“பிராமணர்கள் தலித்துகள் மீது வன்முறையை பிரயோகித்தது இல்லை. ஆனால் தலித்துகள் மீது வன்முறையை பிரயோகிப்பவர்கள், தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற இடைநிலை சாதியினர்தான். தமிழகத்தின் மூலை முடுக்குகளெங்கும் நிறைந்திருக்கும் தேவர் ஹோட்டல்களுக்கு எதிராக ஏன் இராமகிருஷ்ணன்கள் போராடவில்லை..?

பிராமணாள் கேப் என்பது பெயர்தானே ஒழிய அதில் தலித்துகளோ மற்றவர்களோ நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று யாராவது தடுத்தார்களா?

தேவர் ஹோட்டல், நாடார் அன்ட் சன்ஸ் என்று தமிழகமெங்கும் சாதிப்பெயர்களில் உணவகங்களும், இருக்கையில் பிராமணாள் கேப் என்று பெயர் வைப்பதில் என்ன தவறு...

இதற்காக இந்தப் போராட்டம்... மற்ற இடைநிலைச் சாதியினர், தலித்துகளை அடக்கி ஒடுக்கி, சாதிப்பெயரை பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிகையில், பிராமணர்கள் தங்கள் சாதிப்பெயரைச் சொல்லிக் கொள்வதில் என்ன தவறு?”

மேலே உள்ள கேள்விகளைக் கேட்டிருப்பவர் சவுக்கு இணையதளத்தின் சங்கர். இப்படி பலராலும் இதுபோன்ற பார்ப்பனர்களுக்கு ஆதரவான கருத்துக்களும், கேள்விகளும் இணைய தளங்களிலும், முகநூல்களிலும் பரபரப்பான விவாதங்களாகியுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டே இந்தச் சிக்கல் திருச்சியில் உருவானது. அப்போது ஒருங்கிணைந்த பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும், திராவிடர் கழகம், பெரியார் தத்துவ மய்யம், பெரியார் பாசறை ஆகிய அமைப்புகள் சார்பிலும் ஸ்ரீரங்கம் பிராமணாள் கஃபே-க்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்தது. இந்நிலையில் கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன இழிவு ஒழிப்புக்காக போராட்டத்தில் இறங்கியது. அதற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தையும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

brahmin_270ஸ்ரீரங்கத்தில் மட்டுமல்ல திருச்சி மாவட்டம் குளித்தலையிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம்சாலையில் மேட்டுக்கடையிலும், பெங்களூரில் பல இடங்களிலும் பிராமணாள் கஃபேக்கள் இருக்கின்றன. கோவையில் ஸ்ரீகிருஸ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பார்ப்பனர்களுக்கு தனி சுடுகாடு இருக்கிறது. சென்னையில் 2012 ஏப்ரல் மாதத்தில் 12 ஆம் நாளிட்ட இந்து ஆங்கில ஏட்டில் வெளியான அடுக்குமாடி ஃப்ளாட் விற்பனை விளம்பரத்தில்கூட ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று குறிப்பு வெளியானது. கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் இப்போதும் போய் பார்க்கலாம். ஆண்டாள் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் பிராமணர்களுக்கு மட்டும் என்று குறிப்பு உள்ளது.

நம்மைப் பொறுத்தவரை பிராமணாள் கஃபே என்று இருந்தாலும் குற்றம்தான். தேவர் டீக்கடை, கவுண்டர் அன் கோ, கோனார் மெஸ், படையாட்சி டீஸ்டால் என எந்த ஜாதியின் பெயரில் வணிக நிறுவனங்கள் இருந்தாலும் தவறுதான். குற்றம்தான். இழிவுதான்.

‘பிராமணாள்’ என்றால் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்களை ‘தேவடியாள் மக்கள்’ என்றுதான் பொருள் குறிக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பாதுகாக்கப் பட்டுள்ள‘இந்துலா’வின் படி பிராமணன், சூத்திரன் என்று இரு பிரிவுகள்தான் தற்போது உள்ளன. சூத்திரன் என்றால் பிராமணர்களின் வைப்பாட்டி மகன் என்றுதான் இந்துலாவில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார்.

அதே சமயம், பிராமணன் என்றால்தான் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழிவு; பிராமணன் அல்லாமல் அய்யங்கார் பேக்கரி, தேவர் மெஸ், கவுண்டர் அன் கோ என்று ஜாதிப் பெயர்களில் வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைத்தால் யாருக்கும் இழிவு இல்லை என்று சொல்வது மிகப் பெரும் தவறு. இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதிப் பெயரில் கடை இருந்தாலும் அந்த ஜாதிப் பெயரானது அந்தக் கடையை வைத்திருக்கும் ஜாதி மக்களை முதலில் இழிவுபடுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தமத அடுக்குவரிசைப்படி தனக்கு அடுத்துள்ள ஜாதிகளையும் இழிவுபடுத்துகிறது என்பதே உண்மை.

பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், கோனார் மெஸ் என்று வைத்திருக்கிறார்கள் என்றால் முதலில் இந்து மதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள். அடுத்து, இந்து மதத்தில் நாயுடுவுக்கும், கோனாருக்கும் உரிய இடத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள். இந்து மத சாஸ்திரங்களும், மனுஸ்மிருதிகளும் நாயுடு ஜாதிக்கும், கோனார் ஜாதிக்கும் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள். மனுதர்மப்படி, இந்து சாஸ்திரங்களின்படி தனது ஜாதி மக்களை தாமே தேவடியாள் மகன் என்று ஏற்றுக் கொள்கிறார்கள், தமக்கு அடுத்தபடியாக உள்ள ஜாதிகளையும் பார்ப்பனர்களின் வைப்பட்டி மக்கள் என்று இழிவுபடுத்துகிறார்கள் என்றுதான் பொருள். பார்ப்பனர்களின் இந்துமத அடையாளங்களில் எந்த ஒன்றை ஏற்றுக்கொண்டாலும் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்பதே சட்டப்படி, சாஸ்திரப்படி உண்மை. எனவேதான் தோழர் அம்பேத்கார் அவர்களும் "நான் இந்துவாகச் சாகமாட்டேன்" என் பிரகடனம் செய்தார்.

அந்த அடிப்படையில்தான், எந்த ஜாதிப் பெயரில் வணிக நிறுவனங்கள், தெருக்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் எவை இருந்தாலும் அவை ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் இழிவுபடுத்துகின்றன என்பதை உணர்ந்து தான், கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் திருப்பூரில் ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயண நிறைவு விழாவில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில் ஒன்று,

“இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதியை அடையாளப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தனியார் பேருந்துகள், கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தின் பெயர்களையும் திருத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைத் திருத்தாத நிறுவனங்களின் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழி செய்யவேண்டும்.”

மற்றொன்று,

ஜாதி அடிப்படையில் இயங்கும் திருமணத் துணைதேடும் மய்யங்களைத் தடைசெய்ய வேண்டும். திருமணத்திற்குத் துணைதேடும் விளம்பரங்களில் ‘ப்ராமின்ஸ் ஒன்லி’, ‘எஸ்.சி, எஸ்.டி’ தவிர என்று வரும் விளம்பரங்களைதயும், கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர், நாடார் என்று குறிப்பிட்ட ஜாதிகளை அடையாளப்படுத்தி வரும் விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்.

என்பவைகளாகும்.

இது மட்டுமல்ல இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள், இரட்டை வாழ்விடங்கள் என தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஆய்வுசெய்து, பட்டியலிட்டு அவைகளுக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்பு, தீண்டாமைச்சுவர் உடைப்பு, இரட்டை இருக்கை உடைப்பு என பலவகைப் போராட்டங்களைக் கடந்த காலங்களில் முன்னெடுத்தது. அந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட அனைத்துவகைத் தீண்டாமை வடிவங்களையும் பட்டியலிட்டு அரசுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. வணிக நிறுவன ஜாதிப் பெயர்கள் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றா விட்டால் வரும் 2013 பிப்ரவரி 28 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்த அந்தப் போராட்டத்தை தற்போது கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த உள்ளது.

சவுக்கு சங்கரின் முக்கியமான வாதம் இது. “தலித்துகள் மீது பிராமணர்கள் வன்முறையை பிரயோகித்தது இல்லை.”

இது மிகப்பெரும் கற்பனைவாதமாகும். இந்துமதத்தையும், தற்போதுள்ள சமுதாய அமைப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சொல்லப்படும் கருத்தாகும். இந்திய அரசியல் சட்டப்படியும், இந்து சாஸ்திரங்களின் படியும் இந்துமதத்திலுள்ள தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் ‘தேவடியாள் மகன்கள்’ என குறிப்பதுதான் பிராமணன் என்று பார்ப்பனர்கள் சொல்வதன் பொருள். இதைவிட வேறு வன்முறை வேறு இருக்கமுடியுமா? இன்றுவரையும் தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவு இருப்பதற்கே காரணம் இந்து மதமும் அதன் ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களும்தானே? 

மனுசாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் 31 வது ஸ்லோகம் சொல்கிறது.

உலகவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்று பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாகவுண்டு பண்ணினார்.

இப்படி முதன் முதலில் நான்கு வர்ணங்களை நான்கு வகையான ஜாதிப்பிரிவுகளை உண்டாக்கியது மனுசாஸ்திரம். உண்டாக்கியது மட்டுமல்ல. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தொழிலையும் விதித்தது. மனுவின் 1 ஆம் அத்தியாயத்தில் 87 முதல் 91 வரையான ஸ்லோகங்கள் பிராமணனுக்கு ஓதுதலும் ஓதுவித்தலும், சத்திரியனுக்கு பிரஜைகளைக் காத்தல், வைசியனுக்கும் பசுவைக்காத்தல், வணிகஞ்செய்தல் ஆகிய தொழில்களைச் சொல்கிறது. சூத்திரனுக்கு மேற்கண்ட முன்று வர்ணத்து மக்களுக்கும் பொறாமை இன்றி அடிமை வேலைகளைச் செய்தல் எனத் தொழில்களைப் பிரித்திருக்கிறது.

இப்படி பிரிக்கப்பட்ட வர்ணங்கள் - ஜாதிகள் ஒன்றுக்கொன்று கலந்துவிடக்கூடாது என்றும் கடுமையான விதிகளை வைத்திருக்கிறது.

உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.         

                                - 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தைத் தான் பிராமணர் சங்கமும், காடுவெட்டி குருவும், பழ.கருப்பையாவும் வழிமொழிந்து வருகின்றனர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் பிறந்தவுடன் பெயர் வைப்பதில் தொடங்கி, இறந்த பின் சுடுகாடு சேரும் வரை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதியை உருவாக்கி அவற்றை இன்றுவரை நடைமுறைப்படுத்தியும் வைத்திருப்பது பார்ப்பனர்கள்தான்.

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை சண்டாள ஜாதிகள், சங்கர ஜாதிகள் என்ற பெயரில் இந்து மதத்திலிருந்து தனியாகப் பிரித்து வைத்து அவர்கள் வாழும் இடத்தையும் தனியாகப் பிரித்து வைத்தது மனுதர்மம்தான். இன்று வரை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கிராமங்கள் ஊர் என்றும் சேரி என்றும் இரு பிரிவாகப் பிரிந்து கிடப்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அதன் ஊர் - சேரி என்ற தீண்டாமையின், பிரிவினையின் தோற்றம் என்ன தெரியுமா?

“இவர்கள் அனைவரும் பட்டணத்திற்கும் ஊருக்கும் வெளியில், மரத்தடி, தோப்பு, மயானத்திற்கு அருகே, மலைப்பூந்தோட்டம் இவைகளில் அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளிகள் என்று தெரியும்படி தன்தன் தொழிலைச் செய்துகொண்டு வாசஞ்செய்ய வேண்டியது”                                                       (அத்தியாயம் 10; ஸ்லோகம் 49)

“இவர்கள் பிணத்தின் துணியை உடுத்தவேண்டும். இரும்பு, பித்தளை இவைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணியவேண்டும். அவர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டும்.” “நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” (10 : 53).

“இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும்.இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (அத்தியாயம் 10; ஸ்லோகம் 49 முதல் 54)

இவ்வாறு தலித்துகளைப் பிரித்து வைத்து அவர்களின் வாழ்விடங்களையும் தனியே வைத்தது மனுதர்மம். அந்த இந்து தர்மத்தை உருவாக்கி இன்றுவரை நடைமுறைப்படுத்துபவர்கள் பார்ப்பனர்கள். மேம்போக்காக பிராமணர்கள் தலித்துகளைத் தாக்குதில்லை எனச் சொல்லிவிட்டுப்போவது தவறு. தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று உழைக்கும் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள வைத்ததே பார்ப்பனர்கள்தானே?என்றோ எழுதப்பட்ட மனுஸ்மிருதி இன்றும் நடை முறையில் உள்ளதா? என்று கேட்பவர்களுக்கு நேரடி சாட்சியாக இருப்பவைகளே சேரிகள்.

இது போன்ற தீண்டாமை வடிவங்களை, ஜாதிகளை உருவாக்கிய மனுசாஸ்திரம் உருவான காலம் கி.பி 100 - 150 ஆம் ஆண்டுகாலமாகும். மெளரியப் பேரரசை அழித்து உருவான பார்ப்பன அரசான புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில்தான் இது அரசின் கிரிமினல், சிவில் சட்டப் புத்தகமாக உருவெடுத்தது. 

புஷ்யமித்ர சுங்க பார்ப்பானின் ஆட்சிகாலம் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மன்னர்கள் பேரரசர்கள், இராஜராஜ சோழன்கள் ஆகிய அனைத்து மன்னர்களும் மனுநீதிச் சோழர்களாகவே அரசாண்டனர்.

திருமலை நாயக்கன் ஆட்சி காலத்திலும் மனுசாஸ்திரப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலம் வரை சாதர் திவானி அதாலத், சாதர் திவானி நிஜாமத் போன்ற நீதிமன்றங்களிலும் மனுசாஸ்திரமே நீதி வழங்கும் நூலாக இருந்தது.

“சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 லேயே பார்ப்பன வெறியோடு பேசியவர் பாலகங்காதர திலகர்.

அதன்படி 1951 க்குப் பிறகு இந்தியா குடிஅரசான பிறகும் இந்திய அரசியல் சட்டத்தின் 372 பிரிவின் பாதுகாப்பில் இந்து தரும சட்டங்கள் இன்றுவரை நம்மை ஆண்டுவருகின்றன.

1980 வரை கூட இந்திய உச்சநீதி மன்றத்தில் தத்தெடுத்தல், குத்தகைச்சட்டம், வழிபாட்டு உரிமை வழக்குகளில் இந்து, மனு சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என்.சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’(மே 10, 1992) வெளியிட்டுள்ளது”.

ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் முள்வேலி முகாம்கள் இருப்பதை மனிதன் என்ற உணர்வுள்ள அனைவரும் கண்டிக்கிறோம். ஆனால் எந்த முள்வேலியோ, மின்சார வேலியோ, கான்க்ரீட் சுவரோ எதுவும் இல்லாமல், கண்ணுக்குத் தெரியாமல் மூளைக்குள் வேலியைப் போட்டு குடியான தெரு - சேரித் தெரு, ஊர் - சேரி என பிரித்து வைத்திருக்கும் மனுசாஸ்திரத்தை நோக்கியோ, அதை இன்றும் நடைமுறைப்படுத்தும் பார்ப்பனர்களை நோக்கியோ, இன்று வரை சவுக்குகள் சுழலாதது ஏன்?

 ஊர் - சேரி என்ற பிரிவினை மட்டுமல்ல, இந்தக் கணினி யுகத்திலும் நாம் அன்றாடம் கண்டும் காணாமலும் சென்றுகொண்டிருக்கும் தீண்டாமை வடிவங்கள் அனைத்திற்கும் மூலகாரணம், மூலவிதை மனு சாஸ்திரத்தில்தான் உள்ளன. இவை கி.பி. 100 ஆண்டிலிருந்து இன்று வரை இது அழிக்க முடியாத சக்தியாக, ஒவ்வொரு இந்துவின் மூளையிலும் நஞ்சாக ஏறியுள்ளது.

அதனால்தான் பெரியாரும் அம்பேத்கரும் 1927லேயே மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள். தோழர் அம்பேத்கர் மகத் மாநாட்டின் போது மனுசாஸ்திரத்தைக் கொளுத்தும்போது,

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத் தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனுஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது”. என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோரும்- பிற்படுத்தப்பட்டோரும் மோதிக்கொள்வதற்குக் காரணமே பார்ப்பனர்களும், இந்து மதமும், இந்து சாஸ்திரங்களும்தான். தலித் மீதான வன்முறையின் மூலவித்தே பார்ப்பனர்கள் தான். எனவே பார்ப்பனர்கள் நேரடியாக தலித்துகளைத் தாக்குவதில்லை என்ற வாதம் உண்மையான எதிரியான பார்ப்பானையும் இந்து மதத்தையும் காப்பாற்றும் வாதமாகும். இதற்கெல்லாம் எந்த புலனாய்வுத்திறனும் தேவையில்லை. அம்பேத்கரின் தொகுதிகளைப் படித்தாலே போதும். அல்லது பெரியாரின் குடி அரசு, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அசல் மனுதர்ம சாஸ்திரம் நூல்களைப் படித்தாலே போதும். நோய்க்கிருமியையும் நோயால் பாதிக்கப்பட்டவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. நோய்க்கிருமியை அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவம் செய்யவேண்டும். பாதிப்புக்கு ஏற்றவாறு மருத்துவம் பார்க்கவேண்டும்.

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

15 comments

15
Chandar
Savukku+Keetru, orae thaayin iru pillaigal, orae kuttaiyil ooriya mattaigal.
ஷாலி
திரு.அதி அசுரன் அவர்கள் ஏகப்பட்ட சுலோகங்களை போட்டு ஒரு பெரிய பாஷ்யமே எழுதிவிட்டார்.சவுக்கு சங்கர் உங்களை விட அதிகம் எழுதுவார். பிராமணர்களுக்கு ஆதரவாக என்றுமே அவர் எழுதியதில்லை.அவர் தளத்திற்கு வரும் எதிர்ப்பு பின்னுட்டங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பிற சாதிப்பெயரில் ஏராளமான நிறுவனங்கள் இருக்கும்பொழுது இவைகளை எதிர்த்து எவரும் இதுவரை கோர்ட்டுக்கு போகவில்லை. மன மாற்றங்களை முதலில் வன்னிய, தேவர், போன்ற சூத்திர சாதி மக்களிடம் ஏற்ப்படுத்த தவறிய இயக்கங்கள்,பிராமணர்களையே நோண்டுவது ஏன்?

பெரியார் அவர்கள் மனு தர்ம பிராமணியத்தை இறுதிவரை எதிர்த்தார்.ஆனாலும் அடித்தட்டு சூத்திரர்கள் மன மாற்றம் பெற வேண்டி பட்டி தொட்டி எங்கும் பயணம் செய்தாரை ஒழியே,
அக்கிரகாரத்தை எதிர்த்துக்கொண்டு அங்கேயே முடங் கிக்கிடக்கவில்லை.
பெரியார் செய்த பணி மிகக்கடுமையான பணி.இதைச் செய்ய இன்றைய இயக்கங்கள் தயாரில்லை. பெரியார் மானமுள்ள, சாதி சமயமற்ற அழகிய தமிழ் சிற்பத்தை செதுக்கும் வேலையை செய்தார். ஆனால் இன்றைய இயக்கங்கள் அம்மி கொத்தும் பம்மாத்து வேலை செய்கின்றன.
பிராம்மணள் கபே யை எதிர்த்து கோர்ட்டுக்கு போவது எளிது.
ஆனால் வன்னியர்,தேவர் சாதி நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் துரும்பை கூட அசைக்க முடியாது.இயக்கத்தில் இருப்பவர்களே அவர்கள்தான்.ஆகவேதான் தங்கள் இயக்கத்தில் இல்லாத பார்ப்பானர்களை எதிர்க்கிறார்கள்.
இயக்கங்களின் இரட்டை வேடத்தையே சவுக்கு எதிர்க்கிறது. எப்படியோ, சவுக்கு தளத்தை கீற்று வாசகர்களிடம் விரிவாக அறிமுகப்படுத்திய தோழர் அதி அசுரனுக்கு எனது மகிழ்வான நன்றி!
raja
tholar Thamaraiku Valthukal - sandrukal nandru.... sataikal(Varthai Soodu) ennum thevai
Natarajan
முகம் அல்ல வாய் வழியாக பிறந்தவர்கள். என்றுதான் வேதததில் உள்ளது. கேலி செய்யப் பட்டவுடன் முகம் என்று மாற்றினார்கள். பெரியார் சொன்னது போல பன்சமர்கள் மட்டுமே ஒழுன்காக பிறந்துள்ளனர்.
Natarajan
டார்வின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்தார். பல லட்சம் ஆண்டுகள் பின்னே போனால் மனிதன் பிறப்புறுப்பு தலையிலும் தோளிலும் தொடையிலும் காலிலும் இருந்திருக்கும். இப்பொழுதான் அது ஒரே இடத்தில் உள்ளது. இனி மாறலாம். யாரேனும் ஆராய்ச்சி செய்தால் நோபல் பரிசு பெறலாம்.
NAAN TAMIZHANALLA
சவுக்கு சங்கர் கூற்றூ அரைவேக்காட்டுத்தனமானது...அரசு-அரசு அதிகாரிகள் பற்றீ சவுக்கின் சாடல்கள் சரியானது ,ஆனால் சமூக அமைப்பை பற்றீய ஆய்வு சவுக்குக்கு அரிச்சுவடி அறீவுதான் என்பது அவரின் கருத்திலிருன ந்து வெளீச்சமாகிறது.
Ravi
அதிஅசுரனுக்கு பித்தம் தலைக்கேறிவிட்டது.
சவுக்கு சங்கர் பார்பனனை எதிர்த்துதான் வாதிடுவார்.
அவரது வலைத்தளத்தில் அவரது ஜாதி வெறிக்கு எதிராக வைக்கப்பட்ட ஒரு வாதத்தை எடுத்து வைத்து கொண்டு நீங்கள் வழக்கப்படி பார்பானை தூற்றி துப்ப தொடங்கிவிட்டீர்கள்.

நோய் நாடி நோய் முதல் நாடியெல்லாம் சரிதான். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வெறுப்பு வேஷம் கட்ட போகிறீகள்?. நான் இந்துவாகவே சாகக்கூடாது என்று சொன்ன அம்பேத்காரும் மணந்தது ஒரு பாப்பாத்தியைத்தான். அவரை லண்டனுக்கு அனுப்பிவைத்து படிக்க வைத்ததும் ஒரு பார்ப்பனந்தான்.

ஒடுக்கப்பட்ட ஜாதி உண்மையான உயர்வு பெற வழி இது போன்ற வெறுப்பை விதைப்பதல்ல.? வெறும் செவி வழி செய்தியையும் தவறாக புரிந்து கொண்டும் இல்லாத தத்துவங்களை பேசிக் கொண்டும், நிருபணமாக மொக்கை வாதங்களை வைத்து கொண்டு சுமார் 2000 ஆயிரம் பேரின் சந்தாவில் வயிறு வளர்க்கலாம். சமுதாயம் வளராது.
நிருபணமாக கடந்த காலங்களை பேசாமல் எதிர்காலத்திற்கு திட்ட மிடுங்கள் .
சாராயம் இல்லாத கிராமங்களை கொண்டுவாருங்கள். பள்ளிகள் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலை காணுங்கள்.
உங்களப்போல வெட்டிக் கதை பேசாமல் எதிர்காலத்திற்கு தம்மை தயார் படுத்திக் கொண்ட எல்லா சமுதாயமும் மேம்பட்டு சென்று கொண்டிருக்கிறது.
பழி பேசியே நீங்கள் இன்னும் தொடங்கிய இடத்திலேயெ இருக்கின்றீர்கள். நீங்களும் வளருங்கள். மற்றவரையும் வளர்த்துங்கள்.
raam
அதி அசுரன் பொறுப்புள்ள, நன்கு படித்த சுய சிந்தனையுள்ளவர் என்கிற எனது புரிதலை முற்றாக போட்டு உடைத்த கட்டுரை இது. சவுக்கு சங்கர் என்கிற *** மறுப்பு என்கிற பட்டுக்குஞ்சலத்தை வீணாக்கி இருக்கிறார்.

சவுக்குய் சங்கர் என்கிற நபர் தமிழக காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் ஒரு குழுவின் எடுபிடி. ஏவலாள். அதற்கு மேல் அவருக்கு ஒரு சமூக பொறுப்போ, பார்வையோ கிடையாது. தமிழக காவ்ல்துறையின் ஒரு குழுவுக்கு சிலரை குறிவைத்து தாக்கவும், சென்னை நீதிமன்றத்தில் சட்டத்தின் துணையோடு செயற்படும் சில வழக்கறிஞர்களின் பிளாக்பெயிலுக்கு குறுக்கே போகும் சிலரை குறிவைத்து கீழ்த்தரமாக விமர்சித்து அவர்களின் சட்டவிரோத வியாபாரத்திற்கு கேடயமாக இருப்பது தான் சவுக்கு என்கிற இணைய்தளத்தின் பிரதான பணி. அதன் முகமூடியாக செயற்படும் ஒரு புல்னாய்வு காவல்துறை அடியாளுக்கு மறுப்பெழுதி அதி அசுரன் தன்னைத்தானே கேவலப்படுத்திகொண்டார் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் ஆண்டிமுத்து ராசா வை திட்டி அவர் எடுத்த இணைய வாந்திகளில் ஒரு வாந்திக்கு தலைப்பு ஆண்டிமுத்து மட்டும் இரண்டாவது ஷோ சினிமாவுக்கு போயிருந்தால் (அதாவது ஆண்டிமுத்து அன்று இரவு தனது மனைவியை புணராமல் இருந்திருந்தால்) ராசா பிறந்தெ இருக்கமாட்டார் என்று தலைப்பிட்ட சவுக்கு சங்கரை எந்த அடிப்படையில் மதித்து மறுப்பு எழுதினீர்கள் என்பது மட்டுமே அதி அசுரனிடம் என் கேள்வி?

இணையம் பல கழிசடைகளை போராளிகளாக காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் பெரியவர் சவுக்கு சங்கர்.

கீற்று இணையதள ஆசிரியருக்கு: நீங்கள் இந்த கடிதத்தை பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் உரிமை. ஆனால் இதை அதி அசுரனுக்கு அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அனுப்பவேண்டும் என்று கோருகிறேன்.
tharaniramesh
ஆச்சிமுத்து சங்கர்,இவர் எழுதுறத நல்லா பாருங்களேன்.சமுகத்தப்பத்தி அக்கறை உள்ளது போல காட்டிக்கிட்டு,தமிழ் சமுதாயத்திற்கு போராடியவர்களை எல்லாம் தேவையே இல்லாமல் அச்சிங்கப்படுத்துவார் .ஈழ விடுதலை பேசிக்கிட்டே ,தமிழக மீனவர்கள் கொல்லப்படுரத நக்கலடிச்ச சின்மயி போன்ற பெண்கள ஆதரிப்பாறு,அரசியல் வாதிகளின் தொலைபேசிய ஒட்டு கேட்டு அத cd போட்டு விதத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு,அதை தன் மீது மனித நேயம் மிக்க தமிழர்களின் பார்வையை படவைத்து சாவுக்கு என்ற இணையத்தளத்தை துவங்கி எந்தத்தலைவர்களின் தொண்டர்களால் துக்கி நிருத்தப்பட்டாரோ அவர்களையே இன்று அசிங்கப்படுத்தி எழுதுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்,இவரின் விமர்சனம் பெரிதும் தமிழ் தேசியம் பேசக்கூடிய தலைவர்களை குறிவைத்தே பெரிதும் இருக்கும்,ஏன் என்றால் இவர் ஒரு பச்சை தெலுங்கர் என கேள்விப்படுகிறோம் ஈழ ஆதரவு பேசிக்கொண்டே நம் தலைவர்களை குறிப்பாக ஈழ விடுதலை பேசும் தலைவர்களை கொச்சை படுத்துவது,பார்ப்பனியத்தை ஆதரிப்பது,பெண் என்பதாலேயே மனித விரோத கருத்து குரிய சின்மைகளை ஆதரிப்பது இவரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் '''இவர் இரண்டாம் துக்ளக் சோ''''''
nacchinaarkkiniyan
Brahmins are the custodians of old dogmas based on birth.That is why they are criticised.Only Brahmins went to SC to get stay against TN Govt"s ordinance permitting people from all castes including Dalits becoming Archagars in TN temples.They only show discrimination even while distributing prasadams in some temples.By occupying vital positions in all kinds of media,they only criticise whatever done by Dravidian leaders.They only advocate worship in temples only in Sanskrit and opposing the same in Tamil.They were instrumental in reintroducing April 14th as Tamil New Year.They only safeguard all superstitions in the name of religion.
R Chandrasekaran
மனுஸ்மிருதி, ஒரு பிராமணன் ஆத்திரமாக கைநீட்டும் படம், பழைய பெரியார் கூற்றுக்கள், பிரம்மனின் தலை என்று எத்தனை காலம் தான் உண்மையை பார்க்காமல் நெருப்புக் கோழியைப் போல் தலையை புதைத்துக் கொள்கிறீர்.. ஏதோ இப்படி பேசினால் முற்போக்கு என்று உங்களை நீங்களே விதந்தோதிக் கொண்டு சுய இன்பம் அடையலாம்.. ஆதிஅசுரன் வாதமே ஒரு பார்ப்பன மந்திரம் போலத்தான் இருக்கிறது.. அன்றிலிருந்து ஒரே மாதிரி மந்திரம்.. பலன் பூஜ்யம்.. உம்மால் பிராமணர் தவிர எந்த ஜாதியையும் விமர்சனம் செய்து எழுத முடியாது. இயக்கம் கட்ட முடியாது. அப்படி எழுதி இயக்கம் கட்டினால் ”அவர்கள்” தமிழ்நாட்டில் வாழ விடாமல்
செய்து விடுவார்கள்... சுலபமாக இருப்பது பிராமண எதிர்ப்பு.. உண்மையில் பலம் வாய்ந்த பிராமண கூட்டம் புலம் பெயர்ந்து அமெரிக்கா சென்று விட்டது. இருப்பது சாதா பிராமணன்கள் .. அவர்களால் எதையும் எதிர்க்க முடியாது.. எத்தனை அடிகள் அடித்தாலும் வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.. ரொம்ப நல்லவன்கள்..... தொடர்ந்து நீர் திட்டிக் கொண்டிருக்கலாம்... உமக்கு பொழுதும் போகும்.. முற்போக்கு பட்டமும் இலவசமாக வாங்க்கி கொள்ளலாம்... வாழ்க.
சம்பூகன்
ஜாதிமுறை என்னும் விஷ மரத்தை அழிக்கவேண்டுமானால்,அதன் அடி ஆழம் வரை சென்று வேரைத்தேடி அதனைப் பிடுங்கவேண்டுமே ஒழிய,கிளைகளை வெட்டக்கூடாது.வேரைப் பிடுங்கிவிட்டால் கிளைகளை வளராது.வேரைப் பிடுங்கும் வேலையே பிராமணாள் அழிப்புப் போராட்டம்.பெரியார் நுணிப்புல் மேய்ந்தவரல்ல;வேரைக் கெள்ளி எரிந்தவர்.அதற்காகப் போராடியவர்.எந்த ஜாதிப் பெயரை யார் தாங்கினாலும் அவர் தம்மை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்பதுதான் பொருள்.ஜாதி உணர்வாளர்கள் எல்லோருக்கும் எதிராகத்தான் பெரியார் போராடினார்.ஜாதி முறையை வலியுறுத்தும் பார்ப்பனீய மதத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்.அவர் காட்டிய கடுமையின் விளைவுதான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்கள் ஓரளாவுக்கு தம்மை ஜாதியிலிருந்து விடுவித்து தமிழர்களாய் இணைந்த நிலை என்பதை யாரும் மறுக்க முடியாது.இப்போது திடீரென காசு,பணம் வந்தவுடன் அதனைக் காத்துக்கொள்ளவும்,அதன் வழி அரசியல் ஆதிக்கம் செய்யவும் விரும்புவோர் தம்மை ஜாதி வளையத்திற்குள் நுழைத்துக் கொள்ளும் நிலை சில ஆண்டுகளாக உருவாகியுள்ளது.இந்த நிலையைக் களையவும் குரல் கொடுக்கும் பணியை பெரியார் தொண்டர்கள்(தி.க.,த.பெ.தி.க.,தி.வி.க)செய்துவருகிறார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.அதே நேரம் ஆட்சிமாற்றம் காரணமாக சில பார்ப்பனர்கள் திடீரெனெத் திமிர்த்தனமாக இப்படி பிராமணாள் பிரச்சினையைக் கிளப்பும் வேலையைச் செய்கின்றனர்.தெரிந்தே செய்யும் இந்த வேலையை சவுக்கு சங்கர் போன்றோர் ஆதரிப்பது ஏன்?பார்ப்பனர்கள் பூணூல் அணிவது என்பதே மற்றவர்களைத் தனது வைப்பாட்டி மகன்கள் என்று சொல்வதுதான்.இன்னும் கோவில்களில் தமிழன் பூசை செய்யமுடியவில்லை;தமிழன் திருமணங்களில் தமிழ் இல்லை;வாழ்வியல் நடைமுறைகளில் தமிழ் இல்லை;இதையெல்லாம் சவுக்கு சங்கர் சரி என்கிறாரா?இடஒதுக்கீடு முறைகளில் ஒவ்வொரு தடவை அ.தி.மு.க.ஆட்சிக்கு வரும்போதும் உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் ஓடிச் சென்று தடைபெற முயலுவது ஏன்?69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதாவது ஒரு வகையில் இடையூறு செய்வது ஏன்?ஈழத்தமிழர் சிக்கலில் சோ,சு.சாமி,இந்து ராம்,தினமலர்,தினமணி என எந்தப் பார்ப்பானாவது தமிழர் ஆதரவு நிலை எடுத்ததுண்டா?தமிழைச் செம்மொழி என்றால் தினமலர்,சோ,பார்ப்பனர்கள் வயிறு எரிவது ஏன்?இப்படி இன்னும் எல்லா வகையிலும் தமிழுக்கும்,தமிழர்க்கும் எதிராக வன்னெஞ்சத்துடன் இயங்கும் பார்ப்பனர்கள் பிராமணாள் என்று போடுவது நல்லெண்ணம் கொண்டுதான் என்று சவுக்கு சங்கர் சொல்ல வருகிறாரா?நமக்குள் இருக்கும் ஜாதி வேறுபாட்டை ஒழித்திட நாம் உழைப்போம்;அதற்காக நமக்குள் ஜாதி வேறு பாட்டை இன்னும் ஆழப்படுத்தும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?
சூத்திரன்
அப்பட்டமான பொய்களையும் சித்தரிப்புகளையும் செய்வதில் பெரியார் அமைப்புகள் கில்லாடிகள் என்பது தெரிந்த விஷயம்..
கீற்றுவும் விதி விலக்கல்ல..

1. முதலில் தலித்துகள் சூத்திரர்கள் அல்ல.. இதிலேயே உங்கள் எல்லா வெத்து வாதங்களும் கிழித்தெறியப்பட்டுள்ளன..

2. சண்டாளர்கள் என்பவர்கள் ஊருக்கு வெளியில் இருக்க வேண்டும் என்று சொல்வதில் ஒன்றும் தவறில்லையே.. ஊருக்குள் இருப்பவர்கள் பெரியார் ரௌடிகள் மாதிரி இஷ்டம் போல ஆட முடியாது.. ஒவ்வொரு ஜாதிக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.. அதை கடைபிடிக்ககாத ஆட்களை ஊருக்கு வெளியே அனுப்பி விடுவார்கள்.. கறி திங்கும் பிராமணனை சண்டாளர்களாக போகட்டும் என்றும் விதி இருக்கிறது..
ஆக சண்டாளர்கள் வாழ்க்கை முறை காரணமாக அவர்களுக்கு ஊருக்கு வெளியே குடியிருப்புகள் கட்டி கொடுத்தார்கள்.. இதிலென்ன தப்பு கண்டு பிடிச்சுட்டீங்க?

எந்த பெரியார் கோஷ்டியாவது, வெட்டியானுக்கு பெண் கொடுத்து இருக்கிறீர்களா என்பதை முதலில் சொல்லுங்கள்? அப்புறம் மீதி பேசலாம்..

3. பெரியார் ஏன் ஒரு தலித்தை கல்யாணம் செய்யவில்லை.. 80 வயதிலும் காம வெறியை தணிக்க முடியாத நிலையில், ஒரு பிராமண பெண்தானே அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது?

4. அம்பேத்கர் ஏன் தன்னை விட கீழ் ஜாதி பெண்ணை கல்யாணம் செய்யவில்லை?

இதுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசலாம்..

தேவரடியாள் என்பது சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள்.. கல்யாண, கோயில் விழாக்களில் அவர்கள் நாட்டியம் ஆடுவது மங்கலமாக கருதப்பட்டது.. அப்படிப்பட்ட தேவரடியார்களை, யூஸ் அண்ட் த்ரோ பாணியில் உபயோகித்து தூக்கி எறிந்தது உங்கள் பெரியாரும் தி.க வினரும்தானே?

வேசிக்கும் தேவடியாளுக்கு வித்தியாசம் தெரியாத நீங்கள் உளரும் பித்துக்குளித்தனத்தை என்ன சொல்ல?

பெரியார் கழகம் ஒரு சமூக விரோத கழகம்.. அதை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு சூத்திர ஜாதிகளான வன்னியர், தேவர், நாடார், பிள்ளைமார், கவுண்டர் அமைப்புகள் இப்பொழுது போர்க்கொடி தூக்கியுள்ளதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..

நீங்கள் குறிப்பிட்ட மனு ஸ்ம்ருதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தொழிலை கொடுத்து, வசிக்க ஒரு இடத்தையும் கொடுத்து, அவர்கள் கல்யாணம் செய்து சொந்தம் கொண்டாட உறவுமுறைகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது..

உங்கள் திராவிட சமுக விரோத கும்பல் போல, மக்களை அனாதைகளாக்கி, சமூக விரோத அடாவடிகளை செய்ய சொல்லவில்லை..

ஒழிக்கப்பட வேண்டியது, திராவிடர் கழகம்தானே ஒழிய ஜாதிகள் அல்ல.. கூடிய சீக்கிரம் உங்களுக்கு தமிழ் ஜாதிகள் சாவு மணி அடிக்கப்பொறாங்க.
Chandar
//வெட்டியானுக்கு பெண் கொடுத்து இருக்கிறீர்களா என்பதை முதலில் சொல்லுங்கள்? அப்புறம் மீதி பேசலாம்.//

Panam, pinam eduppavarodu seraadu aiyaa!
சம்பூகன்
சூத்திரன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டுள்ள பார்ப்பன அல்லது ஜாதி உணர்வுக்கு ஆட்பட்ட தமிழருக்கு...நீங்கள் உங்களை மறைத்துக்கொண்டு சூத்திரன் என்ற பெயரைத் தேர்வு செய்தபோதே பெரியார் வென்றுவிட்டார்.அதற்கு முதலில் நன்றி;பாராட்டு.1)தலித்துகளை சூத்திரர்கள் என்று பெரியாரியர்களோ,அம்பேத்கரியர்களோ எப்போதும் சொன்னதில்லை.நீங்களாகவே கற்பனை செய்துகொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல;சூத்திரர்களை விட கீழ் நிலையில் பார்ப்பன வேத பதத்தால் ஆக்கப்பட்ட தலித்துகளை உயர்த்துவதே தனது முதல் பணியாக பெரியார் செய்தார்.பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவர் பெரியார்.முதுகுளத்தூர் கலவரத்தின் போது சூத்திர தேவர்களுக்கு எதிராக தலித்துகளான பள்ளர்கள் பக்கம் நின்றவர் பெரியார்.2)சண்டாளர்கள் என்று நீங்கள் இழிவு செய்வதைக் கண்டிக்கிறோம்.எல்லோரும் மனிதர்கள் என்பதை உங்களைப் போன்ற ஜாதி வெறியர்கள் ஏற்கும்வரை பெரியாரியர்களின் போராட்டம் தொடரும்.3)பெரியார் திருமணம் செய்துகொண்ட மணியம்மையார் பார்ப்பனர் அல்ல;சூத்திரர்.உண்மை அறியாமல் இப்படி உளறக்கூடாது. தவிரவும்,பெரியாரிடம் அணுக்கத் தொண்டராக இருந்து கொள்கைப் போராட்டத்தில் களத்தில் இருந்தவர் அவர்.அதனால் திருமணம் என்கிற ஏற்பாட்டைச் செய்தார்.அந்த இடத்தில் ஒரு தலித் பெண் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பார்.4)அம்பேத்கருக்கு மருத்துவமனையில் பணிவிடை செய்த பெண்ணை அவர் மணந்தார்.பணிவிடை செய்யும் இடத்தில் யார் இருக்கிறாரோ அவரது குணநலனைப் பார்த்து மணம் செய்துகொள்ளும் சூழ்நிலை அமைந்திருக்கலாம்.5)ஒரு சமூகத்தியே விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தியது பார்ப்பன வேத மதம்.அதனை மனிதனாகப் பிறந்தவனால் ஏற்கமுடியாது.ஜாதிமுறையை வலியுறுத்துபவரையும் மனிதர்களாக ஏற்கமுடியாது.நீங்கள் இந்த வகையினராக இருக்கிறீர்கள்.திருத்திக்கொள்ளுங்கள்.நீங்கள் ஆசைப்படுவதுபோல ஜாதிகளால் இனி எதுவும் செய்துவிடமுடியாது.காரணம் ஜாதிகள் கலகலத்துப் போய்விட்டன.வன்னியர் சங்க குருவும்,கவுண்டர் சங்க மணிகண்டனும்,நீங்களும் இவ்வளவு பதறுவதே ஜாதிகள் கணாமல் போவதால்தான்.இளையதலைமுறை ஜாதிகளை,மதங்களை,இனங்களைத் தாண்டி மணம் செய்துகொண்டு மனிதர்களாக வாழத்தொடங்கி விட்டது.ஜாதிகளுக்கு சாவுமணி அடிக்கும் சத்தம் உங்கள் காதுகளில் பலமாக ஒலிக்கிறது;அதன் எதிர்வினைதான் உங்களின் பெரியார் மீதான கோபம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.