும் போகப் பொருளாகவும், நுகர்வுப் பண்டமாகவும் மட்டுமே கையாளும் போக்கைப் பார்க்க முடிகிறது.

திரையரங்கு, விளையாட்டுத் திடல், நட்சத்திர விடுதிகள், மதுக் கூடங்கள் என இளைஞர்கள் மொய்க்கும் இடங்கள் அனைத்திலும் பெண்கள் சதைப் பிண்டமாக நிறுத்தப் படுகின்றனர். 'பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் பாலுணர்வுக்கான இரைகள்' என்ற சிந்தனை இங்கு திட்டமிட்டே ஊட்டப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து வைத்து இளைஞர்களின் மதியை மயக்குகிறது.

டில்லி மாணவியை சூறையாடிய நான்கு இளைஞர்களும் மது குடித்திருந்தனர் என்பதும், 'அந்த ஒரு கணத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை' என்று அந்த இளைஞர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆக, குற்றச் செயல்களை நோக்கி இளைஞர்களைத் தூண்டிவிடும் படியான சூழலை மாற்றியமைக்காமல், வெறுமனே குற்றவாளிகளை தூக்கில் தொங்க விடுவதால் மட்டுமே இங்கு எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.

குற்றம் புரிந்த இளைஞர்களுக்கு மரண தண்டனை என்றால், அவர்களை குற்றம் செய்யத் தூண்டிய ஊடகங்களுக்கும், அரசுகளுக்கும் என்ன தண்டனை?

- ஆளூர் ஷாநவாஸ்

Comments

2 comments

2
ஷாலி
எய்தவனை விட்டுவிட்டு அம்பிற்கு தண்டனை கொடுப்பதுதான் நமது அரசியல் அமைப்பு சட்டம்.குற்றம் செய்ய தூண்டும் எல்லா வாசல்களையும் மது,மாது,சூது,ஊடக சதை வணிகம் என்ற அனைத்தையும் திறந்து விட்டு, அரசு சதிக்கு பலியாகி வீழ்பவனுக்கு தண்டனை. பெண்கள் பாலுறவை தூண்டும் ஒரு போதை வஸ்து என்பதைத்தான் அனைத்து ஊடகங்களும் அள்ளி இறைக்கின்றன. தினசரி,வாரஇதழ்,மாத இதழ்,தொலைகாட்சி,திரைப்படம் எதை எடுத்தாலும் கவர்ச்சி கன்னிகள் களியாட்டம். பெண்கள் தனியாக மாட்டும் சந்தர்ப்பம் வராதவரை அனைத்து ஆண்களும் இங்கு இராமன் வேஷம் கட்டுவார்கள்.கொலை,கொள்ளை,கற்பழிப்பு எனும் அனைத்து தீமைகளுக்கும் தாயாக இருப்பது மது. அறிவை மழுங்கடிக்கும் மதுவை விற்று கம்பெனி நடத்தவில்லை, மாதர் குல திலகம் கவர்மென்ட் நடத்துகிறது.பெண்ணரசி ஆட்சி செய்யும் தலை நகரங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.காரணம் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக்.குடிமகன்கள் குடும்பம் நடத்த பெண்களைத் தேடி அலைகிறார்கள்.அரசோ- சரக்கு விற்பனையை அதிகப்படுத்த ஊக்குவிக்கிறார்கள். அரசு நிர்வாகம் தண்ணீரிலே ஓடுவதால் குடும்பப் பெண்கள் கண்ணீரை மட்டும் இழக்கவில்லை கற்பையும் தான்.
னேம்
மரண தண்டனை என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா. மதுக் கடைகளை அரசு நடத்தாமல் மதுவிலக்கு இருந்த போது குற்றமே நடக்கவில்லையா. மரண தண்டனையை எதிர்ப்பதாக இருந்தால் முதலில் தீவிரவாதிகளை எதிர்க்க வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அரசுகளை அமைப்புகளை எதிர்க்க வேண்டும்.26/11க் குகாரணமானவர்களை எதிர்க்க வேண்டும். ஆளூர் ஷாநவாஸ் இதையெல்லாம் எதிர்த்து வெளிப்படையாக எழுதுவாரா. மரணதண்டனை எந்த சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையிலும் கூடாது என்று எழுதுவாரா. இந்தியா என்றால் அமெரிக்கா என்றால் எதிர்க்க வேண்டியது அதையே பிற நாடுகள் செய்தால் எதிர்க்காமல் மெளனம் காக்க வேண்டியது இல்லையேல் சரி என்று எழுத வேண்டியது. இதைதான் ஒரு கூட்டம் தமிழில் செய்கிறது.
அதில் ஒருவர்தான் இவர். தொலைக்காட்சிகளில் தோன்றும் இவர் தொலைகாட்சிகளை குறை கூறுகிறார். அதற்கு பதிலாக தொலைகாட்சிகளை புறக்கணிக்க வேண்டியதுதானே. தொலைகாட்சிகள்,திரைப்படங்களை புறக்கணியுங்கள் என்று சொல்லமாட்டார்கள். அது ஏன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.