சென்னை, மும்பை போன்ற நகரங்களில் நாளொன்றுக்கு 33 ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்க முடிந்தவர்கள் ஏழைகள் அல்ல என்பது திட்டக் குழு தெரிவித்துள்ள புதிய ஆராய்ச்சி முடிவு. இந்திய நகரங்களில் மாதம் 965 ரூபாய்க்கு (சராசரியாக நாளொன்றுக்கு 32 ரூபாய்) மேல் சம்பாதிப்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களாகக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய திட்டக் குழு வாதிட்டுள்ளது. அது மட்டுமின்றி வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது. திட்டக் குழுவின் வாதம் ஏற்கப்படும் பட்சத்தில் மாதம் 965 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இலவச மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் பறிபோகும்.

சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்கும் ஒருவர் நாள்தோறும் 32 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டைத் தாண்டியவர் என்னும் திட்டக்குழுவின் வாதத்தைச் சற்றே யோசித்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது புரியும். மாதம் 966 ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவர் இந்த நகரங்களில் தன் அடிப்படைத் தேவைகளில் ஒன்றைக்கூட ஓரளவுக்குக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இந்த நிலையில் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது அவரது வாழ்வாதாரத்தை அழிக்க முயல்வதன்றி வேறல்ல.

32 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் ஒருவர் ரேசன் கடைகளில் கிடைக்கும் மானிய விலை தானியங்களையும் பெற தகுதியற்றவர் என்கிறது திட்டக் குழுவின் வாதம். அப்படி அவருக்கு மானிய விலையில் தானியங்கள் வழங்குவதைத் தடுப்பதன் மூலம் அவர் வாழவே முடியாத நிலை உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் மாதம் 966 ரூபாயில் அவர் தன் குடும்பத்துக்குத் தேவையான மூன்று வேளை உணவு, குறைந்த பட்ச ஆடைகள், வீட்டு வாடகை (!?), பிள்ளைகளின் கல்வி, போக்குவரத்து என இவையனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்படுகிறார்.

நேர்மையாக உழைத்து மாதம் 966 ரூபாய் மட்டுமே வருமானமாக ஈட்ட முடிந்த ஒருவரை திட்டக் குழு தன்னுடைய வாதத்தின் வழியாக ஏளனம் செய்கிறது. அரசின் சலுகைகள் இன்றி இந்த வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால் நீ எதற்காக வாழ வேணடும் என்பது போல் இருக்கிறது இந்த வாதம். ஏற்கனவே நகர்மயமாதலால் எகிறும் நில மதிப்புகள், நகரங்களை விட்டு ஏழைகளை வெளியே துரத்துகின்றன. நகரம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஏழை மக்களை அரசும் தற்போது கைவிடுகிறது.

நகரங்களில் வறுமைக் கோட்டுக்கான வரையறையாக வெறும் 32 ரூபாயை நிர்ணயிப்பது என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தொகையை மறைக்கும் முயற்சி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 32 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினாலும் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல், வாழவே முடியாத வறுமையில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டிய பொறுப்பை திட்டக் குழுவின் மூலம் மத்திய அரசு கைகழுவுகிறது.

இந்திய அதிகார மையங்களை நிறுவும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரைப்படத் துறையினர், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட யாரும் கோடிகளுக்குக் குறைவாக வார்த்தைகளில் கூட பேசுவதில்லை. இப்படி ஒரு நாட்டில் மாதம் 966 ரூபாய் சம்பாதிக்க முடிந்த ஒருவனை பணக்காரன் என்று சொல்வது நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம்.

Pin It