தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களின் இயக்குநரும், தேசிய விருதும், பழநிபாபா மத நல்லிணக்க விருதும் பெற்ற திரு.சீனு ராமசாமி அவர்களின் மனிதநேயம் பறவையாய்ப் பறந்ததை அனைவரும் அறிந்ததே.

seenu_ramasamy_360சீனு ராமசாமி கடந்த 28-01-2013 அன்று பழநி ஆயக்குடியில், 'பழநிபாபா மத நல்லிணக்க விருது' பெற்றபின் ஆற்றிய உரையில்,

"இஸ்லாம் மதம் அன்று அது மார்க்கம். நான் எனது நீர்ப்பற‌வை திரைப்படத்திற்காக, இரண்டு வருடம் திருக்குர் ஆன்-உம், பைபிளும் படித்தேன். திருக்குரான் என் வாழ்வில் ஓர் மாற்றம் கொடுத்தது. திரைப்படமே வெளிப்படையாக எடுத்துவிட்டேன். பின் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசுகின்றேன். நான் என்னதான் மார்க்ஸியம், பெரியாரிய‌ம் பேசினாலும், சராசரி மனிதன் எனும் ரீதியில் எனக்குள் நிற பேதமை இருந்தது. என் மனைவி சற்று கருப்பு. எனவே நான் அவருடன் சரிவர முகம் கொடுக்காமல் ஒரு பாராமுகமாகவே இருந்து வந்தேன். பெற்றோர் பார்த்து முடித்த திருமணம். பின்பு திருக்குரான் படித்துக் கொண்டிருந்தபோது அதன் ஒரு வசனம் எனக்கு உண்மை உரைத்தது.

“நபியே நீர் கூறும்! அழகற்ற பெண்கள் என்று நீங்கள் யாரையும் வெறுத்து ஒதுக்கி வைக்காதீர்கள். அளவிடற்கரிய நற்குணங்களை அல்லாஹ் அவர்களிடத்தே பொதித்து வைத்துள்ளான். மறைவானவற்றை அல்லாஹ் நன்கு அறிவான்."

எனது நீர்ப்பறவை படம் தனி மனித வெற்றியல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம். நான் வளர்ந்து வரக் காரணம் என் தமிழ் ஆசிரியர் ஜாபர் ஐயா அவர்கள். என் உயர் கல்விக்கு உதவியர் ஒரு கிறிஸ்துவர். என் முதல் விளம்பரப் பட இயக்கத்திற்கு வாய்ப்பளித்தவர் ஒரு இஸ்லாமியர். அவர்களின் உதவியால்தான் நான் வெளிவந்தேன். அதற்கான ஒரு நன்றிக்கடன் தான் நீர்ப்பறவை. அதன் எதார்த்தம் தான் இத்திரைப்படம். நான் இப்படி ஒரு படமெடுத்து முஸ்லீம்களிடம் பாராட்டு, பரிசு பெற வேண்டும் என்று கதை எழுதவில்லை. உண்மையில் அந்த கதாபாத்திரம் அங்கு, அந்தத் தருணம் என்ன பேசுமோ அதைத்தான் படமாக்கி உள்ளேன்.

கப்பலை முதன் முதலில் இந்தியாவில் கட்டியவர்கள் மரைக்காயர் முஸ்லீம்கள். அந்த வரலாற்று உண்மையைத்தான் என் நீர்ப்பறவை காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால், ஏனோ தெரியவில்லை, தமிழ் சினிமாக்களில் முஸ்லீம்களை கடற்கொள்ளையர்களாகவும், ஷேட்-களாகவும், வாசனைப் பொருள் விற்பன்னர்களாகவும் தொடர்ச்சியாக தவறாக காட்டி வருகின்றனர்.

எனக்குள் ஒரு ஏக்கம் இருந்தது, என் நீர்ப்பறவை திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் ஒரு நன்றி கூட கூறவில்லையே என்று. ஆனால் அதனை திரு.கே.எம்.ஷரீஃப் அவர்கள் நிறைவேற்றி விட்டார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு சிறு உண்மை நிலையை காட்சிப்படுத்தியதற்கு இஸ்லாமியர்கள் நீங்கள் இவ்வளவு விழா எடுத்து பாராட்டுகின்றீர்கள். தேசிய விருது வாங்கியது கூட எனக்குப் பெருமையல்ல. ஆனால் சமூகப் போராளி பழநிபாபா மத நல்லிணக்க விருதை நான் பெற்றது தேசிய விருதை விடப் பெருமையாக உணர்கின்றேன். ஏனென்றால் தேசிய விருது சமூகப் போராளிகளால் கொடுக்கப்படுவதில்லை. மக்களிடம் சமூக நல்லிணக்கம் இருக்கின்றது என்பதையே இந்த நீர்ப்பறவை வெற்றி குறிக்கின்றது. ஆனால் அது சில அரசியல்வாதிகளிடம் தான் இருப்பதில்லை.

ஒரு முறை ஹஜ்ரத், கலீஃபா உமர்(ரலி) அவர்கள் ஜெரூசலத்தின் அதிபராக இருந்த தருணம், உமர் கிருஸ்த்துவப் ஃபாதிரிமார்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கிறிஸ்த்துவ ஆலயத்திற்க்குள் சென்றார். அப்பொழுது தொழுகை நேரம் வந்ததும், உமர் அவர்கள் அதனை அவர்களிடத்தில் தெரிவித்தார். உடனே கிறிஸ்த்துவர்கள் தேவாலயத்தை சுத்தம் செய்து அங்கு உமரைத் தொழுமாறு பணிந்தனர். ஆனால் உமர் அதனை மறுத்து வெளியில் வந்து வெட்டாந்தரையில் தொழுதார். பின் அங்கு நடந்த விருந்தொன்றில் பங்கு கொண்ட உமர் அவர்களிடம் ஃபாதிரிமார்கள், 'உமரே! தாங்கள் இவ்வளவு அந்நியோன்யமாக பழகுகின்றீர்கள். ஆனால் ஏன் எங்கள் தேவாலயத்தில் தொழ மறுத்தீர்கள், அங்கு சுத்தமாகத் தானே இருந்தது' என்று வினவினர். அதற்கு உமர் அவர்கள் கூறினார்கள், 'இன்னும் நூறு வருடங்களுக்குப் பின் தாங்களும் இருக்கப் போவதில்லை, நானும் இருக்கப் போவதில்லை. அப்போது இருக்கும் தலைமுறை உமர் எப்படி இங்கு தொழுதார் என்று கேள்வி கேட்கும். மற்றொருவர் இது உமர் தொழுத இடம் என உரிமை கோர, அங்கு அமைதி குலையும், ஒற்றுமை சீர்கெடும் என்று பதிலுரைத்தார்கள். எனவே சமூக நல்லிணக்க முன்னோடிகள் முஸ்லீம்கள்தான்" என்று கூறி தன் உரையை முடிவு செய்தார்.

ஆக இப்படியான இவரின் யதார்த்தமான, சமூக சிந்தனை பொதிந்த, நன்றி உணர்வு வெளிப்பூண்ட, உண்மை நிலையை விளக்கிய உரையைக் கேட்டு வியப்புற்றேன். ஆனால் சமூக நல்லிணக்க விருது பெற்ற மறுநாள், 29-01-2013 அன்று நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின் 'நேர்படப் பேசு' நிகழ்வில் திரு.சீனு ராமசாமி அவர்கள் கூறிய விஸ்வரூபம் திரைப்படம் குறித்தான கருத்து அவர் முன்னர் பேசிய பேச்சிற்கு நேரெதிராக இருந்தது.

29-01-2013 அன்று அவர் புதிய தலைமுறையின் நேரலை நிகழ்வில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து கூறிய கருத்து:

"கமலஹாசன் அவர்கள், இஸ்லாமியர்களுக்கு திரைப்படம் முன்னதாகவே காட்டியது தவறான செயல். எனது நீர்ப்பறவை படம் வெளிவராத நிலையில், கிறிஸ்துவர்கள் சிலர் என்னிடம் வந்து அதில் இடம்பெற்றுள்ள பாடலில், விவிலிய மொழிகளில் வார்த்தைகள் அமைந்துள்ளதாகவும், ஆகவே அவைகளை நீக்கி விடவும் கோரினர். நானும் அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து அவைகளை நீக்கினேன். பின் அவர்கள் என்னிடம், பாடல் வரிகள் இப்படி இருப்பதால், படத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆகவே எங்களுக்கு முழு படமும் போட்டுக் காட்ட வேண்டும் என்றனர். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அவர்களுக்கு படத்தை முன்பே காட்ட உறுதியாக மறுத்து, திரையிட்ட பின் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்" என்ற வண்ணம் தன் முதல் கருத்தைப் பதிவு செய்தார்.

பின் அவரிடம் தணிக்கை குழு பற்றி வினவப்பட்டது.

அதற்கு அவர், தணிக்கை குழு முறையாக உள்ளது என்றார். மேலும் அவர், "தன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியபோது மிக நுணுக்கமாக ஆராய்ந்து சான்று வழங்கினர். எனவே தணிக்கை குழு முறையாகத்தான் செயல்படும்" என்றார்.
 
இறுதியாக அவரிடம், முஸ்லீம்கள் பற்றிய தமிழ் சினிமாக்களின் தவறான சித்தரிப்பு பற்றி கேட்டதற்கு அவர்:

"ஆம் அது உண்மைதான். ‘நிம்மல் பொன் தரான், நிம்மலுக்கு பொண்னு தருது’ என்று ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவுமே காட்டி வந்துள்ளனர்" என்று கூறி பின்,

"தங்களைப் பற்றி இப்படி திரைப்படம் எடுத்ததற்கு இவ்வளவு கண்டனம் தெரிவிக்கும் முஸ்லீம்கள், ஏன் என்னுடைய நீர்ப்பறவை திரைப்படத்திற்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை" என்று கேட்டு விடை பெற்றார்.

ஆனால், இக்குற்றச்சாட்டை அந்த நிகழ்வில் அவரோடு பங்கு கொண்டிருந்த, த.மு.மு.க இயக்க தலைவர் திரு.ஹைதர் அலி அவர்கள், தாங்கள் ஏற்கனவே நன்றி பாராட்டு அறிக்கை அளித்துள்ளதை சுட்டிக் காண்பித்தார்.

இங்குதான் நான் அவரிடம் வினவுகின்றேன் ‘யாரை திருப்தியடையச் செய்ய நினைக்கின்றீர்கள்?’.

பழனிபாபா சமூக நல்லிணக்க விருது பெறும் சீனு ராமசாமி

பழனிபாபா சமூக நல்லிணக்க விருது பெறும் சீனு ராமசாமி

* சமூக நல்லிணக்க விருது பெற்று தாங்கள் ஆற்றிய உரை யாரை திருப்திப்படுத்த? மறுநாள் புதிய தலைமுறையில் தாங்கள் கூறிய கருத்துக்கள் யாரை திருப்திபடுத்துவதற்கு?

* ஆயக்குடி உரையில் தங்கள் படத்திற்காக தங்களை யாரும் பாராட்டவில்லை, இதுதான் முதல் முறை என்றீர்கள். ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், அதற்கு முன்பாகவே த.மு.மு.க போன்ற இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் நீர்ப்பறவையை வரவேற்பதாக பதிந்து விட்டனர்.

* மேலும், எழுத்தாளர் ஆளூர்.ஷாந‌வாஸ் அவர்கள் தன் வலைப்பூ தளத்தில், 'முஸ்லீம் தீவிரவாதி இல்லாத நீர்ப்பறவை’ எனும் தலைப்பில் ஒரு பாராட்டுக் கட்டுரை எழுதி உள்ளார்.

* இதற்கும் மேலாக, என் முக நூல் நண்பர்கள், முக நூல் பயனர்கள் தங்களின் நீர்ப்பறவைக்கு எழுத்துப் பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதில் நானும் ஒருவன். மேலும், பலர் அந்த குறிப்பிடப்படும் ‘உதுமான் கனி’ கதாபாத்திரத்தின் வசனம் அடங்கிய வீடியோ காட்சிகளை தங்கள் முக-நூலில் பகிர்ந்தும், அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டும் உள்ளனர்.

ஆகவே, 28-01-2013 அன்று அல்ல, நீர்ப்பறவை காட்சிக் கோப்பு டிரெய்லர் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சில தினங்களில் இருந்து சிறிது, சிறிதாகவும், படம் திரைக்கு வந்த பின்பு தினம், தினமும் இஸ்லாமியர்கள் தங்களுக்கும், தங்கள் நீர்ப்பறவைக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அறிவித்துக் கொண்டே உள்ளனர்.

* இஸ்லாமியர்களை ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவும், வாசனை பொருள் விற்பன்னர்களாகவும் காட்டியதை குறிப்பிட்டுள்ளீர்கள், உண்மைதான். நீங்கள் கூறும் அதே சினிமா கால கட்டத்தில், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரின் திரைப்படங்களில் இயல்பாகவும், உயர்வாகவும் முஸ்லீம்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

* ஆகவே தாங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சித்தரிப்பு கதாபாத்திரங்கள் பெரிய பொருட்டல்ல. 1990-களிலே பொய்மைப்படுத்தி, இதுவரை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்ற 'இஸ்லாமிய வன்முறையாளர்கள், தீவிரவாதிகள்' எனும் சித்தரிப்புகள்தான் இங்கு கவனிக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது, முக்கியமளிப்பது.

* 90-களுக்கு முன்பான சித்தரிப்புகள் பெரித‌ல்ல. நீங்கள் ஆதரவு அளிப்பதாக எண்ணி அவைகளைக் கூறி நழுவுவது முறையல்ல. நீர்ப்பறவை திரைப்படத்தில் நெற்றிய‌டியாக உண்மை கூறீனீர்கள், ஆனால் ஏன் நேர்ப்பட பேசுகையில் உண்மை சர்ச்சையை வெளிக்கொணராமல் பேசினீர்கள் என்பதில்தான் என் கேள்வி தொக்கி நிற்கின்றது.

இறுதியான ஒரு விளக்கம், தங்கள் நீர்ப்பறவை திரைப்படத்தில் கிறிஸ்துவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சில பாடல் வரிகளை நீக்கினேன் என்றீர்கள். அருமையான ஒன்றுதான். ஆனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை எதிர்த்து சில காட்சிகள் நீக்கப்படக் கோர, திரைப்படம் முன்னதாக காட்டப்பட்ட நிகழ்வை தாங்கள் எதிர்ப்பது சரியல்ல. இது ஒருவேளை வெளியில் வந்தால் இந்தியாவில் காவிகளின் பிரச்சாரம் எப்படி இருக்கும்? வெகுஜன மக்களின் இஸ்லாமியர்களின் மீதான‌ பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும். ஆக அவைகளைக் களையவே இந்த முன்னேற்பாடு. ஒருபுறம் தாங்கள் முஸ்லீம்களை திரைப்படத்தில் கண்ணியமயப் படுத்திவிட்டு, நிஜப் போக்கில் இப்படி கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது? மக்கள் சினிமாவை சினிமாவாகப் பார்ப்பதில்லை; அதன் நட்சத்திரங்களின் பேச்சுகளை வெகுஜன மக்கள் ஆராய்வதில்லை. ஆக இதன் பிரதிபலிப்பு, தாக்கம் எப்படி என்று பலரும் அறிந்ததே.

* விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குரான் வசனம் தவறான காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. எது தங்களின் வாழ்வில் தங்கள் மனைவியை நேசிக்க வைத்ததோ அந்த புனித நூலின் வசனங்கள் விஸ்வரூபத்தில் வன்முறைக்கு ஆதரவாக காட்டப்பட்டுள்ளன. உலகில் இரண்டாவது பெரிய மார்க்கமான இஸ்லாமியர்களின் இறை வார்த்தைகள் அதில் வரிசைப்படுத்தியுள்ளார் அப்பட இயக்குநர். எனவே, நீங்கள் அவருக்கு பகிரங்கமாக கண்டனம் பகிர்வது ஏற்புடையதே தவிர, மறைமுக ஆதரவுக் குரல் நல்குவது முறையல்ல,

நிறைவாக சின வினாக்கள் :

* சில இஸ்லாமிய இயக்கத் தலைவர்களின் நன்றி பாராட்டும், முக-நூல் பயனர்களின் எண்ணிலடங்கா வாழ்த்தும், பாராட்டும் தங்கள் நீர்ப்பறவைக்கு வந்து கொண்டிருக்க, பழநிபாபா மத நல்லிணக்க விருது விழா தான் முதல் பாராட்டு என்றும், பின் அவைகளையும் பெற்று, நேர்படப் பேசுவில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஒரு பாராட்டும் புரியவில்லை என்றும் கூறியது நியாயமா? அது ஏன்? ஏன் இந்த இடத்திற்கேற்பான பேச்சுக்கள்?

* ஆயக்குடி உரையில் சமூகப் போராளி போன்ற உரையும், நேர்பட பேசுவில் ஏதும் அறியாதோர் நிலைக் கருத்தும் யாரை திருப்தியடையச் செய்வதற்காக?

* நேர்பட-பேசுவில் இஸ்லாமிய இயக்க தலைவரின் வாதங்களைக் கூற அந்நிகழ்வின் தொகுப்பாளர் சரியாக வாய்ப்பு பகராமல் இடைமறிப்பது வெளிப்படையாகத் தெரிந்தும், ஏன் தாங்கள் அதைக் கண்டிக்கவில்லை ?

* தணிக்கை குழு ஒருமுகமாக செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தும் அதை தாங்கள் மறைப்பது ஏன்?

* இஸ்லாமிய தீவிரவாத சித்தரிப்புகளை நீங்கள் வெளிப்படையாக கூறாமலிருப்பதன் காரனம் என்ன?

* திரு.கமலஹாசன் அவர்கள் செய்வது உண்மையில் கருத்து சுதந்திர அடிப்படை ரீதியான செயல் அல்ல, மாறாக தெளிவான திட்டமிடல் என தாங்கள் அறியவில்லையா?

* பொதுவுடைமைவாதியும், சமூக சிந்தனையாளருமான தங்களுக்கு காவிக் கும்பல்களின் பயங்கரவாத, தீவிரவாத உண்மை நிகழ்வுகளை மறைமுகமாக மறைக்கும் கமலின் விஷமத் திட்டம் புரியாதா என்ன‌?

* கமல் முன்னணி துறை நிபுணர் என்பதால், தங்களின் தொழில் வளர்ச்சி தடைபடும் என்னும் அச்சமா?

இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு உண்மை நிகழ்வை திரைப்படமாக எடுத்து, இன்புறச் செய்த தாங்கள், தற்போது புரியும் கருத்து அணுகுமுறைகள்தான் சிறு வருத்தமாக உள்ளது. மற்றபடி தங்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை.

ஆகவே, தங்களைப் போன்றோர் வருங்காலத்தில் இது போன்ற சிறு அணுகுமுறைகளை மாற்றி, இன்றைய திரைப்படத் துறையினருக்கு, ஓர் உன்னத முன்மாதிரியாய் திகழ வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நிறைவு கொள்கின்றேன்.

- ஷஹான் நூர், கீரனூர். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It