பலுதேத்தார் (baludetar) – ஜஜ்மானி (jajmani) போன்ற சாதியடிப்படையிலான பொருளுற்பத்தி மற்றும் ஏற்றத்தாழ்வான விநியோக முறைகளும் வேத்தி(vethi), வேத பிகார் (vethbegar) போன்ற கூலியில்லா சாதியக் கடமைகளும் வழக்கொழிந்திருப்பது வார்த்தையள‌விலேயே. யதார்த்தத்தில் அவைகள் இன்றளவும் பல இந்(து)திய கிராமங்களில் அச்சுப்பிசகாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. புராதன அடிமை முறைகளுக்கு, சட்டப்பூர்வ ஒப்பந்தமுறை ((legal contracts), கடன்-பிணைமுறை (debt bondage) என்று என்னதான் நவீன முலாம் பூசினாலும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களில் 87% பேர் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் மற்றும் குழந்தைகள் என்ற அரசின் புள்ளி விபரங்களே, இந்த வக்கிர, ஒழுக்கங்கெட்ட, மனிதாபிமானமில்லாத அடிமைமுறைகள் சாதியடிப்படையிலேயே நடைமுறையில் உள்ளன என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.

இந்தக் கொத்தடிமை மற்றும் பண்ணையடிமை முறைகள், ‘சாதிய அடிப்படையில்’ அரைகுறையாகக் கடைபிடிக்கப்படும் கிராமங்கள்தான் தேனி மாவட்டம் - பெரியகுளம் ஒன்றியம் – லட்சுமிபுரத்தைச் சுற்யுள்ள கிராமங்கள். இந்த அரைகுறை அயோக்கியத்தனத்தை முழுமையாக அமல்படுத்தத் துடிக்கும் பண்ணையார்கள்தான் லட்சுமிபுரம் சிவாஜி நாயக்கனும், அவனது ஆறு சகோதரர்களும்.

perumal_lakshmipuram_300"முண்டாசு சூரியனே, முக்குலத்தில் மூத்தவனே" என்று முழங்கி, தேவர் சாதிவெறியை வாலுருவி விட்ட 'சண்டைக்கோழி' திரைப்படம் அடையாளப்படுத்தும் அதே 'லட்சுமிபுரம்'தான் என்றாலும், சாதியப் படிநிலையில் முக்குலத்தோரின் சைவப் பருப்பெல்லாம் வைணவ நாயக்கர்களிடம் வேகாது. இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை மற்றும் தாக்குதல்கள் என்று வரும்போது, இவர்களின் கூட்டு நிச்சயம். சூத்திர சாதியரான இவர்களை, இந்து மதம் "வேசிமக்கள்" என்று அழைத்தாலும், தாழ்த்தப்பட்டோர் பக்கம் திரும்பி மீசையை முறுக்க, 'அந்த'ப் பட்டத்தையும் எந்தச் சூத்திர சாதியும் மறுப்பதில்லை.

லட்சுமிபுரம் கிராமங்களில், தீண்டாமை வன்கொடுமைகளைத் தவிர, சாதி இந்துக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையே எந்த உறவும் கிடையாது. சிறுவர்கள்கூட சேர்ந்து விளையாடுவது கிடையாது. ஒடுக்கப்பட்ட பிரிவு முதியவர்கள், நாயக்கச் சிறுவர்களைக்கூட ‘ஐயா’ அல்லது ‘சாமி’ என்றே அழைக்க வேண்டும். பதிலுக்கு நாயக்கச் சிறுவர்கள், ஒடுக்கப்பட்ட பெரியவர்களை “வா’ ‘போ” என்று ஒருமையில் அழைத்து ‘மரியாதை’ செலுத்துவார்கள். இது போன்ற ‘அறப் பிறழ்வுகள்', ஆதிக்க சாதியினரின் சாதியப் பண்புகளில் “தற்குறித்தனமும்” அடங்கும் என்பதையே உணர்த்துகின்றன.

‘லட்சுமிபுரம் ஊராட்சித் தலைவர்’, ‘அரசுப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர்’, ‘கல்லூரி முதலாளிகள்’, ‘தொழிலதிபர்கள்’, ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ என்று ஏகபோக நவீனத்தை அனுபவித்துவரும் சிவாஜி சகோதரர்கள்தான், லட்சுமிபுரம் கிராமங்களில், நவீனமும் நாகரிகமும் எட்டியும் பார்த்துவிடாதபடி, சாத்தியக் கட்டுமானங்கள் கலைந்துவிடாதபடி கண்காணித்து வருகின்றனர். இதற்கு அரசும் மறைமுகமாகத் துணை போகின்றது.

பார்ப்பனப்-பனியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அதிகார வர்க்கத்தால், சாதிய மனோபாவத்தோடே கையாளப்பட்ட ‘இந்திய அரசு’ எந்திரமானது பார்ப்பனத் தன்மையிலும் - தமிழ்நாட்டின் சிறப்புச் சூழலுக்கேற்ப, ‘தமிழகக் காவல்துறை‘ சூத்திரத் தன்மையிலும் இறுகிவருகின்றன. இந்த இறுக்கமானது, முதலாளித்துவ உற்பத்தி முறையும் நிறுவனங்களும் அகக்-கட்டுமானங்களும், சாதியக் கடமைகளை கடைபிடிப்பதற்கான வாய்ப்புகளில் ஏற்படுத்திவரும் கொஞ்ச நஞ்சத் தளர்வுகளைக்கூட எதிர்த்துக் கெட்டிப்படுத்துகின்றது.

சிவாஜி போன்ற பெரும்-பண்ணைகளின் சாதி வெறியில் பங்கெடுத்துக் கொள்வதும், வன்கொலைகளில் குற்றவாளிகளைச் சாதிய விசுவாசத்துடன் தப்பவிடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அடக்குவதாகச் சொல்லப்படும் ‘வன்முறை’களில் தீவிரத் தன்மை காட்டுவதும், இந்த சூத்திரக் காவல்துறையின் இயல்பாக இருக்கின்றன.

கொத்தடிமையாக இருக்க மறுத்ததால் சாதிவெறி பிடித்த பண்ணையாரால் அடித்துக் கொல்லப்பட்ட, ஒடுக்கப்பட்ட அருந்ததிய உழைப்பாளி திரு.பெருமாளின் வன்கொலை வழக்கிலும், இந்தச் சூத்திரக் காவல்துறை அதிகாரிகள், தங்கள் சேவைகளை சாதிய விசுவாசத்துடன் சரிவர ஆற்றிவருகின்றனர்.

லட்சுமிபுரம்-சருத்துப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த திரு.பெருமாள், பல வருடங்களுக்கு முன், சிவாஜி நாயக்கனிடம் பண்ணையாளாக இருந்து வந்தவர். பண்ணையார் சிவாஜியின் தோட்டந்துரவுகளில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், ‘கூலி’ என்பதை நினைத்துக்கூடப் பார்த்துவிடக் கூடாது. அது பண்ணையாராக மனதுவைத்துப் பண்ணையாட்களுக்குக் கொடுக்கப்பட்டால்தான் புண்ணியம். மீறி கூலியைக் கேட்டாலோ உழைக்க மறுத்தாலோ, தோட்டத்தில் மின்சாரம் தாக்கியோ கிணற்றில் தவறி விழுந்தோ, விபத்தாகவோ தற்கொலையாகவோ செய்யப்படுவார்கள்.

எப்படியிருந்தாலும், முதலாளித்துவம் பண்ணை அடிமை முறையில் ஏற்படுத்திய உடைப்பு, சிவாஜியின் பண்ணையையும் பாதிக்கவே செய்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் இயக்கங்களின் பரப்புரைகளும், கொத்தடிமையாக இருந்த பெருமாளின் சுயமரியாதையை எங்கோ சுண்டிவிட்டுள்ளது. சிவாஜியின் எச்சரிக்கையை மீறி பண்ணையைவிட்டு வெளியேறினார் பெருமாள்.

சிவாஜியின் பண்ணையில் அடிமாட்டுக் கூலிக்கு கட்டாயப் பண்ணையாளாக இருந்த பெருமாளுக்கு, சொற்ப கூலிக்கேனும் ‘உழைப்பைச் சுதந்திரமாக விற்கும்’ வாய்ப்பு, புதிய உலகத்தைக் காட்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கே உரிய கடின உழைப்பால், தனது தவப் புதல்வன் கார்த்திக்-ஐப் படிக்க வைத்து, தமிழ்நாடு காவல்துறையில் காவலராக்கினார் பெருமாள். படிப்படியாக முன்னேறிய காவலர் குடும்பம், கொஞ்சம் வசதி வாய்ப்பென்று வாழத் துவங்கியது.

அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘குதிரைக் கொம்பாக’ இருக்கும் இந்தச் சொற்ப வசதி வாய்ப்பும் அரசாங்க உத்தியோகமும், சிவாஜியின் சாதிய உணர்வை உறுத்தியது. மிரட்டிப் பார்த்தான் சிவாஜி நாயக்கன். பெருமாள் பணியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு tata magic என்ற சிறியரக சரக்கு வண்டியை சொந்தமாக வாங்கி, வாடகைக்கு ஓட்டி வருமானம் ஈட்டிவந்தார் பெருமாள்.

தன் பண்ணையில் அடிமையாக இருந்த அதே பெருமாள்... கொடுப்பதை வாங்கிக் கொண்டு மாடாய் உழைத்துக்கொட்டிய அதே பெருமாள்.. இன்று, நவீன வண்டியில் அமர்ந்து, திருப்புகை (STEERING) –ஐ பிடித்து ஊருக்குள் பவனிவருவது, பழமையில் ஊறிய பண்ணையாருக்குப் பொறுக்க முடியவில்லை. இறுதியாக, வண்டியை சிவாஜி நாயக்கனிடம் விற்றுவிட்டு, வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்ளுமாறு, ஆட்களை வைத்து மிரட்டிப் பணிய வைக்கப்பட்டார் பெருமாள்.

perumal_death_380கொடுக்க மனமில்லாமல், உயிருக்குப் பயந்து வண்டியைக் கொடுத்த பெருமாளுக்கு, பல மாதங்களாகியும் வண்டிக்குரிய பணத்தையும் தர மறுத்து வந்தான் பண்ணையார் சிவாஜி. தேனி குள்ளப்புரம் அருகே உள்ள, சிவாஜியின் சகோதரனுக்குச் சொந்தமான வேளாண் கல்லூரியில் இருந்த தனது வண்டியை, திருப்பிக் கேட்கச் சென்ற பெருமாளை, சிவாஜி நாயக்கனும் அவனது ஆட்களும் அடித்துத் தாக்கி, வண்டியைக் கேட்டு வந்தால் ‘கொலை’ செய்துவிடுவதாக மிரட்டித் துரத்தி விட்டுள்ளனர்.

ஆபத்தை உணர்ந்து, நடந்த விசயங்களைக் கடிதமாக எழுதிய பெருமாள், தன் உயிருக்கு எந்த நேரத்திலும், சிவாஜி மற்றும் அவனது ஆட்களால் ஆபத்திருப்பதாக அதில் தெரிவித்திருந்தார். கடிதத்தை நகல் எடுத்து சட்டைப் பையிலேயே வைத்துக்கொண்ட பெருமாள், வண்டியைக் கேட்பதையும் நிறுத்தவில்லை.

இந்நிலையில்தான், செப்டெம்பர் 20-ம் தேதி அதிகாலை, சிவாஜியும் அவனது ஆட்களும் பெருமாளின் வீட்டிற்கு வந்து, வண்டிக்கான பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு அழைத்துச் சென்றுள்ளனர். தன் மனைவி பழனியம்மாளிடம் சொல்லிவிட்டு, கடித நகலையும் எடுத்துக்கொண்டு சிவாஜியைப் பின் தொடர்ந்திருக்கிறார் பெருமாள்.

சிவாஜி நாயக்கனுக்குச் சொந்தமான சரக்குக் கிடங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெருமாள், விபரீதத்தை உணர்ந்து, அலைபேசியில் தனது உறவினர் ஜக்கையனை உதவிக்கு அழைத்துள்ளார். ஜக்கையன், தன்னுடன் பெருமாளின் தம்பி பரமனையும் நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு, சிவாஜியின் லட்சுமிபுரம் சரக்குக் கிடங்கிற்குச் சென்றபோது, வெளிப் பக்கம் பூட்டப்பட்டிருந்த சரக்குக் கிடங்கிற்கு அருகில் பெருமாளின் மிதிவண்டியைப் பார்த்துள்ளனர். பரமனின் அலைபேசியில் இருந்து பெருமாளின் அலைபேசிக்கு அழைத்தபோது, சிவாஜியின் சரக்குக் கிடங்கிற்குள் அழைப்புச் சத்தம் கேட்க, சன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். உள்ளே, பெருமாள் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், பூட்டை உடைத்து உள்ளே சென்று, தொங்கிக் கொண்டிருந்த பெருமாளை இறக்கிக் கிடத்தியபோது, பெருமாள் உயிரோடு இல்லை என்பதை அறிந்துகொண்டனர்.

பெருமாளின் படுகொலை, ‘தற்கொலை போன்று’ சோடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், விழி பிதுங்காமல், நாக்கு வெளியேறாமல், மலம் கழிக்காமல் தூக்கில் தொங்கி இறப்பதற்கான எந்த அடையாளங்களும், இயற்கை விளைவுகளும் இல்லாமல் காயங்களுடன் கிடந்த பெருமாளின் உடல், தான் கொலை செய்யப்பட்டிருப்பதாக பட்டவர்த்தனமாகத் தெரிவித்தது. பெருமாளின் படுகொலை ஒட்டுமொத்த கிராம மக்களையும் உலுக்கியெடுத்துவிட்டது.

பெருமாளுக்காக... ஒடுக்கப்பட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாக அடிமை வேலை செய்த மண்ணில் எழுந்த சுயமரியாதைக்காரனுக்காக... லட்சுமிபுரம் பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நம்பிக்கையூட்டிய விடுதலை நாயகனுக்காக... கிராம மக்கள் ஒன்று திரண்டு, சிவாஜி மீது புகார் தெரிவிப்பதற்காக தென்கரை காவல் நிலையத்திற்குச் சென்றனர். காவல் நிலையத்திற்குள் ராஜ மரியாதையோடு கால்மேல் கால்ப்போட்டு அமர்ந்திருந்த சிவாஜியைக் கண்ட மக்கள் கொதித்தெழுந்தனர்.

dalit_people_theni_640

அரைச் செங்கல்லைத் திருடியதாகப் புகார்த் தெரிவிக்கப்பட்டாலும், ஒரு ஒடுக்கப்பட்டவனால், மேல் ஆடையோடு காவல்நிலையத்திற்குள் உட்கார முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். கொலைக் குற்றவாளி சிவாஜிக்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம், அந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களை வீதியில் இறக்கிவிட்டது. ‘தமிழ்ப்புலிகள்’ இயக்கத் தோழர்கள் மக்களோடு மக்களாக நின்றனர். தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மூன்று மணிநேரம் மூச்சுத் திணறியது. சாலை மறியலைச் சமாளிப்பதற்காக, சிவாஜியைக் கைது செய்ததாக அறிவித்தது சூத்திரக் காவல்துறை.

தோழர்களும் மக்களும் கேட்டுக் கொண்டதற்குப் பிறகு, பெருமாளின் உடல், உடற்கூறு ஆய்விற்காக (post-mortem) தேனி அரசு மருத்துவமணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறந்த உடலைப் புதைக்கும் வழக்கமுடைய ஒடுக்கப்பட்ட மக்களிடம், உடற்கூறு ஆய்விற்குப் பிறகு பெறப்பட்ட பெருமாளின் உடலை எரித்துவிடும்படி ஆலோசனை(?) கூறியது சூத்திரக் காவல்துறை. ‘யாரேனும் தோண்டி எடுத்துச் சென்றுவிடுவார்கள்(!)’ என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டது. சூதறியா அப்பாவி மக்களுக்கு தோழர்கள் வழிகாட்டினார்கள். பெருமாளின் உடல் பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன், தேனி மாவட்டம், அப்பிபட்டியில் சின்ராசு என்ற தாழ்த்தப்பட்ட உழைப்பாளி, கள்ளர் சாதி வெறியர்களால் அடித்துக் கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். தரையில் கால் தட்டியபடி, அரை அங்குல இடைவெளியில் நின்றிருந்த மிதிவண்டியைக்கூட தள்ளிவிடாமல் தொங்கிக்கொண்டிருந்த சின்ராசின் உடல், பிறப்புறுப்பில் காயங்களுடன் கருத்து வீங்கியிருந்தது. ஆனாலும் உடற்கூறு ஆய்வு(!) அறிக்கை ‘தற்கொலை’ என்றது. இழுத்து மூடப்பட்ட வழக்கு, தமிழ்ப்புலிகள்-ன் போராட்டத்தால் தோண்டி எடுக்கப்பட்டது. மறு-உடற்கூறு ஆய்விற்கு (re-post-mortem) உட்படுத்தப்பட்ட சின்ராசின் உடல் ‘கொலை செய்யப்பட்டது’ என்று இராண்டாவது ஆய்வறிக்கையில் நிரூபணமானது. “லட்சுமிபுரம், சருத்துப்பட்டி பெருமாளின் உடலும் பத்திரமாக இருக்கும். ஆய்வறிக்கை ‘பொய்’ சொன்னால் போராட்டமும் வெடிக்கும்”.

பெருமாளின் படுகொலை தொடர்பாக, பெருமாளின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ‘சாதிய உள்நோக்கத்தோடு கூலியில்லாமல் கொத்தடிமையாக வேலை வாங்கியது’ ‘உடைமைகளை, சொத்துக்களை பறித்துக் கொண்டது’ ‘திட்டமிட்டு கொலை செய்தது’ உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சிவாஜி மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் 302க்கு இணையான, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(II)(V) ல் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பிபட்டி சின்ராசு, கோட்டூர்-முத்துத்தேன்பட்டி எழில்முதல்வன்-கஸ்தூரி படுகொலைகள் போலவே, சருத்துப்பட்டி பெருமாள் கொலை வழக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தப்பட்ட ‘வன்கொலை’ என்று தெரிந்த அடுத்த கணமே துவங்கிவிட்ட இந்த சூத்திரச் சேவை, அடித்தடுத்த கட்டங்களில் தீவிரமடைகிறது.

சிவாஜியின் சகோதரன் வெங்கிடசாமி நாயுடு (இவர்ர்ர்தான் ஆசிரியர் சங்கத் தலைவர்), கொலைசெய்யப்பட்ட பெருமாள் கடைசியாகத் தொடர்புகொண்ட ‘ஜக்கையனை’ அடித்து, அவரது அலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக வெங்கிடசாமியை காவல்துறை கைது செய்யவோ விசாரிக்கவோகூட கிடையாது. இது பற்றி காவல்துறையிடம் விளக்கம் கேட்டதற்கு, “ஜக்கையன் சொன்னால் recover பன்னிருவோம்” என்று ‘ஜக்கயனை புகார்த் தெரிவிக்க விடமாட்டோம்’ என்ற தொனியில் பதிலளித்தனர்.

பெருமாள் கொலை வழக்கை விசாரிக்க வேண்டுமானால், பெருமாள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்காமல், பெருமாளின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கை எடுத்துக்கொண்ட தேனி மாவட்ட சூத்திரக் காவல்துறைக்கு, விழாதான் எடுக்க வேண்டும்.

theni_collector_640

பெருமாள் படுகொலை வழக்கில் - ‘சிவாஜியால் தன் உயிருக்கு ஆபத்து’ என்ற பெருமாளின் கடிதம், பொது மக்களின் சாட்சியங்கள், பெருமாளின் வண்டி சிவாஜி சகோதரனின் வேளாண் கல்லூரியில் இருப்பது, வெளியில் பூட்டப்பட்டிருந்த, சிவாஜியின் சரக்குக் கிடங்கில் பெருமாள் கொல்லப்பட்டுக் கிடந்தது, ஜக்கையன் அலைபேசி சிவாஜியின் அண்ணன் வெங்கிடசாமியால் அடித்துப் பறிக்கப்பட்டது என்று - சிவாஜியின் குற்றப் பின்னணி வெளிப்படையாக இருந்தாலும், 20-ம் தேதியே கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிவாஜியை, 25-ம் தேதி வரை நீதிமன்றத்தில் நேர்நிருத்தவில்லை(!) தேனி மாவட்ட காவல்துறை.

பொதுமக்களுடன் தமிழ்ப்புலிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். "விசாரிக்காமல் ஒருவரை திடீரென்று(!) கைது செய்துவிட முடியாது" என்ற மாவட்ட ஆட்சியர் பழனிசாமியின் வார்த்தைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வெறுப்பு தொனித்தது. ஆட்சியரைப் பார்க்கச் சென்று ‘ஆண்டை’யைப் பார்த்துவந்தது போன்ற அனுபவமானது தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும்.

கொலைக் குற்றத்திற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட கொலைக் குற்றவாளி, ஐந்து நாட்களான பின்பும் காவல்துறை பாதுகாப்பிலேயே ராஜபவனி வருவதென்றால் சும்மா நடந்துவிடுமா(!) ஒடுக்கப்பட்ட மக்களின் கொடுக்கப்படாத கூலியெல்லாம், ஆட்சியாளர்களுக்கும் சூத்திரக் காவல்துறைக்கும் கற‌ந்துவிடப்பட்டிருந்தது.

வன்கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைகூட, பாதிக்கப்பட்ட பெருமாள் குடும்பத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை. ‘இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டால் “வன்கொலை” என்பது உறுதியாகிவிடும், பிறகு பண்ணையாரின் அடிமைகளில் தாழ்த்தப்பட்டோர் யாரையேனும் சிக்கவைப்பதில் சிரமம் ஏற்படும்’ என்று மாவட்ட நிர்வாகமே ஆலோசனையில் உள்ளது.

கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், பெருமாள் குடும்பத்திற்கு 5-லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” சார்பில் 24-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “காவல்துறை கண்காணிப்பாளர் ரொம்ப நல்லவர். அவரின் பேச்சை, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் யாருமே கேட்பதில்லை. அதனால்தான் குற்றவாளியைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் மீது எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. நிச்சயம் அவர் குற்றவாளிகளைப் பிடித்து விடுவார்” என்று முழங்கினார், மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் – தோழர்(!)வெங்கடேசன்.

perumal_family_380செப்டெம்பர் 26-ம் தேதி தேனி-அல்லிநகரத்தில் தமிழ்ப்புலிகள் தலைமையில், பெருமாள் படுகொலையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சிவாஜி கூட்டாளிகளை கைது செய்யக் கோரியும், வழக்கை புலனாய்வுத் துறைக்கு மாற்றக் கோரியும், சாலை மறியல் செய்த மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத, கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் சூத்திரக் காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தைக் கண்டித்து உரையாற்றிய, தோழர்கள் அருந்தமிழரசு, தலித்ராயன், ஆதிநாகராசு, வே.பாரதி (த.தே.வி.இ) ஆகியோர் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளது, தேனி மாவட்ட காவல்துறை.

ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக நிற்கும் தோழர்கள் மீது வழக்குகள் போட்டு மிரட்டிப் பார்ப்பது, தேனி மாவட்ட காவல்துறைக்கொன்றும் புதிதில்லை. மக்களுக்காக வழக்குகளைச் சந்திப்பதில் தோழர்களுக்கும் சிரமமில்லை.

ஆனால், பண்ணையார் சிவாஜி நாயக்கனுக்கு எதிராக, சாட்சி சொல்லத் தயாராக இருக்கும் சருத்துப்பட்டி ஒடுக்கப்பட்ட மக்களையும் “சாலை மறியல் செய்ததற்காக எந்த நேரமும் கைது செய்துவிடுவோம்” என்று தொடர்ந்து மிரட்டிவருகின்றது தேனி மாவட்ட காவல்துறை. புகைப்படக் கருவிகளுடன் ஊருக்குள் சென்று, பாமர மக்கள் உண்ணுவதையும் உறங்குவதையும் படம் பிடித்துக்கொண்டே நிற்கும் வெக்கங்கெட்ட காவல்துறையினர், தன் உறவினரின் கொலைக்கு நீதி கேட்கும் எளிய மக்களை பீதியடையச் செய்கின்றனர்.

‘கடமலைக்குண்டு’-ஐ சுற்றியுள்ள கிராமங்களில், காவல்துறை அழைத்துச் செல்லும்போதே ஒடுக்கப்பட்ட மக்களை ஊருக்குள் அனுமதிக்காத சாதிவெறியர்களைப் படம்பிடித்து வழக்குப் போடத் துப்பில்லாத தேனி மாவட்ட காவல்துறை, தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்கும், விளைவிக்கும் ஆதிக்கசாதி கிராமங்களுக்குள் நுழையத் துப்பில்லாத தேனி மாவட்ட காவல்துறை, அறவழியில் போராடிய ஒடுக்கப்பட்ட மக்கள் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பல வன்கொடுமை வழக்குகளிலும், கொலைகாரன்களுக்கும் சாதி வெறியன்களுக்கும் சமூக விரோதிகளுக்குமே ஆதரவாக நிற்கும் இந்தச் சூத்திரக் காவல்துறையின் சண்டித்தனம், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழப்பதற்கு, ஒடுக்கப்பட்ட மக்களை நிர்பந்தித்து வருகின்றது. “எங்கள் ஆண்டைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்று ஒடுக்கப்பட்ட மக்கள் அறிவித்துவிட்டால் இழப்புகள் யார்பக்கம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகள் சொல்லும். இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ‘உரிய’ நீதியை வழங்குமா இந்த அரசு நிர்வாகம்?

____________________

பேருந்துத் துளை வழியாக “ஸ்ருதி” என்ற பள்ளிச் சிறுமி தவறி விழுந்து பலியான “விபத்தில்”, ஓட்டுனரைத் தாக்கியும் பேருந்திற்குத் தீவைத்து எரித்தும் வழக்குகளைச் சந்திக்காத பேரன்புள்ள பொதுமக்களே! கொத்தடிமையாக இருக்க மறுத்த காரணத்திற்காக, படுகொலை செய்யப்பட்ட எங்கள் பெருமாளின் சாவுக்கு நீதி கேட்டு சாலைமறியல்தான் செய்தோம்! - கேட்கிறதா....?

- மதியவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It