"என் மகளை இழுத்துக்கிட்டு போயிட்டான்னு எவன் சொல்லுவான். இதுக்கின்னு ஒரு நீதிபதிய நியமித்து ரகசியமா கேட்க சொல்லுங்க..." இந்த ஒப்பற்ற கருத்துக்கு சொந்தக்காரர் 'தமிழ்க் குடிதாங்கி' டாக்டர் ராமதாஸ் அவர்கள் தான்!

கடந்த 27.1.13 அன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதுதான் மேற்கண்ட அரிய கருத்துகளை அவர் உதிர்த்துள்ளார்.

அனைத்து சமுதாய(!) தலைவர்கள் கூட்டத்தை தமிழகத்தில் பல இடங்களிலும் நடத்தி வரும் ராமதாஸ் சென்னையிலும் நடத்தியுள்ளார். இப்படி நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டத்திலும் 'பறையர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சாதிப்பெண்களை காதல் என்ற பெயரில் – ஜீன்ஸ் பேண்ட் போட்டு, மயக்கி இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறார்கள்; இந்த அநீதியைத் தடுக்க வேண்டும்; இப்படிப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டால், போலீசோடு கூட்டு சேர்ந்து கொண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகின்றனர்' என்று இக்கூட்டங்களில் விவாதிக்கின்றனர்.

                     காதல் நாடகத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

                     இதற்கு பெண்களின் திருமண வயதை பதினெட்டிலிருந்து இருபத்து ஒன்றாக உயர்த்த வேண்டும். பெற்றோரின் சம்மதம் பெறாத திருமணங்கள் செல்லாது என்ற அம்சங்களுடன் கூடிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும்.

                     வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வழக்கு நிரூபிக்கப்படாவிட்டால், வழக்குத் தொடுத்தவருக்கு தண்டனை வழங்கும் படியான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

என்றெல்லாம் இந்தக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இப்படி நடத்தப்படும் கூட்டங்களையும், இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகின்றனர். சட்டத்திற்கும், ஜனநாயத்திற்கும் விரோதமான இப்படிப்பட்ட கூட்டங்களை அரசு தடைசெய்ய வேண்டும் எனவும், சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசியும், தீர்மானம் நிறைவேற்றியும் வருகிற ராமதாசு மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இதர சாதியினருக்கும் இடையே பகையுணர்வை ராமதாஸ் தூண்டி வருவதாகவும், இதன் மூலம் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை அவர் திசை திருப்புவதாகவும், அவர்மீது குற்றச்சாட்டையும் சுமத்துகின்றனர்.

மேலே கண்ட குற்றச்சாட்டுகளை கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மீது யாரும் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக அவர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இப்படி அவர் போற்றப்படுவதற்கு 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை தமிழகத்தின் முதல்வராக்குவேன்' என்று அவர் அறிவித்தது, தனது கட்சியில் தலித் ஏழுமலை, பொன்னுசாமி ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கியது, திருமாவளவனோடு கூட்டு ஏற்படுத்திக் கொண்டது ஆகியவைகளே காரணமாகும்.

இவைகள் அனைத்தும் வன்னியன் ஆளவேண்டும் என்ற தனது கட்சியின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல் தந்திர நாடகங்களாகும். தனது கட்சியின் இலக்கை அடைவதற்கு தாழ்த்தப்பட்டோரை கிள்ளுக்கீரையாக பயன்படுத்த முயன்றதன் வெளிப்பாடுகளாகும்.

ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினராகவும், தமிழ்ச் சமூகத்தில் ஏறத்தாழ அதே விகிதத்தினராகவும் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.

வட தமிழகத்தில் ஏனைய சாதிகளோடு ஒப்பிடும்போது பெருமளவிலான எண்ணிக்கையில் உள்ள வன்னியர்கள், மொத்த மக்களில் கால்பங்கினராக வட தமிழகத்தில் உள்ள பறையர்களோடு கூட்டு ஏற்படுத்திக் கொண்டால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று பாமக கணக்கு போட்டது.

அதே வேளையில் தென்தமிழகத்தில் தாங்கள் பெருமளவில் இல்லாததால் தம‌து இலக்கிற்கு ஏற்ப தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இருமாநிலங்களை உருவாக்க வேண்டும் என்றும் பாமக கோரிக்கை வைத்தது.

ஆனால் ராமதாசின் இந்த தந்திரங்கள் அனைத்தும் பறையர்களால் மட்டுமல்ல, அவரின் சொந்த சாதியினராலும் நிராகரிப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உள்ளானது. இப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகளின் காரணமாகத்தான் வடதமிழகத்தில் பாமக எந்த ஒரு தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெறமுடியாத அளவிற்கு பின்னடவை ஏற்படுத்தியது.

ராமதாஸ் வன்னிய சாதியினரிடையே செல்வாக்குப் பெறுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது இடஒதுக்கீடு போராட்டமே ஆகும்.

இந்த இடஒதுக்கீடு போராட்டத்தைக்கூட அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே நடத்தியிருந்தால் வன்னிய சாதியினரிடையே பெருமளவு ஆதரவை ராமதாஸ் பெற்றிருக்க முடியாது. அது ஒரு வரம்பிற்குட்பட்ட ஆதரவாக சுருங்கிப் போயிருந்திருக்கும்.

இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை மிக முக்கியமாக பறையர்களுக்கு எதிரான போராட்டமாக நடத்தியதுதான் வன்னிய சாதியினரை பெருமளவு ஈர்த்தது. வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு வன்னிய சாதியினரை ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் செய்தது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது பாமகவின் பிறப்பும், அதன் வலிமையும் வன்னிய ஆதிக்கசாதி வெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த யதார்த்தத்திற்கு புறம்பாகத்தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமகவின் – நாடகமாயினும் – செயல்பாடுகள் அமைந்திருந்தன.

இப்படி நாங்கள் கூறுவது மிகையானதாகக் கூட சிலர் கருதலாம். இப்படி கருதுவோருக்கு மேலும் ஒரு நடப்பு யதார்த்த உண்மையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆதிக்க சாதியினர் எதற்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 2,56,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல தமிழகத்திலும் கூட விவசாயிகள் என்போரும் ஆதிக்க சாதியினர் என்போரும் வெவ்வேறான நபர்களில்லை. இவர்கள் இருவருமே ஒருவர்தான் என்பதை நாம் அறிவோம்.

இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், விவசாயம் செய்வது தற்கொலைப் பாதை என்பது தமிழகத்திற்கும் பொருந்துகின்ற‌ பொதுவான உண்மையாகும்.

தமது வாழ்வையே தற்கொலைப் பாதையில் தள்ளி விட்டுள்ள சக்திகளின் அக்கிரமமான செயல்களுக்கு எதிராக ஒன்று திரட்டப்பட முடியாதவர்களை, தமது வாழ்வோடு பின்னிப் பினைந்துள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மட்டுமே இவர்களை ஒன்று திரட்ட முடிகிறது. தனது சாதிக்குள்ளேயே தனது உடன் பிறந்தவர்களிடம் கூட ஒன்றுபடாமல், தனித்தனி அங்கங்களாக பிரிந்து கிடப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக மிக எளிதாக ஒன்று திரண்டு விடுகிறார்கள்.

இந்த யதார்த்தத்திற்குப் புறம்பாகத்தான் ராமதாஸ் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டார். ஆதிக்க சாதிவெறியின் இயல்பான போர்த் தந்திரம் முனை மழுங்கிப் போனதன் விளைவுதான் பாமக - வில் வேல்முருகன் போன்றோர் உருவாவதற்கும், வலிமை பெறுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ராமதாஸ் தலைமையை ஆட்டம் காணவும் வைத்தது.

இடைக்காலத்தில் தான் செய்த பிழையைத்தான் ராமதாஸ் தற்போது ஆதிக்கசாதி கூட்டமைப்பின் மூலம் சரி செய்து வருகிறார்.

எனவே வன்னிய ஆதிக்க சாதிவெறியை, வன்னிய சாதியிடம் ராமதாஸ் உருவாக்குகிறார் என்பது அரை உண்மையே ஆகும். வன்னிய சாதியிடம் இல்லாத ஒன்றை அவர் உருவாக்கவில்லை. அதற்கு மாறாக இயல்பிலேயே அச்சாதியிடம் உள்ள ஆதிக்க சாதி உணர்வை தூசிதட்டி, கூர்மைப்படுத்தி ஒருங்கிணைத்து வழிநடத்துவதுதான் ராமதாசின் திருப்பணியாகும். இது ராமதாசுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மையும் அல்ல. இதுவே அனைத்து ஆதிக்க சாதி அமைப்புகளின் தலைமைகளின் செயல்பாடுமாகும்.

சாதிவெறி, இன, மொழி வெறிகள், லஞ்சம், ஊழல் முறைகேடு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியச் சமூகத்தில் மிக இயல்பாக செய்ய முடிகிறது. என்றால், இது நமக்கு உணர்த்துவது. அவற்றை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு இருக்கிறது என்பதைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட செயல்பாடுகள் குறிப்பிட்ட தனிநபர்களின் தீய சிந்தனையாக‌வும், செயல்களாகவும் காட்டப்பட்டு உண்மைக்குப் புறம்பாக பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. இதன்மூலம் இவைகள் தொடர்ந்து உயிர் வாழத் தேவையான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படி நாங்கள் வரையறுப்பதாலேயே மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டிருக்கிறது என்பது எமது நிலைப்பாடல்ல. மாற்றத்திற்கான கூறுகள் வலிமையான அளவில் இச்சமூகம் கொண்டிருப்பினும் அது மிகச்சிறிய அளவில் முனை மழுங்கிக் கிடைப்பதுடன் சிக்கலான வடிவைக் கொண்டதாகவும் உள்ளன என்பதுதான் எமது கண்ணோட்டமாகும்.

ஒரு சமூகத்தில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடைய விரும்புவோர் அச்சமூகத்தின் யதார்த்த உண்மைகளைப் புறக்கணித்தாலோ, அதைப் பற்றிய அறிவின்மையைக் கொண்டிருந்தாலோ அவர்களால் இலக்கை எட்ட முடியாது என்பதை அறிவுறுத்தவே இவற்றை சுட்டிக் காட்டுகிறோம்.

'வன்னியன் ஆளவேண்டும்' என்ற இலக்கை எட்டுவதற்கு வன்னியர், பறையர் கூட்டு என்ற தந்திரம் பயன்படாது என்பதோடு, அது தனது இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்ற இக்கட்டுதான் புதிய தந்திரத்தைக் கையாள ராமதாஸ் தலைமையிலான குழுவை நிர்ப்பந்தித்துள்ளது. இதைத் தவிர அதற்கு வேறு வழியுமில்லை.

முந்தைய தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ள இவர்கள் இப்போது ஆதிக்க சாதிகளின் கூட்டணி என்ற புதிய தந்திரத்தைக் கையாண்டு தமது இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்..

ராமதாஸ் தலைமையிலான குழுவினரின் இந்தப் புதிய தந்திரம் வன்னிய சாதியினரின் ஆதரவை மட்டுமல்ல, அனைத்து ஆதிக்க சாதியினரின் தார்மீக ரீதியான ஆதரவையும் பெற்றுள்ளது.

இப்படி கிடைத்துள்ள தார்மீக ரீதியான ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில்தான் காதல் நாடகம், வன்கொடுமை தடுப்புச்சட்ட எதிர்ப்பு ஆகியவைகளை ராமதாஸ் முன்னிறுத்துகிறார்.

இப்போது பாமக கையாளும் அனைத்து சமூக கூட்டமைப்பின் சென்னை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், காதல் நாடகம் என்ற தனது கூற்றுக்கு ஆதாரமாக, காதல் நாடகத்தில் ஒரு பெண்ணின் குடும்பத்திடமிருந்து ரூ.10 கோடியை - தம்பி தலைமையிலான - ஒரு கும்பல் பறித்து விட்டதாகவும், இந்த அவமானம் தாளாமல் அந்தப் பெண்ணும், அவரின் தாயாரும் அமெரிக்கா சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 'தம்பியோடு' சேர்ந்து பல சாதிமறுப்புக் காதலர்களை பிரித்ததைப் பற்றியும், அப்போது புரண்ட கோடிகளைப் பற்றிய பட்டியலையும் அய்யா வெளியிட்டால் அவர் தனது வாதத்திற்கு அசைக்க முடியாத பலத்தை சேர்த்து விடமுடியும்.

இப்படி நாங்கள் குறிப்பிடுவது ராமதாசை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூட சிலர் குற்றம் சாட்டுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இப்படிப்பட்ட கருத்தும், கண்ணோட்டமும் உடையவர்கள், அவர் அப்படி நடந்து கொள்ளமாட்டார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இருப்பின் அவைகளை வெளியிடட்டும்.

நாங்கள் அவர் இதைப் போன்றச் செயல்களில் ஈடுபடுவதை தனது இயல்பான நடவடிக்கையாகக் கொண்டவர் என்பதை கீழே நாங்கள் தொகுத்துள்ள அவரின் நடவடிக்கைகளில் இருந்தே சுட்டிக் காட்டுகிறோம்.

• தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் ஜீன்ஸ் பேண்டில் மேல் சாதி பெண்கள் மயங்கி விடுகின்றனர்.

•இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 18 - லிருந்து 21 - ஆக உயர்த்த வேண்டும்.

• பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய திருமணமே செல்லும் என்ற சட்டம் இயற்ற வேண்டும்.

ஆகிய கருத்துகளை தொடர்ச்சியாக ராமதாஸ் வெளியிட்டு வருகிறார். இவைகளில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது.

1.                    வன்னியன் ஆள வேண்டும் என்ற இலக்கு, நோக்கத்திற்காக தனது சாதி உள்ளிட்ட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சாதிப் பெண்களின் சிந்தனையையும், ஒழுக்கத்தையும் இழிவுபடுத்துவது, கேள்விக்குள்ளாக்குவது.

2.                    பெண்ணடிமைத்தனத்தை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு நிலைநாட்ட முற்படுவது.

தான் தெரிவு செய்து கொண்ட இலக்கை அடைவதற்கு தனது சொந்த சாதிப் பெண்களையே இழிவுபடுத்தி, அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர், சாதி மறுப்புக் காதலர்களை பிரிப்பதற்கு கையூட்டு பெறமாட்டார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

வேறு யாருமே இழிவுபடுத்த முடியாத அளவிற்கு ராமதாசே தனது சாதிப் பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்த முடிகிறது என்றால் இதைக்கேட்டு அந்த சாதியினர் மட்டுமல்ல, மேல்சாதிகள் என்று தங்களை கூறிக்கொள்வோர், பெண்ணுரிமை பேசுவோர் கூட இதற்கு எதிராக குரல் கொடுக்கக் கூடத் தயாராக இல்லை என்பது ராமதாசின் கருத்துகளில் இவர்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்பதும், இச்சமூகமே அதற்குரிய ஏற்புத்திறனுடன் தான் உள்ளது என்பதற்கான ஆதாரமுமாகும். இதை மேலும் புரிந்து கொள்ள மற்றொரு அம்சத்தையும் கணக்கில் கொள்வது அவசியமாகும்.

தம்மை மேல்சாதியினர் என்றுக் கருதிக் கொள்வோர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையே உருவாகும் தகராறுகளின்போது மிக இயல்பாக - கணவன், மனைவிக்கு இடையிலும், தாய்க்கும், பிள்ளைக்கும் இடையிலான தகராறுகளின் போதுகூட - தன்னைவிட கீழ்சாதி என்று கருதும் ஆண்களோடு தான் தகராறு செய்யும் பெண்ணை மிகவும் ஆபாசமாக தொடர்புபடுத்தி திட்டுவது மிகவும் சாதாரணமான, இயல்பான, அன்றாட நடவடிக்கையாக உள்ள‌து.

இது எதைக் காட்டுகிறது? ராமதாஸ் எந்த ஆயுதத்தை எடுத்துள்ளாரோ, அதை தனது சாதியிடமிருந்துதான் எடுத்துக் கொண்டுள்ளார் என்பதைத்தானே! இப்படிப்பட்ட தனது பேச்சு தனது சாதிப்பெண்களை,,சாதியை இழிவுப்படுத்தும் ஒன்றாக ஒருவர் கூட கருதவில்லை. அந்த அளவிற்கு அது அவர்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

இதை மொத்த சமூகமே இயல்பான பண்பாடாக கொண்டிருப்பதால்தான் ராமதாஸ் தனது சாதிப் பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கூட்டமைப்பில் உள்ள சாதிப்பெண்கள் அனைவரையுமே இழிவுபடுத்தவும், கொச்சைப்படுத்தவும் முடிகிறது.

பருவ வயதில் காதல் வயப்படுவது என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இயல்பான நிகழ்வாகும். இப்படி காதல் வயப்படுதலே காதலாக மாறிவிடுவதில்லை. இவர்களில் 100 - ல் ஒன்றிரண்டு மட்டுமே காதலாக, திருமணமாக வடிவெடுக்கிறது. இவையும் பெரும்பாலும் சொந்தக்காரர்கள், பெற்றோர் ஆகியோரால் இழிவுபடுத்தப்படுவதாலும், பட்டம் சூட்டும் செயல்களினாலுமே தான் காதல் வயப்படும் ஆணையே திருமணம் செய்ய மேல்சாதி இளம் பெண்களை நிர்ப்பந்திக்கிறது.

இது சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும், பெண்மையை இழிவுப்படுத்தும் செயல்களின் எதிர்வினையாகும். தற்போது ஆதிக்கசாதி கூட்டமைப்புகள் தமது சாதியினரின் இயல்பான, தனித்தனியான கொச்சைப்படுத்தும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து ஊடகங்களின் வழியாக செய்கின்றனர். தமது இந்த செயல்பாடு சாதிமறுப்பு காதலர்கள் உருவாவதை மிரட்டி தடுத்துவிடும் என்று நம்புகின்றனர்.

இவைகள் அதற்கே உரிய வகையிலும், அளவிலும் எதிர்வினையாற்றும் என்பதை வரலாறு விரைவில் இவர்களுக்கு நிரூபித்துக் காட்டும்.

ஒரு சமூகமே இப்படிப்பட்ட கருத்தை உள்ளடக்கமாக கொண்டிருப்பதால்தான் ராமதாஸ் போன்றோர் இக்கருத்துகளை வெளிப்படுத்தவும், சமூகத்தில் செல்வாக்குப் பெறவும் வாய்ப்பாக அமைகிறது என்பதை மூடி மறைக்க முயல்வது இக்கேடு கெட்டத்தனத்தை பாதுகாக்கவே பயன்படும் என்பதை எப்படி நிராகரிக்க முடியும்?

எனவே ராமதாஸ் தனது சொந்த ஆதாயத்திற்காகத்தான் ஒரு சமூகத்தையே தலைகீழாக மாற்றிவிடுகிறார் என்ற கருத்தும், வாதமும் உண்மைக்குப் புறம்பானவையாகும்.

தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சாதிகளின் அமைப்புகளை தனது தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பதில் ராமதாசு வெற்றி பெற்றிருக்கலாம்.

ஆனால், இந்தக் கூட்டமைப்பின் மூலம் 'வன்னியன் ஆளவேண்டும்' என்ற தனது இலக்கை அவர் அடைந்து விடமுடியுமா? முடியும் என்றுதான் அவர் கருதுகிறார். தமிழகம் தழுவிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதி கூட்டமைப்பின் காரணமாக தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையையும் அவர் வலியுறுத்த மாட்டார் என்பதும் இப்போது புலப்படுகிறது.

இப்போது மட்டுமல்ல, பார்ப்பனியம் தமிழகத்தில் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்தே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்பு இயல்பிலேயே இருந்துதான் வருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு அடிப்படையில் முந்தையதில் இருந்து வேறுபட்டதல்ல.

அதே நேரத்தில் இது முந்தைய கிராம அளவிளான செயல்பரப்பிலிருந்து, மாநில அளவிலான செயல் பரப்பிலானதாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பதுதான் இதன் தனித்தன்மையாகும்.

இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மீது ஒடுக்குமுறையை செலுத்துவதற்கு, தனது செழுமையான அனுபவங்களை பாமக இக்கூட்டமைப்பிற்கு வழங்கும். இதனால் தாழ்த்தப்பட்டோர் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய வகையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்படுவதால் தாழ்த்தப்பட்டோர் இந்த இக்கட்டிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக ஆதிக்க சாதி கூட்டமைப்பின் வலுவான செயல்தளங்களாக உள்ள கிராமப்புறங்களிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகள் தவிர்க்க வியலாமல் மேலும் அதிகரிக்கச் செய்யும்.

தாழ்த்தப்பட்டோரின் இப்படியான நடவடிக்கைகள் கிராமப்புறங்களை அதிலும் விவசாயத்தை, அதன் அழிவை இறுதிகட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இதன் தவிர்க்கவியலாத விளைவாக ஆதிக்க சாதிகளாகவும் – விவசாயிகளாகவும் உள்ளவர்களின் வாழ்வை மேலும் இது அடித்தளமற்றதாக்கும்.

சாதிய கூட்டமைப்பு தாழ்த்தப்பட்டோரை ஒடுக்க ஆதிக்கச்சாதிகளுக்கு மேலும் வலுவைத் தரும் என்றாலும், இதுவே இவர்களின் வாழ்வை மேலும் கேள்விகுள்ளாக்கும் தன்மையை உள்ளடக்கியுள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

ஒட்டுமொத்தத்தில் இது தற்கொலைப் பாதை என்பதை இவர்கள் காண மறுக்கின்றனர்.

ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பு தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் வேண்டுமானால் அவைகளுக்கு பயன்படலாம். 'வன்னியன் ஆளவேண்டும்' என்ற பாமகவின் கனவை நிறைவேற்ற பயன்படாது.

தாழ்த்தப்பட்டோர், இக்கூட்டமைப்பின் கண்ணோட்டத்தில் கீழ்சாதி. அதே நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள சாதிகளில் கண்ணோட்டத்தில் பார்த்தால் வன்னிய சாதி கீழ்சாதி!

தன்னைவிட ஒரு கீழ்சாதி நாட்டை ஆள பிற சாதிகள் ஒப்புக்கொண்டுவிட்டதாக ராமதாசும் – பாமக –வும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு நாம் இப்போதே நமது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

- சூறாவளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு எண்:9842529188)

Pin It