ராஜீய உலகத்திலும் சீர்திருத்த உலகத்திலும் ஸ்ரீமான் சி.விஜயராகவாச்சாரியாரும் ஸ்வாமி சிரத்தானந்தரும் முறையே பேர் போனவர்கள். முதல்வர் காங்கிரசுக்கே அக்கிராசனாதிபதியாயிருந்தவர். இரண்டாவதவர் மனித சமூகத்தின் சம உரிமைக்கு உண்மையாய்ப் பாடுபடுகிறவர். இவர்களிருவரும் சுயராஜ்யக்கக்ஷியைப் பற்றி சொல்லுவதாவது:-

1-வது, சி. விஜயராகவாச்சாரியார் : “கான்பூர் காங்கிரஸ் தீர்மானம் ஒழுங்கில்லையென்பது என் அபிப்பிராயம். காங்கிரஸ் ஒரு கோவிலுக்கு சமானம். அதை சிலர் மாத்திரம் பிடித்துக்கொண்டு பிறருக்கு அதில் தொழும் பாத்திய தையைத்தடுக்கக்கூடாது. ஒரு பெரிய சந்நியாசியாகிய மகாத்மா காந்தியை ஏமாற்றி கான்பூரில் அத்தீர்மானத்தை காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதென்பதே என் அபிப்பிராயம். காங்கிரஸ் 40 வருஷத்திற்கு முன்னாலேற்பட்டது. அப்பொழுது சட்டசபை இல்லை, சட்டசபைக்காக காங்கிரஸ் ஏற்படவில்லை.”

2-வது, ஸ்வாமி சிரத்தானந்தர் : “சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபையினின்றும் வெளிவந்ததும் சட்டமறுப்பு ஆரம்பித்திருந்தால் அதை சரியான கக்ஷியென்று சொல்லலாம். பிரயோஜனமில்லையென்று வெளிவந்தபின் மறுபடியும் சட்டசபைக்குப் போகிறோமென்பதை எப்படி நாம் ஒப்புக்கொள்ள முடியும்.”

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.04.1926)

Pin It