ஆரிய இனக்குழுவும் கண அமைப்பும்:

சாதி பற்றிய விளக்கம்: சாதி என்பதை அகமணமுறை என்ற இரத்த உறவு முறையையும், படிநிலையையும் அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு தொழில் குழு அல்லது ஒரு சமூகக் குழு எனலாம். அகமணமுறை என்ற இரத்த உறவு முறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது. அத்துடன் சாதி என்பது படிநிலைகளைக் கொண்ட அமைப்பாகவும் இருந்து வருகிறது. அகமணமுறை என்ற இரத்த உறவுமுறை இனக்குழுகால கண ஆட்சி முறையின் அடிப்படையாக இருந்து வந்தது. இனக்குழுக்களிடையே சமத்துவம் இருக்கும். ஆனால் சாதிகளிடயே சமத்துவம் இருக்காது, படிநிலைதான் இருக்கும். வருணம் எனப்படும் வகுப்பு வேறு சாதி வேறு. ஒருவனுடைய சாதி என்பது அவனது பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்பதால் சாதியை ஒருவன் மாற்றிக் கொள்ள இயலாது. ஆனால் வகுப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆகவே ஒருவன் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு மாற முடியும். வகுப்புகளில் அகமண முறையோ, படிநிலையோ இருக்காது.

pandaikaala indiaகாட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்பன மனித சமூக வளர்ச்சியின் படிநிலை. கண ஆட்சிமுறை காட்டுமிராண்டி நிலையின் இறுதியில் உருவாகி, அநாகரிக நிலையின் தொடக்கத்தில் வலுவடைகிறது. பெரும்பாலான சமூகங்கள் இந்த கண ஆட்சி முறையில் இருந்துதான் உருவாகின. வட இந்திய ஆரிய இனக்குழுச் சமூகம் இந்தியா வந்த பொழுது அவர்களிடம் கண ஆட்சிமுறைதான் இருந்து வந்தது. இந்த வட இந்திய ஆரிய இனக்குழுச் சமூகம் தான் சாதியை தோற்றுவித்த சமூகம். ஆகவே அகமணமுறை, கண ஆட்சிமுறை, வட இந்திய ஆரிய இனக்குழுவின் வரலாறு முதலியன குறித்து அறிந்து கொள்வது என்பது சாதியின் தோற்றம் குறித்த ஒரு ஆழமான புரிதலை வழங்க வல்லது.

மார்கன், ஏங்கெல்சு, டாங்கே:

“இலூயிசு என்றி மார்கன்(Lewis Henry Morgan)” என்கிற அமெரிக்கர், சிவப்பிந்தியர்களின் இனக்குழு வாழ்க்கை குறித்து, நாற்பது ஆண்டு காலம் அவர்களிடத்திலேயே தங்கி இருந்து ஆய்வு செய்தவர். அதன் முடிவில் ‘பண்டைய சமுதாயம்’ என்கிற புகழ் பெற்ற நூலை, 1877இல் வெளியிட்டார்(1). இரத்த உறவை அடிப்படையாகக் கொண்ட, ‘கணம்(Gens)’ என்கிற நிறுவனமே பண்டைய இனக்குழு வாழ்க்கையின் அடிப்படை எனவும், உலகின் பெரும்பாலான சமூகங்கள், இந்தக் கணம் என்கிற சமூக நிறுவனத்தில் இருந்துதான் தோன்றின எனவும், அந்நூலின் மூலம் அவர் நிறுவினார். இந்நூலை அடிப்படையாகக் கொண்டே ஏங்கெல்சு தனது ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலை எழுதினார்.

அதன்பின் மார்கன், ஏங்கெல்சு ஆகியவர்களின் நூல்களை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய இந்திய இலக்கியங்களை ஆய்வு செய்து, பண்டைய ஆரியர்களின் கண அடிப்படையிலான இனக்குழு வாழ்க்கை குறித்து ‘பண்டைக்கால இந்தியா’ என்கிற ஒரு சிறந்த நூலை பொதுவுடைமைச் சிந்தனையாளர் திரு. எசு.ஏ.டாங்கே(S.A.Dange) எழுதினார். மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்கள் எழுதிய நூல்கள், ஆதிகால மனிதனின் வாழ்க்கை குறித்தும், அவனது கண அமைப்பு முறையின் சிறப்பு குறித்தும், அவனது காலத்திய ஆண்-பெண் உறவுகள் குறித்தும், நமக்கு ஒரு சித்திரத்தை வழங்க வல்லன. யுகங்கள் என்பன பண்டைய ஆரிய சமூகத்தினுடைய இனக்குழு வாழ்வின் நான்கு கட்டங்களைக் காட்டுகின்றன என்கிறார் டாங்கே. அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பன. இந்த நான்கு கட்டங்களிலும் இருந்த ஆண்-பெண் உறவுமுறை, பொருள் உற்பத்திமுறை, சமூக அரசியல் கட்டமைப்பு முதலியன குறித்த விரிவான தரவுகளை டாங்கே வழங்கியுள்ளார்(2).

மார்கனை அடிப்படையாகக்கொண்டு ஏங்கெல்சு வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை காட்டுமிராண்டி காலகட்டம், அநாகரிக காலகட்டம் என இரண்டாகப் பிரிக்கிறார். அடுத்து வருவதுதான் வரலாற்றுக்காலகட்டமான நாகரிக காலம். காட்டுமிராண்டி காலகட்டம், அநாகரிக காலகட்டம் ஆகிய இரண்டையும் தான் வேத இலக்கியங்கள் கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம் என மூன்று காலகட்டமாகப் பிரிக்கின்றன. நான்காவதாக உள்ள கலியுகம் என்பது நாகரிக காலகட்டம். கிருதயுகம் என்பது காட்டுமிராண்டி காலகட்டம். திரேதா யுகம் என்பது காட்டுமிராண்டி காலகட்டத்தின் இறுதியில் தொடங்கி அநாகரிக நிலையின் இடைப்பகுதி வரை நீடிக்கிறது. அதன் இடைப்பகுதி முதல் இறுதிப்பகுதி வரை துவாபர யுகம். துவாபர யுகத்தின் இறுதியில் மாவீரர் காலகட்டம் என்ற வீரயுகம் வருகிறது. வேத இலக்கியங்கள் நமக்கு இந்த 4 யுகங்கள் குறித்தப் பலவகையான தரவுகளை வழங்கியுள்ளன.

கிருத யுகம்:

கிருத யுகம் என்பது காட்டுமிராண்டி வேடர்கள் வாழ்ந்த யுகம். உணவைப் பெறுவதற்கான போராட்டம் அன்று மிக மிகக் கடினமாக இருந்தது. உணவுக்கான இந்தப் போராட்டத்தில், பல சமூகங்கள் அடியோடு அழிந்து போயின. மனிதர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள், காட்டு மிராண்டிகளாக அலைந்து திரிந்தனர். ஆரிய இனக்குழு, ஓரிடத்தில் நிலையாகக் குடியேறுவதற்கு முன், 16 நாடுகள் அலைந்து திரிந்ததாக ஈரானியர் வேதப்பகுதியான “வேண்டிடாட்(Vandidad)” குறிப்பிடுகிறது(3). அன்று தனிச் சொத்துரிமையோ, வர்க்கங்களோ அரசோ இல்லை. கூட்டு உழைப்பின் மூலமே உற்பத்தி செய்யவோ இரைதேடவோ முடியும். கிடைப்பதைக் கூட்டாக உண்டு வாழ்ந்தார்கள். இந்த கிருத யுக காலகட்டமே காட்டு மிராண்டிக் காலகட்டம்.

திரேதா யுகம்:

திரேதா யுகம் என்பது நெருப்பின் உதவியுடன் ஆரியச் சமூகம் புதிய உற்பத்தி முறையைக் கண்டறிந்த யுகம். ஆரிய இனக்குழுச் சமூகங்களின் வாழ்வுக்கு அக்னி என்கிற நெருப்பே அடித்தளமாக இருந்தது. நெருப்பு உண்டாக்குவதையும், கால்நடைகளைப் பழக்குவதையும் அறிந்தபின் அவன் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டான். கிருத யுகத்தின் நிலையாமை, அலைந்து திரிதல், அழிவு, பயம், நடுக்கம் முதலியனவற்றில் இருந்து மீண்ட மனிதன், ஒரு புது யுகத்திற்குத் தாவினான். ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவிலான செல்வத்தை உற்பத்திச் செய்வதாக புதிய யுகம் இருந்தது. இதையே திரேதா யுகம் என ஆரியன் அழைத்தான். இந்த திரேதா யுகம் என்பது காட்டுமிராண்டி காலத்தின் இறுதியிலிருந்து அநாகரிக நிலையின் இடைப்பகுதி வரை இருந்து வந்துள்ளது. அநாகரிக நிலையின் இடைப்பகுதி முதல் இறுதிவரை உள்ள காலம்தான் துவாபர யுகம்.

திரேதா யுகத்தில் கம்யூன்கள் அல்லது கணங்கள்(Gentes) இருந்தன. அவற்றில் இரத்த உறவு உறவினர்கள் மட்டுமே இருக்க முடிந்தது. அனைவருமே சமமானவர்களாகக் கருதப்பட்டனர். அனைவரும் ஒன்றாக உழைத்து, ஒன்றாக உற்பத்தி செய்து, ஒன்றாக அதனை நுகர்ந்தார்கள். தாயின் வழியில் தான் அனைவரும் அறியப்பட்டார்கள். தந்தையை அவர்கள் அறியவில்லை. கம்யூன்கள் பெரியதாகும்பொழுது அவை பிரிந்து சென்றன. பல கம்யூன்கள் அல்லது கணங்கள் சேர்ந்து, குலங்கள் உருவாகின. இந்த குலத்துக்குள்தான் திருமணம் நடந்து வந்தது. உறவுக்கணங்களிடையே குழுமணம்(Group Marriage)தான் இருந்து வந்தது. அன்று குடும்பங்கள் இல்லை. ஆண்தான் பெண்ணின் கணத்தில் போய் வாழ்ந்தான். அதனால் பெண் வலிமை மிக்கவளாக இருந்தாள். பொருளுற்பத்தி பெரிய அளவில் இல்லை எனினும் அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும், பாதுகாப்பு உணர்வோடும் வாழ்ந்தனர். ஒட்டுமொத்தத்தில் பண்டைக்காலத் திரேதா யுகக் கணங்கள், உண்மையான பொருளில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளைக் கொண்டிருந்தன. ஆனால் குலங்களுக்கு இடையே உணவுக்கான போர்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன(4).

துவாபரயுகம்:

துவாபர யுகம் என்பது வேளாண்மையும் உலோகங்களும் பயன்பாட்டுக்கு வந்தபோது தோன்றிய யுகம். திரேதாயுகத்தில் கால்நடை வளர்ப்பு முக்கியமானதாக இருந்தது. திரேதா யுகத்தில் இரத்த உறவுமுறைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்தது. ஆனால் துவாபர யுகத்தில் இந்நிலை மாறத்துவங்கியது. துவாபர யுகத்தில் வேளாண்மையும், கைத்தொழிலும், வணிகமும் முக்கியமடைந்தன. இவற்றின் வளர்ச்சி தனி உடைமையை வளர்த்தெடுத்தது. தனியுடைமை பழைய இரத்த உறவு முறை நிறுவனமான, கணம் என்ற கம்யூனையும், தாய்வழிச் சமூகத்தையும் அழித்தது. தந்தைவழி உரிமையைக், கொண்டுவந்தது. திரேதா யுகம் கண அமைப்பை, கம்யூனை வளர்த்தெடுத்தது. ஆனால் துவாபர யுகம் கண அமைப்பை, கம்யூனை அழித்தொழிப்பதற்கு அடிப்படையான தனிச்சொத்து உடைமையை உருவாக்கி வளர்த்தெடுத்தது. கண அமைப்பின் உண்மையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலியன இல்லாது போனது. அவ்விடத்தில் சமூகம் வர்க்கங்களாய்ப் பிரிந்து போய், ஆண்டான்களும் அடிமைகளும், செல்வந்தனும், ஏழை உழவனும் உருவானார்கள். குடும்பத்தில் பெண் அடிமையானாள். திரேதா யுகத்தில் இருந்த குழுமணம் வளர்ச்சியடைந்து பல கட்டங்களைத் தாண்டி துவாபர யுகத்தில் ‘மைதுனம்’ எனப்படும் இணை மணமாக(Pairing marriage) மாறியது.

கங்கைக்கரையில் ஆரியர்கள்:

ஆரிய இனக்குழுக்கள் இந்தியா வந்தபின் வடஇந்தியாவில் இருந்த பயிர் நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு அவை மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்பட்டன. இந்தியா வந்த பின்னரும் கால்நடைகள்தான் அவர்களின் பெருஞ்செல்வமாக இருந்தது. ஆரிய இனக்குழுக்கள் மிக நீண்ட காலம் கழித்து, இரும்பு பயன்பாட்டுக்கு வந்தபின் கி.மு. 800 வாக்கில் அவர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து கங்கைச்சமவெளியை அடைந்து அங்கு ஓரிடத்தில் தங்கி வேளாண்மையில் ஈடுபட்டனர். அதன்பின் உலோகத்தின் தேவை அதிகமாகியது. அதன்பின்னர் வளர்ச்சி மிக வேகமாகவும் விரைவாகவும் நடந்தது. சிற்றூர்களும் பேரூர்களும் பெருகின. சிறுநகரங்களும் உருவாகின. பல்வேறு வேலைப் பிரிவினைகள் உருவாகின. சொத்துடைமை உருவாகியது. கால்நடை வளர்ப்பே சொத்துடைமையை முதலில் உருவாக்கியது. சொத்துடைமை பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கியது. துவாபர கால இணை மணம் பல கட்டங்களைத் தாண்டி, கலியுகத்தில் ‘துவந்தம்’ எனப்படும் ஒரு தாரமணமாக ஆகியது.

துவாபர யுகத்தின் இறுதிக்காலம் என்பது மாவீரர் காலம்(Heroic Age). இந்தியாவில் மகாபாரத இதிகாசக் காலமும், கிரேக்கத்தில் ஓமரின்(Homer) இலியட்(Iliad, ஒடிசி(odyssey) காப்பியங்களின் காலமும் மாவீரர் காலம். அதுவரை கணம் அல்லது கம்யூன் இருந்து வந்தது. வேத மரபுப்படி மகாபாரதப் போரோடு துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததாகக் கருதப்படுகிறது. கலியுகம் பிறந்த போது கணம் அல்லது கம்யூன் அழிந்து அவ்விடத்தில் அரசு உருவாகி, இன்றைய நாகரிக யுகம் பிறந்தது. ஆகவே யுகங்கள் என்பன ஆரிய இனக்குழுச் சமூகங்களின் வளர்ச்சிக்கட்டங்கள். அவை இன்று மார்கனின் கண்டுபிடிப்புகளுக்கும், மார்க்சியக் கருத்தியல்களுக்கும் சான்றாதாரங்களாக விளங்குகின்றன.

கண ஆட்சி முறையும் சிவப்பிந்தியர்களும்:

காட்டுமிராண்டி காலத்திற்குப் பின் நாகரிக காலம் வரை இருந்த அநாகரிக காலத்தில் கண ஆட்சிமுறைதான் இருந்து வந்துள்ளது என்பதை வேத இலக்கியங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. திரேதா யுகம், துவாபரயுகம் ஆகிய இரண்டு காலகட்டமும் அநாகரிக காலத்திற்கு உரியவை. திரேதா யுகத்தில் வலிமையாக இருந்த கண ஆட்சிமுறை துவாபர யுகத்தில் சொத்துடமை உருவாகத் தொடங்கிய பின் சிறிது சிறிதாக வீழ்ச்சியடைந்து அதன் இறுதியில் அம்முறை அழிந்து போகிறது. கண ஆட்சிமுறை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள சிவப்பிந்தியர்களின் கண ஆட்சிமுறை குறித்து ஏங்கெல்சு கூறுவதை அறிந்து கொள்வது அவசியம்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்த அமெரிக்கச் சிவப்பிந்தியர்கள் அநாகரிக நிலையின் முதல் கட்டத்தில் இருந்தனர். அதாவது திரேதா யுகத்தில் இருந்தார்கள். அவர்கள் செனீகா(Seneca) குலம் எனப்பட்டனர். இந்த செனீகா குலம் எட்டு கணங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணத்துக்கும் ஒரு அவை இருந்தது. அதில் வயது வந்த ஆண்-பெண் அனைவரும் உறுப்பினர்கள். அனைவரும் சமமானவர்கள். அனைவரும் சேர்ந்து, அமைதிக் காலத்துக்கான தலைவன் ஒருவனையும் யுத்தத் தலைவன் ஒருவனையும் தேர்ந்தெடுப்பர். இத்தலைவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்க முடியும். இந்த அவைதான் கணத்தின் முழு அதிகாரம் பெற்ற அரசமைப்பு.

கணத்துக்குள் திருமணம் செய்யமுடியாது. கண உறுப்பினர் அனைவரும் இரத்த உறவு உடையவர்கள். கணம் தாய் உரிமையை அடிப்படையாகக் கொண்டது. தலைவனின் அதிகாரம் அறவுணர்வை அடிப்படையாகக் கொண்டது. வன்முறைக்கான கருவிகள் எதுவும் அவனிடம் இல்லை. இறந்தவனின் சொத்து அவனது சகோதரிகள், தாய் மாமன் ஆகியவர்களுக்கு இடையே பிரிக்கப்படும். திரேதா யுகத்தில் குழுமணம் இருந்ததால் அவனுக்கு குழந்தைகளோ, மனைவியோ, குடும்பமோ இருக்காது. குழுமணத்தில் தந்தையை அறிய இயலாது. அந்நியர்களைக் கணம் தனக்குள் சேர்த்துக் கொள்ள முடியும். கணத்துக்கெனத் தனிக்குலச் சடங்குகளும் தனி இடுகாடும் உண்டு. இரத்த உறவால் இணைக்கப்பட்ட சகோதரக் குழுவாகக் கணம் இருந்தது. ஒருவன் மற்றவனின் சுதந்திரத்தைக் காக்கக் கடமைப்பட்டவன். அனைவரும் அனைத்திலும் சமமானவர்கள். தலைவர்களுக்கெனச் சிறப்பு உரிமை எதுவும் இல்லை. உண்மையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்.

பல கணங்கள் ஒன்று சேர்ந்து குலம் என்ற அமைப்பு உருவாகிறது. ஒவ்வொரு குலமும் சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருந்தன. தனக்கென ஒரு மொழியைக் கொண்டிருந்தன. குலப் பேரவை ஒன்று இருந்தது. அதில் கணங்களின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குலப்பேரவை பிற குலங்களோடு உள்ள உறவுகளை முடிவு செய்யவும், உடன்படிக்கை செய்யவும், போர் தொடுக்கவும் உரிமை கொண்டது. அமைதி உடன்படிக்கை இல்லாத குலங்களோடு, என்றும் யுத்த நிலையிலேயே அது இருந்தது. எதிரிக் குலங்களோடு போர் செய்வதை, குலப் பேரவையினுடைய தலைசிறந்த வீரர்களே முடிவு செய்தனர். இதற்குக் குலப்பேரவையின் அனுமதி தேவையில்லை. செனீகா குலமும் பிற நான்கு சகோதரக் குலங்களும் ஒன்று சேர்ந்து இரோகுவாய்(Iroquois) என்கிற குலக்குழுக் கூட்டு நிறுவனம் ஒன்று, கி.பி. 15ஆம் நூற்றாண்டில் உருவாகி இருந்தது. இந்நிறுவனம் கி.பி. 1675இல், அதன் உச்ச நிலையை அடைந்தது. அன்று இதன் மொத்த மக்கள்தொகை சுமார் 20,000. இதன் ஐந்து குலங்களும் ஒரே பொதுமொழியைப் பேசின. இந்த ஐந்து குலங்களும் ஒரே பொதுப் பாரம்பரிய மரபைக் கொண்டவை என்பதற்கு இந்தப் பொதுமொழிதான் சான்றாக இருந்தது. இந்தக் குலகுழுக்கூட்டு அமைப்பு தான் அமெரிக்க இந்தியர்கள் எட்டிய மிக உயர்ந்த, அதிக முன்னேற்றம் அடைந்த, ஒரு சமூக நிறுவனம்(5). இந்த இரோகுவாய்கள் அநாகரிக நிலையின் தொடக்க கட்டத்தில், அதாவது திரேதா யுகத்தில் இருந்தார்கள்.

கணம் தான் அடிப்படை அலகு. பல கணங்கள் சேர்ந்து குலம் உருவாகிறது. இன்றைய சாதி அமைப்பில் இந்த குலத்தை சாதி எனக் கொள்ளலாம். இந்த சாதிக்குள் இருக்கும் ‘கூட்டம்’ என்பது தான் கணமாகும். கூட்டத்துக்குள் திருமணம் செய்யமுடியாது. கூட்டத்துக்குள் இருப்பவர்கள் அனைவரும் இரத்த உறவு கொண்ட பங்காளிகள். ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் தனது குலத்துக்குள் இருக்கும் வேறு ஏதாவது ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் குலத்தை அதாவது சாதியைவிட்டு வெளியே திருமணம் செய்ய முடியாது. இம்முறைதான் அகமண முறை. இன்றைய சாதிக்கும், அன்றைய கண முறைக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அகமண முறைதான். ஆனால் கணமுறையில் படிநிலை இல்லை என்பதால் அங்கு அனைத்துக்கணங்களும் சம்மானவை. அவற்றுக்குள் மேல் கீழ் என்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. ஆனால் சாதிகளில் படிநிலை இருக்கும் என்பதால் அவை சமமற்றவை. அவற்றுக்கிடையே மேல் கீழ் என்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

ஆண்-பெண் திருமண உறவுகள்:

ஆதிகாலத் தாய்வழிச் சமூகத்தில் ஆண்-பெண் உறவானது முழுமையான கலப்பு உறவாகவே இருந்தது. எத்தகைய சமூகத் தடையும் தனிமனிதத் தடையும் இருக்கவில்லை. இந்த முழுமையான கலப்பு உறவை, கிருத யுகத்துக்கான ஆண்-பெண் உறவாக மகாபாரத பீசுமர் குறிப்பிடுகிறார். இதனை அவர் ‘சங்கல்பம்’ என்கிறார். இம்முறை வளர்ந்து பல்வேறு கட்டத்தை அடைந்து இறுதியாக ஒரே கணத்தில் அல்லது ஒரே கம்யூனில் உள்ளவர்கள் திருமணம் செய்வதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டபொழுது இரண்டாவது உறவு முறையான ‘சம்சுபரிசம்’ உருவானது. இதன்படி ஆதிகாலத்தில் இருந்து பிரிந்து சென்ற கணங்கள் தங்களுக்குள் உறவு கொண்டன. இத்திருமண முறை குழுமணம் எனப்பட்டது. அதாவது ஒருகணம் இன்னொரு கணத்தோடு குழுவாக செய்து கொள்ளும் திருமணமே குழுமணம். இந்த திரேதா யுகக் கணங்களிடையே, குழுமணத் திருமண உறவு நடைபெற்று வந்தபொழுது நெருங்கிய உறவினர்களிடையே உறவுகள் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து பல தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக துவாபர யுகத்தில் இணைத் திருமண உறவுகள் உருவாகின. இதன்படி ஆணும் பெண்ணும் விருப்பம் உள்ளவரை மற்றவர்களை விலக்கிவிட்டு உறவு கொண்டு இணையாக வாழ்ந்து வந்தனர். இந்த இணைத் திருமண முறை துவாபர யுகத்துக்கானது. இதனை மைதுனம் என்கிறார் பீசுமர். இந்த இணைத் திருமண உறவு முறையில்தான் தந்தையை அறிய இயலும். முதல் இரு திருமண முறைகளில் தந்தையை அறிய இயலாது. இறுதியாக உருவான ஒரு தாரத் திருமணம் என்பது கலியுகத்துக்கானது.

வேத இலக்கியமும் மார்க்சியக் கருத்துகளும்:

ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான பொருள் உற்பத்தி முறையும், ஆண்-பெண் உறவு முறையும், சமூக அரசியல் அமைப்பு முறையும் இருந்தன என்பதை வேத இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மார்க்சியம் சொல்வதையே இவை வேறுவிதத்தில் சொல்கின்றன. யுகம் என்பது ஒரு புராணியக் கருத்தியலாக கருதப்பட்ட போதிலும் அவை ஆதிகால இனக்குழு வாழ்வை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த ஆண்-பெண் உறவுமுறை, பொருள் உற்பத்திமுறை, சமூக அரசியல் கட்டமைப்பு முதலியன குறித்த மார்கனின் வழியிலான மார்க்சியக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆகவே யுகங்கள் என்பன ஆரிய இனக்குழுச் சமூகங்களின் ஆதிகாலம் முதல் நாகரிககாலம் வரையான இனக்குழு வாழ்வின் வளர்ச்சிக்கட்டங்கள். வேத இலக்கியங்கள் தரும் தரவுகள் மூலம் இவற்றை டாங்கே கட்டமைத்துள்ளார்.

கணம் எனப்படும் தொன்மையான கம்யூன் குறித்து ஏங்கெல்சு தரும் தரவுகள்(6):

1.கூட்டு முறையில் உழைத்து உற்பத்தி செய்த பொருள்களைக் கூட்டாகப் பயன்படுத்துவது.

2.தாய்வழி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட கண நிறுவனம் இருப்பது.

3.உறுப்பினர்கள் அனைவரும் இரத்த உறவுடையவர்களாக இருப்பது.

4.நாகரிக முறையிலான தனிக் குடும்பமோ, திருமண முறையோ இல்லா திருப்பது.

5.தனிச் சொத்துரிமையோ வர்க்கங்களோ இல்லாதிருப்பது.

6.தொடக்கத்தில் வேலைப் பிரிவினை இல்லை எனினும் பொருளுற்பத்தியின் வளர்ச்சியோடு அது சிறிய அளவில் தோன்றியிருப்பது.

7.அனைத்து கண உறுப்பினர்களும் சேர்ந்து அனைத்துப் பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுப்பது.

8.படைகளோ, காவல் துறையோ, பிற நிர்வாக அமைப்புகளோ, சட்டங்களோ, அரசோ எதுவும் இல்லாதிருப்பது.

9.உறுப்பினர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கி இருப்பது.

தொல்பழங்கால கண ஆட்சி அமைப்பின் உற்பத்தி முறையாக இருந்த ஆரிய இனக்குழுச் சமூகத்தின் ஆதிகால யக்ஞங்களை, அதாவது ஆதிகாலச் சடங்குகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் பொழுது வேத இலக்கியம் தனக்கே உரித்தான முறையில் இந்தத் தரவுகள் அனைத்தையும் குறிப்பிடுகிறது. திரேதா யுகக் கண ஆட்சி அமைப்பில் ஒவ்வொரு கணமும் ஒரு கம்யூனாகவே செயல்பட்டது என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன.

அகமணமுறை அழிவும் பெண் அடிமையாதலும்:

திரேதா யுகத்தில் இந்த கணங்கள் சிறப்பாக இருந்து வந்துள்ளன. ஆனால் துவாபர யுகத்தில் சொத்துடமை வந்த பின் இந்த கண அமைப்பு உடையத் தொடங்கி அதன் இறுதியில் கண அமைப்பு இல்லாது போகிறது. இந்தக்கண அமைப்பு அழியும்பொழுது அதற்கு அடிப்படையாக இருந்த அகமணமுறையும் இரத்த உறவு முறையும் இல்லாது போய்விடுகிறது. இந்த கண அமைப்பும் அகமணமுறையும் அழிக்கப்பட்டு அதன் மேல்தான் கலியுகம் எனப்படும் நாகரிக காலம் கட்டப்பட்டுள்ளது என்பதை வேத இலக்கியத் தரவுகள் தெளிவோடும், உறுதியோடும் தெரிவிக்கின்றன. எனவே நாகரிக கால ஒருதார மணமுறையில் அகமணமுறை இருக்காது. பண்டைய கண அமைப்பில் ஆண் ஒரு கணத்திலும் பெண் ஒரு கணத்திலும் இருப்பார்கள்.

கண அமைப்பு முறையில் அவர்கள் தங்கள் கணத்துக்குத்தான் உண்மையான பற்றோடு இருப்பார்கள். இந்த கண அமைப்பு உடையும் பொழுதான் நவீன கால குடும்பம் உருவாக முடியும். கண அமைப்பு உடையும் பொழுது அகமண முறையும் இல்லாது போய்விடுகிறது. துவாபர யுகத்தின் இறுதியில் சொத்துடமை பெருகி தாயுரிமைச் சமூகம் தந்தை உரிமைச் சமூகமாக ஆகிறது. தந்தை உரிமைச் சமூகம் உருவாகும் பொழுது கண அமைப்பு உடைந்து ஒருதார மணக்குடும்பம் உருவாகி பெண், ஆண் இருக்கும் இடத்திற்கு வந்து வாழத் துவங்குகிறாள். அதற்குமுன்வரை ஆண், பெண் இருக்கும் இடத்திற்குச் சென்று வாழும் நிலைதான் இருந்து வருகிறது. சொத்துடமை தோன்றி, கண அமைப்பு உடையும் பொழுதான், ஆண் அதிகாரம் பெற்று தந்தை உரிமை தோன்றுகிறது. அதன் பின்தான் பெண் அடிமையாகிறாள். கற்பு புனிதமாக ஆகிறது. இவற்றை வேத இலக்கியக் கதைகள் உறுதி செய்கின்றன.

ஆரிய இனக்குழுவில் துவாபர யுகத்தின் தொடக்கத்திலேயே ஆண்வழிச் சமூகம் உருவாகி விடுகிறது. அப்பொழுது கணம், அகமணமுறை முதலியன வலுவாக இருக்கின்றன. இணைமணம் இருக்கிறது. பெண் ஆணுக்குச் சமமான உரிமை பெற்றவளாக இருக்கிறாள். தந்தை யார் என்பதை குழந்தை அறிய முடிகிறது. ஆனால் இந்தச் சமூகத்தில் தந்தை உரிமைமுறை இருக்கவில்லை. ஆகவே ஆண்வழிச் சமூகமும், தந்தையுரிமைச் சமூகமும் வேறு, வேறு என்ற புரிதல் அவசியம்.

வேத இலக்கியக் கதைகள்:

இணைமணமுறையில் பெண் பெற்றிருந்த உரிமை:

திரேதாயுகத்தில் பெண் முழு உரிமை பெற்றவளாக இருந்தாள். அப்பொழுது தாயுரிமை இருந்து வந்தது. அதன்பின் வந்த துவாபர யுகத்தின் தொடக்கத்திலும் அவள் முழு உரிமை பெற்றவளாக இருந்தாள். அதன் தொடக்க காலகட்டத்தில்(இணைமணமுறை) நிகழ்ந்த இரு நிகழ்வுகளை டாங்கே பண்டைய இந்திய இலக்கியங்களில் இருந்து குறிப்பிட்டுள்ளார். இது இனக் குழுக்களின் கம்யூன்கள் இருந்த இறுதிக் காலகட்டம்.

தீர்க்கதமசு என்பவர் தமது அகந்தையால் தொல்லைகள் தந்த பொழுது அவனது பிள்ளைகள் அன்னையின் உத்தரவுப்படி அவரை கம்யூனில் இருந்து வெளியேற்றிவிட்டனர். இங்கு தாயே உரிமையும், அதிகாரமும் கொண்டவளாக இருக்கிறாள். தாயின் கட்டளைப்படி மகன்கள் தந்தையை வெளியேற்றுகின்றனர். அதுபோன்றே சுவேதகேது என்பவன் தனது அன்னை அவளுடைய கோத்திர நண்பனுடன் வெளியே செல்வதைக் கண்டித்த பொழுது, அவனது துடுக்குத்தனம் அடக்கப்படுகிறது. இங்கும் தாயுடைய சுதந்திரம் நிலைநாட்டப்பட்டு அவள் விரும்பிய கோத்திர நண்பனோடு செல்ல அனுமதிக்கப்படுகிறாள். தாயைக் கண்டிக்க முயன்ற மகன் அடக்கப் படுகிறான்(7) ஆகக் கண அமைப்பு முறையில், கம்யூன் கால கட்டத்தில் ஒரு பெண் தான் விரும்பியவரோடு உறவு கொள்ளவும் தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் உரிமை கொண்டிருந்தாள் என்பதை இந்திய இலக்கியங்களில் உள்ள இந்த கதை நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இணைமணமுறை இருந்த காலத்தில் ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும் உறவு கொண்டிருந்தனர். ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை இருந்தது. அப்பொழுது கண அமைப்பும் கம்யூனும் இருந்து வந்தது. அகமணமுறை நீடித்து இருந்து வந்தது. அப்பொழுது பெண் இருந்த இடத்திற்கு ஆண் வந்து தங்கும் நிலைதான் இருந்து வந்தது(8).

இணைக்குடும்பம் ஒருதார மணக்குடும்பமாக ஆகும் காலகட்டம்:

துவாபர யுகத்தில் இணைத் திருமணம் உருவாகி வளர்ந்து உச்சநிலையை அடைந்த பின், இறுதியில் ஒருதாரத் திருமணம் உருவாகத் தொடங்கி விடுகிறது. இணைக்குடும்பம் ஒருதாரமணக் குடும்பமாக மாறும் காலகட்டத்தை மூன்று மகாபாரதக் கதை நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

  1. சுதர்சனன்--ஓகாவதி:

தனது மனைவியான ஓகாவதியை ஆசிரமத்தில் விட்டுவிட்டு சுதர்சன முனிவர் வெளியே சென்றிருந்தபொழுது, ஒரு விருந்தாளி அவரது வீட்டுக்கு வருகிறார். அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. அத்துடன் கண-கோத்திர வழக்கப்படி விருந்தாளி விரும்பியபடி, ஓகாவதி அவருடன் கூடினாள். சுதர்சனர் திரும்பி வந்தவுடன் இதைப்பற்றி அறிந்து தனது மனைவி அவளது கடமைகளைச் செவ்வனே செய்திருப்பதாக மகிழ்ந்தார். இணைக்குடும்ப காலத்தில் ஆணும் பெண்ணும் தனிக்குடித்தனமாக வாழுகின்ற, இன்னும் கற்பு என்பது புனிதமாக ஆகாத, அகமணமுறையும் கண அமைப்பும் வலிமையாக இருந்த காலம் இக்காலம்.

  1. கௌதமன்-கௌதமி:

இந்நிகழ்வு இணைக்குடும்பம் ஒருதாரக் குடும்பமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடந்ததாகும். கௌதமர் இல்லாத பொழுது இந்திரன் அவருடைய வீட்டிற்கு வருகிறான். இந்திரனுடன் கௌதமி கூடுகிறாள். இதனை அறிந்த கௌதமர் கோபமடைந்து தனது மகன் இரகாரியிடம் அவனது தாயைக் கொன்றுவிடக் கட்டளையிட்டு விட்டு வெளியேறி விடுகிறார். மகன் குழம்பிப்போய் விடுகிறான். பழைய பழக்க வழக்கப் படியும், பழைய ஒழுக்க நீதிப்படியும் தாய் செய்தது குற்றமல்ல என அவன் உணருகிறான். மேலும் அவன் தாயைக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்பதையும் அறிவான். அதே சமயம் புதிய பழக்க வழக்கப்படியும் புதிய நீதிமுறைப்படியும் அவன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்பணிய வேண்டும். அவன் சிந்திக்கிறான். ஆனால் எதையும் செய்யவில்லை. தந்தை கௌதமர் ஆத்திரம் தணிந்து திரும்புகிறார். இருக்கும் நிலைமையைப் பார்த்துச் சமாதானம் அடைகிறார். இங்கு தாயும் மகனும் காப்பாற்றப்படுகின்றனர் எனினும் தந்தை உரிமை மேல்நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதைக் கதை நிகழ்வு காட்டுகிறது. சொத்துரிமை வளர்ந்து கம்யூன் உடைபட்டு அகமணமுறை இல்லாது போய் ஒருதார மணம் உருவாகிக் கொண்டிருந்த காலம் இக்காலம் எனலாம்.

  1. சமதக்கினி-ரேணுகா:

இதனை ஒருதார மணம் உருவாகிவிட்ட காலகட்டம் எனலாம். சமதக்கினியின் மனைவியான இரேணுகாதேவி சித்திரரதா என்கிற கந்தர்வன்மீது ஆசைப்பார்வை செலுத்தியதை சமதக்கினி முனிவர் கண்டார். அதனால் கோபமடைந்த சமதக்கினி முனிவர் தனது மகனான பரசுராமரிடம் அவனது தாயைக் கொல்ல உத்தரவிடுகிறார். அவனும் அதை உடனடியாக நிறைவேற்றுகிறான். இங்கு தந்தை உரிமை முழுமையாக நிலைநிறுத்தப் படுகிறது. பெண்ணின் தனிப்பண்பும் சுதந்திரமும் தந்தையுரிமையால் அடக்கி ஒடுக்கப்படுகிறது. சொத்துரிமை வளர்ந்து, கண ஆட்சி அமைப்பு உடைபட்டு அகமணமுறை இல்லாது போய் ஒருதார மணம் உருவாகிய காலம் இக்காலம். தாயுரிமை போய் தந்தையுரிமை வந்துவிட்ட காலம் இக்காலம். கற்பு புனிதமாக ஆகிவிட்ட காலம் இக்காலம்(9).

தந்தை உரிமையின் காலத்தில் அடிமையாக்கப்பட்ட பெண்:

ஒருதார மணமுறையின் தொடக்க காலத்தில் பெண் ஆணின் அடிமையாகி விடுகிறாள். ஆகையால் ஆண், பெண்ணைக் கால்நடை மாதிரி வாங்கினான்; விற்றான்; வாடகைக்குக் கொடுத்தான்; கடன் கொடுத்தான். மனைவியை மட்டுமல்ல; மகளையும் அடிமை மாதிரியே நடத்தினான். மகாபாரதத்தில் உத்தியோக பருவத்தில் வரும் ஒரு கதை நிகழ்வு இதைக் காட்டுகிறது. யயாதி என்பவர் தனது மகளான மாதவியைக் காலவர் என்கிற முனிவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் அந்தப் பெண்ணை மூன்று அரசர்களுக்கு ஒருவர் பின் ஒருவராகக் கொடுத்து அவர்களை இன்புற வைத்து 200 குதிரைகளைப் பெறுகிறார். ஒவ்வொருவரும் ஒரு மகனை அவளுக்குத் தந்து அவளைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். அவள் மூலம் கிடைத்த குதிரைகளையும் செல்வங்களையும் அவளையும் காலவர் தனது குருவுக்கு குருதட்சணையாகக் கொடுத்து விடுகிறார்.

குருவான விசுவாமித்திர முனிவரும் அவளுடன் கூடி ஒரு மகனைக் கொடுத்துவிட்டு அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார். காலவர் இறுதியில் அவளை யயாதியிடம் ஒப்படைத்து விடுகிறார். அதன் பின் யயாதி அவளுக்குச் சுயம்வரம் நடத்தி தனது கணவனை அவள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உத்தரவிடுகிறான். வெறுப்படைந்த அவள் திருமணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் துறவியாகப் போய்விடுகிறாள்(10). ஆணின் உரிமை தனது மனைவியை, மகளை அடிமையாக்குகிறது என்பதோடு அவன் விரும்பினால் அவர்களை அவன் கொல்லவும் செய்யலாம் என்கிற நிலை இருக்கிறது. கண முறையில் இருந்த கம்யூன்களில் பரிபூரண சுதந்திரத்தோடு இருந்த பெண் ஒருதார மண முறையில், அநாகரிக காலத்தின் இறுதியில் ஆணுக்கு அடிமையாகிவிடுகிறாள். அதன்பின் சொத்துரிமையைத் தனது வாரிசுக்கு விட்டுச்செல்லவேண்டும் என்பதன் காரணமாக கற்பு புனிதமாக ஆக்கப்பட்டு, நவீனக் குடும்பமுறை உருவாகிறது. ஆனால் பெண் அங்கும் அடிமையாகத்தான் இருக்க நேரிடுகிறது.

கிரேக்கத்தில் தந்தை உரிமைக்கு வழிவிட்ட தாயுரிமை:

கிரேக்க மாவீரர் காலத்தில் தந்தை உரிமைக்கும், தாயுரிமைக்கும் நடந்த போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு நாடகம் தான் ஒரேசுதாயா என்பதாகும். ட்ரோசான் போரில் கிரேக்க இனக்குழுக் கூட்டுக்குத் தலைமைத் தளபதியாக இருந்த அகமெம்னான் போரிலிருந்து திரும்பி வந்தபொழுது, அவனது மனைவி கிளிதெம்னெத்தரா தனது காதலன் எகித்தசுக்காக தனது கணவன் அகமெம்னானைக் கொன்றுவிடுகிறாள். அவளது மகன் ஒரெத்தசு, தனது தந்தையை கொன்ற தனது தாயைக் கொன்று விடுகிறான். அதனால் கோப மடைந்த தாயுரிமையைப் பாதுகாத்து வரும் எரினியேக்கள் என்கிற பூதகணங்கள் ஒரெத்தசுவைத் துரத்துகின்றன. முடிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. தனது தெய்வீக வாக்கால் தாயைக் கொல்ல ஒரெத்தசுவைத் தூண்டிவிட்ட அப்போலோ தெய்வமும், அந்நீதி மன்றத்தின் தலைவியாக இருந்த அதீனா தெய்வமும் தந்தை உரிமை என்கிற புதிய முறைக்கு ஆதரவானவர்கள். எனது தாய் தனது கணவனைக் கொன்றது ஒரு குற்றம், எனது தந்தையைக் கொன்றது ஒரு குற்றம் என இரு குற்றங்களைச் செய்தவள் என ஒரெத்தசு வாதிடுகிறான்.

அதற்கு எரினியேக்கள், ஒரெத்தசுவின் தாய்க்கு அவளது கணவனோடு இரத்த உறவு எதுவும் இல்லை என்பதால் அக்கொலைக்குற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், மன்னிக்கக் கூடியதும் ஆகும் எனவும், ஆனால் அவன் தனக்கு நெருங்கிய இரத்த உறவுள்ள தனது தாயைக் கொன்றது மிகப் பெரிய குற்றம் எனவும், இரத்த உறவுள்ள கொலைகளைச் செய்தவர்களைப் பழி வாங்குவது எங்களது கடமை எனவும் அவை வாதிடுகின்றன. வழக்கு மன்றத்தில் அப்பலோ ஒரெத்தசுக்கு ஆதரவாகப் பேசுகிறான். இறுதியில் ஒரெத்தசுக்கு தண்டனை கொடுப்பதா அல்லது விடுதலை செய்வதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடக்கிறது. வாக்குகள் சமமாகப் பதிவாகின்றன. நீதிமன்றத் தலைவி அதீனா தனது வாக்கை ஒரெத்தசுக்கு ஆதரவாகப் பதிவு செய்து, அவனை விடுதலை செய்துவிடுகிறாள். அதன் பின் புதிய தெய்வங்களின் முயற்சியால், தந்தை உரிமைக்கு ஆதரவாகப் பணி செய்ய எரீனியேக்கள் சம்மதிக்க வைக்கப்படுகின்றன.

கிரேக்க இனக்குழுக்கூட்டுக்குத் தலைமை வகித்தவன்; அதன் தளபதியாக இருந்தவன்; அரசனாகக் கருதும் அளவு அதிகாரம் பெற்றிருந்தவன் அகமெம்னான். அவனை அவனது மனைவி தனது காதலனுக்காகக் கொன்ற பின்னரும், இரத்த உறவு இல்லாத தனது கணவனைக் கொன்றது குற்றமல்ல என்கின்றன தாயுரிமையைப் பாதுகாத்து வந்த பூத கணங்களான எரினியேக்கள். கணவனைக் கொன்றது குற்றமல்ல என்கிற நிலை, ஒருதார மணக்குடும்பம் உருவாகவில்லை என்பதையும், இரத்த உறவுக்கு அன்று இருந்த மதிப்பையும், பெண்ணுக்கு அன்று இருந்த உரிமையையும் காட்டுகிறது. மாவீரர் காலகட்டம்வரை, இணைக்குடும்பம் இருக்கும்வரை, தாயுரிமை வலிமை மிக்கதாகவே இருந்தது என்பதை இக்கதை காட்டுகிறது(11).

குழுமணம் முதல் இணைக்குடும்பம் வரை தாயுரிமைதான் இருந்து வந்தது. ஆனால் ஒருதார மணத்திற்குப் பிறகு தந்தை உரிமை வந்து விடுகிறது. சொத்துரிமையே தந்தை உரிமைக்கும், ஒருதார மணத்திற்கும் அடிப்படை. மாவீரர் காலத்தின் இறுதியிலும் அதன் பின்னரும் சொத்துரிமை மிகப் பெரிய அளவில் வளர்ந்து விடுவதால் வேறு வழியின்றி தாயுரிமை தந்தை உரிமைக்கும், இணைக்குடும்பம் ஒருதார மணக்குடும்பத்துக்கும் வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கண அமைப்பும் அகமணமுறையும் இல்லாது போகிறது. நாகரிக காலகட்ட ஒருதார மணமுறை, தந்தை உரிமையை மட்டும் கொண்டுவரவில்லை; அது பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குகிறது; பொது மகளிர் முறையையும், பரத்தமை முறையையும் உடன் கொண்டுவருகிறது; ஒருத்திக்கு ஒருவன், ஆனால் ஒருவனுக்குப் பல பெண்கள் என்கிற நிலைமையைத் தோற்றுவிக்கிறது.

நாகரிக கால ஏதென்சின் அத்தீனியக் குடும்பம்:

ஏதென்சில் அத்தீனியர்களின் மனைவி தனது வாரிசுக்கான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். தலைமை வேலைக்காரியாக இருந்து வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு உரிமைகள் என்பது எதுவும் இல்லை. உண்மையில் பெண், வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். பெண்கள் வீட்டில் தனியாக வைக்கப்பட்டார்கள். வெளி ஆண்களோடு பழக அவளுக்கு அனுமதி இல்லை. பெண் தனியாக வெளியே போகவும் அனுமதி இல்லை. அன்று பொதுமகளிர் முறை உச்சநிலையில் இருந்தது. அத்தீனியனுக்குப் பெண் அடிமையும் இருந்தாள். பிரசித்தி பெற்ற பெண்கள் இந்தப் பொதுமகளிரில் இருந்துதான் உருவானார்கள். பொதுவாகப் பெண்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். வீட்டைக் கவனித்துக் கொள்கிற ஒரு அடிமையாகத்தான் அவள் கருதப்பட்டாள். ஆனால் அவள் தூய்மையான கற்போடும் உண்மையான விசுவாசத்தோடும் இருக்க வேண்டும் என எதிர் பார்க்கப்பட்டாள். ஒருவனுக்கு ஒருத்தி அல்ல, ஒருவனுக்குப் பல பெண்கள் இருந்தனர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் என்கிற நிலை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டது(12). நாகரிக காலத்தில் உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருந்தது. சங்ககாலத்தில் ஆண்டான் அடிமை முறை இல்லாத நகர அரசுகள் இருந்ததால் பெண்கள் ஓரளவு சுதந்திரம் உடையவர்களாக இருந்தனர். ஆனால் இங்கும் தந்தையுரிமையும், கற்பு குறித்த கருத்துகளும் பெண் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தன.

நவீன கால ஒருதார மணக்குடும்பம்:

நாம் இதுவரை அநாகரிக காலம் முடிய இருந்து வந்த கண அமைப்பு முறை குறித்தும், இந்த கண அமைப்பிற்கு அடிப்படையாக இருந்து வந்த இரத்த உறவு முறையான, அகமணமுறை குறித்தும் விரிவாகப் பார்த்தோம். உலகம் முழுவதும் நாகரிக காலத்தின் தொடக்கம்வரை இந்த கண அமைப்பு முறையும் அதற்கு அடிப்படையாக இருந்து வந்த அகமண முறையும்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த கண அமைப்பு முறையும் அகமண முறையும் அடியோடு அழிக்கப்பட்டு அதன் மேல்தான் நாகரிக காலத்திற்கான நவீன குடும்பமும், ஒருதார மண முறையும் கட்டப்பட்டுள்ளது என்பதை இதுவரை பார்த்த வரலாறு உறுதி செய்கிறது.

பண்டைய அகமணமுறையும், கண அமைப்புமுறையும் அழிக்கப்பட்டு அதன்மேல்தான் நவீன குடும்பமும், ஒருதார மணமும் உருவாகின என்பதை வேத இலக்கியங்களும் வேத இலக்கியக் கதைகளும் உறுதி செய்கின்றன என்பதையும், இதே கருத்தைத்தான் கிரேக்க இலக்கியக் கதைகளும் கூறுகின்றன என்பதையும் காணமுடிகிறது. வேதகால யுகங்கள் என்பன புராணியக் கதைகள் அல்ல. அவை ஆரிய இனக்குழு வாழ்வின் வளர்ச்சிக் கட்டங்கள் என்பதையும் ஒவ்வொரு யுகமும் அதற்கே உரிய ஆட்சியமைப்பு, பொருளாதார வாழ்வு, ஆண்-பெண் உறவுமுறை முதலியனவற்றைக் கொண்டுள்ளன என்பதையும் அறியமுடிகிறது. நான்கு யுகங்களிலும் இருந்து வந்த நான்கு வகையான ஆண்-பெண் உறவு முறைகளை மகாபாரத பீசுமர் குறிப்பிட்டுள்ளார்.

திரேதா யுகத்தில் இருந்து வந்த தாயுரிமை, துவாபர யுகத்தில் சிறிது சிறிதாக தந்தையுரிமையாக மாறுவதையும், கற்பு புனிதமாக ஆக்கப்படுவதையும், கணமுறையும், அகமணமுறையும் இல்லாது போவதையும், நவீன ஒருதார மணக்குடும்பங்கள் உருவாவதையும் வேத இலக்கியக் கதைகள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. இந்த நவீன ஒருதார மணக் குடும்பங்கள்தான் நாகரிக சமூகத்தின் ஒரு மூல அலகாக இருக்கின்றன. ஆனால் கண முறைப்படியான நிறுவனத்தில் குடும்பம் என்பதே இருக்காது என்பதால் அது ஒரு மூல அலகாகவும் இருக்காது. கணவன் ஒரு கணம், மனைவி ஒரு கணம், என்பதால் கணம் என்பது இல்லாது போகும் பொழுதுதான் குடும்பம் என்பது உருவாகி அது சமூகத்தின் மூலக்கூறாக இருக்க முடியும். ஆகவே கண அமைப்பும் அதற்கு அடிப்படையாக உள்ள அகமணமுறையும் அழிந்து அதன்மேல்தான் நவீன ஒருதார மணக்குடும்பங்கள் உருவாகின. ஆகவே நவீன ஒருதார மணக்குடும்பங்களில் அகமணமுறை இருக்க இயலாது.

வருணம் எனப்படும் வகுப்புகள்:

நாகரிக காலத்தில் அகமணமுறையும் இரத்த உறவு முறையும் இல்லாது போவதால், அதன் அடிப்படையில் இருந்த கணம், குலம் முதலியனவும் இல்லாது போய் விடுகிறது. அதற்குப் பதிலாக சொத்து, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வருணம் எனப்படும் வகுப்புகள் உருவாகின்றன. அகமண முறையிலான கணம் குலம் முதலியனவற்றை அழித்து அவ்விடத்தில் சொத்து, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் வருணம் அல்லது வகுப்புகள் வளர்ச்சிபெற்று வலிமையடையும் பொழுதான் நாகரிகம் உருவாகிறது. இந்த வகுப்புகள் தான் வர்க்கங்கள் என அழைக்கப்படுகின்றன. வகுப்பு எனப்படும் வர்க்கம் உருவாகும் பொழுது, அரசும் உருவாகிவிடுகிறது. கிரேக்க, உரோம நகர அரசுகள் இனக்குழு நிலையில் இருந்த கணம், குலம், இரத்த உறவுமுறை முதலியனவற்றை நீக்கிவிட்டு பொதுமக்களின் அரசுகளாக எப்படி தங்கள் நகர அரசுகளை கட்டமைத்துக் கொள்கின்றன என்பது ஆசிரியரது வேறு நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது(13).

சாதிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை:

நாகரிக காலத்தில் கணம் குலம் முதலியன அழிந்து, சொத்து, தொழில் அடிப்படையில் வருணம் எனப்படும் வகுப்பு உருவாகி விடுகிறது. உலகம் முழுவதும் நாகரிக காலத்தில் வகுப்புகள்தான் உருவாகின்றன. வடஇந்தியாவிலும், தமிழகத்திலும் நாகரிக காலத்தில் வகுப்புகள்தான் உருவாகின்றன. அகமண முறை அடிப்படையில் அமைந்த கணம், குலம் முதலியனவற்றை அழித்து அதன்மேல்தான் இந்த வகுப்புகள் உருவாகின்றன. ஒருதார மண அடிப்படையிலான நவீன குடும்பம் தான் இந்த நவீன நாகரிகத்தின் அடிப்படை அலகு. இந்த நவீன குடும்பம் என்பது அகமணமுறை என்பதை அழித்து அதன்மேல் கட்டப்பட்ட ஒருதார மணக்குடும்பம். ஆகவே இந்த நவீன ஒருதாரமணக் குடும்ப அமைப்பில், அதற்கான திருமண முறையில் அகமணமுறை என்பது இருக்கமுடியாது.

நாகரிக உலகம் முழுவதும் வகுப்புகள் இருந்தன. ஆனால் நாகரிக உலகின் திருமணங்களில் எங்கும் அகமணமுறையோ, சாதிகளோ இருக்கவில்லை. வடஇந்தியா, தமிழகம் ஆகியவற்றிலும் இருக்கவில்லை. சங்ககாலத்தில் அகமணமுறைக்கு எதிரான உடன்போக்கு என்ற திருமணமுறை இருந்ததையும், அன்று சாதிகள் இல்லை என்பதையும் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆகவே நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் முழுவதும் வடஇந்தியாவிலும் தமிழகத்திலும் கூட வகுப்புகள் தான் இருந்துள்ளன, சாதி இருக்கவில்லை. ஆகவே இன்று வட இந்தியாவிலும் தமிழகத்திலும் இருக்கும் சாதிகள் என்பன நாகரிகம் உருவாகிய பின் மிக நீண்ட காலம் கழித்து செயற்கையாக உருவாக்கப்பட்டவை.

சாதிகளை செயற்கையாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அவை செயற்கையாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நமது ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கண அமைப்பு, அகமணமுறை, தாயுரிமை தந்தை உரிமையாக மாறுவது, ஆதிகாலம் முதல் இருந்து வந்த திருமண முறைகள், அதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அதன் விளைவுகள் முதலியன குறித்த விரிவான தரவுகளை வேத இலக்கியங்கள் வழங்குகின்றன. இவை அனைத்தையும் அறிந்தவர்களால், அரசு அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சாதியைச் செயற்கையாகக் கட்டமைக்க முடியும். வைதீக பிராமணர்கள் இந்தியாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின் வருணம் என்ற வகுப்பைச் சாதியாகக் கட்டமைத்தார்கள் என்பதுதான் உண்மை வரலாறு. அதுபோன்றே கேரளாவில் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் மறுமக்கள் தாயமுறையும், சம்பந்தம் முறையும், சாதியும் நம்பூதிரி பிராமணர்களால் திட்டமிட்டு செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. தமிழகத்திலும் கி.பி. 11ஆம் நூற்றாண்டுவரை வகுப்புகள் தான் இருந்தன. சாதி இருக்கவில்லை. அதன் பின்னரே சாதி அமைப்பு தமிழகத்தில் சிறிது சிறிதாகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் கி.பி.க்குப் பின்தான் பிராமணர்களால் சாதிகள் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டன.

வைதீகப் பிராமணியம் எங்கு, எப்பொழுதெல்லாம் செல்வாக்கு பெற்று வலிமையடைந்ததோ அங்கெல்லாம் சாதி உருவாகியுள்ளது என்பதை வரலாறு உறுதி செய்கிறது. ஆகவே வைதீகப் பிராமணர்களால் சாதியக் கட்டமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

பார்வை:

1.குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பி. ஏங்கெல்சு (Frederick Angels), பாரதி புத்தகாலயம், 2008, பக்: 23.

2.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 184, 185.

  1. பண்டைக்கால இந்தியா, எசு.ஏ. டாங்கே(S.A.Dange), அலைகள் வெளியீட்டகம், சூன் 2003, பக்: 49.
  2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 186 - 189.
  3. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பி. ஏங்கெல்சு, பாரதி புத்தகாலயம், 2008, பக்: 117.
  4. பண்டைக்கால இந்தியா, எசு.ஏ. டாங்கே, அலைகள் வெளியீட்டகம், சூன் 2003, பக்: 53.
  5. “ “     “     பக்: 147

8, 9. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 216, 217.

  1. “ “      “       பக்: 217, 218.
  2. “ “      “       பக்: 218, 219.
  3. “      “      “        பக்: 215.

13.   “      “      “        பக்: 199 – 215.

- கணியன்பாலன், ஈரோடு