வாய் முழுக்க வெற்றிலை
குதப்பி கம்மல் இட்டு
முறைத்துக் கொண்டிருந்தவன்
வாயிலிருந்து சில் சில்லாக பிளேடு
வந்து கிழிக்கலாம் என
நினைத்து ஒதுங்கி நின்றாள்...
முறுக்கிய மீசையில் ஒதுக்கிய
தாடியில் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தவன் பாக்கெட்டிலிருந்து
எடுத்து அமிலம் வீசப்படலாம் என
மிரண்டு ஒதுங்கினாள்....
மடித்து கட்டிய வேட்டியில்
தொடை பருத்த திடத்தோடு
நின்று சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டவன் கழுத்து சங்கிலி
பறித்துப் போகலாம்
என பாதுகாப்பாய் பின் தள்ளி நின்றாள்....
முகம் முழுக்க தாடி வைத்தவன்
படக்கென துப்பாக்கி நீட்டி
பட் பட்டென சுட்டு விடுவான்
என மறைந்து நின்றாள்....
பீடி குடித்துக் கொண்டு
பழுப்பு நிற வெம்மையில்
அவளையே சுற்றி சுற்றி வந்தவன்
தோள் பையை பிடுங்கிக் கொண்டு
ஓடி விடுவானோ என
அஞ்சி கெட்டியாய் பற்றி நின்றாள்....
கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்
படக்கென தூக்கி ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போய்
யோனிக்குள் துருப்பிடித்த கம்பியை
நுழைப்பார்களோ என இறுக்கமாய்
கால் பதித்து பதுங்கி நின்றாள்....
கை குலுக்கி வழி காட்டும்
நல்லவனைப் போல இருந்தவனைக் கண்டு
சற்று ஆசுவாசமடையும் நேரத்தில்
திடும்மென முதுகுப் பையில்
இருந்து எடுத்த கத்தியால் அவளை
சரமாரியாக வெட்டி வீசி விட்டு
ஆற அமர நடந்தான் அவன் ....
- கவிஜி