ஆறாம் அறிவைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க வேண்டிய ஏழாம் அறிவு திரைப்படம் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனால் இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம் அந்த விவாதத்தைத் தொடருவதல்ல. அந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள ஸ்ருதிஹாசன் ('உலக நாயகன்' கமலஹாசனின் மகள்) எனும் புகழ்பெற்ற வாரிசு நடிகையைப் பற்றியது.
சினிமா மீதான மோகம் மற்ற எந்த இனத்தைக் காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிகம் என்பதைப் புதிதாகச் சொல்லத் தேவையில்லைதான். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையுடனும், கனவுடனும் நாள்தோறும் சென்னைக்குப் படையெடுக்கிறது ஒரு கூட்டம். ஆண்டுகள் பல கழிந்து, திறமையிருந்தும் வாய்ப்புகளின்றி, கிடைத்த சில்லறை வேலைகளைச் செய்து கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துவிடும் ஏராளமான இளைஞர்களை சென்னைப் பெருநகரின் ஒவ்வொரு தெருவிலும் சாதாரணமாகப் பார்க்கலாம். இவர்களில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் மண வாழ்க்கையை இழந்து, தனியாளாய் வயிற்றில் பசியுடனும், கண்ணில் கனவுடனும் அலைந்து திரிந்து உடலும், உயிரும் மெலிந்து காணாமல் போகிறவர்கள் பலர்.
இவர்கள் எல்லோரும் ஏங்குவது ஒன்றே ஒன்றுக்காகத்தான்; வாய்ப்பு. இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைத் தடுக்கும் காரணிகள் சினிமாவில் ஏராளம் உண்டு. அவற்றுள் முதன்மையானது வாரிசுரிமை. முடியாட்சிக் காலத்தைப் போல மன்னருக்குப் பின்னர் அவருடைய வாரிசுகள் ஆட்சி பீடத்தில் ஏறுவதைக் கைதட்டி ஏற்கும் அடிமை மக்களின் மனப்பான்மை தற்போதைய இந்திய சினிமா ரசிகர்களிடம் சர்வசாதாரணமாகக் குடிகொண்டுவிட்டது.
இந்திய ரசிகர்களுக்கு (எல்லா மொழிகளிலும்) நேர்ந்துவிட்ட ஒரு கொடூரம் என்றே இந்த வாரிசுரிமையைச் சொல்லலாம். இந்தி சினிமா வரலாற்றில் எல்லாப் பக்கங்களிலும் ஏதாவதொரு கபூர் (ராஜ் கபூரின் வாரிசுகள்) கண்டிப்பாக இருப்பார். புகழ்பெற்ற திரைக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய வாரிசுகளை சினிமாத் துறையில் இறக்கி விடுவது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. 'தோன்றின் புகழோடு தோன்றி' பலமான பின்னணியுடன் திரையுலகில் நுழையும் இவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக வாய்த்து விடுகின்றன.
‘ஒரே ஒரு சான்ஸ் கிடைத்து விடாதா’ என்ற ஏக்கத்துடன் அலையும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, ஒரு பெரிய சினிமா கலைஞரின் வாரிசு என்பதாலேயே ஒருவருக்குத் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. இதன் அர்த்தம் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு, அந்த இளைஞர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்பதுதான்.
அந்த வாரிசுக் ‘கலைஞர்’ தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினாலும் கூட மேலும் சில வாய்ப்புகள் அவருக்குத் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் இருப்பதில்லை. இப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளினால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரைப் பொறுத்துக் கொண்டு ரசிக்கும் மனோபாவம் ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றிகரமாக வலம் வந்த, வந்து கொண்டிருப்பவர்கள்தான் பிரபு, கார்த்திக், கனகா, பிரசாந்த், விஜய், ராஜு சுந்தரம், சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, பிரபுதேவா, ஜீவா, சிம்பு, ஜெயம் ரவி, இயக்குனர் ராஜா, செல்வராகவன், தனுஷ், விஷால், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலரும். தொடர்ந்து நிகழும் வாரிசுகளின் படையெடுப்புக்கு இவர்களே முன்னதாரணங்களாகின்றனர்.
அதே சமயம் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் காணாமல் போகும் வாரிசுகளும் உண்டு. பாரதிராஜாவின் மகன் மனோஜ், இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா, சிவாஜியின் பேரன் துஷ்யந்த், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின், சத்யராஜின் மகன் சிபி, பாக்யராஜின் மகன் சாந்தனு, பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி, ராதாவின் மகள் கார்த்திகா என்று இந்தப் பட்டியலும் நீளமானது.
தமிழ் சினிமா வரலாற்றில் தனியிடத்தைப் பெற்றுவிட்ட கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இரண்டாவது பட்டியலில் சேரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக அவருடைய அறிமுகப் படத்தில் தோன்றுகிறது. ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஸ்ருதி. ஆனால் அதில் அவர் அடைந்த தோல்வி, நடிகையாக அறிமுகமானதிலும் தொடருகிறது.
படத்தில் அவர் ஒரு மரபணுப் பொறியியல் ஆராய்ச்சி மாணவியாக வருகிறார். அவர் இப்படத்தில் அடிக்கடி ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். திறமையும், வியாதியும் டி.என்.ஏ., எனப்படும் மரபணுக்களின் வழியாகத் தொடரும் என்பதே அது. ஆனால் அவர் விஷயத்திலேயே அது அவ்வாறு நடக்கவில்லை என்பது படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கமலஹாசன் எனும் மிகத் திறமையான நடிகரின் மரபணுவைப் பெற்றிருந்தும் ஸ்ருதிஹாசனிடம் நடிப்பு எனும் திறமை கொஞ்சமும் இல்லை.
எல்லாக் காட்சிகளிலும் உணர்ச்சியற்ற ஒரே விதமான பாவனைகளையே ஸ்ருதியால் தர முடிந்திருக்கிறது. தமிழ் மொழியைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்காக தன்னுடைய பேராசிரியர்கள் முன்னிலையில் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் ஸ்ருதி, படம் முழுக்கத் தமிழைத் தப்பும் தவறுமாக உச்சரித்து வெறுப்பேற்றுகிறார். அது மட்டுமின்றி வசனங்கள் அனைத்தையும் தேவையான ஏற்ற, இறக்கம் எதுவுமின்றி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரைப் போலப் பேசுகிறார். திறமையை (?) மட்டும் நம்பிப் பயனில்லை என்று எண்ணியதாலோ என்னவோ, கவர்ச்சியையும் ஆயுதமாக்க இவர் தவறவில்லை. படத்திற்குச் சம்பந்தமேயில்லாமல் இடையிடையே வரும் பாடல் காட்சிகளுக்கு ஸ்ருதியின் அரைகுறை ஆடைகளை மட்டுமே முருகதாஸ் நம்பியிருக்கிறார்.
தமிழ் மொழி, தமிழினம் என்று பேசும் இந்தப் படத்தில் சூர்யாவைப் போன்றே ஸ்ருதியின் நடை, உடை, பாவனை எதிலும் தமிழினத்துக்கான அடையாளத்தைக் காணமுடியவில்லை. அதை ஸ்ருதியின் குறைபாடாகக் கொள்ள முடியாது என்பதையும் மறுக்க முடியாதுதான். மன்னருக்குப் பின்னர் இளவரசர் முடிசூட்டிக் கொள்வதைக் கொண்டாடும் குடிமக்களைப் போல், கமலின் ரசிகர்கள் தங்களின் இளவரசிக்காக போஸ்டர்கள், பேனர்கள் என்று தங்கள் ‘நற்பணியைத்’ தொடருகிறார்கள்.