"இவன் யார்?" என்குவை ஆயின், இவனே
அவனியை ஆளும் பெரு முதலாளி
ஆண்டையாய் இருந்து அடிமை கொண்டும்
மாண்புடை உழவரைப் பண்ணையாய் ஆண்டும்
சுரண்டல் அரசை நடத்திச் சென்ற
அரசியல் சூழ்ச்சியின் இறுதிக் காவலன்
பண்ணையும் ஆண்டையும் அறிந்திரா நோயாம்
பண்டப் பெருக்கின் மிகைஉற் பத்தி
மீண்டிடத் திணித்த போரிலும் அழிவிலும்
ஈண்டு பிழைத்தது சுரண்டல் சந்தையும்
புதிதாய்த் தோன்றிய புவிவெப்ப நோயோ
விதியாய் இருந்த பழம்பெரும் போரிலும்
சந்தையின் பாதையில் செய்திடும் எதனிலும்
வளர்வதைத் தடுக்க முடியாது காண்பீர்
உளம்மாற வேண்டும் பெருமுத லாளி
சந்தையை ஒழித்துச் சமதர்மம் நாட்ட
வன்முறை யின்றி வழிவிட லாமே?
 
("இவன் யார்?" என்று கேட்டீர்களானால் இவனே (இன்று) உலகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் பெருமுதலாளி. அடிமைச் சமூகத்தில் எசமானாக இருந்தும் பண்ணைச் சமூகத்தில் உழவர்களைச் சுரண்டுவதற்காக பண்ணையாராக இருந்தும் வன்முறை அரசை நடத்திய அரசியல் சூழ்ச்சியின் (இன்றைய காவலனும்) இறுதிக் காவலனும் ஆவான். பண்டைய சமூகங்களில் மிகை உற்பத்தி என்ற நோய் இல்லை. (பண்டைய சமூகங்களில் பொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆனால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி அதிகமானால் விற்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டு மிகப் பலர் வேலையை இழக்க நேரிடும். இதுவே மிகை உற்பத்தி நோய்)

முதலாளித்துவ சமூகத்தில் (விளையும்) மிகை உற்பத்தி நோயில் இருந்து மீள (மக்கள் மீது) போரைத் திணித்து பெரும் பொருட்களை அழிவுறச் செய்வதன் மூலம், மீண்டும் சந்தை (அதாவது சந்தைப் பொருளாதாரம்) உயிர்ப்பிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. (ஆனால் இப்பொழுது) புதிதாகத் தோன்றியுள்ள புவி வெப்ப நோயையோ, இதுவரைக்கும் (சந்தையைக் காப்பாற்றுவதற்கான) வழியாய் இருந்த பெரும் போர்களினாலும், சந்தைப் பொருளாதார முறையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளினாலும், (குறைப்பது ஒரு புறம் கிடக்கட்டும்) வளராமல் தடுப்பதற்கே முடியாது எனபதைத் தெரிந்து கொள்ளுங்கள். (இந்நிலையில் இவ்வுலகை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால்) பெருமுதலாளிகளும் மனம் மாறி சந்தைப் பொருளாதார முறையை அறவே ஒழித்து சமதர்ம (சோஷலிச) உற்பத்தி முறையை நிலை நாட்ட வன்முறை இன்றியே வழி விடலாமே? (இவ்வுலகம் அழியாமல் இருப்பதற்கு வேறு வழியே இல்லையே!)

Pin It