revathi_370நான் சின்னவயதில் இருக்கும்போது என் வீட்டுப்பக்கத்தில் இருந்த சாரதா அக்கா மூலம் தான் எனக்கு ரேவதி அறிமுகமானார். அப்போது நான் ஆறாவது ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சாயங்காலங்களில் அவர்கள் வீட்டில்தான் நான் பெரும்பாலும் இருப்பேன். சாரதா அக்கா வீட்டின் சுவற்றில் ரேவதியின் படங்கள் எல்லாவற்றையும் ஆனந்தவிகடன், குமுதம், ராணி எல்லா எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். தனது தங்கை காஞ்சனாவை சென்னைக்கு அழைத்துப் போய் ரேவதி போல பெரிய நடிகை ஆக்கிவிடவேண்டும் என்று சாரதா அக்காவுக்கு ஆசை இருந்தது. காஞ்சனாவை தண்ணீர் குடம் தூக்கவிட மாட்டார்கள். அடுப்படிக்கு வந்தால் விரட்டி விடுவார்கள். வீட்டுவேலை பார்க்க விட்டால் காலில் வெடிப்பு வந்துவிடும் என்று சொல்வார்கள். சாரதா அக்கா குடும்பத்தினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அப்போது வசித்து வந்த திருநகர் பகுதியில் முதல்முறையாக கலைவாணி என்று ஒரு தியேட்டர் திறந்தார்கள். அந்தத் தியேட்டருக்கு எல்லாரும் போர்வையோடு போனார்கள். ஏனெனில் அதுதான் முதல் ஏசி தியேட்டர் ஆகும்.

எனக்கும் அந்த தியேட்டருக்குப் போகவேண்டும் என்று ஆசை இருந்தது. அப்போதுதான் புதுமைப்பெண் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதையொட்டி பாரதிராஜாவும் ரேவதியும் அந்த தியேட்டருக்கு வருகிறார்கள் என்று செய்தி கேள்விப்பட்டோம். அதற்கு சிறப்பு டிக்கெட்களும் விற்கப்பட்டன. நான், சாரதா அக்கா எல்லாரும் சேர்ந்து தியேட்டருக்கு ஆசையுடன் போகிறோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. காஞ்சனாவும் என்னோடு நிற்கிறாள். கடைசியில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே பணம் கொடுத்து டிக்கெட்களை வாங்கிவிட்டார்கள். அப்போ கூட்டத்துக்கு நடுவில் கருப்பா ஒல்லியாக ஒரு நபர் ஷூ போட்டு ஷர்டை இன்பண்ணி நடந்துவந்தார். பின்னாடி ரேவதியை விரலைப் பிடித்து தியேட்டருக்குள் கூட்டி வருகிறார். அப்போதுதான் சொல்கிறார்கள். இவர் இயக்குனர் பாரதிராஜா என்று சொல்கிறார்கள். ரேவதி திரைக்கு முன்பு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி 'எல்லோருக்கும் வணக்கம்' என்று கைகூப்பிச் சொல்கிறார். நல்ல பாவாடை, தாவணியில் நம் ஊர் பெண்கள் மாதிரியே வந்து நின்றார் ரேவதி.

அவர்கள் பேசி முடித்துவிட்டு போனவுடன் புதுமைப் பெண்ணைத் திரையிட்டார்கள். ரேவதி அந்தப் படத்தில் நடித்தது எதுவுமே அப்போது ஞாபகமில்லை. பாரதிராஜா விரலைப் பிடித்துக் கூட்டிப் போன காட்சியும் மேடையில் அவர்கள் வணக்கம் சொன்னதும் மனதில் நீங்காமல் இருந்தது. புதுமைப்பெண்ணை மூன்று நான்கு முறை பார்த்தேன்.

அதற்குப்பிறகு செல்வி என்ற படம் பார்க்கிறேன். நாய் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கும். அந்தப் படத்தை 15 முறை பார்த்திருப்பேன். மதுரையில் தொழிற்சாலைகளை விட தியேட்டர்கள் அதிகம் இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உண்டு. அங்கு வாழுகிற ஒவ்வொருவரிடமும் நடிகர், நடிகைகளின் சாயலைப் பார்க்க முடியும். பொடி மீசை வைத்த எம்ஜிஆர்களையும், சுருட்டை முடி கொண்ட சிவாஜிகளையும் பார்க்க முடியக்கூடிய நகரம் அது. ரஜினிகாந்துகளும், கமல்ஹாசன்களும் நம்மைக் கடந்துகொண்டே இருப்பார்கள். பெண்களிடமும் நடிகைகளின் சாயல் இருக்கும். எனது சித்தி இந்த 50 வயதிலும் முகவாயில் மச்சம் போன்ற பொட்டை வைத்திருக்கிறார். அவருக்கு டி.ஆர்.ராஜகுமாரியின் பாதிப்பு உண்டு.

மதுரையில் உள்ள பெண்களிடமும் அவ்வப்போது திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளின் சாயல்கள் வந்துபோய் கொண்டு இருக்கும். எனது பால்யத்தில் ரேவதியும் பெண்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தார். ஏனெனில் பெண் கதாபாத்திரங்களைச் சுற்றி இயங்குகிற படங்களில் ரேவதி அதிகமாக நடித்தார். மண்வாசனையின் முத்துப்பேச்சி கதாபாத்திரம் என் மனதை விட்டு நீங்காதது. துறுதுறுப்பும் குழந்தைத்தனமும் நீங்காத தெற்கத்தி மண்ணின் சாயலுடைய பெண்ணாக அவர் அந்தப் படத்தில் வருவார். ஒரு மரத்துக்குப் பின்னால் நின்று முகத்தின் பாதியை கையால் மறைத்தபடி கள்ளமற்ற சிறுமியைப் போல அவர் வந்து நின்ற கோலம் இன்னும் என் பாலய்த்தின் களையாத சித்திரமாகத் தொடர்ந்திருக்கிறது. மண்வாசனை படத்தை எனது சித்தி எனக்கு முன்பே பார்த்துவிட்டு வந்து கதையைச் சொல்லிவிட்டார். என் பாட்டி மட்டும்தான் ஒரு படத்தை மூன்றுதடவை பார்ப்பார்கள். பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை ஒரு தடவை கூட்டிப்போவார். வீட்டில் உள்ள பெண்களை ஒருமுறை கூட்டிப்போவார். உறவினர்கள் வரும்போது சேர்ந்து ஒருமுறை போவோம். மூன்றுதடவையும் ஒரு படத்தை புதிதாகப் பார்ப்பது போல அழுது, சிரித்துப் பார்ப்பார் எங்கள் பாட்டி.

revathi_300அதற்குப் பிறகு வந்த ஆண்பாவம் படம் மதுரையையே கோலாகலமான திருவிழாவாக்கியது. தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர்கள் எல்லாரும் அத்தனை குதூகலத்துடன் வெளியே வந்தனர். இத்தனைக்கும் அந்தப் படத்தில் ரேவதி ஒரு ஊமைப்பெண். ஆனால் ஊமை என்ற குறையின் வலி பார்வையாளனுக்குத் தெரியாமலேயே எல்லாருக்கும் பிடித்த பெண்ணாக மிக இயல்பாக நடித்திருப்பார். பாண்டியராஜன் என்ற புதிய நடிகருடன் ஒரு பெரிய நடிகையாக இருந்த ரேவதி தயங்காமல் நடித்திருப்பார். இன்று கூட அந்த நிலை சாத்தியமாகவேயில்லை.

கொஞ்சம் விவரம் புரியத்தொடங்குகிறது. மீசை லேசாக உதட்டடின் மேல் அரும்பத் தொடங்குகிறது. அப்போது வந்த புன்னகை மன்னன் படம் மூலமாக என் பருவத்தின் கதாநாயகியாக ரேவதி முடிசூட்டிக் கொண்டார். சிலகாலம் அல்ல பலகாலம் அவருடனேயே மௌன ராகம் மற்றும் பல படங்களினூடாக அவருடன் சிறை வாழத்தொடங்கினேன். மௌனராகம் ஐரோப்பிய படங்களின் மௌனத்தை இந்திய நகர்ப்புற வாழ்க்கைப் பின்னணியில் அதன் அழகியலுடன் சொன்ன படம். எங்கள் கால நகர்ப்புற நவீன யுவதி எப்படியிருப்பாள் என்பதை மௌன ராகம் ரேவதியின் வழியாகவே நாங்கள் அடையாளம் கண்டோம். நிர்பந்தம் காரணமாக திருமணம் முடிந்த நிலையில், தனது முந்தைய காதலை இயல்பாகக் கணவனிடம் சொல்லும் கதாபாத்திரம் அது. அக்காலத்தில் அது புதுமையானது. சற்று விலகினால் தடம்மாறிவிடும். திருமணத்துக்குள் வந்தபிறகு இறந்துபோன காதலனை மறக்கமுடியாமல், தனக்காக காத்திருக்கும் கணவனையும் ஏற்கமுடியாமல் வாழும் அந்த கதாபாத்திரத்தை தமிழ் மக்கள் விரும்பி ரசித்தார்கள். இன்னமும் மௌனராகத்தை ஒரு கிளாசிக்காக ரசித்துக்கொண்டிருக்கின்றனர். முன்பகுதியில் குறும்பும் பின்பகுதியில் அழுத்தமுமாக வாழ்ந்த ரேவதியின் முகம்தான் அந்த கதாபாத்திரத்தை அனைவரும் ஏற்கவைத்தது.

ஓரளவு சினிமா குறித்த புரிதல் ஏற்பட்டபிறகு நான் பிரமித்த படங்களில் ஒன்று மறுபடியும். மறுபடியும் படத்தில்தான் ரேவதி இன்னொரு பரிணாமத்திற்குச் செல்கிறார். காதல் மணம் செய்த கணவன் நிலைமாறிய பிறகு இன்னொரு பெண்ணோடு வாழச்செல்லும்போது கைவிடப்படும் நிலையில் வெளிப்படுத்தும் உணர்வுகள், பேச்சற்ற விசும்பல், மௌனமான அழுகை ஆகியவற்றை அழகாக வெளிப்படுத்துவார். அதற்குப்பிறகு எத்தனையோ உலகப்படங்களைப் பார்த்துவிட்டேன். மிகுந்த விரக்தியில் இருக்கும் அந்த துளசி கதாபாத்திரம், விருந்து ஒன்றில் துக்கம் தாளாமல் ஒரு கிளாஸ் மதுவைக் குடித்து விட்டு மனம் தளர்ந்து பேசுவார். அந்த மாதிரியான ஒரு நிலையில் ரேவதி முழுமையாக பெண்மையின் கம்பீரத்துடனயே தனது விரக்தியை கைவிடப்பட்ட நிலையை வெளிப்படுத்துவார். மறுபடியும் படம்தான் எனக்கு பாலுமகேந்திராவை அறிமுகம் செய்தது. பின்னர் அவரிடம் வேலை செய்யும்போது துளசி கதாபாத்திரத்தைக் குறித்த பேச்சில் துளசியின் கதாபாத்திரம் அவர் மனைவி அகிலா அம்மாவின் சாயலில் உள்ளதாக சொன்னேன். அவரும் அதை ஒத்துக்கொண்டார்.

சட்டென்று ஒரு நல்ல படம் என்று கேட்டால் மறுபடியும் படத்தையே நான் சொல்வேன். அதேபோலத்தான் உங்களைக் கவர்ந்த நடிகை என்று கேட்டால் ரேவதியைத் தவிர உடனடியாக மனதில் தோன்றுபவர் வேறுயாரும் இல்லை.

ரேவதியைப் பொறுத்தவரை மென்மையாகவும் அதேவேளையில் வலிமையாகவும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் வெளிப்பட்டவர். ரேவதிக்கு எளிமையான தெற்கத்திப் பெண்ணின் தோற்றம் உண்டு. கொஞ்சம் எடுப்பான பல், குள்ளமான உருவம், அகன்ற கண்கள், நீளமான முகம் ஆகியவை அவரை நமது பக்கத்துவீட்டுப் பெண் என்ற நெருக்கத்தை ஏற்படுத்துவது.

ஒரு அருமையான நடிகையாக தனது திறன்களை வெளிப்படுத்துவதற்கேற்ற படங்கள் அதிகம் அவருக்கு அமையவில்லை என்பதே எனது வருத்தம். மறுபடியும் படத்திற்குப் பிறகு பிரியங்கா, அவதாரம் போன்ற சில படங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு படங்கள் அமையவில்லை. அவரது சிறந்த படங்கள் என மண்வாசனை, புதுமைப்பெண், மௌனராகம், புன்னகை மன்னன், மறுபடியும் ஆகிய திரைப்படங்களைச் சொல்லலாம். பின்னால் வந்த அரங்கேற்ற வேளை படத்தையும் குறிப்பிட வேண்டும். தேவர் மகனைச் சொல்லியே ஆகவேண்டும். தேவர் மகனில் விளக்கெண்ணெய் தேய்த்த அருக்காணியாக மதுரை மண்ணின் எளிமையான பெண்ணாக சோபித்திருப்பார் ரேவதி. அந்தப் படத்தில் அவர் பேசும் பேச்சு எங்கள் ஊர் பெண் பேசுவது போலவே இருக்கும். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அரிவாள் மீசையும் வெள்ளையும் சொள்ளையுமாக கமல் பக்கத்தில் அமர்ந்திருக்க முகத்தில் அச்சம், வெட்கத்தைத் தேக்கிவைத்துக் கொண்டு ரேவதி உட்கார்ந்திருப்பார். பெரிய பண்ணையார் வீட்டில் திடீரென்று மருமகளாகி விட்ட ஏழைப்பெண்ணின் தவிப்பை வேறு யாராவது இத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்க முடியுமா? தெரியவில்லை. இஞ்சி இடுப்பழகா என்ற அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் ரேவதியின் நாணம் ததும்பும் முகம் நமது கண்ணில் வந்துபோகும்.

revathi_380ஆனால் தமிழில் அவர் நடித்த படங்கள் பலவற்றில், மிகையான ஒப்பனைகளில் கதாநாயகனின் ஆளுமை நிழலுக்குள் சிக்கியவராக நாம் அவரை வீணடித்திருக்கிறோம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஒரு தேர்ந்த நடிகையை ஏற்கச்செய்யும் போது அவருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். அந்த விபத்து ரேவதிக்கும் நடந்துள்ளது.

இந்திய நடிகைகளில் நான் ரசித்த ஷோபா, அர்ச்சனா, ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் வரிசையில் எதார்த்தத்துக்கு நெருக்கமாக எந்த கதாபாத்திரத்திலும் சாதிக்கக்கூடியவர் ரேவதி. மறுபடியும் படத்தில் அவரின் கதாபாத்திரம் துளசி. துளசியைப் போன்றே அபூர்வமான நடிகை ரேவதி.

மிகச் சமீபத்தில் தென்மேற்குப் பருவக்காற்று ரிலீசுக்கு சற்றுமுன்பு எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றுக்குப் போயிருந்தேன். அந்த அலுவலகத்தின் கீழ்தளத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ரேவதி உள்ளே வருகிறார். எனக்குள் சிறு பெண்ணாக தியேட்டரில் வணக்கம் சொன்ன அந்த ரேவதி வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போனார். புதுமைப்பெண் படத்தில் ஆவேசமாகப் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போகும் பெண்ணும், மறுபடியும் திரைப்படத்தில் துயரத்தோடு பாண்டி பஜாரில் நல்லதோர் வீணை செய்தே பாடல் பின்னணியில் நடந்துபோவாரே அந்த துளசியும் அடுக்கடுக்காக வந்துபோனார்கள். அங்கே அமர்ந்திருந்தவர்களுக்கு ரேவதியைத் தெரியவில்லை. அவர்களில் சிலர் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தனர். நான் நீங்கள் உட்காருங்கள் என்று இடம் கொடுத்துவிட்டு நின்றேன். அவர் தேங்ஸ் என்று சொல்லி உட்கார்ந்தார். அவர் எனது கையில் கட்டியிருக்கும் கருப்புக்கயிறைக் கூர்ந்து பார்த்தார். அது ஏன் என்று தெரியவில்லை.

- சீனு ராமசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It